'தண்டனையை தாமதிக்க முடியாது': டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பு குறித்து காட்டம்
- எழுதியவர், கெய்லா எப்ஸ்டெய்ன்
- பதவி, நியூயார்க்கிலிருந்து
நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்தது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்தாண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கான தண்டனையை வழங்குவதை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார், தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப். இதற்காக அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தை நாடிய அவர், அவருக்கு வழங்கவிருக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார். அதனை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்தத் (அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள) தனக்கு உரிமை உள்ளதா என்று மேல்முறையீட்டு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். ஆனால், 5 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு எதிராகவும், 4 நீதிபதிகள் அவரின் கோரிக்கைக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
- அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு
- டொனால்ட் டிரம்ப்: பாலியல் குற்றச்சாட்டு, தடுப்பூசி எதிர்ப்பு - சர்ச்சையாகும் அமைச்சரவை தேர்வுகள்
- டொனால்ட் டிரம்ப் மீது நிலுவையில் உள்ள 4 குற்ற வழக்குகளும் இனி என்ன ஆகும்?
- ஒரே ஆண்டில் 10 லட்சம் குடியேறிகளை அமெரிக்கா வெளியேற்றுவது சாத்தியமா? டிரம்ப் முன்னுள்ள சவால் என்ன?
வயதுவந்தோருக்கான திரைப்படங்களில் (adult movies) நடித்தவரான நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸூக்கு 2016ம் ஆண்டு, சட்ட செலவுகளுக்காக 1,30,000 அமெரிக்க டாலர்களை டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார். ஆனால், அதுதொடர்பான ஆவணங்களை டிரம்ப் மறைத்த விவகாரத்தில், அவர் குற்றவாளி என்பது உறுதியானது. இந்த வழக்கை கவனித்து வரும் நீதிபதி ஜூவான் மெர்ச்சன், இந்த குற்றத்துக்காக டிரம்ப் சிறைக்கு செல்லமாட்டார் என்று கூறியுள்ளார்.
வியாழக்கிழமை வெளியான இந்த தீர்ப்பு தொடர்பாக கோபமடைந்த டிரம்ப், இது அவமானகரமானது. ஆனால் 'உண்மையான, நியாமான தீர்ப்பு' என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் இந்த நீதிபதி இருந்திருக்கக் கூடாது என்று மெர்ச்சனை மேற்கோள்காட்டி பேசிய அவர், "அவர்களுடைய அரசியல் எதிரிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
5 நீதிபதிகள் எதிர்ப்பு, 4 பேர் ஆதரவு
உச்ச நீதிமன்றத்தின் பழமைவாத நீதிபதிகளான ஜான் ராபர்ட்ஸ் மற்றும் ஏமி கோனே பாரெட், மூன்று 'லிபரல்' நீதிபதிகளுடன் இணைந்து டிரம்பின் கோரிக்கையை நிராகரித்தனர்.
கிளாரன்ஸ் தாமஸ், சாமுவேல் அலிட்டோ, நெய்ல் கொருஸ்ச், மற்றும் ப்ரெட் கவனாக் ஆகியோர் டிரம்பின் வேண்டுகோளுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தனர்.
வரவிருக்கும் புதிய ஆட்சி நிர்வாகத்தில் ஒரு பணியிடத்திற்காக அலிட்டோ தனது முன்னாள் எழுத்தாளரை பரிந்துரை செய்துள்ளார். இந்த தீர்ப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்பு டிரம்பிடம், இந்த பணியிட பரிந்துரைக்காக அலிட்டோ பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே நியூயார்க்கில் உள்ள மூன்று கீழமை நீதிமன்றங்கள் டிரம்புக்கு வழங்கப்பட்ட தண்டனையை தாமதப்படுத்த இயலாது என்று தீர்ப்பு வழங்கியது. வியாழக்கிழமை, ஜனவரி 9ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதைப் போன்று அவருக்கான தண்டனை வழங்கப்படும்.
டிரம்ப் அவருடைய மனுவில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரச்னைகள் மேல் முறையீட்டின்போது தீர்க்கப்படலாம் என்று நீதிபதிகள் நம்பியதால் அவரின் மனுவை நிராகரித்துள்ளனர்.
மேலும், இந்த தண்டனையை ஏற்பது ஒன்றும் அவ்வளவு கடினமான சுமையல்ல என்றும் கூறியுள்ளனர்.
ஆட்சிக்கு வரவிருக்கும் அதிபர்களை குற்றவியல் வழக்குகளில் இருந்து பாதுகாக்க முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் டிரம்பின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டனர்.
கோரிக்கையை நிராகரித்த மூன்று கீழமை நீதிமன்றங்கள்
மன்ஹாட்டன் வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் டிரம்பின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அவருக்கு வழங்கப்படும் தண்டனையை தாமதப்படுத்துவது என்பது பொதுமக்களின் நலன் சார்ந்த விவகாரம் என்பதை மேற்கோள்காட்டிய அவர்கள், இப்படி தாமதப்படுத்துவதற்கான அடிப்படை என்று ஒன்றும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டோர்மிக்கு பணம் கொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஜூலையில் தண்டனை வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், டிரம்பின் வழக்கறிஞர்கள், மூன்று வெவ்வேறு தருணங்களில் நீதிபதி மெர்ச்சனிடம், தண்டனை வழங்குவதை தாமதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் பெற்றனர்.
கடந்த வாரம் நீதிபதி மெர்ச்சன் தண்டனை ஜனவரி 10ம் தேதி வழங்கப்படும் என்று கூறினார். டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்க இன்னும் 10 நாட்களே உள்ளன.
அவருக்கு வழங்கப்பட இருக்கும் தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் அவருடைய வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். ஆனால், நியூயார்க்கில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்று புதன்கிழமை, ஜனவரி 8 அன்று மேல்முறையீடு செய்தனர்.
கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும், அதிபர் பதவிக்கும் கேடு விளைவிக்கும் வகையிலும் அநீதி விளைவிக்கும் வகையிலும் நடந்துகொள்வதை தவிர்க்க, இந்த தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
கடந்த ஆண்டு பழமைவாதிகள் பெரும்பான்மை கொண்ட 6-3 என்ற நீதிமன்ற அமர்வு டிரம்பின் வழக்கில் தீர்ப்பை வழங்கினார்கள். அதிபர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது நிர்வாக ரீதியான விவகாரங்களில் ஏற்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு வழங்க இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காரணத்தால் தான், 2020 தேர்தல் முடிவுகளில் சட்டத்திற்கு புறம்பாக தலையிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் மீதான கூட்டாட்சி வழக்கு நிறுத்திவைக்கப்பட்டது. டிரம்பும் தான் அவ்வாறாக சட்டத்திற்கு புறம்பாக தலையிடவில்லை என்று வாதிட்டார்.
ஆனால், கடந்தாண்டு நடைபெற்று முடிந்த தேர்தலில் அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் வழக்கறிஞர்கள் பலரும், மன்ஹாட்டன் குற்றவியல் வழக்கில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக நீதிபதிகளை வற்புறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.
மன்ஹாட்டன் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த சிறு விளக்கத்தில், "இத்தகைய விலக்கை எந்த ஒரு நீதிமன்றத்தின் முடிவினாலும் ஆதரிக்க இயலாது," என்று குறிப்பிட்டனர்.
ஒரு நேரத்தில் ஒரு அதிபர் மட்டுமே இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டிரம்ப் தன்னுடைய பொறுப்புகூறுதலில் இருந்து தப்பிக்கும் இந்த முயற்சியை தடுக்க வேண்டும் என்று தனித்தனியாக அரசு முன்னாள் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)