பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது.
  • எழுதியவர், கேவின் பட்லர்
  • பதவி, பிபிசி நியூஸ்

உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்தக் கவலைகளை அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவின் இந்த நதியின் பெயர் பிரம்மபுத்திரா) கீழ் பகுதியில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான, 'த்ரீ கார்ஜஸ்' அணையைவிட இந்த அணை மூன்று மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கக்கூடும்.

"இந்த அணைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செழுமை மேம்படும். சீனாவின் காலநிலை இலக்குகளை அடைய இது வழிவகுக்கும்," என்று சீன அரசு ஊடகம் இந்தத் திட்டம் குறித்து விவரித்துள்ளது.

ஆனால் மனித உரிமை குழுக்கள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்தின் விளைவுகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விளைவுகள் என்ன?

இந்த அணையின் கட்டுமானத் திட்டம் குறித்து 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவிப்பு வெளியானது. இந்த அணை கட்டப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள பல சமூகங்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் உள்ளது.

அதோடு இந்தத் திட்டம், திபெத் பீடபூமியின் மிகவும் செழுமையான, பல்வகைமையான சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கடுமையாக மாற்றியமைத்து, அவற்றுக்குச் சேதம் விளைவிக்கும் என்ற அச்சமும் உள்ளது.

சீனா, திபெத்தில் பல அணைகளைக் கட்டியுள்ளது. 1950களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

திபெத் மக்களையும் அவர்களது நிலங்களையும் சீனா எவ்வாறு சுரண்டியுள்ளது என்பதற்கு இந்த அணைகளே சமீபத்திய உதாரணம் என்று ஆர்வலர்கள் முன்பு பிபிசியிடம் கூறியுள்ளனர்.

முக்கியமாக பௌத்த மதத்தைப் பின்பற்றும் திபெத் மக்கள் மீது பல ஆண்டுகளாக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு நீர்மின் அணை கட்டுமானத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான திபெத் மக்களை சீனா அரசு சுற்றி வளைத்தது. இது கைது மற்றும் தாக்குதலில் முடிந்தது. இதனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்பதை சில மக்களிடம் பேசியதன் மூலமும் சரிபார்க்கப்பட்ட காட்சிகளின் மூலமும் பிபிசி அறிந்து கொண்டது.

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் த்ரீ கார்ஜஸ் அணை

அவர்கள் கேங்டு அணை (Gangtuo dam) மற்றும் நீர்மின் நிலையக் கட்டுமானத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் திட்டங்கள் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம்பெயரச் செய்யும் மற்றும் தொல்பொருட்களைக் கொண்ட பழங்கால மடங்களைச் மூழ்கடிக்கும்.

ஆனால் சீனா, உள்ளூர் மக்களை இடம்பெயரச் செய்ய அவர்களுக்கு இழப்பீடு வழங்கியதாகவும், பழங்கால சுவர் ஓவியங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாகவும் தெரிவித்தது.

இந்த யார்லுங் சாங்போ அணை கட்டுமானத் திட்டம் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீனா அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திட்டம் எத்தனை மக்களை இடம் பெயரச் செய்ய வைக்கும் என்பது குறித்து அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. 'த்ரீ கார்ஜஸ்' நீர்மின் அணை கட்டுமானத்தின்போது, 14 லட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது.

திபெத்தின் மிக நீளமான நதியான யார்லுங் சாங்போவின் நீரோட்டத்தை திசைதிருப்ப, நம்சா பர்வா மலையில் சுமார் 20கி.மீ நீளத்திற்கு நான்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு?

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யார்லுங் சாங்போ கிராண்ட் கேன்யன் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி, உலகின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்று.

யார்லுங் சாங்போ ஆறு இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

இந்த ஆறு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் பாய்கிறது. பல நாடுகளின் எல்லையை கடந்து ஓடும் இந்த ஆற்றின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த அல்லது திசை திருப்ப இந்த அணை சீனாவுக்கு அதிகாரம் அளிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையில் "திபெத்திய பீட பூமியில் உள்ள இந்த நதிகளைக் கட்டுப்படுத்துவது, சீனாவுக்கு இந்திய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த உதவும்" என்று கூறுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் யார்லுங் சாங்போ அணை திட்டத்தை சீனா அறிவித்ததும், இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சீனாவின் அணை திட்டத்தின் எதிர்மறையான பாதிப்பைக் குறைக்க, இந்திய அரசு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய நீர்மின் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் கவலைகளுக்கு கருத்துகளுக்கு முன்பு பதிலளித்து. 2020-ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஆற்றின் மீது அணை கட்டுவதற்கு "சட்டப்பூர்வ உரிமை" இருப்பதாகவும், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது.

சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இந்த ஆற்றில் அணை கட்டினால், அதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது வங்கதேசம்தான்.

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம், Getty Images

பெரிய அணை கட்டுவதால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி காடுகள் மற்றும் காட்டுயிர்களும் பாதிக்கப்படுகின்றன. அதோடு, இந்த நதி கொண்டு வரும் வண்டல் மண் கனிமங்கள் நிறைந்தது, விவசாயத்திற்கும், கடலோரப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாதது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டுவது, அப்பகுதியின் பல்லுரிய வளங்களைப் பாதிக்கும்.

''இதுபோன்ற திட்டங்களில், தூய்மையான ஆற்றலாக தண்ணீரைப் பயன்படுத்துவதாக சீனா கூறுகிறது. ஆனால், சீனா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையில் 2020ஆம் ஆண்டில் பார்த்தது போல சர்ச்சை அதிகரிக்கும்போது அதைச் செய்யக்கூடும்," என்கிறார் பேராசிரியர் நித்யானந்தம்.

ஆற்றின் நீரோட்ட திசையில் அணை கட்டும்போது, தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மக்கள் முன்பைவிட அதிகமாக நிலத்தடி நீராதாரங்களை நம்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்ட படிப்படியாகக் குறையும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணை கட்டப்பட்ட பிறகு கங்கை நதியின் அதிகபட்ச நீரோட்டம் கணிசமாகக் குறைந்தது. நீரோட்டம் குறைவதால் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் மீன் இனங்களின் இழப்பு, கங்கையின் துணை நதிகள் வறண்டு போவது, நிலத்தடி நீர் உப்பாவது உட்படப் பல பிரச்னைகளுக்கு வழிவகுத்தது.

ஆனால், தாங்கள் கட்டும் அணையால் தண்ணீர் வரத்து தடைபடாது என்று இதற்கு முன்பு சீனா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியா?

Gangtuo dam, இந்தியா - சீனா, வங்கதேசம், பிரம்மபுத்திரா

பட மூலாதாரம், Getty Images

கடந்த பத்து ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நோக்குடன் சீனா யார்லுங் சாங்போ ஆற்றின் போக்கில் பல நீர்மின் நிலையங்களை உருவாக்கியுள்ளது.

பூமியின் மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் இந்த ஆற்றின் ஒரு பகுதி, 50 கி.மீ. தொலைவுக்கு உள்ளாகவே 2,000 மீட்டர் சாய்வாகப் பாய்கிறது. இதனால் இங்கு நீர்மின் உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.

அதேவேளையில், ஆற்றின் இந்த பிரமிப்பூட்டும் நிலவியல் முக்கிய பொறியியல் சவால்களை முன்வைக்கிறது. ஆனால் சவால்கள் இருந்தபோதிலும், இந்த அணைத் திட்டம்தான் சீனா இதுவரை முன்னெடுத்த அணைத் திட்டங்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகவும், லட்சியம் மிக்க திட்டமாகவும் உள்ளது.

இந்த அணை கட்டுமானத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட கண்டத்தட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. செங்குத்தான, குறுகிய பள்ளத்தாக்கில் விரிவாகத் தோண்டியெடுத்து, அணை கட்டுவது அடிக்கடி நிலச்சரிவுக்கு வழிவகுக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் முன்பே எச்சரித்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டில், சிச்சுவான் மாகாண நிலவியல் பணியகத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் ஒருவர், "நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்படும் நிலச்சரிவுகள், மண்-பாறை ஓட்டங்கள் கணிக்க முடியாத வகையிலும் ஆபத்தானதாகவும் இருக்கும். இது திட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்" என்று எச்சரித்தார்.

சோங்கி நீர்வளப் பணியகத்தின் மதிப்பீட்டின்படி இந்தத் திட்டத்திற்கு ஒரு டிரில்லியன் யுவான் (127 பில்லியன் டாலர்) வரை செலவாகும்.

கூடுதல் தகவல்: அன்ஷுல் சிங்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)