ஒரே வாரத்தில் 30 வெடிகுண்டு மிரட்டல்கள் - இந்திய விமான சேவைத் துறையில் என்ன பாதிப்பு?
- எழுதியவர், ஷௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இதனால், விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன, விமானப் பயணங்கள் தாமதமாகின்றன.
கடந்த வாரம், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, பயணிகள் கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு, ஏர் இந்தியா விமானத்தின் உறைந்த படிக்கட்டுகளில் இறங்குவதைக் காட்டியது. அது கனடாவில் உள்ள தொலைதூரக் குளிர் நகரமான இகலூயிட்.
முதலில் மும்பையில் இருந்து சிகாகோ செல்லும் போயிங் 777 விமானத்தில் இருந்த 211 பயணிகள், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அக்டோபர் 15-ஆம் தேதி இங்கு திருப்பி விடப்பட்டனர்.
“நாங்கள் 200 பயணிகளுடன் அதிகாலை 5 மணி முதல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளோம். என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்,” என்று ஹரித் சச்தேவா என்ற பயணி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அவர் ‘கனிவான விமான நிலைய ஊழியர்களைப்’ பாராட்டினார். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்குப் போதுமான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
சச்தேவாவின் இந்தப் பதிவு, அறியப்படாத, தொலைதூர இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட பயணிகளின் விரக்தியையும் கவலையையும் பிரதிபலித்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு கனடா விமானப்படை விமானம் சிக்கித் தவித்த பயணிகளை சிகாகோவிற்கு அழைத்துச் சென்று அவர்களது வருத்தத்தை முடித்து வைத்தது.
‘ஆன்லைனில் வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தல்’ காரணமாக விமானம் இகலூயிட்-க்கு திருப்பி விடப்பட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது.
ஆனால், அந்த அச்சுறுத்தல் பொய்யானது. சமீபத்தில் இந்தியாவின் விமான நிறுவனங்களைக் குறிவைத்து விடுக்கப்பட்ட போலி அச்சுறுத்தல்களைப் பிரதிபலிக்கின்றன . கடந்த வாரம் மட்டும், இதுபோல குறைந்தது 30 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதன் விளைவாக விமானங்கள் திசைதிருப்பப்படுவது, விமானச் சேவைகள் ரத்தாவது, தாமதங்கள் ஆகியவை ஏற்பட்டன. ஜூன் மாதம், ஒரே நாளில் 41 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்திய விமான சேவையில் என்ன பாதிப்பு?
இதனைப் புரிந்துகொள்ள, இந்தத் தரவுகளைப் பார்க்கலாம்.
2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், விமான நிலையங்களில் 120 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். இவற்றில் கிட்டத்தட்ட பாதி, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி மற்றும் மும்பைக்கு அனுப்பப்பட்டன. இது, சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற அச்சுறுத்தல்களின் அடிக்கடி வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆனால் இந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம்.
"இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேசச் செயல்பாடுகளை பாதிக்கும் சமீபத்திய சீர்குலைவு செயல்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். இதுபோன்ற குறும்புத்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியவை. எங்கள் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டின் நேர்மையை சமரசம் செய்யும் முயற்சிகளை நான் கண்டிக்கிறேன்," மத்திய அரசு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
அதனால் என்ன நடக்கிறது?
விமான நிறுவனங்களைக் குறிவைக்கும் புரளி வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் நோக்கம், கவன ஈர்ப்பு, மனநலப் பிரச்னைகள், வணிக நடவடிக்கைகளில் இடையூறு, அல்லது குறும்புச் செயல்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2018-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் விமானப் பயணிகள் வெடிகுண்டுகளைப் பற்றி அடித்த ஒரு பொறுப்பற்ற ‘ஜோக்’-ஆல் விமானப் பயணம் தடைபட்டது.
விமானப் பயணம் செய்பவர்கள் கூட இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு, விரக்தியடைந்த பயணி ஒருவர், இந்தியாவின் பீகாரில் உள்ள விமான நிலையத்தில் சரியான நேரத்தில் செக்-இன் செய்யத் தவறியதால், வெடிகுண்டு புரளியைக் கிளப்பி ஸ்பைஸ்ஜெட் விமானத்தைத் தாமதப்படுத்த முயன்றார்.
இந்தப் புரளிகள் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு 15 கோடிக்கும் அதிகமான பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 33 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இருந்து தினமும் 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, ஒரே நாளில் சுமார் 4.8 லட்சம் பயணிகளை (இது அதிகபட்ச எண்ணிக்கை) இந்தியாவின் விமான நிறுவனங்கள் ஏற்றிச் சென்றன. அந்த வாரத்தில்தான் வெடிகுண்டுப் புரளிகள் உச்சத்தை எட்டின.
இந்தியாவில் 700 பயணிகள் விமானங்கள் சேவையில் உள்ளன. மேலும் 1,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்கப்படுவதற்கான ஆர்டர்கள் உள்ளன என்று, சிரியம் ஆலோசனை நிறுவனத்தின் ராப் மோரிஸ் கூறுகிறார். "இவை அனைத்தும் இந்தியாவை இன்று வேகமாக வளர்ந்து வரும் வணிக விமானச் சந்தையாக மாற்றும்," என்கிறார் மோரிஸ்.
