உள்ளடக்கத்துக்குச் செல்

யுனைட் டி'ஹபிட்டேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுனைட் டி'ஹபிட்டேஷன் (Unité d'Habitation) என்பது இரண்டாவது உலகப் போரை அடுத்து, பிரான்சில் உள்ள மார்செயில் என்னும் நகரில் 1947 - 1952 காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வதிவிடக் கட்டிடத் தொகுதி ஆகும். இதே கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பில் மேலும் சில கட்டிடங்கள் இதே பெயரில் அமைக்கப்பட்டன. பிரெஞ்சு மொழியில் இச் சொல், வதிவிட அலகு அல்லது வதிவிட ஒற்றுமை என்னும் பொருள் தரக்கூடியது. புகழ் பெற்ற பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியேயினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம் பின்னர் உருவான இது போன்ற பல கட்டிடத் தொகுதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. லெ கொபூசியேயின் மிகப் புகழ் பெற்ற கட்டிடங்களில் ஒன்றான இது, தொடர்ந்து வந்த பல கட்டிட வடிவமைப்புக்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தியதுடன், பின்னாளில் உருவான புரூட்டலிஸ்ட் கட்டிடக்கலைப் பாணிக்கு (Brutalist architectural style) ஒரு அகத்தூண்டலாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.[1][2][3]

மார்செயிலில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம், 337 வதிவிட அலகுகளைக் கொண்டது. நிலத் தளத்தில் பாரிய காங்கிறீற்றுத் தூண்களால் தாங்கப்பட்டுள்ள இத் தொகுதியில், கடைகள், விளையாட்டு வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், தங்கு விடுதி போன்ற பல வசதிகள் அடங்கியுள்ளன. இதன் கூரை ஒரு மொட்டை மாடியாக அமைக்கப்பட்டுள்ளது. அதில், கட்டிடச் சேவைகள் தேவைக்கான அமைப்புக்கள் சிற்பங்கள் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மொட்டை மாடியில் ஒரு நீச்சல் குளமும் உண்டு.

பொதுவாக இது போன்ற கட்டிடங்களில் நடுவில் ஒவ்வொரு தளத்திலும், ஒரு நடைவழியும், அதன் இரு பக்கங்களிலும் வதிவிட அலகுகளும் அமைந்திருக்கும். இவ்வமைப்பில், வதிவிட அலகுகளில் ஒரு பக்கத்தில் மட்டுமே சாளரங்கள் அமைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் அவ்வலகுகளில் குறுக்குக் காற்றோட்டம் இருக்காது. லெ கொபூசியே இப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய அணுகுமுறை ஒன்றை இக் கட்டிடத்தில் கையாண்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு அலகும் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், நடைவழிகள் மூன்று தளங்களுக்கு ஒன்று மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், ஒவ்வொரு அலகும் கட்டிடத்தின் முழு அகலத்துக்கும் அமைந்துள்ளதுடன், எதிர்ப் பக்கங்களில் சாளரங்களும் அமைக்கக்கூடியதாக உள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "The Architectural Work of Le Corbusier, an Outstanding Contribution to the Modern Movement". UNESCO World Heritage Centre. United Nations Educational, Scientific, and Cultural Organization. Archived from the original on 24 November 2018. பார்க்கப்பட்ட நாள் 15 Jan 2022.
  2. "Grave incendie à la Cité radieuse du Corbusier à Marseille". Le Monde.fr. 9 February 2012 இம் மூலத்தில் இருந்து 10 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120210104839/http://www.lemonde.fr/societe/article/2012/02/09/france-grave-incendie-a-la-cite-radieuse-du-corbusier-a-marseille_1641498_3224.html. 
  3. "Aix-Marseille - Toute l'actualité de la région avec Libération: La Cité radieuse va devoir adapter sa sécurité". Archived from the original on 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.

மேற்கோள்கள்

[தொகு]