100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன?
- எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக செய்திகள்
ஜோஆவ் மரின்ஹோ நெட்டோவுக்கு, நவம்பர் கடைசி வாரமும் எல்லா நாட்களையும் போலவே இயல்பாக இருக்கும் என்பது போல இருந்தது. கடந்த 10 ஆண்டு காலமாக அவர் பிரேசிலின் வறண்ட வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரமான அபுயரேஸில் ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வருகிறார். இதற்கு முன்னால், அவர் கால்நடை பாராமரிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு 112 வயதான நெட்டோ, உலகில் வாழும் மிக வயதான ஆண் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
இந்த செய்தியை தனக்கு தெரிவித்த முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு செவிலியர் ஒருவரிடம், "நான் மிகவும் அழகானவன் கூட", என்று நெட்டோ கிண்டலாக குறிப்பிட்டார்.
நவம்பர் 25 ஆம் தேதி அன்று, தனது 112-வது வயதில் பிரிட்டனை சேர்ந்த ஜான் டினிஸ்வுட் என்பவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நெட்டோ, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
116 வயதான ஜப்பானைச் சேர்ந்த டோமிகோ இடூகா என்ற பெண் தான் உலகில் வாழும் மிக வயதான மனிதர் ஆவார். இடூகாவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் புதிதாக உலக சாதனை படைத்தார்.
இவர்கள் இருவரும், தங்களது 100-வது பிறந்தநாளையும் தாண்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைப் போலவே உலகம் முழுவதிலும் 100 வயதையும் தாண்டி வாழும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.
2030-இல் 100 வயது முதியவர்கள் 10 லட்சம் பேர் இருப்பார்கள்
2024 ஆம் ஆண்டில் உலகில் குறைந்தது 100 வயதை எட்டிய, சுமார் 5,88,000 பேர் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகைப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
1990 ஆம் ஆண்டு, உலகில் சுமார் 92,000 பேர் 100 வயதிற்கும் மேல் வாழ்ந்தனர்.
நமது முன்னோர்களுடன் ஒப்பிடுகையில், தற்போது நம்மிடம் சிறந்த மருத்துவ சேவைகள், உணவு மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை இருக்கின்றன. அதனால் நம்மால் அவர்களைவிட நீண்ட ஆயுளுடன் வாழ முடிகிறது.
உலகளவில் மக்களின் ஆயுட்காலம் குறித்த தரவுகளை ஐ.நா, 1960 ஆம் ஆண்டு சேகரிக்க தொடங்கியது. 1960 ஆம் ஆண்டு பிறந்த ஒரு சராசரி மனிதர் சுமார் 52 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணிக்கப்பட்டது.
இதற்கு 6 தசாப்தங்களுக்கு பிறகு, தற்போது உலகளவில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 73 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது 2050 ஆம் ஆண்டில், 77 ஆண்டுகளை எட்டக்கூடும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
தற்போது, 100 வயதை எட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. ஐ.நா-வின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 0.007% மக்கள் மட்டுமே 100 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்கள் இருந்தனர். 100 வயதை அடைவதற்கான வாய்ப்புகள் நம்மில் பெரும்பாலோருக்கு குறைவாகவே இருக்கின்றன.
2024 ஆம் ஆண்டு, பிரான்சின் தேசிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் 2023 ஆம் ஆண்டு பிறந்த 2% க்கும் குறைவான ஆண் குழந்தைகளும் 5% க்கும் குறைவான பெண்களும் மட்டுமே நீண்ட காலம் வரை உயிர் வாழ்வார்கள் என்று மதிப்பிட்டுள்ளது.
முதுமை அடையும் பெரும்பாலான மக்கள் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
"நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்பதாலேயே அவர்கள் நன்றாக வாழ்ந்தார்கள் என்று பொருளல்ல", என்று பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பேராசிரியரான ஜேனட் லார்ட் கூறினார்.
சராசரியாக, ஆண்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதி 16 ஆண்டுகளையும், பெண்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதி 19 ஆண்டுகளையும் நீரிழிவு முதல் மறதி போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேராசிரியர் லார்ட் விளக்குகிறார்.
