உள்ளடக்கத்துக்குச் செல்

முந்து மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரலாற்று மொழியியலின் மரவுரு ஒன்று. இவ்வடிவத்தின் கணுப் பகுதிகளில் அல்லது கிளை பிரியும் இடங்களில் இருப்பவை முந்து மொழிகள் ஆகும்.

முந்து மொழி (Proto-Language) என்பது, வரலாற்று மொழியியலின் மரவுரு மாதிரியில், ஒரு மொழிக்குடும்பத்தை உருவாக்கும் மொழிகளின் பொது மூதாதை மொழியைக் குறிக்கும். பெரும்பாலும், இம் முந்து மொழியை நேரடியாக அறிய முடிவதில்லை. ஆனால் ஒப்பியல் முறையில் மொழிக்குடும்பத்தின் உறுப்பு மொழிகளை ஆராய்வதன் மூலம் முந்து மொழியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இந்த மீட்டுருவாக்கங்கள் எல்லாமே முழுமையாக இருப்பதில்லை. உறுப்பு மொழிகளிலிருந்து கிடைக்கும் சான்றுகள் எந்த அளவுக்கு முழுமையாக உள்ளன என்பதையும், ஆய்வு செய்பவரின் திறமையையும் பொறுத்தே மீட்டுருவாக்கத்தின் முழுமைத் தன்மை அமையும். முந்து இந்திய-ஐரோப்பியம், முந்து உராலியம், முந்து திராவிடம் என்பன இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட முந்து மொழிகளுட் சிலவாகும்.

சில வேளைகளில், முந்து மொழி ஒன்று அழியாது பேணப்பட்டிருக்கும் பழைய நூல்களில் காணப்படும். எடுத்துக்காட்டாக, இன்றும் பழைய நூல்களில் காணப்படும் இலத்தீன் மொழியே, பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம், போத்துக்கேயம் போன்ற மொழிகளை உள்ளடக்கிய ரோமான்சு மொழிக் குடும்பத்தின் முந்து மொழியாகும். இது போலவே, தற்காலக் இசுக்கன்டினேவிய மொழிகளின் முந்து மொழியாகிய முந்து நோர்சு மொழி, முழுமையாக இல்லாவிட்டாலும், பகுதிகளாக பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இந்திய-ஆரிய மொழியின் மிகப்பழைய ஆவணம் எதுவும் கிடைக்கப் பெறாவிட்டாலும், தற்கால இந்தியாவின் இந்திய-ஆரிய மொழிகளின் மூலமாக, முதலில் வாய்வழியாகவும் பின்னர் எழுத்து மூலமும் பேணப்பட்ட இலக்கியங்களில் காணப்படும் வேதகாலச் சமசுக்கிருதம் உள்ளது.

முதன் முதலாக ஒழுங்குமுறையாக முந்து மொழி ஒன்றை மீட்டுருவாக்கம் செய்தவர் ஆகஸ்ட் சிலீச்சர் என்பவர் ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டில் முந்து இந்திய-ஐரோப்பிய மொழியை மீட்டுருவாக்கம் செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்து_மொழி&oldid=3409624" இலிருந்து மீள்விக்கப்பட்டது