காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிட்டு ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாத 8 மாநிலங்கள்
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் முடிந்து இன்னும் சில தினங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்களும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்களும், இதர வேட்பாளர்களுக்கு 17 இடங்களும் கிடைத்துள்ளன.
ஆட்சியமைக்க 272 இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் 240 இடங்களைப் பெற்றுள்ள பாஜக கூட்டணிக் கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்கவுள்ளது.
தனித்து 99 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து 234 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரம் 8 மாநிலங்களில் காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிட்ட ஒரு இடங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை.
ஆந்திர பிரதேசம்
ஆந்திரா, 18வது மக்களவைத் தேர்தலின் முக்கியமான மாநிலமாக தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு தேர்தல்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 16 தொகுதிகளை வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 3 தொகுதிகளில் வென்றுள்ளது.
ஆனால், 23 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு தொகுதிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது.
கிழக்கு அருணாச்சல் தொகுதியில் பாஜகவின் தப்பீர் கவ் மற்றும் மேற்கு அருணாச்சல் தொகுதியில் பாஜகவின் கிரேன் ரிஜிஜூ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இமாச்சல பிரதேசம்
இமாச்சலில் ஹமிர்பூர், காங்ரா, சிம்லா, மண்டி உள்ளிட்ட நான்கு தொகுதிகள் உள்ளன. இதில் நான்கு இடங்களிலும் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
நான்கு இடங்களிலுமே பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரும் ஹமிர்பூர் தொகுதியில் 607,068 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
அதேபோல், மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் 537,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் பாஜகவிற்கு பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது. இங்குள்ள 29 தொகுதிகளிலுமே பாஜகவே வென்றுள்ளது. அதை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மொத்தமாக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
உத்தராகண்ட்
உத்தராகண்டில் மொத்தமாக உள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த மாநிலத்திலும் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
திரிபுரா
திரிபுராவில், திரிபுரா கிழக்கு மற்றும் திரிபுரா மேற்கு என இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கும் பாஜக இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இங்கு திரிபுரா மேற்கு தொகுதியில் மட்டும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. திரிபுரா கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் பாஜக வேட்பாளரிடம் 486,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
சிக்கிம்
சிக்கிமில் பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாலும் முதல் மூன்று இடத்தில்கூட வர முடியவில்லை.
அந்த மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே உள்ள நிலையில், அம்மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 164,396 வாக்குகள் பெற்று அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
பாஜக வேட்பாளர் தினேஷ் சந்திர நேபால் 19,035 வாக்குகள் பெற்று 5ஆம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சேட்டரி 2,241 வாக்குகள் மட்டுமே பெற்று 8வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மிசோரம்
ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கொண்ட மிசோரமிலும் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளாலும் போதுமான வாக்குகளை வாங்க முடியவில்லை.
அம்மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் 208,552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லால்பியாக்ஜாமா 98,595 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், பாஜக வேட்பாளர் வன்லால்முகா 33,533 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)