உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காள வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காள வரலாறு (History of Bengal) என்பது வங்காள மொழி பேசும், தற்கால கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் உள்ளிட்ட வங்காளப் பகுதியின் வரலாறுகளை குறிக்கும். வங்காளத்தின் நாகரீகம் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.[1] தாலமியின் (கி பி 90 – 168), குறிப்புகளின் படி, கங்காரிதாய் இராச்சியம், கங்கை ஆற்றின் நீர் ஐந்து முகத்துவாரங்கள் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்குமிடமான தற்கால சிட்டகாங் கடற்கரையை ஒட்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பிற வரலாற்று ஆசிரியர்கள், தற்கால மேற்கு வங்காளத்தில், கங்கை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்தில் இருந்ததாக கூறுகின்றனர். [2] இந்து சமயம் மற்றும் பௌத்த சமயம் வங்காளத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.

தென்கிழக்கு ஆசியா, பாரசீகம், அரேபியா மற்றும் மத்தியதரைக் கடல் நாடுகளான அனதோலியா, பண்டைய கிரேக்கம், உரோமானிய நாடுகளுடன், வங்காளம் மஸ்லின் துணி வணிகம் மேற்கொண்டிருந்தது. [3] மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் கீழ் வங்காளம் ஒரு மாகாணமாக விளங்கியது.

கௌடப் பேரரசு (கிபி 590 – 626), பாலப் பேரரசு (கிபி 8 - 12ம் நூற்றாண்டு), காம்போஜ பால வம்சம் (கிபி 10 - 11ம் நூற்றாண்டு), ஹரிகேள இராச்சியம் (கிபி 10 - 11ம் நூற்றாண்டு), சென் பேரரசு (கிபி 1070– 1230), தேவா பேரரசு (கிபி 12 - 13ம் நூற்றாண்டு) வங்காளத்தை ஆண்ட காலத்தில், வங்காள மொழி, வங்காள எழுத்துமுறை, இலக்கியம், இசை, கலை மற்றும் கட்டிடக்கலை வளர்ந்தது.

13ம் நூற்றாண்டு முதல் வங்காளத்தின் நிலப்பரப்புகள் இசுலாமிய சுல்தான்கள், இந்து மன்னர்கள் மற்றும் பெருநிலக்கிழார்களின் கீழ் சென்றது.[4] வரலாற்றின் மத்திய காலத்திலும், நவீன காலத்திலும் வங்காளம், குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது.

கிபி 16 - 17ம் நூற்றாண்டுகளில் வங்காளத்தின் கழிமுகத்துவாரப் பகுதிகளை, 12 இராஜபுத்திர இசுலாமிய நிழக்கிழார்கள் ஆண்டனர்.[5]

வங்காளம், முகலாயர் ஆட்சியில் இருந்த போது, அரசு கருவூலத்தின் 50% நிலவரி வங்காள மாகாணத்திலிருந்து கிடைத்தது.[6] வங்காளத்தில் நெல், கரும்பு, மஸ்லின் துணி, சணல் நூல் மற்றும் சணல் பொருட்கள் மற்றும் கப்பல் கட்டும் தொழில்கள் சிறப்பாக நடைபெற்றது.[7][8][9] வங்காளத்தின் தலைநகரம் டாக்கா, பத்து இலட்சம் மக்கள்தொகைக்கு மேல் கொண்டிருந்தது. [6]முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், வங்காளம், படிப்படியாக, இசுலாமிய வங்காள நவாபுகளின் பிடியில் சென்றது. பின்னர் மராத்தியப் பேரரசினர் வங்காள நவாபுகளிடமிருந்து, வங்காளத்தின் மேற்கு பகுதிகளையும், தெற்கு பகுதிகளையும் கைப்பற்றினர்.

கிபி 18ம் நூற்றாண்டில், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிப் படைகளுக்கும், வங்காள நவாபு படைகளுக்கும் இடையே நடைபெற்ற பக்சார் சண்டை மற்றும் பிளாசி சண்டைகளின் முடிவில், கிபி 1793ல் வங்காளத்தின் பெரும்பகுதிகளைப் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றினர். கொல்கத்தா நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. வங்காளத்தில் பருத்தி மற்றும் பட்டுத் துணி ஆலைகள் மற்றும் சணல் ஆலைகள் பெருகியதால், இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வேகம் கொண்டது.[7][8][9][10] ஜவுளித் துறையில் பிரித்தானியர்கள் கொண்டு வந்த நவீன நெசவாலைகளாலும்; மழையின்றி ஏற்பட்ட உணவுப் பஞ்சங்களாலும், பல இலட்ச வங்காள மக்கள் தங்களது பரம்பரை நெசவுத் தொழிலை இழந்ததுடன், பட்டினி கிடந்து இறந்தனர். [7][8][9]

