பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்வதில் ஏன் தாமதம்? 3 முக்கிய காரணங்கள்
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக வரப்போவது யார்? கட்சியின் தலைவராக இருந்த ஜகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசியல் வட்டாரங்களில் இந்தக் கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விஷயம் தொடர்பாகத் தீவிர விவாதம் நடைபெற்றதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோஸ்போலே, இணை பொதுச்செயலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதவிக்கு பல தலைவர்களின் பெயர்கள் பல மாதங்களாக அடிபட்டு வருகின்றன. ஆயினும் பல மணிநேரம் நடந்த இந்த முக்கியக் கூட்டத்திலும் யாருடைய பெயரும் அங்கீகரிக்கப்பட்டதாக செய்திகள் வரவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி.
ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படுமா? ஒபிசி பிரிவில் இருந்து ஏதேனும் புதுமுகம் இந்தப் பதவியில் அமர்வாரா?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நான்கு மாநில தேர்தல் காரணமா?
மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலைக் கருத்தில் கொண்டு பா.ஜ.க தனது தற்போதைய நிலையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஜே.பி. நட்டாவுடன் அரசின் உறவு சுமூகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கருதுகிறார்.
"தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் புதிய நபரை தலைவர் பதவிக்குக் கொண்டு வருவது சிரமங்களை அதிகரிக்கும். ஏனென்றால் அவர் விஷயங்களை புரிந்துகொள்ள நிறைய நேரம் எடுக்கும். கட்சியிடம் தலைவர் பதவிக்கான பெயர்கள் இல்லை என்பது இதற்குக் காரணம் அல்ல. தற்போதைய நிலையைத் தொடர்ந்து பராமரித்து மாநிலத் தேர்தல்களை நடத்த கட்சி விரும்புகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம் மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி அவ்வாறு கருதவில்லை. நான்கு மாநில தேர்தல்களுக்கும் தலைவர் பதவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.
"கட்சியுடைய அரசியலமைப்பின்படி குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்தான் தலைவராக வர முடியும். அப்படிப்பட்ட நிலையில், அவருக்கு அமைப்பு பற்றி ஏற்கெனவே எல்லாம் தெரிந்திருக்கும். பொறுப்புகள் மட்டுமே மாறும். எனவே புதிய ஒரு நபர் அமைப்பு பற்றிப் புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்காது," என்று அவர் குறிப்பிட்டார்.
"பா.ஜ.க பிராந்திய கட்சிகள் போல் இல்லை. மாயாவதி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் கட்சிகளில், தலைவர் முதலாளி போலச் செயல்படுகிறார். அது பா.ஜ.கவில் இல்லை. இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. தலைவர் மாறிக்கொண்டே இருப்பார்,” என்கிறார் விஜய் திரிவேதி.
ஆர்எஸ்எஸ் தலையீடு காரணமா?
கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார். அப்போது அமித் ஷா கட்சித் தலைவராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் அமித் ஷா மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் ஜே.பி. நட்டா கட்சியின் தலைவரானார்.
“கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதி கட்சித் தலைவரை தனது விருப்பப்படியே முடிவு செய்தார். ஆனால் தற்போது அந்த நிலை மாறி வருவது போலத் தோன்றுவதாக,” விஜய் திரிவேதி குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோஸ்போலே, இணை பொதுச்செயலர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் தலைவர் பதவிக்கான ஆலோசனைகள் நடந்துள்ளன என்றால் ஆர்எஸ்எஸ் தனது சொந்த வழியில் புதிய தலைவரைத் தேர்தெடுக்க விரும்புவதாகவே பொருள்,” என்று அவர் கூறுகிறார்.
