உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை வல்லூறு
இந்தியாவின் இராசத்தானில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Falconiformes
குடும்பம்:
Falconidae
பேரினம்:
துணைப்பேரினம்:
இனம்:
F. jugger
இருசொற் பெயரீடு
Falco jugger
J.E. Gray, 1834

வெள்ளை வல்லூறு அல்லது வெள்ளை லகுடு[2] (laggar falcon (Falco jugger) என்பது நடுத்தர உடல் அளவு கொண்ட கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஈரான், தென்கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் , வடமேற்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது லாங்கர் வல்லூறு பறவையை ஒத்திருக்கிறது ஆனால், இதன் உடல் இருண்ட, மற்றும் கருமையான "கால் இறகுகளைக்" கொண்டதாக உள்ளது. ஒரு வயதுகொண்ட பறவைகள் வயிற்றுப் பகுதிகள் மிகவும் இருண்டதாக இருக்கும். இந்த இனப்பறவைகள் ஹைரோஃபல்கான்கள் என்னும் வல்லூறுகளின் நெருங்கிய கூட்டத்தைச் சார்ந்தவை.

வெள்ளை வல்லூறு இப்பகுதியின் பொதுவான வல்லூறுவாக இருந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துபோய் உள்ளது. முக்கிய அச்சுறுத்தல்கள் இப்பகுதியில் பூச்சிக்கொல்லி பயன்பாடு தீவிரமடைவது மற்றும் பெரிய பருந்துகளை சிக்க வைக்க ஒரு தூண்டில் பொருளாக பயன்படுத்துதல் ஆகும். இந்தியா முழுக்கக் காணப்பட்ட இப்பறவை தற்போது மிகவும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இவை மதுரை மாவட்டம் அரிட்டா பட்டி மலைப்பகுதியில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.[3]

விளக்கம்

[தொகு]

இது கரும்பருந்தைவிடச் சற்றுப் பெரியதாகும். இது சுமார் 45 செ.மீ. நீளம் இருக்கும். இதன் மேல் அலகு நீல நிறத்திலும், கீழ் அலகு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி கறுப்பும், சாம்பல் பழுப்பும் கலந்து காணப்படும். உச்சந்தலையும் பின் கழுத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்ணை ஒட்டி ஒரு மெல்லிய கோடு முன்னிருந்து கீழ்நோக்கிச் செல்லும். உடலின் அடிப்பகுதி வெண்மையாக இருக்கும். அதில் நீளவாக்கிலான பழுப்புக் கோடுகள் இருக்கும். வயிற்றின் பக்கங்களிலும், தொடைகளிலும் கோடுகள் மிகுதியாக இருக்கும். மார்பில் கோடுகள் முறிந்து காணப்படும். தலைக்கு மேலே பறக்கும்போது வெள்ளை மார்பும், இறக்கை நுனிகளில் காணப்படும் கருப்பு வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டு இவற்றை அடையாளம் காணலாம்.[2]

சூழலியலும் பழக்கவழக்கமும்

[தொகு]

இவற்றை வறள் நிலங்களிலும், புதர் காடுகளிலும் காணப்படக்கூடியன. அடர்ந்த காடுகளில் காண முடியாது.[2]

இவை இணையாகவே எங்கும் காணப்படும். விளை நிலங்களை அடுத்துள்ள கம்பங்கள் மீதோ உயரமான மரங்களின் மீதோ வீற்றிருக்கும். வெட்டுக்கிளி, காடை, கௌதாரி, தவிட்டுக் குருவி, கரிச்சான் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும். நகரங்களில் மாடப்புறாக்கள் வாழும் இடத்திற்கு அருகில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அவற்றை வேட்டையாடி வாழும். இணைப் பறவைகள் தேங்கள் வேட்டையாட விரும்பும் பறவையை மாறி மாறி விரட்டி அதை களைப்படையச் செய்து, பின்னர் அடித்துக் கொன்று இரண்டும் பகிர்ந்து உண்ணும்.[2]

இனப்பெருக்கம்

[தொகு]

இவற்றின் இனப்பெருக்க காலம் சனவரி முதல் ஏப்ரல் வரை ஆகும். இனப்பெருக்க காலத்தில் காதலூட்டத்தின்போது ஆண் பெண் பறவைகள் உயர எழுந்து பறந்து வீழ்ந்து விளையாடும். அடர்ந்த மரங்களில் 15 மீட்டர் உயரத்தில் குச்சிகள், இலைகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தி கூடு கட்டும். காக்கை, பருந்து முதலியவற்றின் பழைய கூட்டையும் பயன்படுத்தும். மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடும். முட்டைகள் இளஞ்சிவப்பு, செங்கல் சிவப்பு, கரும்பழுப்பு கறைகளுடன் காணப்படும். ஆணும் பெண்ணும் அடை காக்கும்.[2]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Falco jugger". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 84–85.
  3. ரா.கோசிமின் (27 செப்டம்பர் 2016). "அரிட்டாபட்டி மலையில் வசிக்கும் அரிய வகை 'லகர் ஃபால்கன்' பறவை: தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத சிறப்பு". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  • Helbig, A.J.; Seibold, I.; Bednarek, W.; Brüning, H.; Gaucher, P.; Ristow, D.; Scharlau, W.; Schmidl, D. & Wink, Michael (1994): Phylogenetic relationships among falcon species (genus Falco) according to DNA sequence variation of the cytochrome b gene. In: Meyburg, B.-U. & Chancellor, R.D. (eds.): Raptor conservation today: 593-599. PDF fulltext
  • Nittinger, F.; Haring, E.; Pinsker, W.; Wink, Michael & Gamauf, A. (2005): Out of Africa? Phylogenetic relationships between Falco biarmicus and other hierofalcons (Aves Falconidae). Journal of Zoological Systematics and Evolutionary Research 43(4): 321-331. எஆசு:10.1111/j.1439-0469.2005.00326.x PDF fulltext
  • Wink, Michael; Seibold, I.; Lotfikhah, F. & Bednarek, W. (1998): Molecular systematics of holarctic raptors (Order Falconiformes). In: Chancellor, R.D., Meyburg, B.-U. & Ferrero, J.J. (eds.): Holarctic Birds of Prey: 29-48. Adenex & WWGBP. PDF fulltext
  • Wink, Michael; Sauer-Gürth, Hedi; Ellis, David & Kenward, Robert (2004): Phylogenetic relationships in the Hierofalco complex (Saker-, Gyr-, Lanner-, Laggar Falcon). In: Chancellor, R.D. & Meyburg, B.-U. (eds.): Raptors Worldwide: 499-504. WWGBP, Berlin. PDF fulltext

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_வல்லூறு&oldid=3901656" இலிருந்து மீள்விக்கப்பட்டது