உள்ளடக்கத்துக்குச் செல்

துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இடம் துலுஸ், மொன்ட்டோபான், பிரான்சு
இலக்கு(கள்) பிரான்சிய இராணுவம், யூத சிறார்கள்
நாள் 11 மார்ச்சு 2012 (2012-03-11)
22 மார்ச்சு 2012 (2012-03-22)
தாக்குதல் வகை பாடசாலைத் துப்பாக்கிச் சூடு, திடீர் தாக்குதல்
இறப்புகள் 8 (தாக்குதல் நடத்தியவர் உட்பட)
காயமடைந்தோர் 5
கோரப்பட்ட நோக்கம் இசுலாமிய பயங்கரவாதம்,தீவிர இசுலாமிய நம்பிக்கைகள், ஆப்கானிஸ்தான் போருக்கு எதிரான கொள்கை, யூத எதிர்ப்புக் கொள்கை

துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் என்பது 2012 மார்ச் 11 முதல் 19 வரை பிரான்சின் துலுஸ் மற்றும் மொன்ட்டோபான் ஆகிய நகரங்களில் தனி ஒரு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஆகும். இத்துப்பாக்கிச்சூடுகள் முதலில் பிரான்சிய இராணுவ வீரர்களின் மீதும் அதன்பின் துலுஸ் நகரத்தில் உள்ள யூத பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் மீதும் மொகம்மது மெரா என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.[1][2][3] இச்சம்பவங்களிில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த நான்கு பேருடன் சேர்த்து மொத்தமாக ஐவர் காயமடைந்திருந்திருந்தனர்.

முதல் துப்பாக்கிச் சூடு மார்ச் 11 அன்று துலுஸ் நகரில் இராணுவ வான்குடைப் பதாதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ் வான்குடைப் பதாதி உயிரிழந்தார். மார்ச் 15 அன்று மொண்ட்டோபானிலுள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் தாக்குதலில் சீருடையிலிருந்த பிரான்சிய இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்தார். உயிரிழந்த மூன்று இராணுவ வீரர்களும் துப்பாக்கிதாரி மொகம்மது மெராவைப் போல வட ஆப்பிரிக்கப் பின்புலம் கொண்ட பிரான்சிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[4] மார்ச் 19 துலுஸ் நகரில் நடந்த மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் ஓசர் ஹத்தோரா யூத பாடசாலையைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்; நால்வர் காயமடைந்தனர்.[5][6]

இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களையடுத்து பிரான்சின் துலுஸ், மொண்ட்டோபான் நகரங்களை உள்ளடக்கிய மிடி பிரெனி நிர்வாக மண்டலம் மற்றும் அதை அண்டிய நிர்வாக பிரிவுகளில் அதி உச்ச பயஙகரவாத எச்சரிக்கை அமைப்பு முறை செயற்படுத்தப்பட்டது.[7] இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை,[8] உட்பட பல உலக நாடுகளும்,[9] பிரான்ஸ் இஸ்லாமிய நம்பிக்கைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்தன.[10]

இத்தாக்குதல்களை நடத்தியவர் அல்ஜீரிய குடும்ப பின்னணியைக் கொண்டவரும் துலுஸ் நகரில் பிறந்து வளர்ந்தவருமான[11] மொகம்மது மெரா (23 வயது[12]) எனக் காவல்துறை அடையாளம் கண்டது. இவர் பல சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் காவல்துறை தெரிவித்தது. இவரைப் பிடிக்க இவர் வாழும் வாடகைக் குடியிருப்பை காவல்துறை முற்றுகையிட்டது. 30 மணித்தியாலங்கள் நீடித்த இம்முற்றுகையின் இறுதியில் மொகம்மது மெரா பயங்கரவாதத்துக்கெதிரான விசேட காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இந்நிகழ்வில் ஆறு காவலதிகாரிகளும் காயமடைந்தனர்.[13][14][15] ஆப்கானிஸ்தானில் அல் காயிதா அமைப்புக்கெதிராக பிரான்சிய இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளைக் காரணம் காட்டியே மெரா இராணுவ வீரர்களைச் சுட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும் சிறார்களைக் கொன்றது யூத எதிர்ப்புக் கொள்கையினால்தான்[16] என முற்றுகையின் போது மெரா ஒப்புக் கொண்டார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில் பாலஸ்த்தீனத்தில் இருக்கும் என் சகோதர, சகோதரிகளை யூதர்கள் கொல்வதால் நான் யூத சிறுவர்களைக் கொன்றேன் எனவும் கூறியிருந்தார்.[17][18][19]

