சென்னை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் கைது

அண்ணா நகர் பாலியல் வழக்கு

இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.

சென்னையில் நான்கு மாதங்களுக்கு முன்பு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, அண்ணா நகர் போலீசார் இந்த வழக்கை மோசமாகக் கையாண்டதைத் தொடர்ந்து, வழக்கை கையாள உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.

"சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் கிழக்கு சென்னை காவல்துறை இணை ஆணையருமான சரோஜ்குமார் தாக்கூர், பெண் காவல் ஆய்வாளர் எஸ் ராஜி மற்றும் அண்ணா நகர் 103வது வார்டு அதிமுக செயலாளர் சுதாகர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

இருவரும் எழும்பூரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜனவரி 21 வரை நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டனர்," என்று அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும், "போக்சோ வழக்கைக் கையாள்வதில் மந்தமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி, பாதிக்கப்பட்டவரின் பெற்றோரை காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கினார்" என்று புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கட்டணமில்லா சிகிச்சை

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை - விரிவாக்கம் செய்ய திட்டம்

பட மூலாதாரம், Getty Images

பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டைக் குறைக்கும் பிஎஸ் -7 அறிமுகம் செய்வதற்கான காலக்கெடுவை வகுக்கவும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி இருப்பதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், 42வது போக்குவரத்து மேம்பாட்டுக் குழு மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், சில முக்கிய முடிவுகள் குறித்துக் கூறிய மத்திய அமைச்சர், நிலையான போக்குவரத்து முறையில், பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை விரைவாகச் செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.

மாசுபாட்டைக் குறைக்க ஈரோ-7க்கு சமமாக இந்தியாவில் வாகனங்களுக்காக முன்மொழியப்பட்ட உமிழ்வு தரநிலை பிஎஸ்-7 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார்.

மேலும், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் திருத்தப்பட்ட திட்டத்தை வரும் மார்ச்சில் அரசு கொண்டுவரப் போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

''சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் மாதிரி திட்டத்தை சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த நாளில் இருந்து ஒரு வாரத்துக்குள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதற்காக திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தை மார்ச் மாதத்துக்குள் அரசு கொண்டு வரும். நாட்டின் அனைத்து வகை சாலைகளில் நடைபெறும் எல்லா விபத்துகளுக்கும் பொருந்தும் இந்தத் திட்டத்தை காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும்'' என்றார் என்கிறது அந்தச் செய்தி.

தகவல் ஆணையர்களை நியமிப்பதில் தாமதம் - உச்சநீதிமன்றம் கண்டனம்

தகவல் ஆணையர்களை நியமிப்பதில் தாமதம் - உச்சநீதிமன்றம் கண்டனம்

பட மூலாதாரம், Getty Images

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு தகவல்களை வழங்கும் தகவல் ஆணையர்களை நியமிப்பதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் நீண்டகால தாமதத்தை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டத்தின் கீழ் பணிபுரிய நபர்கள் இல்லை என்றால், வெளிப்படைத் தன்மை கொண்ட நிர்வாகத்தை உருவாக்கி என்ன பயன் என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மத்திய தகவல் ஆணையத்தில் 8 தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், பல்வேறு துறைகளில் இருந்து தகவல் கேட்டு குடிமக்கள் தாக்கல் செய்த 23,000 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டது.

பல மாநிலங்களில் தகவல் ஆணையங்கள் 2020 முதல் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாகவும் மேலும் சில மாநிலங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

''ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் கடமைகளைச் செய்ய உங்களிடம் ஆட்கள் இல்லையென்றால், இந்த அமைப்பால் என்ன பயன்," என்று நீதிபதி சூர்யகாந்த் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

'துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிப்பார்'

'துணைவேந்தர் தேடுதல் குழுவை கவர்னரே நியமிப்பார்'

பட மூலாதாரம், rajbhavan_tn

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாற்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது எதேச்சதிகார நடவடிக்கை எனவும், அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பைக் குறைக்கவும் முற்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு, இந்த விவகாரத்தில் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அரசு போராடும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் (யு.ஜி.சி.) 2025ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு உள்ளார்.

இதில் துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநருக்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரே நியமனம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேடுதல் குழுவை ஆளுநரே அமைக்க முடியும் என்பதால் ஆளுநர் நினைத்த ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்கிறது அந்தச் செய்தி.

முன்பு, இந்தத் தேடுதல் குழுவில் ஆளுநர் சார்பில் ஒருவர், பல்கலைக் கழகம் சார்பில் ஒருவர் மற்றும் மாநில அரசு சார்பில் ஒருவர் என இருந்து வந்தனர். இந்த நியமன முறை புதிய விதிமுறையில் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விதிகளின்படி தேடுதல் குழுவில் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பு மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை என்கிறது தினத்தந்தி செய்தி

வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை

பட மூலாதாரம், Getty Images

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் நிறுவனம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது.

"ஈரோடு செட்டிபாளையம் என்ற இடத்தில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குடிசைமாற்று வாரியம், பொதுப் பணித்துறை, காவலர் வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் அரசுப் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது," என்று இந்து தமிழ் செய்தி கூறுகிறது.

மேலும், இந்நிறுவனம் தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், பணப் பரிமாற்ற விவரங்கள் குறித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், கணக்கில் வராத சொத்துகள், ரொக்கம் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுவதாக அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

அதோடு, இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் எனவும் இதேபோல மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் 26 இடங்களில் சோதனை மேற்கொண்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)