விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
படத்தின் கதைகளம்
விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது.
புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம்.
முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.
இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
`இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்'
"முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது.
விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது.
மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது.
`பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு'
"இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது.
"இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது.
"விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
`போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்'
படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது.
இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது.
"அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது.
திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
ஒளிப்பதிவு சிக்கல்கள்
விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது.
இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது.
படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது.
படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)