பிரித்தானியர்கள் ஆட்சியில் வங்காளத்தில் கல்வி, அறிவியல், கலைகள் பெருகியது. ஆங்கிலம் கற்ற வங்காளிகள் நடுவில் இந்திய விடுதலை போராட்ட உணர்வு பெருகியது. 15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியப் பிரிவினையின் போது, வங்காளத்தின், இந்துக்கள் அதிகமுள்ள பகுதியான வங்காளத்தின் மேற்கு பகுதியான மேற்கு வங்காளத்தை இந்தியாவுடன் இணைத்தனர். இசுலாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கு வங்காளத்தைப் பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்து கிழக்கு பாகிஸ்தான் எனப்பெயரிட்டனர்.

1971ல் தனி நாடு கோரும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், இந்தியாவின் உதவியுடன், பாகிஸ்தானிடம் போராடி விடுதலைப் பெற்றது. கிழக்கு வங்காளம் எனும் கிழக்கு பாகிஸ்தானுக்கு வங்காளதேசம் எனப்பெயரிடப்பட்டது.

பண்டைய வங்காளம்

[தொகு]

வரலாற்று காலத்திற்கு முந்தைய வங்காளம்

[தொகு]

20,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்திய தொல்பொருட்கள் வங்காளத்தில் நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[11]4,000 ஆண்டுகளுக்கு முன்னர், செப்புக் காலத்தில், வங்காளத்தில் அதிக குடியேற்றங்கள் நடைபெற்றது. [12] வங்காளத்தில் முதலில், இந்திய-ஆரிய மொழிகள் அல்லாத, ஆஸ்டிரிக் மொழி மற்றும் ஆஸ்டிரிக்-ஆசிய மொழிகளான தற்கால சந்தாளி மொழி, பில் மொழி, கோலி மொழி, புலிந்த மொழி, சபாரா மொழி மற்றும் திபெத்திய-பர்மிய மொழிகள் பேசிய பழங்குடிகள் வாழ்ந்தனர்.

1960 நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் படி, கிமு முதல் ஆயிரமாண்டில் வங்காளத்தில் பண்பாடு மற்றும் நாகரீகம் செழித்திருந்தது.

பண்டைய இலக்கியங்களில் வங்காளம்

[தொகு]

மகாபாரத இதிகாசத்திலும், பாகவத புராணத்திலும், பரத கண்டத்தின் கிழக்குப் பகுதியான வங்காளப் பகுதியை ஆண்ட பண்டைய வங்க நாடு, பௌண்டர நாடு, சுக்மா நாடு, அங்க நாடுகளையும் குறித்துள்ளது.

மேலும் மகதப் பேரரசன் ஜராசந்தன் ஆட்சியில் வங்காளம் இருந்தது. பாகவத புராணம் கூறும் ஜராசந்தனின் கூட்டாளி, பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன், கிருஷ்ணரைப் போன்று வேடம் தரித்து கிருஷ்ணரை கடும் பகைவனாக கருதினார்.

ஆதி வரலாறு

[தொகு]
வங்காள தேசத்தின் மகஸ்தங்கர் தொல்லியல் களம்

வங்காள தேசத்தின் மகஸ்தங்கர் தொல்லியல் களம், கிமு 700 ஆண்டிற்கு முந்தைய பௌண்டர நாட்டு தலைநகரமாக கருதப்படுகிறது. முதன் முதலாக வங்காளம், நந்தர்கள் ஆட்சியின் போது, ஆரியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

வங்காளிகளின் வெளிநாட்டு குடியேற்றங்கள்

[தொகு]

வங்காளிகள் தென்கிழக்காசியாவின், குறிப்பாக ஜாவா, சுமத்திரா, சயாம் (தாய்லாந்து) போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

மகாவம்சம் நூலின் படி, வங்க நாட்டு இளவரசன் விஜயன், கிமு 544ல் தற்கால இலங்கையைக் கைப்பற்றிதாகக் கூறுகிறது.

