மாலத்தீவை விட்டு வெளியேறும் இந்தியப் படை, காலூன்றும் சீனா - அடுத்து என்ன நடக்கும்?

சீனா-மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
  • பதவி, பிபிசி செய்திகள்

மாலத்தீவு-சீனா உறவுகள் நெருக்கமாகி வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு நாளை மறுநாள் (மே 10-ஆம்) வெளியேற உள்ளனர். படிப்படியாக நிகழும் இந்த வெளியேற்றம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முழுமையடைய வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முய்சு விதித்துள்ள மே மாதக் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவர்.

மாலத்தீவில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மீட்பு மற்றும் உளவு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சிறிய விமானத்தை பராமரிக்கவும், இயக்கவும் தனது ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் மாலத்தீவிற்கு நன்கொடையாக கொடுத்திருந்தது.

இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றும் நடவடிக்கை என்பது அதிபர் முய்சுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

மாலத்தீவின் மீது இந்தியா நீண்டகாலமாக தனது செல்வாக்கை செலுத்தி வருகிறது.

மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் முக்கியமான பகுதிகளை கண்காணிக்க அந்நாடு இந்தியப் படையினரை அனுமதித்தது. ஆனால், முய்சு பதிவியேற்விற்கு பின், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவில் உள்ள வல்லரசுகள், இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த சந்தர்பத்தை, சீனா, சுரண்டுவதற்கான ஒரு இடைவெளியாகப் பார்க்கிறது.

இருந்தபோதிலும், ராணுவத்தினரைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள சிவில் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட விமானத்தை இயக்க மாலத்தீவு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஒரு குழுவினர் மாலத்தீவு சென்றுள்ளனர்.

"விமானம் மாலத்தீவில் இருக்கும், அவற்றைப் பராமரிக்க இந்திய பணியாளர்கள் இருப்பார்கள். எனவே இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது," என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண்.

மாலத்தீவில் உள்ள சிலர், ராணுவ வீரர்களுக்கு பதிலாக சிவிலியன்களை நியமிப்பதை முய்சுவின் 'இந்தியா வெளியேறு' பிரச்சாரத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள்.

இதுகுறித்து கேட்க முய்சுவை தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், முய்சுவின் அலுவலகம் பதிலளிக்கவில்லை.

மாலத்தீவுக்கு சீனா என்ன உதவி செய்கிறது?

சீனா-மாலத்தீவு

பட மூலாதாரம், Reuters

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாலத்தீவு, ஆசிய சக்திகளின் போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனா பல ஆண்டுகளாக மாலத்தீவிற்கு நூறு கோடி டாலர்களுக்கு மேல் கடன் கொடுத்துள்ளது, பெரும்பாலும் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இந்தக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங் மற்றும் மாலே ஆகிய இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்திக் கொண்டன. முந்தைய மாலத்தீவு தலைவர்களைப்போல அல்லாமல், முய்சு இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாகவே, சீனாவிற்கு அரசு முறைப்பயணமாகச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில், மாலத்தீவு அரசு, சீனாவுடன் ஒரு ராணுவ உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முன்னேற்றம், இந்தியாவை சற்று கவலையடையச் செய்தது.

கூடுதல் விவரங்களை தர மறுத்த மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் எந்தவிதப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் நடந்ததாக் கூறியது. ஆனால், செவ்வாய்கிழமை அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் முய்சு, சீனா மாலத்தீவு பாதுகாப்பு படைகளுக்கு உயிரைக்கொல்லாத ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கும் எனக் கூறினார்.

"இது முன்னோடியில்லாதது. ராணுவ உதவியை வழங்குவதற்காக மாலத்தீவு பெய்ஜிங்குடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இதுவே முதல் முறை," என்று மாலத்தீவு அரசியல் ஆய்வாளர் அசிம் ஜாஹிர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"முதலீடு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் முய்சு சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவார் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் இந்த அளவிற்கு செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்றும் அவர் கூறினார்.

