தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா? கோவை உணர்த்துவது என்ன?

  • எழுதியவர், சிவக்குமார் ராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழ்
கோவை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா?

பட மூலாதாரம், @ANNAMALAI_K/TWITTER

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

ஆனாலும், அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளே கோவை தொகுதியில் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள்.

ஆகவே, அண்ணாமலையின் தோல்வியை ஒரு 'வெற்றிகரமான' தோல்வியாக எடுத்துக் கொள்ள முடியுமா? அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக முன்பைவிட வலுப்பெற்றுள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, தமிழ்நாட்டில் கோவை தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. திமுக கடந்த தேர்தலில் சுமார் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு கோவை தொகுதியை பெற்றுக் கொண்ட போதே பலவாறான ஊகங்கள் எழத் தொடங்கிவிட்டன.

கோவையில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே திமுக அந்தத் தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்ததாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது. கடைசியில் அதுவே உண்மையாகிப் போனது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேர்தல் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த அண்ணாமலை

தேர்தல் பிரசாரத்தின்போது, பொறியியல் கல்லூரியில் சேர கோவைக்கு வந்த தருணத்தை நினைவுகூர்ந்தார் அண்ணாமலை. தமிழ்நாட்டை ஆளும் திமுக மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்த அவர், அதிமுகவையும் விமர்சிக்கத் தயங்கவே இல்லை. அண்ணாமலைக்காக சமூக ஊடகங்களிலும் பாஜகவினர் கடுமையாகக் களமாடியதைக் காண முடிந்தது.

பிரதமர் மோதியும்கூட வழக்கத்திற்கு மாறாக, அண்ணாமலைக்காக கோவை தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நேரில் பிரசாரம் செய்தார். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஐ. தகவலை பெற்று அண்ணாமலை பகிரங்கப்படுத்தியதன் மூலம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரதமர் மோதியும்கூட அதைக் குறிப்பிட, திமுக, காங்கிரஸ் கட்சிகள் 1970களில் கச்சத்தீவு ஒப்பந்தத்தின்போது என்ன நடந்தது என்று விளக்கம் அளிக்கத் தலைப்பட்டன.

தமிழ்நாடு முழுவதுமே சுற்றுப்பயணம் செய்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் களத்தில் அதிமுகவை ஓரங்கட்டி, திமுகவுக்கு எதிராக பாஜக கூட்டணியே பிரதானமாக நிற்பதாக அவர் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்.

கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வி

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?

பட மூலாதாரம், @ANNAMALAI_K/TWITTER

நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்டத்தில் கோவை தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 64.87 சதவீத வாக்குகள் பதிவாயின. சுமார் ஒன்றரை மாத இடைவெளியில் நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்த பிறகு ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையில் கோவை தொகுதியைப் பொருத்தவரை தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அவருக்கும் இரண்டாவது இடத்தில் இருந்த அண்ணாமலைக்குமான வாக்குகள் இடைவெளி ஒவ்வொரு சுற்றிலும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.

முடிவில் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்ணாமலைக்கு 4,50,132 வாக்குகள் கிடைத்தன. மூன்றாவது இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 2,36,490 வாக்குகளே கிடைத்தன.

கோவையைப் பொருத்தவரை அண்ணாமலை இந்தத் தேர்தலில் பெற்ற வாக்குகளே திமுக, அதிமுக கூட்டணியில்லாமல் பாஜகவுக்கு கிடைத்த அதிகபட்ச வாக்குகள்.

கோவை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா?

பட மூலாதாரம், @ANNAMALAI_K/TWITTER

2014 - 2024 கோவை தேர்தல் முடிவு ஓர் ஒப்பீடு

மோதியை முதன்முதலில் பிரதமராக்கிய 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாமல் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை பாஜக அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் சி.பி,ராதாகிருஷ்ணனைக் காட்டிலும் அதிகமாக அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது உறுதியாகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, வாக்கு சதவீதத்தை கணக்கில் கொண்டு இஇதை ஆராய வேண்டியுள்ளது.

அப்படிப் பார்க்கையில்,, தற்போது அண்ணாமலை மொத்தம் பதிவான வாக்குகளில் 32.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால், 2014ஆம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனோ கோவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அண்ணாமலை பிறந்த மாவட்டத்தில் பாஜக செயல்பாடு எப்படி?

அண்ணாமலை தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி கண்டது போலவே, அவர் பிறந்த கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தொகுதியிலும் அவரது கட்சிக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,34,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,68,090 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்க, பாஜக வேட்பாளர் செந்தில்நாதனோ மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவருக்கு 1,02,482 வாக்குகளே கிடைத்தன.