வங்க மொழி பேசும் மக்கள் தற்கால மலேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் குடியேறினார்கள்.[13]

கங்காரிதாய் இராச்சியம்

[தொகு]

பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் கங்காரிதாய் இராச்சியம், கங்கை ஆற்றின் கழிமுகத்தில் இருந்ததை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால கோபால்கஞ்ச் என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். [14] மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலில், கங்காரிதாய் இராச்சியம் பெரும் தரைப்படையும், தேர்ப்படையும், யானைப்படையும் கொண்டிருந்தன எனக் குறிப்பிட்டுள்ளது. கங்காரிதாய் இராச்சியம், கிரேக்க, உரோமானிய, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் வழி வணிகம் செய்தது.

பாரம்பரியக் கால வங்காளம்

[தொகு]

இரண்டாவது குப்தப் பேரரசர், சமுத்திரகுப்தர் வங்காளத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், வங்காளம், புஷ்கர்ணா இராச்சியம் மற்றும் சமதாத என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.

சந்திர வம்சம் (கிபி 100 - 250), சமதாத இராச்சியம் (கிபி 300 - ?), கௌடப் பேரரசு (கிபி 590 – 626), பாலப் பேரரசு (கிபி 8 - 12ம் நூற்றாண்டு), காம்போஜ பால வம்சம் (கிபி 10 - 11ம் நூற்றாண்டு), சென் பேரரசு (கிபி 1070– 1230) மற்றும் தேவா பேரரசுகள் (கிபி 12 - 13ம் நூற்றாண்டு) வங்காளத்தை ஆண்டது.

கௌடப் பேரரசு

[தொகு]
இடப்பக்கத்தில் காளை மீதமர்ந்த சிவன் மற்றும் வலப்புறத்தில் இருபுறங்களிலும் யானைகளுடன், தாமரை மீதமர்ந்த இலக்குமியின் உருவம் பொறித்த கௌடப் பேரரசர் சசாங்கனின் நாணயம், கிபி 600-630[15]

கிபி 6ம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சியின் போது, வங்காளம் வங்க நாடு, சமதாத இராச்சியம் மற்றும் ஹரிகேள இராச்சியம் எனப் பலவாறாக பிரிந்திருந்தது.

மேற்கு வங்காளப் பகுதியில் கௌடப் பேரரசினர் கர்ணசுவர்ணா எனும் தற்கால முர்சிதாபாத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். குப்தப் பேரரசில் சிற்றரசான இருந்த சசாங்கன் தன்னாட்சியுடன், வங்க நாடு மற்றும் சமதாத நாடுகளை ஒருங்கிணைத்து ஆண்டான்.

வட இந்தியாவை ஆண்ட அர்சவர்தனரின் ஆட்சியில், சசாங்கனின் கௌடப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

மல்லபூமி இராச்சியம்

[தொகு]
விஷ்ணுபூர் சுடுமண் கோயில்கள்

மேற்கு வங்காளத்தின் பாங்குராவின் விஷ்ணுபூர் மல்லபூமி இராச்சியம் மன்னர்கள்[16] தற்கால ஜார்கண்ட் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்காளத்தின் தெற்குப் பகுதிகளையும் ஆட்சி செய்தவர்கள். [16]

கிபி 7ம் நூற்றாண்டு முதல் 19ம நூற்றாண்டு வரை விஷ்ணுபூர் மல்லபூமி இராச்சியம் ஏற்ற இறக்கங்களுடன் மல்லபூமியை ஆண்டது. [16] மல்லபூமி இராச்சியத்தின் சுடுமண் கோயில்கள் புகழ்பெற்றது. [17][18]

பிந்தைய பாரம்பரியக் காலமம்

[தொகு]

பாலர்களின் காலம்

[தொகு]

பாலப் பேரரசு (750–1120) வஜ்ஜிராயனம் மற்றும் மகாயான பௌத்தத்தை பின்பற்றிய இராச்சியம் ஆகும். பாலப் பேரரசை நிறுவிய ஆட்சியாளர் முதலாம் கோபாலன் (750–770) ஆவர்.

நான்கு நூற்றாண்டுகள் ஆண்ட பாலப் பேரரசினர் பின்னர் வீழ்ச்சி கண்டனர். நாளந்தா மற்றும் விக்கிரமசீலா பௌத்தக் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி ஆதரித்தனர். தற்கால வங்க தேசத்தில் சோமபுரம் மகாவிகாரையை, பாலப் பேரரசர் தர்மபாலன் நிறுவினார்.