ஆயுததாரியின் பின்னணி

[தொகு]

மெராவின் சகோதரர்களில் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி மெராவும் அவரது சகோதரர்களும் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத, இனவாதச் சூழலில் வளர்ந்தனர். மெராவின் தந்தை மெராவின் சிறுவயதிலே குடும்பத்தை விட்டு நீங்கினார். தந்தை இல்லாத குடும்பத்தை மெராவின் தாயார் தலைமையேற்றார். அவர்கள் துலுஸ் நகரின் ஏழ்மையான பகுதியில் வசித்து வந்தனர்.[20] மெரா சிறு குற்றங்களுக்காகச் சிறைவாசம் அனுபவித்த பின் சலாபியத்துக்கு மாறியிருக்கலாம் என பிரான்சிய குற்றப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். அத்தோடு மெராவின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் விஜயம் அவரின் போக்கை மாற்றியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.[21][22]

மெரா பிரான்சிய இராணுவத்தில் சேர முயற்சிகள் மேற்கொண்டார். எனினும் அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததால் இராணுவத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டது.[23] அல்காயிதா அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் மெராவின் குடும்பம் தொடர்புபட்டிருந்ததாகச் சிலத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.[24] மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கு மெராவின் உளவியல் சீர்கேடும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.[25]

மெரா தன்னைக் கடவுள் வழியில் போராடும் அல்காயிதா[25] அங்கத்தவன் எனக் கூறினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் பிரான்சிய காவல்துறை அதிகாரிகள் அக்கூற்றை நிராகரித்தார்கள்.[26][27]

ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி இத்தாக்குதலை தனிமையான தாக்குதல் என விவரித்தார்.[28] காவல்துறை புலனாய்வில் மெரா 20 நாடுகளைச் சேர்ந்த 180 தொலைபேசி எண்களுக்கு 1,800 அழைப்புகளை மேற்கொண்டது தெரிய வந்தது. மேலும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்ற மெரா அங்கு சிலரைச் சந்தித்து தனது தாக்குதல்களுக்கான திட்டங்களை தீட்டியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.[29]

தாக்குதல்கள்

[தொகு]

காவல்துறையினர் இத்தாக்குதல்களை நடத்தியவர் மெரா என்பதையும் தாக்குதலுக்கு 45 பிஸ்டல் ரகத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.[30] இச்சம்பவங்களை நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி மூன்று சம்பவங்களிலும் ஆயுததாரி தலைக்கவசமணிந்து உந்துருளியில் வந்து தாக்குதல் நடத்திச் சென்றார் எனத் தெரியவருகிறது.[31]

மார்ச் 11: துலுஸ் வான்குடைப் பதாதி

[தொகு]

மார்ச் 11 அன்று துலுஸ் நகருக்கு வெளியில் பிரான்சிய வான்குடை படையணி உயரதிகாரியான 30 வயதுடைய இமாட் இப்னு சையடன் தலையில் சுடப்பட்டார். உந்துருளி ஒன்றை இமாட்டிடமிருந்து கொள்வனவு செய்ய ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதையடுத்து அவரை சந்திப்பதற்காக காத்திருந்த நேரமே இமாட் இவ்வாறு சுடப்பட்டார். காவல்துறை மெராவே இச்சந்திப்பை ஒழுங்கு செய்தார் எனச் சந்தேகிக்கிறது. தாக்குதல் நடத்தியவர் தலைக்கவசமணிந்து உந்துருளியில் வந்தார் எனத் தெரியவந்தது.

