10 நாள் விடுமுறை, 10 படங்கள்: பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்களும் அவற்றின் கதையும்
- எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் சினிமாவுக்கு 2025 பொங்கல் விசேஷமானதாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திரைக்கு வரவுள்ள படங்களின் எண்ணிக்கையே அதற்குக் காரணம்.
இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன, அதில் நடித்திருப்பவர்கள், அதன் இயக்குநர்கள் யார் யார், அந்தப் படங்கள் சொல்ல வரும் கதை என்ன?
இம்முறை செவ்வாய்க்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வருவதால், 10-ஆம் தேதியில் இருந்தே படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இதோடு 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் முந்தைய வார இறுதியோடு சேர்த்து கிட்டத்தட்ட 10 நாட்களும் விடுமுறை நாட்களாகவே பார்க்கப்படுகிறது.
- ஆஸ்கர் விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழில் பேச தூண்டிய நிகழ்வு எது தெரியுமா?
- 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?
- 2024ல் உலக அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்த 4 இந்திய பெண்ணியத் திரைப்படங்கள் - எப்படி சாத்தியமானது?
- மீள் பார்வை 2024: மசாலா, கனமான கதை என பன்முகம் காட்டி தனித்து நின்ற தமிழ் சினிமா
முன்னதாக, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி', பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்', அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்' மற்றும் இயக்குநர் ஷங்கரின் தெலுங்கு படமான 'கேம் சேஞ்சரி'ன் தமிழ் மொழிமாற்ற வடிவம் என 4 படங்கள் மட்டுமே வெளியாகவிருந்தன.
அஜித் போன்ற முன்னணி நட்சத்திரம் ஒருவரின் திரைப்படம், பண்டிகை தினத்தில் வெளியாகும்போது, அதற்கே பெருவாரியான திரையரங்குகள் ஒதுக்கப்படும். ஆனால் புத்தாண்டு தினத்தன்று, 'விடாமுயற்சி', பொங்கலுக்கு வெளியாகாது என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல, அன்றைய தினம் முடியும் முன்பே பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துவிட்டன.
இந்நிலையில், பொங்கல் தினத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது என்னென்ன படங்கள் கண்டிப்பாக வெளியாகும் என்கிற இறுதிப் பட்டியல் கிடைத்துள்ளது.
ஜனவரி 10, 12 மற்றும் 14 என அடுத்தடுத்த தினங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதில் சில படங்களுக்கு முன்பதிவும் தொடங்கப்பட்டுவிட்டது.
ஜனவரி 10 அன்று வெளியாகும் படங்கள்
கடந்த 2018ஆம் ஆண்டு 'நாச்சியார்' திரைப்படத்துக்குப் பிறகு, 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக பாலா இயக்கிய அதன் ரீமேக் தனியாக ஓடிடியில் வெளியானது. பின்னர் கடந்த வருடம் சூர்யா நாயகனாக நடிக்க, 2டி தயாரிப்பில் 'வணங்கான்' அறிவிக்கப்பட்டது. ஆனால் சூர்யாவை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கடினமாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனது.
தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநர் பாலாவுடன் இணைந்து தயாரிக்க, அருண் விஜய் நாயகனாக நடிக்க, 'வணங்கான்' திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரகனி, ஜான் விஜய், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். தன்னைச் சுற்றியிருக்கும் அப்பாவி உயிர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்து நாயகன் கோடி கொந்தளிக்கிறான். அதை எதிர்க்க முடிவெடுக்கும்போது என்ன ஆனது என்பதே 'வணங்கான்' திரைப்படத்தின் கதை.
கேம் சேஞ்சர்
'இந்தியன் 2' தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம். 'ஆர் ஆர் ஆர்' என்கிற சர்வதேச ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு, ராம் சரண் நாயகனாக நடிக்கும் படம் கேம் சேஞ்சர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் கதைக்கு ஷங்கர் திரைக்கதை அமைத்துள்ளார். 'முதல்வன்' திரைப்படத்துக்குப் பிறகு அரசியல் களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அனைத்துப் பிரதான மாநில மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
புதிய ஆட்சியராக பதவியேற்கும் நாயகன் ராம் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளைக் கண்டு கோபம் கொள்கிறார். சீர்திருத்தம் கொண்டு வர அவர் செய்யும் முயற்சிகளால் மாநிலத்தில் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. ஊழலில்லா நாடு என்று தன் அப்பா கண்ட கனவினை நனவாக்க அவர் செய்யும் முயற்சிகள் என்னென்ன, சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதே கேம் சேஞ்சர்.
மெட்ராஸ்காரன்
இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மெட்ராஸ்காரன் உருவாகியுள்ளது. இவர் இதற்கு முன் 'ரங்கோலி' என்கிற திரைப்படத்தையும், ஆஹா ஓடிடியில் 'ஷ்ஷ்ஷ்' என்கிற ஆந்தாலஜி தொகுப்பில் ஒரு குறும் படத்தையும் இயக்கியிருந்தார்.