இந்தியத் துணைக்கண்டத்தில், கிபி 800ல் பாலப் பேரரசின் நிலப்பரப்புகள்
பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவிய சோமபுரம் மகாவிகாரை, நவகோன் மாவட்டம், வங்காள தேசம்

பாலப் பேரரசு தர்மபாலன் (770–810) மற்றும் தேவபாலன் (810–850) காலத்தில் ஆட்சிப் பரப்பிலும், செல்வத்திலும் உயர்ந்து காணப்பட்டது. பாலப் பேரரசர் அதர்மபாலன், வட இந்தியாவின் தற்கால பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் பகுதிகளை கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். தர்மபாலருக்கு பின் அரியணை ஏறிய தேவபாலர், தற்கால அசாம் மற்றும் தற்கால ஒடிசாவின் உத்கலப் பகுதியை கைப்பற்றினார்.

கிபி 11ம் நூற்றாண்டில் பாலப் பேரரசர்கள் நிறுவிய கௌதமபுத்தர் மற்றும் போதிசத்துவர்களின் சிற்பங்கள்

பாலப் பேரரசர் மகிபாலா (கிபி 988 -1038) ஆட்சிக் காலத்தில், சாளுக்கியர் மற்றும் சோழ மன்னர் முதாலம் இராஜேந்திர சோழனின் வடக்கு படையெடுப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார்.[19][20]

பாலப் பேரரசர் இராமபாலன் (1077–1130) கோசலம், தற்கால அசாம் மற்றும் ஒடிசாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி பாலப் பேரரசை விரிவுபடுத்தினார்.

கீழைக் கங்கர்களின் (1078–1434) கலிங்க மன்னர் அனங்கபீமன் சோழ கங்க தேவன், பாலப் பேரரசர் இராமபாலனை வென்று, தெற்கு வங்காளம், கோசலம் மற்றும் உத்கலப் பகுதிகளைப் கைப்பற்றினார். சோழப் பேரரசர் முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1070 - 1120), கங்கை ஆறு வரை படையெடுத்து, கலிங்கத்தை வென்றார். கலிங்கத்தின் கஜபதிகள் (கிபி 1434 - 1541) தெற்கு வங்காளத்தை கைப்பற்றினர்.

சோழர் மற்றும் சாளுக்கியர்களின் படையெடுப்புகள்

[தொகு]

சோழர்கள் கிபி 1021 மற்றும் 1023களிலும் பாலப் பேரரசு மீது படையெடுத்தனர். [21] சாளுக்கியப் பேரரசர்]] விக்கிரமாதித்தனின் தொடர் படையெடுப்புகளால் பாலப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், வங்காளத்தில் சென் பேரரசு (கிபி 107கிபி 1230) வளரத்துவங்கியது.

சந்திர வம்சம்

[தொகு]

சந்திர வம்சத்தவர்கள், ஹரிகேள இராச்சியம், சமதாத இராச்சியம் மற்றும் வங்க நாடு மற்றும் காமரூபம் பகுதிகளை, கிபி 900 முதல் 1050 முடிய 150 ஆண்டுகள் ஆட்சி செய்த அரச குலமாகும்.

சென் பேரரசு

[தொகு]

பௌத்த சமய பாலப் பேரரசுக்கு பின், கிபி 12ம் நூற்றாண்டில் வங்காளத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட, சேனா பேரரசினர் தென்னிந்தியாவின் கர்நாடகா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்து சமயம் மற்றும் சமசுகிருத மொழியை ஆதரித்தனர்.

தேவா பேரரசு

[தொகு]

இந்து சமய தேவா பேரரசினர் கிழக்கு வங்காளத்தை கிபி 12 - 13ம் நூற்றாண்டுகளில் ஆண்டனர்.

மத்திய கால வங்காளம்

[தொகு]

கிபி 1202ல் தில்லி சுல்தான் பக்தியார் கில்ஜி பிகார் மற்றும் வங்காளப் பகுதிகளை கைப்பற்ற முயன்றார். ஆனால் சென் பேரரசின் படைகளால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் 14ம் நூற்றாண்டில் வங்காளத்தை, தில்லி சுல்தான்களின் கீழ், வங்காள நவாபு இலியாஸ் சாகி வம்சத்தினர் (கிபி 1342 - 1487) மற்றும் உசைன் சாகி வம்சத்தினர் (கிபி 1494 –1538) ஆண்டனர்.

நவீன வங்காளம்

[தொகு]

முகலாயர் காலம்

[தொகு]

கிபி 1540ல் முகலாயப் பேரரசர் உமாயுனை வென்று, தில்லி பேரரசர் ஆன ஆப்கானிய சேர் சா சூரி, தற்கால வங்காளதேசத்தின் நாராயண்கஞ்ச் மற்றும் தற்கால பாகிஸ்தானின் பெசாவர் நகரத்தையும் இணைக்கும் பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார். செர்ஷா சூரி இறந்த பின், கிபி 1554ல் உமாயூன், லாகூர் மற்றும் தில்லி பகுதிகளை கைப்பற்றி மீண்டும் முகலாய அரசை அமைத்தார்.