இப்னு சையடன் குடும்பத்தார் அவரின் உடலை தங்கள் பூர்வீக ஊரான மொரோக்கோவிலுள்ள மெடிக்கில் புதைத்தனர்.[32]

மார்ச் 15: மொன்ட்டோபானில் மூன்று வான்குடைப் பதாதிகள்

[தொகு]

மார்ச் 15 வியாழக்கிழமை அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் துலுஸ் நகருக்கு வடக்கே 50 கிலோமீட்டர்கள் தொலைவிலிள்ள மொன்ட்டோபான் நகரத்திலுருக்கும் வணிக வளாகத்தினருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு படைவீரர்கள் இறந்ததுடன் ஒருவர் படு மோசமாகக் காயமடைந்தார். வணிக வளாகத்தினருகிலுருந்த தன்னியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த போதே படைவீரர்கள் மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. மூன்று படைவீரர்களும் 17வது வான்குடைப் பொறியியல் படையணியைச் சேர்ந்தவர்கள். அத்தோடு அவர்களின் முகாம் நகருக்கு அண்மையிலேயே இருந்தது. இத்தாக்குதலில் 24 வயதுடைய கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட வான்குடைப்படை அதிகாரி அபெல் ஷெனூ மற்றும் 23 வயதுடைய வட ஆபிரிக்க இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட வான்குடைப்பதாதி மொகம்மது பரா ஆகியோர் கொல்லப்பட்டனர்.[33][34] மற்றொரு வான்குடைப்படை அதிகாரியான 28 வயதுடைய லொய்க் லிபர் படுகாயமடைந்து ஆழ்மயக்க நிலையை அடைந்தார். கண்காணிப்பு சலனப் பட கருவியில் கருப்புத் தலைக்கவசம் அணிந்து உந்துருளியில் கொலையாளி வருவதும் படைவீரர்களைக் குறிவைக்கையில் தன்னியக்க வங்கி இயந்திரத்தில் பணமெடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியைத் தள்ளி விடுவதும் பதிவாகியது.[35][36]

மார்ச் 19: துலுஸ் ஓசர் அத்தோரா பாடசாலை

[தொகு]
பாடசாலை மற்றும் மெராவின் வதிவிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியைக் காட்டும் வரைபடம்.

துலுஸ் நகரிலுள்ள ஓசர் அத்தோரா பாடசாலை, பிரான்ஸ் நாட்டிலிருக்கும் ஏறத்தாழ 20 யூத பாடசாலைகளில் ஒன்றாகும். இப்பாடசாலைகளில் எசுப்பானிய, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்சிய யூத மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இப்பாடசாலை ஒரு உயர்நிலைப் பாடசாலை ஆகையால் இதில் 11 வயது முதல் 17 வயது வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஏனைய பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இப்பாடசாலை செய்து கொடுப்பதால் இது ஒரு ஒன்று கூடல் இடமாகவும் செயற்படுகிறது. அனேகமான பெற்றோர் ஏனைய பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப இப்பாடசாலையில் ஒன்று கூடுவார்கள்.

மார்ச் 19 அன்று எட்டு மணியளவில் ஒசர் அத்தோரா பாடசாலைக்கு யமஹா டிமெக்ஸ் ரக உந்துருளியில் வந்த கொலையாளி வாகனத்திலிருந்து இறங்கி பாடசலை முன் வளாகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். முதலில் பலியானவர் அப்பாடசாலையைச் சேர்ந்த ஒரு யூத ஆசிரியர் ஆவார். யூத மதகுருவாகவுமிருந்த இவ்வாசிரியர் துப்பாக்கிச்சூட்டிலிருந்து தனது இரு மகன்களைக் காக்கும் முயற்சியின் போதே பாடசாலை வாயிலின் அருகில் வைத்து சுடப்பட்டு இறந்தார். அதன்பின் அவ்வாசிரியரின் இரு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு பாடசாலை வளாகத்தினுள் நுழைந்த கொலையாளி தப்பிப்பதற்காக பாடசாலை கட்டிடத்தை நோக்கி ஓடிய ஆட்களைத் துரத்தினார்.

கட்டிடத்தினுள் நுழைந்த கொலையாளி அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், ஊழியர் ஆகியோரை நோக்கிச் சுட்டார். தப்பியோடிய ஒரு சிறுமியைத் துரத்தி அச்சிறுமியின் கூந்தலைப் பற்றியிழுத்து துப்பாக்கியால் சுட முயன்றார். எனினும் துப்பாக்கி பழுதடையவே வேறொரு துப்பாக்கியை எடுத்து சிறுமியின் தலை ஓரத்தில் சுட்டார்.[37][38] பின்னர் கொலையாளி தனது உந்துருளியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

இத்துப்பாக்கிச் சூட்டின் பின் அரசாங்கம் மிடி பிரெனி நிர்வாக பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத எச்சரிக்கை அமைப்பு முறை அதி உச்ச நிலைக்கு உயர்த்தப்பட்டது. சனாதிபதி தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நிகோலா சர்கோசி உடனடியாக அவற்றை நிறுத்தி விட்டு துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பாடசாலைக்கு சென்றார். மறுநாள் அனைத்து பாடசாலைகளிலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு சர்கோசி அழைப்பு விடுத்தார்.[39]

தாக்குதல்களின் போது பயன்படுத்திய யமஹா டீமெக்ஸ் வாகனம்.

