யுக்ரேன் வழியே ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தம் - யாருக்கு பாதிப்பு?
- எழுதியவர், நிக் தோர்ப் & லாரா கோஸி
- பதவி, மத்திய ஐரோப்பா நிருபர் மற்றும் பிபிசி செய்தியாளர்
ஐந்தாண்டு கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து யுக்ரேன் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்த செயல்முறை முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கிறது.
யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, யுக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு நடக்கும் எரிவாயு விநியோகத்தை தடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், "எங்கள் ரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிக்க ரஷ்யாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
ஜெலென்ஸ்கி மேலும் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய ஏற்கனவே ஒரு வருடம் அவகாசம் அளித்துள்ளேன்" என்றார்.
"யுக்ரேன் வழியாக எரிவாயு விநியோகம் முடிவுக்கு வருவதை சமாளிக்க போதுமான திறன் தங்களுக்கு இருக்கிறது" என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத மால்டோவா ஏற்கனவே எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியாவோ எரிவாயு விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது.
எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு மற்றொரு வழி உள்ளது. கருங்கடல் வழியாக டர்க்ஸ்ட்ரீம் குழாய் மூலம் ஹங்கேரி, துருக்கி மற்றும் செர்பியாவிற்கு ரஷ்யாவால் எரிவாயு அனுப்ப முடியும்.
எரிவாயு விநியோகம் நிறுத்தம் - ரஷ்ய நிறுவனம் தகவல்
ரஷ்ய நிறுவனமான கேஸ்ப்ரோம் (Gazprom) யுக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு மேற்கொள்ளும் எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா 1991 முதல் யுக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது இந்த விநியோகம் நிறுத்தப்பட்டதால், உடனடி விளைவுகள் இல்லை என்ற போதிலும், முழு ஐரோப்பாவிற்குமான மூலோபாய ரீதியான தாக்கம் பெரியளவில் ஏற்படும்.
ரஷ்யா ஒரு முக்கியமான சந்தையை இழந்துவிட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினோ, "இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகவும் பாதிக்கப்படும்" என்கிறார்.
2022 இல் யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்து வந்துள்ளது. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னும் ரஷ்யப் பொருட்களையே அதிகம் நம்பியுள்ளன. இதனால் ரஷ்யா ஆண்டுக்கு 5 பில்லியன் யூரோ ($5.2bn) வருவாய் ஈட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் அதன் எரிவாயு இறக்குமதியில் ரஷ்ய எரிவாயுவின் பங்களிப்பு 10% க்கும் குறைவாக இருந்தது. அதுவே 2021-ஆம் ஆண்டில் 40% ஆக இருந்தது.
ஆனால் ஸ்லோவாகியா, ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து கணிசமான அளவு எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தன.
ஆஸ்திரியாவின் எரிசக்தி கட்டுப்பாட்டு துறை, "ஆஸ்திரியா பல்வேறு ஆதாரங்களைக் கொண்டிருப்பதாலும், எரிவாயுவை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாலும் மக்களுக்கான எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது" என்று கூறினார்.
ஆனால் எரிசக்தி விநியோக ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது ஸ்லோவாகியா நாட்டில் ஏற்கனவே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்ய எரிவாயு விநியோகப் பாதையில் உள்ள ஸ்லோவாகியா, எரிவாயுவை ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் இத்தாலிக்கு பம்ப் செய்வதன் மூலம் கட்டணமாக கணிசமான வருவாயை ஈட்டுகிறது.
புதன்கிழமை அன்று ஸ்லோவாகியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ, "இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் ரஷ்யாவில் அப்படி ஏதும் நடக்காது" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளியன்று, புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஃபிகோ, யுக்ரேனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.
இதனையடுத்து, புதினின் "போருக்கு நிதியளித்து யுக்ரேனை பலவீனப்படுத்த" உதவியதாக ஃபிகோ மீது யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
"யுக்ரேனியர்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு ஃபிகோ ஆதரவளிப்பதாகவும் " அவர் கூறினார்.
யுக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் ரஷ்யாவால் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், ஸ்லோவாகியா அதன் மின்சார ஏற்றுமதியை நிறுத்தினால் யுக்ரேனுக்கு உதவத் தயார் என்று போலந்து அறிவித்துள்ளது.
போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசினார். "குரோஷியாவில் உள்ள முனையம், ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள இணைப்புகள் என சர்வதேச சந்தைகளில் மாற்று எரிவாயு விநியோக வழிகள் பல உள்ளன. இந்த வழிகள் ஆராயப்பட வேண்டும். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பதன் மூலம் ரஷ்யாவால் பணம் சம்பாதிக்க முடியாது" என்று சிகோர்ஸ்கி கூறினார்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் வட கடல் வழியே போலந்து எரிவாயுவை பெறுகிறது.
"நான் புரிந்து கொண்ட வரையில், அனைத்து நாடுகளுக்கும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் உள்ளன" என்று அவர் கூறினார்.
மால்டோவாவுக்கு சிக்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இல்லாத மால்டோவா எரிசக்தி விநியோக ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில் இந்த நாடு, ரஷ்ய எரிவாயு மூலம் இயங்கும் ஒரு மின் நிலையத்தை கொண்டுள்ளது. மால்டோவா அதன் பெரும்பாலான மின்சாரத் தேவைகளுக்கு இந்த மின் உற்பத்தி நிலையத்தையே நம்பியுள்ளது.
மால்டோவா - யுக்ரேன் இடையே ரஷ்யா ஆதரவுடன் தன்னிச்சையாக செயல்படும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிரதேசத்திற்கும் இந்த ஆலையே மின்சாரம் வழங்குகிறது. அங்கு சுமார் 300,000 மக்கள் வாழ்கின்றனர்.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம், ஜனவரி 1 முதல் மால்டோவாவிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப் போவதாக டிசம்பர் 28-ஆம் தேதியன்றுகூறியது. ஏனெனில் அது எரிவாயுவுக்கான பணத்தை முறையாக செலுத்தவில்லை என குற்றம்சாட்டியது.
மால்டோவா பிரதமர் டோரின் ரெசியன், இந்த குற்றச்சாட்டை மறுத்து, கட்டணங்கள் முறையாக செலுத்தப்படுவதாக கூறினார்.
ரஷ்யா "எரிவாயுவை ஒரு அரசியல் ஆயுதமாக" பயன்படுத்துவதாக ஒரு சமூக ஊடக பதிவில் அவர் குற்றம் சாட்டினார். இதனால், டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிரதேசத்தில் கடுங்குளிர் வாட்டும் இந்த காலத்தில் ஒளி மற்றும் வெப்பம் இல்லாத சூழலை உருவாக்கிவிடும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 07:00 மணிக்கு "எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால்" டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்கு எரிவாயு, வெப்பநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று எரிசக்தி நிறுவனமான டிரஸ்டெப்லோனெர்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
மக்கள் குளிரை தாக்குப்பிடிக்க, உடலை சூடுபடுத்தும் வகையில் கடினமான உடை அணியுமாறும், மின்சாரத்தை சேமிக்க குடும்ப உறுப்பினர்களை ஒரே அறையில் தங்குமாறும், ஜன்னல்களில் போர்வைகள் அல்லது தடிமனான திரைச்சீலைகளைத் தொங்கவிடுமாறும், மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தவும் அந்த நிறுவனம் வலியுறுத்தியது.
அங்கே புதன்கிழமை இரவு வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைந்துவிட்டது.
மால்டோவா எரிசக்தி துறை அமைச்சர் கான்ஸ்டன்டின் போரோசன், தனது அரசாங்கம் நிலையான மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் எரிசக்தியை சேமிக்க குடிமக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து எரிசக்தி துறையில் 60 நாள் அவசர நிலை அமலில் உள்ளது.
2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தனது நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா "பிளாக்மெயில்" செய்ததாக அதிபர் மையா சாண்டு குற்றம் சாட்டினார். மால்டோவாஅரசாங்கம் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்கு உதவி வழங்கியதாக கூறியுள்ளது.
ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கிய சமயத்தில் , கத்தார் மற்றும் அமெரிக்காவிலிருந்து எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதி செய்ததன் மூலம் மாற்று ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்துள்ளது. நார்வேயில் இருந்து குழாய் எரிவாயு வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
டிசம்பரில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் யுக்ரேன் வழியாக எரிவாயு பரிமாற்றத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)