கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்?

கனடா, ட்ரூடோ பதவி விலகல்

பட மூலாதாரம், CPAC

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

உட்கட்சி பிரச்னைகளை கவனிக்க வேண்டியிருந்ததால், கனடா மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த பிரதமராக தம்மால் இருக்க முடியவில்லை என்று தெளிவாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.

"கனடா நாடாளுமன்றம் பல மாதங்களாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. அது மார்ச் 24-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ட்ரூடோ, "கனடா நாட்டின் அரசியலை மீண்டும் மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது. இதன் மூலம் அரசியல் சூழலில் உள்ள பதற்றம் குறையும்", என்றார்.

மேலும் கனடா மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்னைகளில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

கனடா, ட்ரூடோ பதவி விலகல்

பட மூலாதாரம், Getty Images

ட்ரூடோ பதவி விலக என்ன காரணம்?

ட்ரூடோவின் பதவி விலகல் கனடா அரசியல் களத்தில் ஒரு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அவர் யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015 இல் தனது கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்.

அப்போது 43 வயதாக இருந்த ட்ரூடோ, அரசியலில் புதிய முகமாகவும் இளம் தலைவராகவும் இருந்தார். வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ஒரு புதிய வகையான அரசியலை உறுதியளித்தார். செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரித்தார் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவளித்தார்.

ஆனால் அவரது முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் அவரது ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது.

கியூபெக், ஒன்டோரியோ மற்றும் அட்லாண்டிக் கனேடிய மாகாணங்களைச் சேர்ந்த டஜன்கணக்கான, ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர். கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு பேர் ட்ரூடோ மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். அந்த கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை விட 19 புள்ளிகள் பின்தங்கி இருந்தார் ட்ரூடோ.

கனேடிய அரசியல் வரலாறும் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் இதுவரை இரண்டு பிரதமர்கள் மட்டுமே தொடர்ந்து நான்கு முறை பதவி வகித்துள்ளனர்.

வரிகளைக் குறைப்பது, பண வீக்கத்தைச் சமாளிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற வாக்குறுதியின் பேரில் 2022 இல் பொய்லிவ்ரே (Poilievre) தனது கட்சியின் உயர்மட்டத்திற்கு உயர்ந்தார்.

45 வயதான அவர் கோவிட் ஆணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஃப்ரீடம் கான்வாய் டிரக்கர்களுக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டினார் - இது ஒட்டாவா உள்ளிட்ட கனேடிய நகரங்களை ஸ்தம்பிக்கச் செய்த முற்றுகை ஆகும்.

கனடாவின் அடுத்த பிரதமர் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும்.

ஒழுங்கற்ற குடியேற்றம், சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக, அமெரிக்காவுடனான தனது எல்லையை கனடா பாதுகாக்கவில்லை என்றால் கனேடியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது "கடுமையான சவால்" என முன்னாள் கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பதவி விலகினார்.

"நான் ட்ரூடோ அரசாங்கத்தின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகராக இருப்பதை அவர் விரும்பவில்லை என என்னிடம் தெரிவித்தார்" என்றும் கிறிஸ்டியா கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)