"ஆர்எஸ்எஸ் ஒருபோதும் நேரடியாக பெயர்களை முன்மொழிவதில்லை. ஆனால் விவாதிக்கப்படும் பெயர்கள் பற்றிய தனது கருத்தைத் தெரிவிக்கிறது. இருப்பினும் இங்கே கருத்து என்பது உத்தரவுக்குக் குறைந்து அல்ல,” என்று திரிவேதி குறிப்பிட்டார்.
- 1975- ஏபிவிபியில் (அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்)முக்கியப் பங்கு
- 1984 - ஏபிவிபியின் ஹிமாச்சல் பிரிவு தலைவர்
- 1989- ஏபிவிபியின் தேசிய பொதுச்செயலர்
- 1991- யுவா மோர்ச்சா தேசிய தலைவர்
- 1993- சட்டப்பேரவை உறுப்பினர்
- 1998- ஹிமாச்சல் பிரதேஷ் மாநில அமைச்சர்
- 2007- மூன்றாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர்
- 2010- பா.ஜ.க தேசிய பொதுச்செயலர்
- 2012- மாநிலங்களவை உறுப்பினர்
- 2014- மத்திய சுகாதார அமைச்சர்
- 2018- மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர்
- 2019- பா.ஜ.க தலைவர்
மறுபுறம் புதிய தலைவர் தொடர்பாக பா.ஜ.கவுக்கும் சங்கத்திற்கும் இடையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்று தாம் கருதுவதாக மூத்த பத்திரிக்கையாளர் நவீன் ஜோஷி தெரிவிக்கிறார்.
"இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் இருந்த நிலையைத் தற்போது பாஜக எட்டியுள்ளது. பாஜகவில் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவின் ஆதிக்கம் மறுக்க முடியாதது. 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது சற்று குறைந்துள்ளது. இவர்களுக்குப் பிடிக்காதவர்கள் சங்கத்தின் உதவியுடன் தலைவர் பதவிக்கான தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் சாத்தியகூறும் உள்ளது. அதனால்தான் இந்தத் தாமதம் ஏற்படுவதாக நான் நினைக்கிறேன்," என்றார் அவர்.
கடந்த 2014இல் நரேந்திர மோதி தலைமையில் 282 இடங்களையும், 2019 பொதுத் தேர்தலில் 303 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு இம்முறை 240 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுத் தளம் குறைந்து வருவதால் தலைவர் பதவிக்கு இதற்கு முன் இல்லாத அழுத்தம் இம்முறை ஏற்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கருதுகிறார்.
பா.ஜ.க தலைவர் பதவிக்கான தேர்வில் ஆர்எஸ்எஸ்-இன் பங்கை, நான்கு மாநில தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று அவர் கூறுகிறார்.
"அமித் ஷாவும் நரேந்திர மோதியுயும் எதிர்பார்ப்பது போல முடிவுகள் வந்தால் பாஜக தலைவர் ஒருவராக இருப்பார். அவர்களுக்குச் சாதகமாக வரவில்லை என்றால் சங்கத்தின் தலையீட்டுடன் தலைவர் வேறு ஒருவராக இருக்கக்கூடும்," என்றார் அத்ரி.
பா.ஜ.கவுக்கும் சங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்?
கடந்த 2019க்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கும், சங்கத்துக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலைமை சிக்கலாக மாறியுள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
"பா.ஜ.க, அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. அது அந்த சங்கத்தின் உச்ச அமைப்பு. ஆனால் 2019 முதல் அதன் மேலாதிக்கம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இப்போது சங்கம் அதை மீண்டும் நிறுவ முயல்கிறது," என்று மூத்த பத்திரிக்கையாளர் நவீன் ஜோஷி குறிப்பிட்டார்.
"கடந்த 2014இல் பா.ஜ.கவும், சங்கமும் எதிர்பார்க்காத அளவிற்கு நரேந்திர மோதிக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. 2019இல் அவர் மேலும் அதிக பெரும்பான்மையைப் பெற்றார். இது சங்கத்தை பின்னுக்குத் தள்ளியது," என்று அவர் கூறினார்.