கிபி 1700ல் தெற்காசியாவில் முகலாயப் பேரரசு

கிபி 1556ல் உமாயூன் இறக்கவே, இந்துப் படைத்தலைவரான ஹெமு என்ற ஹேம சந்திர விக்கிரமாத்தியன் தில்லியைக் கைப்பற்றி 7 அக்டோபர் 1556 - 5 நவம்பர் 1556 முடிய ஆண்டார்.

5 நவம்பர் 1556இல் நடைபெற்ற இரண்டாம் பானிபட் போரில் தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் நடைபெற்ற இரண்டாம் பானிபட் போரில் [24] அக்பர் வென்றார்.[25]

தில்லி முகலாயப் பேரரசர் அக்பர், கிபி 1576ல் வங்காள கரணி ஆட்சியாளர்களை வென்றதால், வங்காளம், முகலாயப் பேரரசின் ஒரு மாகாணமானது. முகலாயப் பேரரசின் கீழ், வங்காள மாகாணம் கிபி 1575 முதல் 1717 முடிய முர்சிதாபாத் வங்காள நவாபுகள் ஆண்டனர்.

வங்காள நவாபுகள், சந்தன்நகரில் வணிக மையத்தை நிறுவ, கிபி 1673ல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதியளித்தனர். மேலும் கிபி 1690ல் கொல்கத்தாவில் வணிக மையத்தை நிறுவ பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கினர்.

மஸ்லின் துணி உடுத்திய வங்காளப் பெண், கிபி 18ம் நூற்றாண்டு

முகலாயப் பேரரசின் கிழக்கு வங்காளத்தில் இசுலாமியர்களின் மக்கள்தொகையும், மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் மக்கள்தொகையும் கூடியது. வங்காளத்தில் மஸ்லின் துணி நெசவாலைகள், சணல் ஆலைகள் மற்றும் கப்பல் கட்டும் தொழில்கள் செழித்தது.[7][8][9] வங்காளத்தின் தலைநகராக டாக்கா நகரம் விளங்கியது. பட்டுப் புழு வளர்ப்பு மற்றும் பட்டு நூல் உற்பத்தி கூடியதால், பட்டுத் துணிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது. [26]

வங்காளத்தின் நெல், கரும்பு, பட்டு, பருத்தி, சணல், உப்பு, முத்துக்கள், அபின் உற்பத்தி கூடியதால், முகலாயப் பேரரசு பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றதுடன், பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. [27]வங்காளத்தில் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைந்தது.

வங்காள இந்து இராச்சியங்கள்

[தொகு]

முகலாயப் பேரரசு காலத்தில் வங்காளத்தில் தன்னாட்சியுடன் ஜெஸ்சூர் , பர்துவான், கூச் பிகார், பர்சூட் இராச்சியஙகளை பல இந்து சமய மன்னர்கள் ஆண்டனர்.

பூர்சூட் இராச்சியம், மேற்கு வங்காளம்

வங்காள நவாபுகள்

[தொகு]

முகலாயப் பேரரசின் கீழ், முர்சிதாபாத் நகரத்தை தலைநகராகக் கொண்ட வங்காள நவாபுகள், தற்கால மேற்கு வங்காளம், வங்காளதேசம், பிகார் மற்றும் ஒடிசா பகுதிகளின் ஆளுநர்களாக இருந்தனர். அவுரங்கசீப்ப்பின் மறைவிற்குப் பின்னர் வங்காள நவாபுகள் 1717 முதல் 1757 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர். 18ம் நூற்றாண்டின் இறுதியில் வங்காள நவாபுகள், மராத்தியப் பேரரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிப் படைகளுடன் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் பக்சார் சண்டையில் வங்காளத்தை இழந்தனர்.

வங்காளத்தின் மீதான மராத்தியப் படையெடுப்புகள்

[தொகு]

18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மராத்தியப் பேரரசின் படைத்தலைவர் ரங்கோஜி போன்சுலே, வங்காளத்தின் மீது படையெடுத்து, ஒடிசா மற்றும் வங்காளத்தின் தெற்கு பகுதிகளை கைப்பற்றினார்.