மலையாள நட்சத்திரம் ஷேன் நிகம் தமிழில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் படம் இது. மேலும் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து வேலை செய்கிறார் நாயகன். நன்றாகப் படித்து, வேலைக்குச் சென்று, சம்பாதித்து, தான் காதலித்த பெண்ணை கை பிடிக்கும் நிலைக்கு வருகிறார். விடிந்தால் சொந்த ஊரில் தடபுடலாகத் திருமணம் என்ற சூழலில் முந்தைய நாள் இரவு நடக்கும் ஒரு சின்னப் பிரச்சினை அவர் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்பதே இந்தப் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சம்பவங்கள் முழுக்க ஒரே நாளில் நடப்பதைப் போல கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12 - மதகஜராஜா
2012ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்தில் வெளியீட்டுக்கே தயாராக இருந்த திரைப்படம் 'மதகஜராஜா'. சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.
படத்தின் தயாரிப்பாளர்களான ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிதிச் சிக்கலில் இருந்ததால் படம் வெளியாகவில்லை. இயக்குநர் சுந்தர் சி எப்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாலும், புதிய படம் ஒன்றை அறிவித்தாலும், அப்போதெல்லாம் அவரிடம் தவறாமல் 'மதகஜராஜா' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுப்பப்படும்.
போகப் போக ரசிகர்களும் இந்தப் படம் பற்றி சமூக வலைதளங்களில் பேசிப் பேசி, இதற்கென ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளனர்.
தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில், 12 வருடங்கள் கழித்து இந்தப் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. தனது நண்பனின் வாழ்க்கையைக் கெடுத்த ஒரு நேர்மையில்லாத வியாபாரியை பழிவாங்கும் நாயகனின் கதையே 'மதகஜராஜா'. இதை சுந்தர் சி தனது பாணியில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக எடுத்துள்ளார். நாயகன் விஷால் இந்தப் படத்தில் சொந்தக் குரலில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
ஜனவரி 14 அன்று வெளியாகும் படங்கள்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி, டிஜே பானு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் 'காதலிக்க நேரமில்லை'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
நாயகி ஷ்ரியா காதலனைப் பிரிந்த பின் திருமணத்துக்கு முன் கர்ப்பமாகிவிட, அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். திருமணங்கள் அபாயகரமானவை, குழந்தைகளைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணம் இருக்கும் சித்தார்த் என்பவரை சந்திக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுக்குள் இருக்கும் நட்பின் தன்மை மாறுகிறது. காதல், திருமணம், குழந்தைகள், குடும்பம் என்கிற வாழ்க்கை அமைப்பு இன்னும் இருக்கிறதா என்பதை ஆராய்கிறது இந்தப் படம்.
நேசிப்பாயா
இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழில் கடைசியாக இயக்கிய திரைப்படம், 2015-ஆம் ஆண்டு வெளியான 'யட்சன்'. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பின் இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடிக்க, 'ஷேர்ஷா' என்கிற படத்தை இயக்கினார். கோவிட் சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது 'ஷேர்ஷா'. ஆனால் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்வில் 19 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகளை வென்றது.
'நேசிப்பாயா' திரைப்படம் மூலம் தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் விஷ்ணுவர்தன், மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளியை நாயகனாக தேர்வு செய்துள்ளார். அவர் நடிக்கும் முதல் படம் இது. உடன் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோயெச்லின் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைப்படி தீவிரமாகக் காதலித்து வரும் தியாவும் அர்ஜுன் பிரிகின்றனர். தியா வெளிநாடு ஒன்றில் சிக்கிக் கொள்ள, அர்ஜுன் அவரை மீட்டுக் கொண்டு வர களமிறங்குகிறார் என 'நேசிப்பாயா' ட்ரெய்லர் நமக்கு ஒரு கதை சொல்கிறது.
இன்றைய தலைமுறையினர் காதலை எப்படிப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள, காதல் போன்ற ஒரு உறவின் முக்கியத்துவத்தைச் சொல்ல, தன் பாணியில் ஒரு படத்தை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
தருணம்
2022-ஆம் ஆண்டு அருள்நிதி, ஸ்ம்ருதி வெங்கட், அச்யுத் குமார், மதுபாலா, சேத்தன் உள்ளிடோர் நடிப்பில் உருவான படம் 'தேஜாவூ'. தெலுங்கில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்க, 'ரிப்பீட்' என்கிற பெயரில் வெளியானது. இந்தத் திரில்லர் திரைப்படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் அடுத்த படம் 'தருணம்'.
முதலில் அஸ்வின் குமார் நாயகனாக நடிக்கவிருந்த இந்தப் படத்தில் தற்போது, 'முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தில் நாயகனாக நடித்த கிஷன் தாஸ் நடித்துள்ளார்.
மேலும் ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா உள்ளிட்டவர்களும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சிஆர்பிஎஃப் அதிகாரி அர்ஜுனும், இளம் தொழிலதிபரான மீராவும் எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர். ஒரு கட்டத்தில் காதலில் விழுகின்றனர். அவர்கள் இருவரும் சந்திக்கும் உணர்வுப்பூர்வமான சவால்கள் என்னென்ன, அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டு, சமாளிக்கின்றனர், அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதே 'தருணம்' படத்தின் கதை.
இவை தவிர, சிபிராஜின் '10 ஹவர்ஸ்', மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் 'படைத் தலைவன்', மிர்ச்சி சிவா நடிப்பில் 'சுமோ' உள்ளிட்ட படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பின் வாங்கியுள்ளன. மேலும் தெலுங்கு மொழியில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்', பாலகிருஷ்ணாவின் 'டாகு மஹராஜ்', வெங்கடேஷின் 'சங்கராந்திகி ஒஸ்துன்னாம்' ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)