இஸ்ரேல்- இரான் மோதலால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை? காணொளி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல்- இரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்- இரான் மோதலால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை? காணொளி

இஸ்ரேல்- இரான், இந்த இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைக் கொண்டிருப்பதால், இந்த பதற்றமான சூழல் இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேற்காசிய நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். எனவே, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரான் - இஸ்ரேல் மோதலால் இந்தியா சந்திக்கும் அரசியல், பொருளாதார சிக்கல்கள் என்ன?

ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள இரான் தூதரக வளாகம் தாக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், கடந்த வாரம் 300க்கும் மேற்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இரு நாடுகளும் ராஜதந்திர உத்தியைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது.

மேலும், இந்தியர்கள் இந்த இரு நாடுகளுக்கும் பயணிக்க வேண்டாமென்றும் பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.

இஸ்ரேல் இரான் இடையிலான மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி.

இந்தியர்களை பாதுகாப்பதில் உள்ள சவால்கள்

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், இந்த இரு நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பே இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

தனது பயண வழிகாட்டுதலின்படி, இஸ்ரேல் அல்லது இரானுக்கு பயணம் செய்ய எந்தவிதமான தடையையும் இந்தியா விதிக்கவில்லை. மாறாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர், இரானில் 5 முதல் 10 ஆயிரம் இந்தியர்கள் வரை வசித்து வருகின்றனர்.

ஹமாஸுடனான போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் இருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

ஏற்கெனவே ஹரியாணாவில் இருந்து சுமார் 530 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்திய அரசு பயண ஆலோசனை வெளியிட்ட பிறகு, மீதமுள்ள தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது.

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலை சேர்ந்த மூத்த உறுப்பினர் டாக்டர். ஃபஸூர் ரஹ்மான் கூறுகையில், "90 லட்சம் முதல் 1 கோடி இந்தியர்கள் வரை மேற்காசிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 முதல் 55 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்."

"இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் முக்கிய நாடுகளான சௌதி அரேபியா, இரான் உள்ளிட்ட முன்னணி நாடுகள் மேற்கு ஆசியாவில்தான் உள்ளன. எனவே இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால், அது நிச்சயமாக இந்தியாவுக்கு சிக்கலாக அமையும்” என்கிறார்.

அதேநேரம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மையத்தின் பேராசிரியரான டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகையில், “காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடியாக செங்கடலில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.”

“இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள பாதிப்பு கடல் வர்த்தக பாதைகளில் ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த சூழலில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டால், இந்தியா நீண்ட காலத்திற்கு நடுநிலைக் கொள்கையைக் கடைபிடிப்பது கடினம்,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)