எமது தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்.
தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளோம். இதனால் உங்களுக்கும், உங்கள் தரவுகளுக்கும் என்ன தாக்கம் ஏற்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கனடாவின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளி 'முதல் இந்து அமைச்சர்' தேர்வு ஆவாரா? யார் இவர்?
கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவிகளில் நீடிப்பார்.
அதாவது, அவரது கட்சி பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.
ஆனால், தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக்கணிப்புகளில் அவரது கட்சி தோல்வியை நோக்கிச் செல்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
ட்ரூடோவின் ராஜினாமாவால் அந்நாட்டின் பிரதமர் பதவிக்கும், லிபரல் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கும் பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன.
முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி வரையிலான பெயர்கள் இப்பட்டியலில் அடங்கும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் ஏழு பேர் உள்ளனர். அப்பட்டியலில் உள்ள சுவாரஸ்யமான நபர்களில் ஒருவர் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த்.
யார் அனிதா ஆனந்த்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தின் பெற்றோர் 1960களில் நைஜீரியாவிலிருந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள கென்ட்வில்லில் குடியேறினர்.
அனிதாவின் பெற்றோர் தொழில் ரீதியாக மருத்துவர்கள். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் ஆக்ஸ்போர்டு மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பின் டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இதற்குப் பிறகு அவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இதனுடன், அவர் யேல், குயின்ஸ் மற்றும் மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்பித்துள்ளார்.
லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் குழுவில் அனிதா முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
57 வயதான அனிதா 2019ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். அவர் டொராண்டோவுக்கு வெளியே உள்ள ஓக்வில்லியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நவம்பர் 2019 முதல் அக்டோபர் 2021 வரை, அவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக இருந்தார்.
கனடாவின் முதல் இந்து பெண் எம்.பி
அனிதா தனது இணைய சுய விவரக் குறிப்பில் தன்னை முதல் இந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவின் அமைச்சரவையில் முதல் இந்து அமைச்சர் என்றும் அவர் தன்னைப் பற்றி கூறுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அமைச்சராகப் பதவியேற்றார், அனிதா. பதவியில் இருந்த போது, கோவிட் -19 சவாலை எதிர்கொண்டார். அச்சமயத்தில் தடுப்பூசி மற்றும் பிபிஇ கருவிகளை பாதுகாக்கும் பணிக்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.
அனிதா ஆனந்தின் பனியைப் பார்த்து, 2021-ம் ஆண்டு அவருக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நேரத்தில், ரஷ்யா-யுக்ரேன் போரில் யுக்ரேனுக்கு உதவி வழங்குவதில் கனடா எதிர்கொண்ட சவால்களை அவர் கவனித்தார்.
இவற்றைத் தவிர, கனடா ராணுவப் படைகளில் நடந்த பாலியல் முறைகேடு புகார்களின் நெருக்கடியையும் அனிதா சந்திக்க வேண்டியிருந்தது.
அனிதா ஆனந்த் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திடீரென மாற்றப்பட்டு கருவூல வாரியத்தை கையாள பணியமர்த்தப்பட்டார். அனிதா ஆனந்தை பதவி இறக்கம் செய்வதாக, இந்த முடிவு பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் ட்ரூடோவின் விமர்சகர்கள் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற அனிதாவின் லட்சியத்திற்கு இது ஒரு தண்டனை என்று குறிப்பிட்டனர்.
டிசம்பரில் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர், அவருக்கான இலாகா மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டது. இம்முறை அவருக்கு போக்குவரத்து அமைச்சர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருக்கான பொறுப்பு வழங்கப்பட்டது.
களத்தில் உள்ள பிற முகங்கள்
லிபரல் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் அனிதா ஆனந்த் உள்ளார். ஆனால் இந்தப் போட்டியில் அவருக்கான இடம் முதலிடத்தில் இல்லை.
கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தலைவர் போட்டியில் முன்னணியில் இருப்பவராகக் கருதப்படுகிறார். டொராண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா இதுவரை ட்ரூடோவின் அணியில் மிகவும் பிரபலமான முகமாக இருந்து வருகிறார்.
கட்சியின் உள் வட்டத்தில் உள்ள மூத்த தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவர், கிறிஸ்டியா. பிரதமர் அலுவலகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கிறிஸ்டியா தனது பொது ராஜினாமாவின் போது ட்ரூடோவை விமர்சித்தார். அதன் பிறகு அவர் மீது அழுத்தம் இருந்தது. மேலும் அவர் வெளியேறுவது உறுதி என்று நம்பப்பட்டது.
அல்பேர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் யுக்ரேனிய தாய்க்கு பிறந்தவர் கிறிஸ்டியா. அவரது வயது 56. அரசியலில் நுழைவதற்கு முன்பு அவர் பத்திரிகையாளராக இருந்தார்.