மார்ச் 23 அன்று சனாதிபதி சர்கோசியின் ஆலோசகர் ஆஞ்ச் மன்சினி இத்தாக்குதலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மெரா மேலுமொரு இராணுவ வீரரைக் கொல்லும் பொருட்டே அங்கு வந்தார் எனினும் அந்நேரத்தில் அது முடியாமல் போகவே அருகிலிருந்த யூத பாடசாலையைத் தாக்கினார் என்றார்.[40]

பலியானவர்கள்

[தொகு]

நான்கு பேர் இப்பாடசாலைத் தாக்குதலில் இறந்தார்கள். 30 வயது யூத ஆசிரியர் யோனத்தன் சான்ட்லர், அவரின் முதல் இரு மகன்களான ஆறு வயது ஆயே மற்றும் மூன்று வயது கேப்ரியேல்,மற்றும் தலைமை ஆசிரியரின் எட்டு வயது மகள் மிரியம் மொன்சொனெகோ ஆகியோரே கொல்லப்பட்டவர்கள்.[41] இவர்களுடன் 17 வயதான பிரையன் எனும் சிறுவன்[42] துப்பாக்கிச் சூடு பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார்.[43] இச்சம்பவம் பிரான்சில் நிகழ்ந்த பாடசாலைத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மிக மோசமான சம்பவமாகப் பதிவாகியது.[44]

கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களும் மார்ச் 20 அன்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் இசுரேல் கொண்டு செல்லப்பட்டு அங்கு யெருசலேமில் ஹார் ஹமனியுகாட் மயானத்தில் புதைக்கப்பட்டது. இறந்த யூத ஆசிரியர் உட்பட அவரின் குடும்ப அங்கத்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இசுரேல் ஆகிய நாடுகளின் குடியுரிமையைக் கொண்டிருந்தனர்.

மார்ச் 19-மார்ச் 22: மனித வேட்டை

[தொகு]
பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதி.

காவல்துறையினர் பிரான்ஸ் வரலாற்றின் மிகப் பெரிய மனித வேட்டைகளில் ஒன்றை முன்னெடுத்தனர். துலுஸ் நகரில் பாதைத்தடுப்பை அமைத்ததோடு மட்டுமல்லாமல் காவல்துறையினர் யூத மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கினர். இதற்கு காரணம் கொல்லப்பட்டவர்களின் இன அடையாளங்கள் யூத, வட ஆபிரிக்க கறுப்பினத்தவராக இருந்தமையால் இது நாசிசவாதிகளின் வேலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது. சிறு குற்றங்களுக்காகவே கைது செய்யப்பட்டிருந்தமையால் மெரா காவல்துறையினரின் கவனத்தை ஆரம்பத்தில் ஈர்க்கவில்லை. தனது கைவிரல் அடையாளத்தை வைத்து தன்னைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக துப்பாக்கிச் சூடுகளுக்குப் பின் வெடித்த தோட்டா உறைகளை மெரா அப்புறப்படுத்தியிருந்தார்.

வான்குடைப் படையணி அதிகாரியான இப்னு சையடெனின் உந்துருளி கொள்வனவாளரைத் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர். அத்தேடுதல் மெராவின் கணினிக்கு இட்டுச் சென்றது. தீவிர ஆராய்ச்சியின் பின் அக்கணினியின் இணைய நெறிமுறை முகவரி துலுசில் வசிக்கும் ஒரு பெண்ணினுடையது எனக் கண்டறியப்பட்டது. அப்பெண்ணின் இரு மகன்களும் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் கவனிப்புப் பட்டியலில் இருந்தனர். மெரா ஒரு உந்துருளி இயந்திர வல்லுனரிடம் பாதுகாப்புக்காக வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள புவியிடங்காட்டி அமைப்பை நீக்குவது எவ்வாறு என்பது பற்றி கேட்டிருந்தார். சந்தேகப்பட்ட வாகன வல்லுனர் மெராவின் நடவடிக்கைகளைப் பற்றி காவல்துறையினருக்கு செய்தி வழங்கினார்.