ஆனால் பெய்ஜிங் மாலத்தீவில் நீண்டகால ராணுவத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று மறுக்கிறது.

"இது இரு நாடுகளுக்கிடையேயான இயல்பான உறவு. இந்தியப் பெருங்கடலில் சீனா ராணுவப் இருப்பைக் கொண்டிருக்க விரும்பினால், அதற்காக மாலத்தீவுகளை விட அது சிறந்த தேர்வுகளைக் செய்திருக்கலாம்," என்கிறார் செங்டு இன்ஸ்டிடியூட் ஆப் வேர்ல்ட் அஃபர்ஸ் சிந்தனைக் குழுவின் தலைவர் லாங் சிங்சுன்.

சீனாவுடன் நெருங்கும் மாலத்தீவு

சீனா-மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

சீனா உறுதியளித்திருந்த போதிலும், பலரும் சீனா இந்த சந்தர்பத்தைத் தனக்குத் சாதகமாகப் பயன்படுத்துவதாக நம்புகின்றனர். ஏனெனில், இதற்கு முன்பு இருந்த அதிபர் இப்ராகிம் மொகமத் சோலிஹ் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, முய்சு, முந்தைய நிர்வாகம் டெல்லியுடனான மாலேயின் ஒப்பந்தங்களின் உண்மையை வெளியிடவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அதேபோன்ற விமர்சனம் அவர் மீதும் வைக்கப்படுகிறது.

"பெய்ஜிங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது அவர் கையெழுத்திட்ட பெரும்பாலான ஒப்பந்தங்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை. முய்சு அத்தகைய ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிடாத போது முந்தைய அரசாங்கத்தை விட சிறந்தவர் அல்ல," என ஜாஹிர் கூறினார்.

கடந்த மாதம், டெல்லியின் எதிர்ப்பையும் மீறி, சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3, மாலேயில் நிறுத்த முய்சுவின் நிர்வாகம் அனுமதித்தது.

ஆனால், சீன ராணுவம் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய தரவுகளை சேகரிக்கும் பணியாக இது இருக்கலாம் என்று அஞ்சும் சில இந்திய நிபுணர்களை இது நம்ப வைக்கவில்லை.

உறவுகளில் தொடர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், டெல்லி மாலத்தீவுக்கு அருகாமையில் உள்ள இந்திய தீவுக்கூட்டமான லட்சத்தீவில் புதிய கடற்படை தளத்தை அமைத்துள்ளது.

மினிகாய் தீவில் உள்ள ஐ.என்.எஸ் ஜடாயு 'மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில்' தனது முயற்சிகளை மேம்படுத்தும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

சிலர் இதை மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பும் செய்தியாகப் பலர் பார்த்தாலும், இது தற்போதைய பதட்டங்களுக்கான பதில் இல்லை என்று இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இது புதிய விஷயமாக நான் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை, இது சில காலமாக செயல்பாட்டில் உள்ளது," என்று முன்னாள் இந்திய தூதர் சரண் கூறினார்.

முய்சுவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அவரது நாட்டில் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாலத்தீவு இந்தியாவையே சார்ந்துள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இந்தியா அனுப்பியது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி சில அதிகாரிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, மாலத்தீவை 'புறக்கணிக்க' இந்தியர்களுக்கு சமூக ஊடக அழைப்புக்கு வழிவகுத்த சமீபத்திய சர்ச்சைக்குப் பிறகு இது மாறிவிட்டது.

முய்சு பெய்ஜிங்கில் இருந்தபோது சர்ச்சை வெடித்தது. தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததுபோல மீண்டும் முதலிடத்தைப் பெற அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பத் தொடங்குமாறு சீன அதிகாரிகளை மாலத்தீவு அரசு கேட்டுக்கொண்டது.

அப்போதிருந்து, சீன சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் செல்லத் தொடங்கினர். சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாலத்தீவுக்குச் சென்ற சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகளில் 13% பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அவையில் பெரும்பான்மை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், முய்சுவின் நடவடிக்கை தீவிரமடையும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)