2013 இல் நாடாளுமன்ற உறுப்பினரானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரூடோவின் அமைச்சரவையில் இணைந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றிய போது, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்த கனடாவுக்கு உதவினார் கிறிஸ்டியா.
இதையடுத்து அவருக்கு துணைப் பிரதமர் பதவியும், நிதியமைச்சகமும் வழங்கப்பட்டது.
கனடாவில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி கிறிஸ்டியா ஆவார். கோவிட் தொற்றுநோயின் போது கனடாவின் நிதி நிர்வாகத்தை அவர் மேற்பார்வையிட்டார்.
முன்னாள் வங்கியாளர் ஏன் போட்டியில் உள்ளார் ?
நீண்ட காலமாக, பாங்க் ஆஃப் கனடா மற்றும் இங்கிலாந்து வங்கியின் தலைவராக இருந்த மார்க் கார்னியை தனது நிதி அமைச்சராக்க ட்ரூடோ விரும்பினார்.
ஜூலை 2024 இல், நேட்டோ மாநாட்டின் போது, கட்சியில் இணைந்தால் மதிப்புமிக்க நபராக கார்னி திகழ்வார் என்று செய்தியாளர்களிடம் ட்ரூடோ கூறினார். குறிப்பாக கனேடிய மக்களுக்கு வலுவான அரசியல் தலைவர்கள் தேவைப்படும் போது அவர் உதவுவார் என்றும் ட்ரூடோ குறிப்பிட்டார்.
59 வயதான மார்க் கார்னி ட்ரூடோவின் சிறப்பு ஆலோசகராக இருந்துள்ளார். அவர் இன்று வரை எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், கார்னிக்கு வலுவான பின்னணி உள்ளது.
ஐநா காலநிலை நடவடிக்கைக்கான சிறப்புத் தூதராக பதவி வகித்துள்ளதால், பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழல் மீதும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது.
இந்த இரண்டு நபர்களுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்கான போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்கக் கூடியவராக, தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள அனிதா ஆனந்த் கருதப்படுகிறார்.
அதேசமயம், அனிதாவுக்குப் பிறகு, முன்னாள் தொழிலதிபரும் கனேடிய அமைச்சருமான பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் பெயரும் செய்திகளில் உள்ளது.
54 வயதான ஷாம்பெயின் 2015-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இதற்குப் பிறகு அவர் சர்வதேச வர்த்தகம், வெளியுறவு அமைச்சகத்தை கையாண்டார். சமீபத்தில் கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில் துறையை கையாளுகிறார், பிலிப் ஷாம்பெயின்.
பந்தயத்தில் உள்ள பிரபலமான முகம்
ட்ரூடோவுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு முதல் உலக அரங்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகம் மெலனி ஜோலியின் முகமாகும்.
45 வயதான மெலனி ஜோலி ரஷ்யா-யுக்ரேன் போருக்குப் பிறகு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்த யுக்ரேனுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து கனேடிய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக அவர் ஜோர்டானுக்குச் சென்றார்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட சவால்களின் போது ஜோலி அவற்றின் மையமாக இருந்தார். சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுடனான ராஜதந்திர நெருக்கடிக்கு, ட்ரூடோவுக்குப் பிறகு ஜோலியே பதிலளித்து வந்தார்.
ட்ரூடோவின் நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளியான டொமினிக் லாப்லாங்கும் இப்போட்டியில் பரிசீலிக்கப்படுகிறார்.
57 வயதான டொமினிக், ட்ரூடோவுடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டுள்ளார். கடினமான காலங்களில் அவருக்கு உதவியதாக அறியப்படுகிறார். நிதியமைச்சர் ஃப்ரீலேண்டின் ராஜினாமா அதிர்ச்சியளித்தது. அதன் பிறகுதான் டொமினிக் இப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
நவம்பர் மாதம் டிரம்புடனான ட்ரூடோவின் சந்திப்பை ஏற்பாடு செய்வதில் லாப்லாங்க் பெரும் பங்கு வகித்தார்.
முன்னாள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தலைவர் கிறிஸ்டி கிளார்க்கும் இப்போட்டியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
59 வயதான கிறிஸ்டி, லிபரல் கட்சியின் எதிர்காலம் குறித்த உரையாடலில் பங்கேற்க விரும்புவதாக அக்டோபர் மாதத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கிறிஸ்டி 2011 முதல் 2017 வரை கனடாவின் மேற்கு மாகாணத்தை கவனித்துக் கொண்டார். இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் எரிசக்தி துறையை மேம்படுத்தும் போது சுற்றுச்சூழல் முன்னுரிமைகளுக்கு இடையில் சமநிலையை பேணுவதற்காக அவர் தனித்துவமாகக் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
அதிகம் படிக்கப்பட்டது
தகவல் இல்லை