போலி வெடிகுண்டு மிரட்டல்களால் என்ன பாதிப்பு?
இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களால், ஒரு விமான நிறுவனம் என்ன விளைவுகளை எதிர்கொள்கிறது?
விமானம் வானில் பறந்துகொண்டிருந்தால், அது அருகிலுள்ள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட வேண்டும். கடந்த வாரம் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம், அல்லது செப்டம்பரில் துருக்கிக்குத் திருப்பி விடப்பட்ட மும்பையிலிருந்து பிராங்பர்ட் சென்ற விஸ்தாரா விமானம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
கடந்த வாரம் நார்ஃபோக் வழியாக ஹீத்ரு சென்ற ஏர் இந்தியா விமானம், சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு நடந்ததைப் போல, வெடிகுண்டு மிரட்டல்களைச் சமாளிக்க போர் விமானங்களை சில நேரங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் இறங்குகின்றனர். விமானத்தில் இருக்கும் அனைத்து சாமான்களும், சரக்கு மற்றும் கேட்டரிங் ஆகியவை முழுமையான தேடலுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறை முடிய பல மணிநேரம் ஆகலாம். மேலும் பணி நேர வரம்புகள் காரணமாக ஒரே குழுவினரால் தொடர்ந்து இதைச் செய்ய முடியாது. இதன் விளைவாக, மாற்றுக் குழுவை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் மேலும் தாமதமாகும்.
"இதற்குக் குறிப்பிடத்தக்க செலவு ஆகிறது. விமானச் சேவைகளின் இணைப்பில் தாக்கங்களைக் கொண்டுள்ளன. திசை திருப்பப்படும், அல்லது தாமதமாகும் ஒவ்வொரு விமானமும் கணிசமான செலவினங்களைச் சந்திக்கிறது. ஏனெனில், தரையிறக்கப்பட்ட விமானங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும். தாமதங்கள் பயணங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் விமானச் சேவை அட்டவணைகள் முழுவதும் பாதிக்கப்படுகின்றன," என்று சுயாதீனமான விமானப் போக்குவரத்து நிபுணரான சித்தரத் கபூர் கூறுகிறார்.
அநாமதேயக் கணக்குகளில் இருந்து வரும் சமூக ஊடக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்திருப்பது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகிறது. குறிப்பாக, மின்னஞ்சல்கள் நேரடியாக விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் போது. அச்சுறுத்தல்கள் ஒரு தனிநபரிடமிருந்து வந்ததா, ஒரு குழுவிடமிருந்தா, அல்லது வெறுமனே மற்றொரு சம்பவத்தைப் பார்த்து அதேபோலச் செய்யப்படுபவையா, என்பது போன்ற நோக்கங்கள் தெளிவாக இல்லை.
என்ன தண்டனை?
கடந்த வாரம், இதுபோன்ற பொய்யான வெடிகுண்டு அச்சுறுத்தல்களை விடுப்பதற்க்காக ஒரு சமூக ஊடகக் கணக்கை உருவாக்கிய, 17 வயதான பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் நான்கு விமானங்களைக் குறிவைத்து பொய்யான வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாக நம்பப்படுகிறது. அவற்றில் மூன்று சர்வதேச விமானங்கள். இதன் விளைவாக இரண்டு விமானங்கள் தாமதமாயின, ஒரு விமானம் திசைதிருப்பப்பட்டது, ஒன்று ரத்தானது.
சில போலி வெடிகுண்டு மிரட்டல்களின் ஐ.பி., முகவரிகளைக் கண்டறிந்த பின்னர், சில லண்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
புரளிகளைக் கண்டுபிடிப்பது சவாலானது. இந்தியச் சட்டம், விமான நிலைய பாதுகாப்பு அல்லது சேவை சீர்குலைவுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. ஆனால், இந்த தண்டனை புரளிகளுக்கும் பொலி மிரட்டல்களுக்கும் மிகக் கடுமையானது. இது சட்ட விசாரணைகளின் முன் நிற்காது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விமானங்களில் பறக்கத் தடை விதிப்பது மற்றும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியில், இதுபோன்ற மிரட்டல்கள் பயணிகளுக்குக் பெரும் கவலையை ஏற்படுத்தும். “இந்த மிரட்டல்களால் முன்பதிவு செய்த விமானத்தில் செல்ல வேண்டுமா என்று என் அத்தை அழைத்தார். 'அல்லது நான் ரயிலில் செல்லட்டுமா?' என்று கேட்டார். நான் அவரிடம், 'தயவுசெய்து விமானத்திலேயே செல்லுங்கள்' என்று கூறினேன்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விமான ஆலோசகர் கூறுகிறார்.
இதுபோன்ற போலி அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வாழ்க்கையைச் சீர்குலைத்து, அச்சத்தை விதைக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)