நவீன வங்காளம்

[தொகு]
பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணம், ஆண்டு 1858

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி

[தொகு]
பிளாசிப் போரின் நினைவுச் சின்னம்

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியினர் கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையை வலுப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியரின் தூண்டுதலின் பேரில், வங்காள நவாபு சிராச் உத் தவ்லா, ஆங்கிலேயர்கள் மீது படையெடுத்தார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் மற்றும் உள்ளூர் கூட்டாளி படைகளின் உதவியுடன், மார்ச் 1757ல் சந்தன்நகரைக் கைப்பற்றினர். மேலும் 23 சூன் 1757 அன்று நடைபெற்ற பிளாசி போரில், ஆங்கிலேயர்கள், வங்காள நவாப்பை தோற்கடித்தனர். பின்னர் முர்சிதாபாத்தில் வங்காள நவாப் சிராச் உத் தவ்லாவை உள்ளூர் மக்களில் கொன்றதால், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதரவு நபரை வங்காள நவாபை நியமித்தனர். மேலும் வங்காளத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் ஆங்கிலேயர்களின் கீழ் வந்ததது.

பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியினர் 1763ல் மீண்டும் சந்தன்நகரை கைப்பற்றினர்.

முகலாயப் பேரரசர் ஷா ஆலம் II காலத்தில கிபி 1765ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் ஆங்கிலேயர்கள் வென்றனர். தில்லி முகலாயப் பேரரசின் தோல்விக்குப் பின்னர், இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாக கொல்கத்தா விளங்கியது.

பிரித்தானியர்களின் ஆட்சி

[தொகு]
1893ல் பிரித்தானிய ஆட்சியில் வங்காள மாகாணம்

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, வங்காள மாகாணத்தில், 1770 பஞ்சம் மற்றும் 1943 பஞ்சம்|பஞ்சங்களால் வங்காளத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் உணவின்றி இறந்தனர்.

இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது நடைபெற்ற 1857 சிப்பாய்க் கிளர்ச்சியாலும், நிதி நெருக்கடியாலும் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி 1858ல் மூடப்பட்டது. பிரித்தானிய இந்தியா காலனியாதிக்க நிர்வாகம், பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராய் மூலம் நிர்வகிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி, பிரித்தானிய இந்தியாவின் மகாராணியாகவும் அழைக்கப்பட்டார்.

வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785), இராணுவம், காவல் துறை, வருவாய்த் துறைகள் மற்றும் நீதிமன்றங்கள் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை நிறுவினார்.

1835ல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, 1857ல் கொல்கத்தா பல்கலைக்கழகம், 1862ல் கல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

1905 வங்காளப் பிரிவினை

[தொகு]
1912ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதியின் வரைபடம்

1905ல் வைஸ்ராய் கர்சன் பிரபு, வங்காள மாகாணத்தை நிர்வாக வசதிக்காக, மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் என இரண்டு மாகாணங்களாகப் வங்காளத்தை பிரிவினை செய்யப்பட்டது. [28] [29]

புதிய மேற்கு வங்காள மாகாணத்தில் தற்கால மேற்கு வங்காளம், பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இருந்தது. மேற்கு வங்காளத்தின் தலைநகராக கொல்கத்தா செயல்பட்டது. புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தில் தற்கால வங்காளதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்களைக் கொண்டிருந்தது.[30][31] கிழக்கு வங்காளத்தின் தலைநகரமாக டாக்கா நகரம் செயல்பட்டது. 1905 முதல் 1911 முடிய செயல்பட்ட இவ்விரண்டு வங்காளப் பிரிவினைக்கு மக்கள் நடுவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதல், புதிய வங்காள மாகாணங்களை கலைத்து விட்டு, 1912ல் வங்காள மொழி பேசும் பகுதிகளுடன் வங்காள மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டது. மேலும் தற்கால பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா பகுதிகளை இணைத்து பிகார் & ஒடிசா மாகாணம் நிறுவப்பட்டது[32] பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து 12 டிசம்பர் 1911 அன்று தில்லிக்கு மாற்றப்பட்டது.

வங்காள சட்டமன்றம் (1920–37)

[தொகு]

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1921ல் வங்காள மாகாணத்தில் 140 இந்திய உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் அமைக்கப்பட்டது. [33]

இரண்டாம் உலகப் போரின் போது 1943 வங்காளப் பஞ்சத்தில் 30 இலட்சம் மக்கள் பட்டினியால் இறந்தனர்.

