பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?

பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம்

பட மூலாதாரம், ESA/Euclid/Euclid Consortium/NASA; ESA/Gaia/DPA

படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம்
  • எழுதியவர், ஆசிரியர் குழு
  • பதவி, பிபிசி முண்டோ

‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது.

இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.

1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி இந்தாண்டு தன் பணியை தொடங்கியது. அதன் ஒரு சதவிகித பணிதான் இந்த முப்பரிணாம வரைபடத்தின் முதல் பகுதி.

(ஓர் ஒளி ஆண்டு = ஓர் ஆண்டில் ஒளி கடக்ககூடிய தூரம் - அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்)

ஆறு ஆண்டுகள் நீடிக்கும் இப்பணி மூலம், நுண்ணிய தகவல்களுடன் கூடிய பிரபஞ்சத்தின் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். விண்வெளியின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஏராளமான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எத்தனை கேலக்சிகள்?

வரைபடத்தின் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒரு பகுதியில் மட்டுமே கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன, என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் யூக்ளிட் காப்பகத்தின் பொறுப்பாளரான விஞ்ஞானி புரூனோ அல்டீரி.

“பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் தொடர்புடைய இடங்கள், காலப்போக்கில் அவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன, பல நூறு கோடி ஆண்டுகளாக அவை ஏன் நட்சத்திரங்களை உருவாக்கவில்லை என்பது பற்றிய புள்ளிவிவரங்களை இதன்மூலம் உருவாக்க முடியும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

விண்வெளியின் மூன்றில் ஒரு பகுதியை 2030-ஆம் ஆண்டுக்குள் வரைபடமாக்கும் தங்கள் இலக்கை அடைய முடியும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது

பட மூலாதாரம், ESA/Euclid/Euclid Consortium/NASA

படக்குறிப்பு, யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது

பிரபஞ்சம் குறித்த மாபெரும் புதிர்

தனது பணியின் முதல் படியில், யூக்ளிட் தொலைநோக்கி வானத்தின் தெற்கு அரைக்கோளத்தின் 132 சதுர டிகிரி பகுதியைப் படம்பிடித்தது. இது சந்திரனின் மேற்பரப்பை விட 500 மடங்கு அதிகம்.

இதன் மூலம் ‘பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஜிக்சா புதிரைப் போன்று’ இந்தத் தொலைநோக்கி உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்த ஜிக்சா புதிரின் பகுதிகள் சேர்க்கப்படும்.

"இது பிரபஞ்ச வரைபடத்தின் 1% தான். ஆனால், இந்த ஒருபகுதி மட்டுமே பல்வேறு வகையான ஆதாரங்களால் நிரம்பியுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சத்தை விவரிக்கப் புதிய வழிகளை விஞ்ஞானிகள் கண்டறியக் கூடும்," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் யூக்ளிட் திட்ட விஞ்ஞானி வலேரியா பெட்டோரினோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த வரைபடத்தின் மிக முக்கியமான விஷயம், அடர்த்தியான கரும்புள்ளிகளால் ஆன பிரகாசமான ‘கேலக்டிக் சிர்ரஸ் மேகங்கள்’ (galactic cirrus clouds) என்று அழைக்கப்படும் நீல ‘மேகங்கள்’. இவை, தூசி மற்றும் வாயுவின் கலவையாகும். “இவற்றிலிருந்து தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன,” என்கிறார், அல்டீரி.

யூக்ளிட் தொலைநோக்கி என்ன காட்டுகிறது என்பதை 2 டிகிரி கோணத்தில் புலப்படும்படி இ.எஸ்.ஏ இந்த வரைபடத்தில் விளக்கியுள்ளது. இதனை 600 முறை பெரிதாக்குவதன் மூலம், பிரபஞ்சத்தின் சிறிய பகுதியில் இருக்கும் விண்மீன் திரள்களைக் காணலாம்.

யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம்

பட மூலாதாரம், ESA/Euclid/Euclid Consortium/NASA

படக்குறிப்பு, யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம்

மிக நுணுக்கமான வரைபடம்

ஐரோப்பிய விண்வெளி முகமை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வரைபடம், முன்பு அரிதாகவே அடையப்பட்ட அதீதமான தெளிவுத்திறனைக் (resolution) கொண்டுள்ளது. அதாவது, 208 மெகாபிக்சல்கள் தெளிவுத்திறனை இந்த வரைபடம் கொண்டுள்ளது.

இந்த வரைபடத்தை மேலும் ‘ஜூம்’ செய்ய முடிகிறது. அதன்மூலம், சுழல் விண்மீன் திரள்களின் (spiral galaxy) சிக்கலான கட்டமைப்பையோ இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதையோ உங்களால் காண முடியும்.

பிரபஞ்சம் குறித்த ஒரு விரிவான பார்வையை யூக்ளிட் தொலைநோக்கி வழங்குகிறது. இதன்மூலம், ஒரேயொரு படத்தின் மூலம் பிரபஞ்சத்தின் விரிவான காட்சியைக் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறுகிய பார்வையையே வழங்குகிறது. ஆனால், அதன்மூலம் விண்வெளியின் வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளைப் பார்க்க முடியும்.

பிரபஞ்சத்தின் மர்மம் அவிழுமா?

பிரபஞ்சத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்குவது, இத்திட்டத்தின் இறுதி இலக்கு.

ஆனால் அதனோடு சேர்த்து மிகப்பெரிய அறிவியல் புதிர்களில் ஒன்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறது இத்திட்டம்.

அது: ‘டார்க் மேட்டர்’ அல்லது ‘கரும்பொருள்’ (பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத, மர்மமான பொருள் - dark matter) மற்றும் ‘இருண்ட ஆற்றல்’.

இவை பிரபஞ்சத்தின் 95%-த்தை உள்ளடக்கியுள்ளது. உண்மையில் இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது.

டார்க் மேட்டர் (25%) மற்றும் இருண்ட ஆற்றல் (70%) ஆகியவை எதிரெதிர் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. டார்க் மேட்டர் விண்மீன் திரள்களை ஒன்றாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது.

இந்த வரைபடம் மூலம், விண்மீன் திரள்களின் பரவல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள முடியும். இது, அண்டத்தின் கருதுகோள் மாதிரிகளைச் செம்மைப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)