கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?

நவீன ரயில் பாதையின் 200-ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் 2024-ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிரிட்டனில் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், லின் ப்ரவுன்
  • பதவி,

ரயில் பாதைகளின் கண்டுபிடிப்பு நில பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது. மக்கள் நேரத்தை அறிந்துக்கொள்ளும் முறையையும் நிரந்தரமாக மாற்றியுள்ளது.

1883-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ரயில் நிறுவனங்கள் இரு நாடுகளிலும் நேரத்தை மாற்றி அமைத்தன. இது உலகெங்கிலும் நேர மண்டலம் உருவாக அடிப்படைக் காரணமானது.

பல ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டு வந்தனர்.

இடைக்காலத்தில் நிழலை வைத்து நேரத்தை கணக்கிடும் சாதனத்திற்கு மாற்றாக இயந்திர கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன.

சூரியனின் நிலையை கணித்து அதற்கு ஏற்றார் போல் நகரங்கள் கடிகாரத்தில் நேரத்தை அமைத்தன. இது வெவ்வேறு நகரங்கள் சிறிது வேறுபட்ட நேரங்கள் இருப்பதற்கு வழிவகுத்தது.

1800 வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அந்த சமயத்தில் வட அமெரிக்காவில் குறைந்தது 144 வகையான நேரமண்டலங்கள் இருந்தன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வரலாற்று ரீதியாகப் பெரும்பாலான மனிதர்கள் குறிப்பாக தங்கள் வீடுகளை விட வெகு தொலைவில் பயணம் செய்யாமல் இருந்தனர். அவர்கள் பொதுவாகக் குதிரை, ஒட்டகம் அல்லது குதிரை வண்டி போன்றவை பயன்படுத்தி நிலத்தில் பயணம் செய்ய வேண்டி இருந்தது.

அதிலும் தொலைதூரம் இவர்கள் பயணம் செய்ய இயலாத நிலை காணப்பட்டது. இதனால், மக்களுக்கு நேரத்தைக் கணக்கிடுவது, ரயில் பாதைகள் உருவாகும் வரை சிக்கலாக அமையவில்லை.

பி&ஓ ராயில் பாதை அருங்காட்சியம்

பட மூலாதாரம், B&O Railroad Museum

படக்குறிப்பு, முதல் தந்தி, அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் இருந்து பால்டிமோரில் உள்ள மவுண்ட் கிளேர் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

மேரிலேன்டின் பால்டிமோரில் அமைந்துள்ள பி&ஓ ரயில் அருங்காட்சியகத்தின் தலைமை காப்பாளர் ஜான் கோல்ட்மேனை பொருத்தவரை, 1800-களின் மத்தியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ரயில்கள் பெரிய அளவில் பிரபலமடைந்தன.

இந்த பிராந்தியம் முழுவதும், அதிக அளவிலான மக்களையும், சரக்குகளையும் ரயில் கொண்டு செல்ல ஆரம்பித்தன.

இதனால், ஒருங்கிணைக்கப்பட்ட நேரத்தை கடைப்பிடிக்கும் அமைப்பை உருவாக்குவது, செயல் திறன் அடிப்படையில் மட்டுமின்றி, தேச பாதுகாப்புக்கான தேவையாகவும் இருந்தது.

"மாறுபட்ட உள்ளூர் நேர மண்டலங்கள் ரயில்களுக்கு முக்கிய பிரச்னைகளை உருவாக்கியது," என அவர் விளக்கினார்.

"மக்கள் ரயில்களை தவறவிட்டனர். ரயில்கள் ஒரே பாதையில் பயணிக்கும்போது விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது'' என்கிறார் அவர்.

ராயல் அப்சர்வேட்டரி இல்லம்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, கிரீன்விச் சராசரி நேரம் என்றால், சராசரியான அல்லது "பொதுவான" நேரம்.

இதே சமயத்தில், 1825-இல் நவீன ரயில்வேயை உருவாக்கிய பிரிட்டனும் இதைப் போன்ற பிரச்னையை எதிர்கொண்டது.

ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு ரயில் பாதைகள் சிறப்பான இணைப்பைக் கொடுத்தது.

இதனால், டஜன் கணக்கான ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களை ரயில் நிலையங்களில் உள்ளூர் நேரப்படி பட்டியலிட முடியாது என்பது தெளிவாகப் புரிந்தது.

1847 முதல், பிரிட்டனின் அனைத்து ரயில் நிறுவனங்களும் ஒரே நிலையான "ரயில்வே நேரத்தைப்" பயண்படுத்த தொடங்கின.