இதன் ரகசியம் என்ன?
100 வயதை எட்டுவதே கடினமானது என்றால், அதையும் தாண்டி பல ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வது மிகவும் கடினமானது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வின்படி, 50 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க மக்களுள் ஒருவர் மட்டுமே சூப்பர்சென்டெனேரியன் (குறைந்தது 110 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வது) என்ற நிலையை அடைகிறார்கள்.
அமெரிக்காவில், 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு 50,000-ஆக இருந்தது. இதுவே அது 2020 ஆம் ஆண்டு 80,000-ஆக அதிகரித்தது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.
எனவே "சூப்பர்சென்டெனரியன்ஸ்" மனித வயோதிகத்தைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளின் அதிக கவனத்தை ஈர்க்கின்றனர்.
"பெரும்பாலானவர்களுக்கு முதுமை காலம் எவ்வாறு இருக்குமோ, அதற்கு மாறாக இவர்கள் இருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை," என்று பேராசிரியர் லார்ட் கூறுகிறார்.
நீண்ட ஆயுளுடன் சேர்த்து, இந்த சூப்பர் சென்டெனரியன்கள் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளனர். "நெட்டோவுக்கு பார்வையில் சிறிய பாதிப்பு இருக்கின்றது. அதைத் தவிர அவருக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை", என்று அவரைப் பராமரிக்கும் செவிலியர்களில் ஒருவரான அலெலூயா டெக்ஸ்செய்ரா கூறுகிறார்.
"அவருக்கு 112 வயதாகிறது. ஆனால் இதுவரை அவருக்கு எந்த கடும் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை. மேலும் எந்த மருந்தும் அவர் எடுத்துக் கொள்வதில்லை", என்று அவர் தெரிவித்தார்.
100 வயதையும் தாண்டி வாழும் சிலர் சிறந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்காதவர்களாக இருப்பது வயோதிக நிபுணர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
நெட்டோவுக்கு புகை பிடித்தல், மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இல்லை (அவரது மூத்த மகன் அன்டோனியோவின் கூற்றுப்படி). ஆனால் மற்ற சூப்பர்சென்டெனரியன்கள் அலட்சியமாக தங்கள் இஷ்டம் போல வாழ்ந்துவந்தனர்.
1997 ஆம் ஆண்டு, தனது 122 வயதில் உயிரிழந்த பிரான்சின் ஜீன் கால்மென்ட் என்பவர்தான் அதிகாரப்பூர்வமாக 120 வயதைக் கடந்து வாழ்ந்த ஒரே மனிதர் ஆவார். அவர் புகைப்பிடிப்பவர் மற்றும் அதிக அளவில் சாக்லேட் சாப்பிடுபவர் ஆவார்.
2011 ஆம் ஆண்டு, 95 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 400 அமெரிக்க யூதர்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை அமெரிக்கன் ஜெரியாட்ரிக் சொசைட்டியின் நாளேட்டில் வெளியானது. அதில் அவர்களுக்கு ஏராளமான உடல்நலனுக்கு உகந்ததாக கருதப்படாத பழக்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களுள் சுமார் 60% பேர் அதிக அளவில் புகைப்பிடிப்பவர்கள். அவர்களில் பாதி பேர் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான பகுதியில் பருமனாக உடல் வாகில் இருந்துள்ளனர். அவர்களில் 3% பேர் மட்டுமே சைவ உணவு உண்பவர்கள், பலர் சிறிய அளவில் கூட உடற்பயிற்சிகளை மேற்கொண்டதில்லை என்பது போன்ற பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
"100 வயது வரை வாழ ஆர்வமுள்ளவர்களுக்கு நாம் முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், 100 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்களிடம் இருந்தோ அல்லது சூப்பர்சென்டெனரேரியர்களிடமிருந்து வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்ற குறிப்புகளை கேட்க வேண்டாம்" என்று பிரிட்டனின் பிரைட்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் வயோதிகவியல் பேராசிரியரும், முதுமை பற்றிய ஆய்வில் முன்னணி நிபுணருமான ரிச்சர்ட் ஃபராகர் கூறுகிறார்.