தமிழ்நாட்டில் பாஜக செயல்பாடு எப்படி?

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் முதன்முறையாக பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக, பாஜக பெற்ற வாக்குகளின் சதவீதம் முதன் முறையாக இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு 11.24 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களை வென்ற பாஜகவுக்கு 2.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 3.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதுவே, திமுக, அதிமுக கூட்டணியில் இல்லாமல் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 5.5 சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருந்தது.

இந்தத் தேர்தலில் பாஜக அதிகபட்ச வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்திருந்தாலும், 2014க்கு பிறகான தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அக்கட்சி இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் வென்ற பாஜகவுக்கு இம்முறை ஓரிடம்கூட கிடைக்கவில்லை. இம்முறை எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன், நயினார் நாகேந்திரன் போன்ற மக்களுக்கு நன்கு பரிச்சயமான தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.

தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட பாஜக கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் கணிசமான வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரும் தத்தமது தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். இந்தத் தொகுதிகளில் எல்லாம் அதிமுக தனது வழக்கமான வாக்கு வங்கியில் பெருமளவை இழந்து விட்டிருந்ததை தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டிருப்பதையும், அக்கட்சி சில இடங்களில் இரண்டாவது இடம் பிடித்திருப்பதையும் வைத்து பாஜக வளர்ந்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசியபோது, "இத்தகைய பேச்சுகள் எதிர்பார்த்ததுதான். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும், பாஜக 12 சதவீத வாக்குகளும் பெற்றிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், புள்ளி விவரத்தை அப்படிப் பார்க்கக்கூடாது. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, கூட்டணிக் கட்சியினரின் வாக்குகள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டால் பாஜகவின் வாக்கு சதவீதம் ஒற்றை இலக்கிலேயே இருப்பது புலனாகும்," என்றார்.

மக்களுக்கு நன்கு பரிச்சயமான தலைவர்கள், பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் அப்படியே அடுத்து வரும் தேர்தல்களிலும் தொடர்ந்து பாஜகவின் வாக்கு வங்கியாக நிலைக்குமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றே என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

'தமிழ்நாடு அரசியலில் தவிர்க்கவியலாத சக்தி' - அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், "இம்முறை நமது மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் வரும் காலத்தில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்," என்று கூறியுள்ளார்.

"தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும் தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்."

"வரும் காலத்தில் நமது மக்கள் நலனுக்கான உழைப்பை இரட்டிப்பாக்குவோம். நம் உழைப்பிற்கு மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

'பாஜகவை தமிழ்நாடு நிராகரித்துள்ளது'

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா?

பட மூலாதாரம், @ANNAMALAI_K/TWITTER

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன என்று மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் நாமக்கல், சேலம் உள்ளிட்ட சில தொகுதிகள் தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது."

"பாஜக மீதான வெறுப்புணர்வு மக்களிடம் அப்படியே இருக்கிறது என்பதையே நாடாளுமன்றத் தேர்தல் முடிவு காட்டுகிறது. பாஜகவின் சித்தாந்தமோ, அதன் செயல்பாடுகளோ தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பாஜகவின் எதேச்சதிகாரத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் தலைவராக மு.க.ஸ்டாலினை மக்கள் பார்க்கிறார்கள்."

"மாநிலத்தை ஆளும் திமுக அரசு மீதான அதிருப்தி மக்களிடையே இல்லாமல் இல்லை. ஆனால், அதை நிகர் செய்யும் வகையில் அல்லது அந்த அதிருப்தியை விஞ்சும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, மகளிர் இலவசப் பேருந்து போன்ற திமுக அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, பலமுனைப் போட்டி நிலவும் தேர்தல் களத்தில் கூட்டணி பலம் என்பது முக்கியமான ஒன்று. கூட்டணி அமைப்பதிலும், அதைக் கட்டிக் காப்பதிலும் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டார். இதுபோன்ற அனைத்து காரணிகளும் சேர்ந்தே திமுக கூட்டணிக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளன," என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், "பாஜக முன்வைத்த முழக்கம், வெறுப்புப் பிரசாரம் போன்றவை தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடவில்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்று அக்கட்சியினர் கூறினார்கள். குஜராத், உத்தர பிரதேசத்தைக் காட்டிலும் மோதி தமிழ்நாட்டிற்கு அதிக முறை வந்து பிரசாரம் செய்துள்ளார். அனைத்தையும் மீறி தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நிராகரித்துள்ளார்கள் என்றால் அவர்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை தமிழ்நாடு மக்கள் ஏற்கவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)