இரான்: பயணத் தடை, உளவியல் சிகிச்சை, மத புத்தகங்கள் வாசிப்பு - அரசை எதிர்ப்பவர்களுக்கு நூதன தண்டனைகள்
- எழுதியவர், மசூத் அஸார்
- பதவி, பிபிசி நியூஸ் பெர்சிய சேவை
மாசா அமினி போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, இரான் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இரானிய அரசாங்கம் அப்பிரச்னை முற்று பெற்றுவிட்டதாகக் காட்ட விரும்புகிறது, ஆனால் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பல பெண்கள் அதை நிராகரிப்பது அதிகாரிகளுக்கு பெரிய பிரச்னையாக நீடிக்கிறது.
சமீபத்தில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கடுமையான ஹிஜாப் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இரானிய அரசாங்கம் மறுத்துள்ளது. ஆனால், பல பெண்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உடையை அணியாமல் தெருக்களில் நடந்து செல்லும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சில சமயங்களில் அவ்வாறு செய்வதால் கடுமையான விளைவுகளை அப்பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
இக்குற்றங்களுக்கான தண்டனை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகாரம், நீதிபதிகளிடம் உள்ளது. பெரும்பாலும் அவர்கள் வழக்கத்திற்கு மாறான தண்டனைகளை விதிக்கிறார்கள். குறியீட்டு ரீதியாக அல்லது கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் பாரம்பரிய தண்டனைகளை இணைக்கின்றனர்.
ஆஸ்கார் விருது பெற்ற "தி சேல்ஸ்மேன்" திரைப்படத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற, இரானிய நடிகையான தாரனே அலிதூஸ்டி, ஹிஜாப் சட்டத்தை வெளிப்படையாக மீறியதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டார்.
மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' எனும் போராட்ட இயக்கத்தின் வலுவான ஆதரவாளரான தரனேஹ் அலிதூஸ்டி, முக்காடு அணிய மறுத்து ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்தார். அவருக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் மீதும் பிற பிரபல நபர்கள் மீதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் தீவிரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரனே அலிதூஸ்டிக்கு, கேஷ்ம் தீவுக்குச் செல்ல உள்நாட்டு விமானத்தில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து தரனே அலிதூஸ்டியால் தொடரப்பட்ட வழக்கு கவனத்தை ஈர்த்தது.
மேலும், அவர் பயணம் செய்வதிலிருந்தும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலிருந்தும் தடுக்கப்பட்டதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாடுகள் அவரது முந்தைய நடவடிக்கைகளின் காரணமாக விதிக்கப்பட்டன. இதன் மூலம், அவர் இரானை விட்டு வெளியேறுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும், இரான் நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் இந்தத் தடையை மறுத்தார்.
அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளை ஊக்குவிக்கும் செல்வாக்குமிக்க குரல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்படும் உத்தியை தரனே அலிதூஸ்டிக்கு எதிரான நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன. எவ்வாறாயினும், ஹிஜாப் சட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டைப் பராமரிக்க நீதித்துறை போராடுகிறது என்பதை, சில தண்டனைகளின் அசாதாரண தன்மை குறிக்கிறது.
முக்காடுகளை கழற்றி, தரனே அலிதூஸ்டியுடன் பிரபல நபர்கள் அவரும் 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' இயக்கத்திற்கு ஆதரவாக இணைந்தனர்.
பிரபல இரானிய நடிகையான ஆசாதே சமதி, பொது இடங்களில் தனது முக்காட்டை கழற்றியதால், சமூக வலைதளங்களில் இருந்து ஆறு மாதங்களுக்குத் தடை செய்யப்பட்டார்.
மேலும், "சமூக விரோத ஆளுமைக் குறைபாட்டுக்காக" உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது மற்றும் சிகிச்சையை முடித்ததற்கான சான்றிதழை வழங்குமாறும் கூறியுள்ளது.
பழம்பெரும் நடிகையான அஃப்சானே பயேகனும் இதேபோன்ற சூழ்நிலையை அனுபவிக்க நேர்ந்தது. சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யப்பட்டதைத் தவிர, அவர் சிகிச்சையிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.