இந்த புதிய நேரத்தை கடைப்பிடிக்கும் முறை "கிரீன்விச் சராசரி நேரம்" என அறியப்பட்டது.

இந்த முறை 1880-இல் பிரிட்டன் முழுவதும் ஏற்கப்பட்டது. நேரத்தை ஒழுங்குப்படுத்திய முதல் நாடாக பிரிட்டன் மாற்றியது.

கிரீன்விச் சராசரி நேரம் என்றால், சராசரியான அல்லது "பொதுவான" நேரம்.

அதாவது சூரியன், ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச்சில் (Royal Observatory Greenwich) உள்ள பிரைம் மெரிடியன் கோட்டை கடக்கும் நேரம்.

பிரிட்டன் முழுவதும் நேரத்தை ஒழுங்குபடுத்தியது செயல் திறனை அதிகப்படுத்தியது. ரயில்கள் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்தது. பயணிகள் தங்களது இணைப்பு ரயில்களை பிடிக்க உதவியது.

இதன் விளைவால், இந்த திட்டம் வட அமெரிக்காவில் பரவ வெகுகாலம் எடுத்துக் கொள்ளவில்லை.

பிரிட்டனில் நாடு முழுவதும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நேரம் உருவாக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் இதே சூழல் இல்லை. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு முழு கண்டத்திற்கும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நேர அமைப்பை கண்டுபிடிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது.

கனடாவை சேர்ந்த பொறியாளர் சர் சான்ஃபோர்ட் ஃப்ளெமிங் 1879-இல் ஒரு ரயிலை தவறவிட்ட பின், ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அது நேர மண்டல (Time Zone) உருவாக்கம். இவரின் இந்த திட்டத்தை அமெரிக்கா மற்றும் கனடாவின் ரயில் நிறுவனங்கள், நவம்பர் 18, 1883-ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டன.

மிகப்பெரிய வட அமெரிக்கா கண்டத்திற்கு நான்கு நேர மண்டலங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அவை கிழக்கு, மத்திய, மலை மற்றும் பசிஃபிக் நேரம். ஒப்பீட்டளவில் இவை அனைத்தும் தற்போது வரை மாறாமல் உள்ளன.

அதிகரித்து வரும் ரயில் பயணங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரயில் பயணங்களால் நடந்த பல கலாசார மாற்றங்களில் நேரமும் ஒன்று.

"புதிய ஒழுங்குபடுத்தப்பட்ட நேர மண்டலங்களால் ரயில் விபத்துக்கள் நடைபெறுவது குறைந்துள்ளது," என்பதை கோல்ட்மேன் விளக்கினார்.

ஒரு வருடம் கழித்து, வாஷிங்டன் டிசியில் சர்வதேச பிரைம் மெரிடியன் மாநாடு என்று அழைக்கப்படும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஃப்ளெமிங் உதவினார். இந்தக் கூட்டத்தில், அவர்கள் கிரீன்விச் மெரிடியனை தீர்க்கரேகையை அளவிடுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும், உலகளாவிய நேர மண்டலங்களை அமைப்பதற்கான தரநிலையாகவும் தேர்வு செய்தனர்.

வட அமெரிக்காவின், உள்ளூர் நகரங்கள் இந்த புதிய நேர மண்டலங்களை ஏற்றுக்கொண்டன.

இருப்பினும், அமெரிக்காவின் மத்திய அரசு இந்த புதிய நேர மண்டலங்களைச் சற்றுத் தாமதமாக 1918-இல் ஏற்றுக்கொண்டது.

ரயில் பயணங்களால் நடந்த பல கலாசார மாற்றங்களில் நேரமும் ஒன்று.

ரயில்கள் மக்கள் மற்றும் திட்டங்கள் உலகம் முழுவதும் பரவ உதவியது. பல பகுதிகளில் உள்ள மக்கள் தொலைவில் மக்களுடன் தொடர்பு கொள்ளவும் ரயில்கள் உதவியது.

முதல் தந்தி, அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் இருந்து பால்டிமோரில் உள்ள மவுண்ட் கிளேர் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த இடத்தில்தான் பி&ஓ ராயில் பாதை அருங்காட்சியம் அமைந்துள்ளது.

இன்றும் அந்த அருங்காட்சியகத்தில், பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் ரயில்களைப் பார்க்கலாம். நிலத்தடியில் செல்லும் ரயில் பாதை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அமெரிக்காவில் வர்த்தகப் பயன்பாட்டிற்காக முதலில் போடப்பட்ட ரயில் பாதையில் பயணிக்கும் மைல் ஒன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)