வங்காள மறுமலர்ச்சி

[தொகு]

கிபி 19 மற்றும் 20ம் நூற்றாண்டில், பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் சமூகம், கல்வி, அரசியல், இலக்கியம், அறிவியல், சமயம் போன்ற துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைக் குறிக்கும். வங்காள மறுமலர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்களில் இராசாராம் மோகன் ராய் (1775–1833), ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (1820 - 1891), பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 – 1894), ஜகதீஷ் சந்திர போஸ் (1858 - 1937), சரத்சந்திர சட்டோபாத்யாயா (1876 – 1938), இரவீந்திரநாத் தாகூர் (1861–1941), விவேகானந்தர் (1863 - 1902), பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். [37] [38]

இந்திய விடுதலை இயக்கம்

[தொகு]
இந்திய விடுதலைக்காக, பர்மாவில் இந்திய தேசிய இராணுவம் அமைத்துப் போராடிய சுபாஷ் சந்திர போஸ்

இந்திய விடுதலை இயக்கத்திற்கு, வங்காளம் மிகப்பெரிய அளவில் பங்கு வகித்தது. ஆயுதமேந்திய அனுசீலன் சமித்தி மற்றும் யுகாந்தர் புரட்சி அமைப்புகள், பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முக்கிய வங்காளத் தலைவர்கள் சித்தரஞ்சன் தாஸ், சுரேந்திரநாத் பானர்ஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பிபின் சந்திர பால், குதிராம் போஸ், பூபேந்திரநாத் தத்தர், சூரியா சென், சரோஜினி நாயுடு, அரவிந்தர், ராஷ் பிஹாரி போஸ், ஜத்தீந்திர நாத் தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வங்காளப் பிரிவினை, 1905 மற்றும் 1947

[தொகு]
1905ல் வங்காளப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம் மற்றும் ஒடிசாவுடன் கூடிய மேற்கு வங்காள மாகாணத்தின் வரைபடம்
கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம் எனப்பிரிக்கப்பட்ட வங்காளம்

முதல் வங்காளப் பிரிவினை

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபு, 1905ல் வங்காளத்தின் கிழக்குப் பகுதியை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் என்றும், வங்காளத்தின் மேற்குப் பகுதியை ஒடிசாவுடன் கூடிய மேற்கு வங்காளம் என இரண்டாகப் பிரித்தார். இப்பிரிவினையை மக்கள் வலுவுடன் எதிர்த்தனர். இதனால் 1905ல் பிரிக்கப்பட்ட வங்காள மொழி பேசும் பகுதிகள் மீண்டும் 1912ல் ஒன்றிணைக்கப்பட்டது.

இரண்டாம் வங்காளப் பிரிவினை

[தொகு]

15 ஆகஸ்டு 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணத்தை, இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளை மேற்கு வங்காளம் என்றும், இசுலாமியர்கள் பெரும்பான்மை கொண்ட கிழக்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டது. இதனால் கிழக்கு வங்காளத்தில் இருந்த இலட்சக்கணக்கான இந்துக்கள், உடைமைகளை இழந்து, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர். அதே போன்று பிகார், மேற்கு வங்கப் பகுதியில் இருந்த இசுலாமியர்கள் கிழக்கு வங்காளத்தை நோக்கிச் சென்றனர். பாகிஸ்தானின் கிழக்கு வங்காளப் பகுதிக்கு, 1955ல் கிழக்கு பாகிஸ்தான் எனப் பெயரிடப்பட்டது.

தற்கால வங்காளம்

[தொகு]

கிழக்கு வங்காளம் எனப்படும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் அரசியலில் போதுமான அதிகாரம் வழங்கப்படாததாலும், உள்ளூர் வங்காள மொழிக்கு பதிலாக உருது மொழியை மக்கள் மீது திணிக்க முயன்றதாலும், பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் மீது இசுலாமிய வங்காளிகள் மிகுந்த கோபத்துடன் இருந்தனர். 1971ல் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில், வங்காள இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு பாகிஸ்தான் பகுதி விடுதலை அடைந்தது. விடுதலை அடைந்த தங்கள் நாட்டிற்கு வங்காள தேசம் எனப்பெயரிட்டனர். சேக் முஜிபுர் ரகுமான் வங்காள தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார். தற்பொது சேக் முஜிபுர் ரகுமானின் மகள் சேக் அசீனா வங்காளதேசத்தின் பிரதம அமைச்சராக உள்ளார்.