மேலும், "370வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம், ராமர் கோவில் ஆகியவை சங்கத்தின் செயல்திட்டங்கள். ஆனால் நரேந்திர மோதி எல்லா இடங்களிலும் காணப்படுவதால் அதைச் செய்பவராக அவர் மாறினார். அவருடைய எதேச்சாதிகார மற்றும் ஆதிக்கப் போக்கு சங்கத்தை மிகவும் காயப்படுத்தியது. 2019க்குப் பிறகு அது இன்னும் அதிகமான வலியைக் கொடுக்க ஆரம்பித்தது,” என்றார் அவர்.
லால் கிருஷ்ண அத்வானி மிக அதிக காலத்திற்கு கட்சித் தலைவராக இருந்தார்.
- 1986-1990
- 1993-1998
- 2004- 2005
"கடந்த 2014ஆம் ஆண்டில் சங்கம் மாநிலத்திலும் மத்தியிலும் அதன் பிரதிநிதிகளைக் கொண்டு வந்தது. அவர்கள் அரசில் இருந்துகொண்டு சங்கத்தின் நிகழ்ச்சி நிரலை இயக்கி வந்தனர். பழைய சங்கப் பிரசாரகர்கள் பல்வேறு துறைகளில் அமைச்சர்களின் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதை நான் உத்தர பிரதேசத்தில் பார்த்தேன். 2019க்குப் பிறகு அவர்கள் நீக்கப்படவில்லையென்றாலும் அவர்களது செல்வாக்கு ஒடுக்கப்பட்டது. இதுவும் சங்கத்திற்குப் பிடிக்கவில்லை,” என்று ஜோஷி கூறுகிறார்.
இதே கருத்தை மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதியும் தெரிவித்தார். சங்கத்தின் சார்பாக மாநிலம் முதல் மத்திய அரசு வரை ஆட்கள் இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
"இன்றைய தேதியில் பி.எல். சந்தோஷ் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். அவர் அரசு மற்றும் அமைப்பு இரண்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். எனவே அரசில் சங்கத்திற்கு நேரடிப் பங்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
பரஸ்பர மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சங்கம் மற்றும் பா.ஜ.க இடையே அவ்வப்போது ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கூறுகிறார்.
"நாங்கள் இப்போது வளர்ந்துவிட்டோம். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களுக்கு சங்கம் தேவைப்பட்டது. இப்போது சங்கத்தின் அனுமதி அல்லது ஒத்துழைப்பு தேவையில்லை என்ற அளவிற்கு பா.ஜ.க பெரிதாகிவிட்டது. ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சு. அது உண்மையாக இருந்திருந்தால் பி.எல். சந்தோஷ், கட்சியின் பொதுச்செயலராக இருந்திருக்க மாட்டார் என்று தேர்தல் நேரத்தில் நட்டா கூறினார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள் யார்?
பாரதிய ஜனதாவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்களில் கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னரே தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்.
"மக்களவைத் தேர்தலில் கட்சியின் மாநில பிரிவுகள் மும்முரமாக இருந்ததால், அங்கு தேர்தல் தாமதமாகி, தலைவர் பதவிக்கான தேர்தலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ.க கூறுகிறது,” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் குப்தா.
”இதுவரை சங்கமும், பா.ஜ.க.வும் இணைந்து ஒரு பெயரை இறுதிசெய்ய முடியாவிட்டாலும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செயல் தலைவர் பதவி ஏற்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.
"சிவ்ராஜ் சிங் செளஹானை கட்சியின் தலைவராக்க சங்கம் விரும்பியது. ஆனால் நரேந்திர மோதி அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுவிட்டார். இதுதவிர வினோத் தாவ்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சுனில் பன்சல் ஆகியோரில் ஒருவருக்கு இந்தப் பெரிய பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது,” என்று குப்தா தெரிவித்தார்.