இந்த வழக்கத்திற்கு மாறான தண்டனைகள் இரானியர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட "லீலாஸ் பிரதர்ஸ்" திரைப்படத்தின் இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு, கேன்ஸ் திரைப்பட விழாவில் அவரது படத்தை ஒளிபரப்பியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனையின் ஒரு பகுதியாக, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் பழகவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
சயீத் ரூஸ்டேவுக்கு விதிக்கப்பட்ட இத்தண்டனை, தொழில்ரீதியாக அவரைத் தனிமைப்படுத்தவும், திரைப்படத் துறையில் உள்ள மற்றவர்களை உணர்ச்சிகரமான விஷயங்களைக் கையாள்வதிலிருந்து விலக்கி வைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
கூடுதலாக, "அறம் சார்ந்த திரைப்பட உருவாக்கம்" குறித்த அரசு நடத்தும் பாடத்திட்டத்தில் இணையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
"ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ததற்காக" சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அவரது திரைப்படமான "லீலாஸ் பிரதர்ஸ்" கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அதற்கான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
விருது பெற்ற புகைப்படப் பத்திரிகையாளரான யால்டா மொயேரிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மற்ற ஐந்து தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
அவரது தண்டனையின் ஒரு பகுதியாக கட்டாய ஹிஜாப் குறித்த ஆயத்துல்லாவின் படைப்பு குறித்த 100 பக்க ஆய்வுக் கட்டுரையை எழுத கட்டளையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு மாத காலங்கள் பெண்கள் பூங்காவை சுத்தம் செய்யும் சமூக சேவையும் அவருக்குத் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
நன்கு அறியப்பட்ட இரானிய பாடகர், ஷெர்வின் ஹாஜிபூரின் பாடல் மாசா அமினி இயக்கத்தின் கீதமாக மாறியது. சமூக மாற்றத்திற்கான சிறந்த பாடலுக்கான முதல் கிராமி விருதை அவர் வென்ற போதிலும், "பரே" (For) பாடலை நிகழ்த்தியதற்காக ஷெர்வின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அதன் அடிப்படையில், "ஆட்சிக்கு எதிரான பிரசாரத்திற்காக" அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனை மற்றும் பயணத் தடை தவிர்த்து, ஷெர்வின் ஹாஜிபூர் இரண்டு மதப் புத்தகங்களைப் படித்து சுருக்கமாகக் கூற வேண்டும் என அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
"த ரைட்ஸ் ஆஃப் வுமன் இன் இஸ்லாம்" , "வுமன் இன் த மிரர் ஆஃப் மெஜெஸ்ட்டி அண்ட் பியூட்டி" எனும் இரண்டு புத்தகங்களும் முக்கிய இஸ்லாமியத் தலைவர்களால் எழுதப்பட்டது.
ஹாஜிபூரின் தண்டனைக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக, அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது. இரானின் நீதித்துறை தலைவர் இந்தத் தீர்ப்புகளை விமர்சித்தார்.
தண்டனைகள், மோசமான நடவடிக்கைகளைத் 'தடுக்க' வேண்டும் மற்றும் 'எதிர் விளைவை உருவாக்கக்கூடாது' என்றும் இரானின் நீதித்துறைத் தலைவரான கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜீ கூறினார்.
நீதிமன்றத்தால் வழங்கப்படும் தண்டனைகளால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைத் தடுக்கவும், தீர்ப்புகள் தேவையற்ற சர்ச்சையை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்யவும், தண்டனைகளின் "சாத்தியக்கூறுகள்" குறித்தும் "மக்களை சங்கடப்படுத்துவதைத்" தவிர்க்கும் வகையிலும் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோலம்ஹோசைன் குறிப்பிட்டார்.
மூடப்பட்ட அறைக்குள் விசாரணை
இரானிய நீதித்துறை "புதுவித" தண்டனை முறைகளைப் பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது. செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலைஞர்களை அவமானப்படுத்த அல்லது ஒதுக்கி வைப்பதற்காக அசாதாரணமான தண்டனைகள் இதற்கு முன்பும் வழங்கப்பட்டுள்ளது.
இரானிய நீதி அமைப்பில் பொதுவில் கசையடி வழங்குதல் மற்றும் சிறைத்தண்டனை போன்ற பாரம்பரிய தண்டனைகள் பரவலாக இன்னும் வழங்கப்படுகின்றன என்றாலும், சமீபத்திய தண்டனைகள் கலைஞர்களின் நம்பகத்தன்மை மற்றும் செல்வாக்கைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இரானிய நீதி அமைப்பில் சில சீர்திருத்தங்கள் சமீபத்தில் கொண்டு வரப்பட்டபோதும், பொது விசாரணைகளுக்கான அணுகுமுறை மற்றும் சாதாரண குற்றங்களுக்கு மிகவும் அதிகப்படியான தண்டனை வழங்குதல் போன்ற, சிவில் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் மூடிய அறைகளில் ரகசியமாக நடத்தப்படுகின்றன.
இரானில் உள்ள ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலோ அல்லது தங்களைத் தற்காத்துக்கொள்ளவோ வாய்ப்பு வழங்கப்படாமலேயே சமூக மற்றும் தொழில்சார் கட்டுப்பாடுகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
சில நேரங்களில், அவர்கள் ஒரு விமானத்தில் பயணிக்க முயற்சி செய்யும்போது, அதற்காக தடை விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறியும் வரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளைப் பற்றி அவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)