இந்தியப் பிரிவினைக்கு பின்னர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி ஆட்சி, சூன் 1977 முடிய ஆட்சி செய்தது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கூட்டணி அரசு, சூன் 1977 முதல் 13 மே 2011 முடிய 34 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கு வங்காளத்தை ஆண்டது. பின்னர் மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, 20 மே 2011 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of Bangladesh". Bangladesh Student Association. Archived from the original on 19 December 2006. பார்க்கப்பட்ட நாள் 26 October 2006.
  2. Dr. Gaurishankar de & Prof. Subhradip de, Prasanga: Pratna-Prantar Chandraketugarh, First Edition: 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82435-00-6
  3. "Silk Road and Muslin Road".
  4. Ghosh, Binoy, Paschim Banger Sanskriti, (in Bengali), part II, 1976 edition, pp. 218–234, Prakash Bhaban
  5. "Isa Khan – Banglapedia". en.banglapedia.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.
  6. 6.0 6.1 "Which India is claiming to have been colonised?". The Daily Star (Opinion).
  7. 7.0 7.1 7.2 7.3 Junie T. Tong (2016), Finance and Society in 21st Century China: Chinese Culture Versus Western Markets, page 151, CRC Press
  8. 8.0 8.1 8.2 8.3 John L. Esposito (2004), The Islamic World: Past and Present 3-Volume Set, page 190, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
  9. 9.0 9.1 9.2 9.3 Ray, Indrajit (2011). Bengal Industries and the British Industrial Revolution (1757-1857), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1136825525
  10. Shombit Sengupta, Bengals plunder gifted the British Industrial Revolution பரணிடப்பட்டது 1 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், The Financial Express, 8 February 2010
  11. Sarkar, Sebanti (28 March 2008). "History of Bengal just got a lot older" (jsp). The Daily Telegraph (Kolkata: The Telegraph). http://www.telegraphindia.com/1080328/jsp/frontpage/story_9067406.jsp. பார்த்த நாள்: 13 September 2010. "Humans walked on Bengal's soil 20,000 years ago, archaeologists have found out, pushing the state's pre-history back by some 8,000 years." 
  12. Bharadwaj, G (2003). "The Ancient Period". In Majumdar, RC (ed.). History of Bengal. B.R. Publishing Corp.
  13. http://www.paxgaea.com/HRBangladesh.html
  14. Sultana, Jesmin (2012). "Kotalipara". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  15. CNG Coins
  16. 16.0 16.1 16.2 O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21–46, 1995 reprint, first published 1908, Government of West Bengal
  17. Pandey, Dr.S.N. (1 September 2010). West Bengal General Knowledge Digest (in ஆங்கிலம்). Upkar Prakashan. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174822826. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  18. App, Urs. The Birth of Orientalism (in ஆங்கிலம்). University of Pennsylvania Press. p. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0812200055. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  19. Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A history of India (4. ed., reprint. (twice). ed.). London [u.a.]: Routledge. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415329200. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
  20. "Pala dynasty". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.
  21. Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib by Nitish K. Sengupta p.45
  22. Travel:Dinajpur பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம், from Bangladesh Online (ISP).
  23. Ahmed, Nazimuddin (2012). "Kantanagar Temple". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  24. Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7602-180-7. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  25. S. Chand. History of Medieval India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-0364-5.
  26. John F. Richards (1995), The Mughal Empire, page 190, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்
  27. Om Prakash, "Empire, Mughal", History of World Trade Since 1450, edited by John J. McCusker, vol. 1, Macmillan Reference USA, 2006, pp. 237-240, World History in Context, accessed 3 August 2017
  28. Partition-of-Bengal
  29. "Partition of Bengal by Lord Curzon (1905)". Archived from the original on 2017-06-19. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
  30. 7 Sister States
  31. Seven Sister States of northeastern India
  32. Ilbert, Sir Courtenay Peregrine (1922). The Government of India, Third Edition, revised and updated. Clarendon Press. pp. 117-118.
  33. The Working Of Dyarchy In India 1919 1928. D.B.Taraporevala Sons And Company.
  34. Georg, Feuerstein (2002). The Yoga Tradition. Motilal Banarsidass. p. 600.
  35. Clarke, Peter Bernard (2006). New Religions in Global Perspective. Routledge. p. 209.
  36. A versatile genius பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம், Frontline 21 (24), 2004.
  37. History of the Bengali-speaking People by Nitish Sengupta, p 211, UBS Publishers' Distributors Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7476-355-4.
  38. Calcutta and the Bengal Renaissance by Sumit Sarkar in Calcutta, the Living City edited by Sukanta Chaudhuri, Vol I, p 95.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_வரலாறு&oldid=3849454" இலிருந்து மீள்விக்கப்பட்டது