யார் தலைவராகத் தேர்தெடுக்கப்படுவார்கள்?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஹேமந்த் அத்ரி, நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவின் காலத்தில் பெயர்களைக் குறிப்பிடுவது சரியல்ல. அதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
”மகாராஷ்டிராவில் பலன் கிடைக்கும் என்ற காரணத்தால் ஒரு மாதத்திற்கு முன்புவரை வினோத் தாவ்டேயின் பெயர் அடிபட்டது. ஆனால் உள்கட்சி ஆய்வில் அப்படி எதுவும் தெரிய வரவில்லை. மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் நன்றாக இல்லை. பூபேந்திர யாதவ் பெயரும் இடையில் சொல்லப்பட்டது. ஃபட்னாவிஸ் பெயரும் குறிப்பிடப்பட்டது,” என்று ஹேமந்த் அத்ரி சொன்னார்.
”மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு அமித் ஷா மீண்டும் தலைவராக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவருக்கு உள்துறை அமைச்சகம் கொடுக்கப்பட்டது,” என்கிறார் நவீன் ஜோஷி.
இதுதவிர ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர், தர்மேந்திர பிரதான், கேஷவ் பிரசாத் மெளரியா போன்ற தலைவர்களின் பெயர்களும் அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன.
கட்சித்தலைவராக ஜேபி நட்டா
பா.ஜ.க தலைவர்கள்
- ஜெகத் பிரகாஷ் நட்டா - 2020-2023
- அமித் ஷா- 2014-2020
- ராஜ்நாத் சிங்- 2005-2009, 2013-2014
- நிதின் கட்கரி – 2010-2013
ஜேபி நட்டா, 2019 ஜூன் மாதம் பாஜகவின் செயல் தலைவராகவும், 2020 ஜனவரியில் முழுநேர தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு நரேந்திர மோதி அவரை சுகாதார அமைச்சராக்கினார். பா.ஜ.கவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியும் உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும்.
அவர் தலைவராக இருந்த காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இதில் சில மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. சில இடங்களில் தோல்வியடைந்தது.
"ஜே.பி.நட்டா பதவிக்காலத்தில் பா.ஜ.கவுக்கு வெற்றி குறைவு, தோல்வி அதிகம். அவர் வந்த பின் அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உட்படப் பெரிய மாநிலங்களை அக்கட்சி இழந்துள்ளது. இதுதவிர பா.ஜ.க கர்நாடகாவிலும் தோல்வியைச் சந்தித்தது,” என்று மூத்த பத்திரிக்கையாளர் ஹேமந்த் அத்ரி சுட்டிக்காட்டினார்.
ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தில் மத்தியில் பா.ஜ.க 240 இடங்களை மட்டுமே பெற்றது. எனவே அவர்கள் நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
மறுபுறம் சில தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், ஜேபி நட்டாவின் பதவிக்காலம் மிகவும் நன்றாகவே இருந்ததாகக் கூறுகிறார் விஜய் திரிவேதி.
"அரசும் கட்சியும் ஒன்றாகச் செல்லும்போது, கட்சியில் இருந்து பலர் அரசுக்கு மாற விரும்புவதால், கட்சியிலுள்ள வேறு பலர் கோபப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். அதை ஜே.பி.நட்டா சிறப்பாகச் செய்தார். அவரது காலத்தில் கட்சியில் பெரிய சர்ச்சை எதுவும் இருக்கவில்லை, பா.ஜ.கவின் வரலாறு எழுதப்படும்போது அவர் ஒரு வெற்றிகரமான தலைவராகப் பதிவு செய்யப்படுவார்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால் நவீன் ஜோஷி மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். "கட்சித் தலைவராக நட்டா சுதந்திரமாகச் செயல்படும் நிலையில் இருக்கவில்லை. அவர் அமித் ஷா மற்றும் நரேந்திர மோதியின் நிழலில்தான் நடந்தார்," என்று அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)