"அவர்கள் பிறவியிலேயே விதிவிலக்கானவர்கள். ஏன் என்றால், நீண்ட காலம் ஒருவர் வாழ உதவும் என்று நமக்குத் தெரிந்ததற்கு மாறாக அவர்கள் செய்கிறார்கள்," என்று ஃபராகர் மேலும் கூறுகிறார்.
அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு, மரபியல் பெரும் பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
100 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு முதுமை அடையும் செயல்முறை மற்றவர்களை விட மெதுவாகவே நடக்கிறது. தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளின் விளைவுகளை, 100 வயதுக்கும் மேல் வாழும் பெரும்பாலான நபர்களால் சமாளிக்க முடிந்திருக்கிறது.
நாம் இன்னும் நீண்ட காலம் வாழ முடியுமா?
100 வயதிற்கு மேல் வரை உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மனித ஆயுட்காலமும் உயருமா என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த நூற்றாண்டிற்குள் மக்கள் கூடுதல் ஆண்டுகளுக்கு உயிர் வாழ்வது புதிய உச்சத்தை எட்டும் என்று கூறுகின்றனர். மக்கள் தங்கள் பிறந்தநாள் கேக்குகளில் 125 அல்லது 130 மெழுகுவர்த்திகளை வைத்து கொண்டாடும் நிலை கூட ஏற்படலாம் என்பது அவர்களின் கூற்று.
"தற்போது 'உலகின் மிக அதிகமான வயது கொண்டவர்' என்ற சாதனையை யாரோ ஒருவர் 2100 ஆம் ஆண்டிற்குள் முறியடிப்பார். 126, 128, அல்லது 130 வயது வரை கூட ஒருவர் உயிர் வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று புள்ளியியல் நிபுணரும் ஆய்வின் இணை ஆசிரியருமான மைக்கேல் பியர்ஸ் தெரிவிக்கிறார்.
மைக்கேல் பியர்ஸ் மற்றும் பேராசிரியர் அட்ரியன் ராஃப்டரி அடுத்த தசாப்தங்களுக்கான ஆயுட்கால வரம்புகளை வரையறுக்க சர்வதேச ஆயுட்கால தரவுத்தளத்தைப் பயன்படுத்தினர். கால்மென்ட்டின் சாதனை முறியடிக்கப்படும் வாய்ப்பு கிட்டத்தட்ட 100% இருப்பதாகவும், ஒருவர் 127-வது பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு 68% இருப்பதாகவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இது ஒரு பெண்ணாக இருப்பதற்கு அதிக சத்தியம் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, உலகில் வாழும் அதிக வயதுடைய முதல் 50 பேரும் பெண்களே. தற்போது உலகில் வாழும் அதிக வயதுடைய ஆணான நெட்டோ இந்த பட்டியலில் 54வது இடத்தில் இருக்கிறார்.
இருப்பினும், மனிதர்கள் எவ்வாறு முதுமை அடைகிறார்கள் என்பதை பற்றி முழுமையாகக் கண்டுபிடிக்க இன்னும் விடையறிய பல கேள்விகள் இருக்கின்றன.
வயதாவது குறித்த ஆராய்ச்சி இயக்குநரான லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் சியோ போன்ற நிபுணர்கள், உலக அளவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் வாழ்க்கைத் தரம் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த புரிதல் மிகவும் முக்கியமானது என்று கருதுகின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
"இங்குள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நாம் எவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்பதைப் பற்றியதல்ல, முதுமையில் வரும் நோய்களை எவ்வாறு தாமதப்படுத்துவது மற்றும் இப்போது இருப்பதை விட நீண்ட காலம் ஆரோக்கியமாக எவ்வாறு வாழ முடியும் என்பதுதான்", என்று ரிச்சர்ட் சியோ கூறுகிறார்.
"இவ்வாறு, நீண்ட காலம் வாழும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்தால், அதை எப்படி கஷ்டப்படாமல், மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்". என்பது அவரது கூற்று.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)