கனடாவில் ட்ரூடோவின் ஆட்சி முடிவுக்கு வர டிரம்பின் அச்சுறுத்தல் ஒரு காரணமானது எப்படி?
- எழுதியவர், மைக் வென்ட்லிங், நாடின் யூசிஃப், ஜான் சுட்வொர்த்
- பதவி, பிபிசி நியூஸ்
கனடாவின் லிபரல் கட்சிக்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகாலமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தனது லிபரல் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை மட்டுமே தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார்.
"அடுத்த தேர்தலில், மக்கள் விரும்பும் தலைவரை தேர்வு செய்வதற்கான உரிமை கனடாவுக்கு உள்ளது. உட்கட்சி மோதல்களை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால், என்னால் அந்த தேர்தலில் ஒரு நல்ல வேட்பாளராக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது." என திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறினார்.
கனடாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ட்ரூடோ மீதான கனேடியர்களின் அதிருப்தி அவரது கட்சியின் வெற்றிக்கு ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது.
'ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை'
ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த முடிவைப் பற்றி, நேற்று இரவு உணவு உண்ணும்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்" என்று கூறினார்.
"ஒரு முறையான, நாடு தழுவிய போட்டி செயல்முறை மூலம் கட்சிக்கான அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையைத் தொடங்க, இயக்குநர்கள் குழுவின் கூட்டம் இந்த வாரம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா கூறினார்.
"எங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாடு முழுவதும் உள்ள லிபரல் கட்சியினர், மிகவும் கடமைப்பட்டுள்ளோம்." என தனது அறிக்கையில் சச்சித் மெஹ்ரா தெரிவித்திருந்தார்.
"ஒரு பிரதமராக, அவரது தொலைநோக்குப் பார்வை கனேடியர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது," என்று அவர் கூறினார்.
குழந்தைகள் நலத் திட்டம் உள்பட ட்ரூடோ ஆட்சியில் நாட்டின் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட சில நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் தெரிவித்தார்.
"ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை" என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே கூறினார்.
"லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள், 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தையும் ஆதரித்தனர். இப்போது அவர்கள் பெயரளவுக்கு தங்கள் தலைமையின் முகத்தை மாற்றி, அடுத்த நான்கு வருடங்களுக்கு, கனேடியர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். அதாவது ஜஸ்டினைப் போலவே" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பொய்லிவ்ரே தெரிவித்தார்.
ட்ரூடோவுக்கு எதிரான உள்கட்சி அழுத்தங்கள்
ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன. டிசம்பரில் கனடாவின் துணைப் பிரதமரும் ட்ரூடோவின் நீண்ட கால நண்பருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது, இந்த அழுத்தம் அதிகரித்தது.
ஃப்ரீலேண்ட் தனது ராஜினாமா கடிதத்தில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கனேடிய பொருட்கள் மீதான வரி தொடர்பாக பல அச்சுறுத்தல்களை விடுக்கிறார். ஆனால் டிரம்ப் முன்வைக்கும் இந்த 'கடுமையான சவாலை' எதிர்கொள்ள ட்ரூடோ போதுமான அளவு பணியாற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
"ஃப்ரீலாண்ட் துணைப் பிரதமராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று நம்பினேன். ஆனால் அவரது முடிவு வேறுவிதமாக இருந்தது" என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார்.
டிரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக கனடா அறிவித்துள்ளது.
டிரம்ப் ஒரு ஆன்லைன் பதிவில், வரிகள் தொடர்பான அழுத்தம் ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது என்று கூறினார், மேலும் கனடாவை, 'அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும்' என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் கூறினார்.
"கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் குறையும். கனடாவைத் தொடர்ந்து சுற்றி வரும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்," என்றும் டிரம்ப் அந்த பதிவில் கூறினார்.
லிபரல் கட்சியின் அடுத்த தலைவர்
கனடாவில் 2019 முதல், லிபரல் கட்சி பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.
