பா.ஜ.க.வை 2 இடங்களில் இருந்து ஆளுங்கட்சியாக வளர்த்த அத்வானியால் பிரதமராக முடியாதது ஏன்?

காணொளிக் குறிப்பு, அத்வானி: பா.ஜ.க.வை வளர்த்தெடுத்தவர் பிரதமர் போட்டியில் பின்தங்கியது எப்படி?
பா.ஜ.க.வை 2 இடங்களில் இருந்து ஆளுங்கட்சியாக வளர்த்த அத்வானியால் பிரதமராக முடியாதது ஏன்?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பிரதமர் நரேந்திர மோதி தனது சமூக ஊடக பக்கமான எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். "லால் கிருஷ்ண அத்வானிஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்."

“நமது காலத்தின் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான அத்வானிஜி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. அடிமட்ட அளவில் பணியாற்றியதில் இருந்து துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்யும் வரை அவரது பயணம் தொடர்ந்தது. உள்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் அவர் முத்திரை பதித்தார்,” எனப் பதிவிட்டுள்ளார்.

சுமார் 10 நாட்களுக்கு முன்பு, ஜனவரி 23 அன்று பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஓராண்டுக்கு அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியும்.

பா.ஜ.கவை 2 இடங்களில் இருந்து ஆளுங்கட்சியாக வளர்த்தவர்

ஒரு காலத்தில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் பெயர் நாடு முழுவதும் பிரபலமாக இருந்தது. பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் அத்வானி என்று அனைவரும் கருதினார்கள்.

கடந்த 1984ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்த பாரதிய ஜனதா கட்சியை 1998இல் ஆளும் கட்சி என்ற நிலைக்கு உயர்த்தியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது.

அந்த நேரத்தில் அவர் விதைத்த விதை, பலனளித்தபோது அதை அறுவடை செய்யும் வாய்ப்பு அத்வானிக்கு கிடைக்கவில்லை. 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தபோது, 'குறைந்து செல் விளைவு கோட்பாடு' (Law of Diminishing Returns) என்பது அத்வானிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம்.

தன்னால் வளர்த்து விடப்பட்ட நரேந்திர மோதிக்கு, தனக்குக் கிடைக்க வேண்டிய பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை அத்வானிக்கு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருபவரும், இந்திரா காந்தி மையத்தின் தலைவராகப் பதவி வகிக்கும் ராம் பகதூர் ராயிடம் பிபிசி முன்பு பேசியபோது, "2004 தேர்தல்களில் தோல்வி அடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிகளும் புதிய தலைமை தேவை என்று நினைத்தன. ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராகப் போகிறார் என்ற செய்தி வெளியானது இந்தக் கருத்துக்கு வலுவூட்டியது," என்றார்.

பாரத ரத்னா அத்வானி

பட மூலாதாரம், Getty Images

பிரதமராகும் வாய்ப்பை வாஜ்பேயி, மோதியிடம் இழந்தது எப்படி?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக பாஜக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்று அந்தக் கட்சியை நெருக்கமாகக் கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதுவே பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும்போது, அவர் தேசிய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் பாஜகவுக்கு இருக்கிறது என்று முன்னதாக அத்வானி குறித்துப் பேசும்போது கூறினார் அஜய் சிங்.

பிரதமர் பதவிக்கு வேட்பாளராவதற்கு அத்வானிக்கு தடை ஏற்பட்டதும் இந்த விஷயத்தில்தான். "பாஜக எப்போதுமே எதிர்கொள்ளும் பிரச்னை இது. ஏனெனில், பாஜகவோ அல்லது அதற்கு முந்தைய பாரதிய ஜனசங்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ் போன்றவையோ, இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசமைப்புப் பதவி என்ற அடிப்படையில் வரும்போது, இந்த சித்தாந்தத்தில் இருந்து வெளியே வந்தாக வேண்டியது அவசியமாகிறது," என்றார் அஜய் சிங்.

"முதலமைச்சர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளில் அமரும்போது இந்துத்துவா கொள்கையை விட்டு விலக வேண்டும் என்பது, அந்த சித்தாந்தத்தில் இருந்தவர்களுக்குச் சிரமமானது. இதை வாஜ்பேயி, அத்வானி இருவருமே எதிர்கொண்டனர்.

தனது பேச்சாற்றல் மற்றும் இந்தி மொழிப் புலமையால் இந்தப் பிரச்னையை அடல் பிகாரி வாஜ்பேய் உரிய முறையில் எதிர்கொண்டார். அதில் அத்வானி சற்று பின்தங்கிவிட்டார் என்பதால் பிரதமர் பதவி என்ற போட்டியிலும் அவர் பின்தங்க நேர்ந்துவிட்டது."

அத்வானியின் ஆலோசகரும், ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகத்தை எழுதியவருமான ஏ.ஜி நூரானியிடம் பேசினோம்.

"1984 தேர்தலில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தங்களது பழைய வாக்குகளைப் பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, இந்துத்துவா சித்தாந்தத்தை முன்னெடுப்பது மட்டுமே என்று முடிவு செய்தார்கள்.

தங்களது முயற்சிகளை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்று 1989இல் பாஜக பாலம்புர் மாநாட்டில் அத்வானி நேரடியாகவே தெரிவித்திருந்தார்," எனக கூறினார் ஏ.ஜி நூரானி.

"தன்னை பிரதமராக்க மாட்டார்கள் என்பதை 1995இல் அத்வானி உணர்ந்தார். குஜராத் வன்முறை சம்பவங்களில் இருந்து அவரால் காப்பாற்றப்பட்ட நரேந்திர மோதியே அத்வானியை வெளியேற்றினார் என்ற போது அத்வானியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை."

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)