உள்ளடக்கத்துக்குச் செல்

புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்டிக் கடலில் சூலை 2005 இல் சுவீடனின் ஒலாந்து தீவில் உருவான இடிமழையுடன் தொடர்புடைய அடர் மேகம்

புயல் (Storm) என்பது ஒரு பருப்பொருளின் அமைதி குலைந்த நிலையை, குறிப்பாக அப்பொருளின் மேற்பரப்பு பாதிக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. அதிலும் வலிமையாக காற்றின் ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மின்னல், இடிமழை, பனிப்பொழிவு, கனமழை, ஆலங்கட்டிமழை, பனிப்புயல், பலமான மழைக்காற்று, கடும் உறைபனி, புழுதிப்புயல், மணற்புயல், வெப்பமண்டலச் சூறாவளி, அல்லது வளிமண்டலத்தின் ஊடாக பொருட்களை தூக்கி வீசுவது, இத்யாதி போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் மூலம் காற்று என்ற பருப்பொருளின் அமைதிக் குலைவு சுட்டிக்காட்டப்படுகிறது.

பாலைவனப் புயல் வேகமாக வீசும் காற்றுடன் வந்து விரைவாகக் கடந்து செல்லும்[1]

கனமழை, பனி, மின்னல், காட்டுத்தீ, வெள்ளம், சாலைகளை சிதைத்தல், சூறாவளிக் காற்று போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மூலமாக புயல்களால் உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் தீங்கு விளைவிக்க முடியும். குறிப்பிடத்தக்க மழை மற்றும் கால அளவைக் கொண்ட புயல்கள் அவை நகரும் இடங்களில் மழையை பொழிவித்து வறட்சியைப் போக்க உதவுகின்றன. பனிச்சறுக்கு விளையாட்டு, பனிப்போக்குவரத்து போன்ற தனிச்சிறப்பு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடைபெற கடுமையான பனிப்பொழிவு அனுமதிக்கிறது. இந்த கடும்பொழிவு இல்லையெனில் இந்த சிறப்பு அம்சங்கள் நிகழ சாத்தியமில்லை. Storm என்ற ஆங்கிலச் சொல் "சத்தம், கொந்தளிப்பு என்ற பொருளைக் குறிக்கும் sturmaz என்ற ஆதி செருமானிய சொல்லிலிருந்து வந்ததாகும் [2].

உயர் காற்றழுத்த அமைப்பு சூழ்ந்திருக்கும்போது குறைந்த அழுத்த மையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து புயல்கள் உருவாகின்றன. எதிரெதிர் சக்திகளின் இந்த கலவையானது காற்றை உருவாக்கி, திரள் கார்முகில் போன்ற புயல் மேகங்களை உருவாக்கும். வெப்பமான நிலத்திலிருந்து வீசுகின்ற சூடான காற்றிலிருந்து குறைந்த அழுத்தத்தின் குறிப்பிட்ட ஒரு சிறிய பகுதி உருவாகலாம். இதனால் பேய்க்காற்று, சூறாவளிச் சுழல்காற்று போன்ற சிறிய இடையூறுகள் ஏற்படுகின்றன.

வகைகள்

[தொகு]

பல்வேறு வகையான புயல்கள் பல்வேறு வகைப் பெயர்களுடன் அவ்வப்போது தோன்றுகின்றன.

பனிப்புயல்

[தொகு]
பாரம்பரிய கோடைகால புயல் , அர்கெந்தினா.
டைபூன் என்ற வெப்பமண்டல சூறாவளி. பிலிப்பீன்சு
டொர்னாடோ புயல் ஒக்லகோமா 1981 மே மாதம் .
கலிபோர்னியாவில் இடிமின்னலுடன் மழை