ஃப்ரீலாண்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைக்க லிபரல் கட்சிக்கு உதவிய பிற கட்சிகளின் ஆதரவை ட்ரூடோ இழந்தார். அதாவது இடதுசாரி சார்பு கொண்ட புதிய ஜனநாயகவாதிகள், மற்றும் கியூபெக் தேசியவாத கட்சியான பிளாக் கியூபெகோயிஸ் (Bloc Quebecois) போன்ற கட்சிகளின் ஆதரவை இழந்தார்
கனடாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, கருத்துக்கணிப்புகளில் பல மாதங்களாக லிபரல் கட்சியை விட முன்னிலையில் உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், லிபரல் கட்சி கணிசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கன்சர்வேடிவ் கட்சி கூறுகிறது.
இப்போது லிபரல் கட்சியினர் அடுத்த தேர்தலுக்கான தங்கள் கட்சியின் முகமாக இருக்க ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் நடைபெற வேண்டும்.
இந்த உட்கட்சி தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்றும், பிரதமர் அலுவலகம் இந்த செயல்முறையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் என்றும், லிபரல் கட்சி உறுப்பினர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடமே வழங்கப்படும் என்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் ஈவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட், 'லிபரல் கட்சியினர் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தவுடன், கனடாவுக்கான தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும்' என்று பரிந்துரைத்தார்.
ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு
1970கள் மற்றும் 80களில் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முன்னாள் கனேடிய பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ.
ஜஸ்டின் ட்ரூடோ யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015இல் தனது கட்சியை பெரும்பான்மை ஆதரவுடன் கனடாவின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.
ட்ரூடோவின் அமைச்சரவையில் வழங்கப்பட்ட பாலின சமத்துவம் (இப்போதும் 50% பெண் உறுப்பினர்கள் என்ற அமைப்பே தொடர்கிறது), கனடாவில் பழங்குடி மக்களுடனான நல்லிணக்கச் செயல்பாடுகளில் முன்னேற்றம், தேசிய கார்பன் வரி கொண்டு வரப்பட்டது, குடும்பங்களுக்கு வரி இல்லாத குழந்தை நலத் திட்டத்தை அமல்படுத்துதல், மற்றும் கஞ்சாவை (Recreational cannabis) சட்டப்பூர்வமாக்குதல் போன்றவை அவரது புகழ்பெற்ற அரசியல் திட்டங்களில் அடங்கும்.
ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (Assembly of First Nations) அமைப்பின் தேசியத் தலைவர் சிண்டி உட்ஹவுஸ் நெபினாக், பழங்குடியின பிரச்னைகளில் ட்ரூடோ முன்னெடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார்.
நெபினாக் வெளியிட்ட அறிக்கையில், "அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் அமைப்பின் முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ட்ரூடோ எடுத்துள்ளார்" என்று கூறினார்.
"இதில் இன்னும் நிறைய வேலைகள் எஞ்சியுள்ளன, ஆனால் ட்ரூடோவின் நடவடிக்கைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளன." என்று கூறினார் நெபினாக்.
ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தின் தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளும் சில கனேடியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.
இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 'ஃப்ரீடம் கான்வாய் டிரக்' (Freedom Convoy truck) போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் போராட்டக்காரர்களை அகற்ற அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார் ட்ரூடோ.
மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் ட்ரூடோவின் ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர்.
ஒட்டாவாவில், ட்ரூடோவின் ராஜினாமாவைக் கொண்டாடும் வகையில், ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள் குழு நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நடனமாடினர்.
ஆனால், அங்கிருந்த ஒரு நபர் 'ட்ரூடோவின் ஆட்சியில் அனைத்தும் சரியாகவே இருப்பதாக தான் கருதுவதாகக்' கூறினார்.
"நான் ஒரு தச்சன். நான் என் சொந்த வணிகத்தில் கவனம் செலுத்துகிறேன், எனக்கு வருமானம் வருகிறது, அதை வைத்து வாழ்க்கையை நடத்துகிறேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது" என்று பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹேம்ஸ் கமர்ரா பிபிசியிடம் கூறினார்.
மற்றொரு கனேடியரான மரிஸ் காசிவி, இது ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு போல தோன்றுகிறது என்றார்.
ட்ரூடோ பதவி விலகியதற்கு வருத்தப்படுகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, "இல்லை, இதுதான் சரி" என்று பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)