காலம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பனிப்புயலுக்கு மாறுபட்ட வரையறைகள் உள்ளன. பொதுவாக ஒரு பனிப்புயல் என்பது அதிக விசை கொண்ட கட்டுங்காற்றுடன் வீசும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு 5 சென்டிமீட்டர் அல்லது 2 அங்குலம் என்ற வீதத்தில் பனி திரண்டு குவியும். 10 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான கடுங்குளிர் நிலவும். பனிப்புயல் சிலசமயம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசுவதுண்டு. பனிப்புயலால் பெருஞ்சேதம் உண்டாகும். சமீபத்தில் அமெரிக்கா முழுவதும் வீசிய பனிப்புயலில் இந்த வெப்ப வரையறைகள் எல்லாம் விலகி மிகக்கடுமையான குளிர் நிலவியது[3].

வெடிப் புயல்

[தொகு]

மத்திய-அட்சரேகை குறைந்த காற்றழுத்தப் பகுதியில் குறிப்பாக பெருங்கடலில் விரைவாகத் தோன்றும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலத்தின் மீதும் ஏற்படலாம். இந்த புயல்களின் போது வீசும் காற்று சக்திவாய்ந்த டைபூன், அரிக்கேன் போன்ற சூறாவளிகள் போல இருக்கும்.

கரையோரப் புயல்

[தொகு]

கடலோரப் பகுதிகளைத் தாக்குகின்ற பெரிய மற்றும் இராட்சத அலைகளின் எழுச்சி இருக்கும். அவற்றின் தாக்கத்தால் கடலோரங்களில் அரிப்பு மற்றும் கடல் வெள்ளம் போன்ற ஆபத்துகள் இருக்கும் [4].

டெரெகோ

[தொகு]

டெரெகோ என்பது பரவலாகவும் நீண்ட நேரமாகவும் நேர்-கோட்டில் வீசக்கூடிய புயலாகும். இது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வேகமாக நகரும் இயல்புடனும் கடுமையான இடியுடனும் தொடர்புடையது ஆகும்.

பேய்ப்புழுதி

[தொகு]

குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் சிறிய காற்று மேல்பகுதியை நோக்கி அரைமீட்டர் முதல் சில மீட்டர்கள் வரை உயர்ந்து குறுகிய காலம் வீசும் பலமான காற்று பேய்ப்புழுதி எனப்படுகிறது.

புழுதிப்புயல்

[தொகு]

அதிக அளவு மணல் அல்லது மண்ணை வாரித் தூற்றும் அளவுக்கு வீசும் காற்று புழுதிப் புயல் எனப்படுகிறது . இச்சூழ்நிலையில் பார்வைத்திறனை வெகுவாக மறைக்கப்படும்.

நெருப்புப்புயல்

[தொகு]

நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளிகள் கொந்தளிப்புடன் காணப்படும். தங்களுக்கான வீசும் காற்றை அவையே உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்கின்றன. பொதுவாக நெருப்புப்புயல் என்பது ஓர் இயற்கை நிகழ்வாகும். காட்டுத்தீ போன்ற பெரும் தீயிலிருந்து இவை உருவாகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் தக்க இடங்களில் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும்.

கடுங்காற்று

[தொகு]

மணிக்கு 39–55 மைல் வேகத்தில் நீடித்த காற்றுடன் கூடிய ஒரு வெப்பமண்டல புயல் பொதுவாகக் கடுங்காற்று என அழைக்கப்படுகிறது[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DESERT CLIMATE, STORMS AND WEATHER". Archived from the original on 2013-10-04.
  2. "Storm". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
  3. University Corporation for Atmospheric Research. Winter Storms. Retrieved on 2006-11-26.
  4. Harley, Mitchell (March 24, 2017). "Chapter 1: Coastal Storm Definition". In Ciavola, Paolo; Coco, Giovanni (eds.). Coastal Storms: Processes and Impacts. John Wiley & Sons. pp. 1–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-93710-5.
  5. Ocean Prediction Center. Terminology and Weather Symbols. பரணிடப்பட்டது 2017-03-16 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 2006-11-26.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்&oldid=3764752" இலிருந்து மீள்விக்கப்பட்டது