மார்ச் 22: முற்றுகையும் கொலையாளியின் இறப்பும்

[தொகு]

காவல்துறை மெராவின் குடியுருப்பை முற்றுகையிடுவதற்கு முன் மெரா பிரான்சிய தொலைக்காட்சி அலைவரிசையான பிரான்ஸ் 24க்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டார். மறுமுனையில் அழைப்பை ஏற்ற அத்தொலைக்காட்சி அலைவரிசை தொகுப்பாளரிடமிருந்து பெற்ற அறிக்கையின் படி தொலைக்காட்சி அலைவரிசையோடு தொடர்பு கொண்ட மெரா தனது செய்கை இஸ்லாமின் மேன்மையை உயர்த்தும் என்று குறிப்பிட்டதோடு தான் அல்காயிதா அமைப்புடன் தொடர்பிலிருப்பதாகவும் பிரான்சின் முகத்திரை தடை மற்றும் ஆப்கானிஸ்தானில் பிரான்சிய படை நடவடிக்கை ஆகியவற்றை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை மூன்று மணிக்கு பிரான்சிய காவதுறையினர் சார்ஜன் வாங்னே தெருவிலிருந்த மெராவின் குடியிருப்பு பகுதிக்கு மெராவைக் கைது செய்யும் நோக்குடன் விரைந்தார்கள். காவல்துறையினரின் வருகையை கண்ட மெரா குடியிருப்பின் வாசல் வழியாக காவைதுறையினரை நோக்கி துப்பாகியால் சுட்டதில் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்.

அதன் பின் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு படையணி 1960 களில் கட்டப்பட்ட அவ்வடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி வளைத்தது. மெரா ஏகே-47, ஸ்டென், வின்செஸ்டர், கோல்ட்.45, கோல்ட் பைத்தன், ஊசி, குளோக் போன்ற துப்பாக்கி வகைகளை வைத்திருப்பதை காவல்துறை கண்டுபிடித்தது. மேலும் ஆயுதங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெனோல்ட் வகை மகிழுந்தில் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகள் அவ்வடுக்குமாடிக் குடியிருப்பிலும் அதனைச் சூழவுள்ள கட்டிடங்களிலுமிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி காவல்துறையின் நடவடிக்கைகளை மெராவால் பார்க்க முடியாத வண்ணம் சக்திவாய்ந்த செறிகற்றை விளக்கொளியை மெராவின் கட்டிடத்தை நோக்கிப் பாய்ச்சினர். அத்தோடு அப்பகுதியில் மினசாரமும் துண்டிக்கப்பட்டது.

பின்பு காவலதிகாரிகள் மெராவிடம் நடைபேசி ஒன்றைக் கொடுத்தார்கள். அதன் மூலம் மெரா தன் தாக்குதல்களைப் படம்பிடிக்க பயன்படுத்திய படக்கரு இருக்குமிடத்தைக் கூறினார். மெராவின் சகோதரனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அச்சகோதரனின் மகிழுந்தில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் காவலர்கள் கண்டுபிடித்தனர். மெராவுடனான பேச்சுவார்த்தைக்கு உதவும் முகமாக மெராவின் தாயார் அங்கு கொண்டுவரப்பட்டார். எனினும் அவர் மெராவுடன் கதைக்க விரும்பவில்லை.

மாலை 10.45 மணியளிவில் தான் சரணடவதாகத் தெரிவித்த மெரா மேலும் சண்டையிடாமல் தான் சரணடைய மாட்டேன் எனவும் காவல்துறையினருக்குத் தெரிவித்தார். மார்ச் 21 அன்று குடியிருப்புப் பகுதியில் வெடிச் சத்தங்கள் கேட்டது. மெராவை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக காவல்துறை இதனை மேற்கொண்டது. இரண்டு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் காவலதிகாரிகள் கைக்குண்டு ஒன்றை வீசி மெராவின் குடியிருப்பு ஜன்னலை தகர்த்தார்கள். எனினும் மெராவிடமிருந்து எவ்விதமான பதில் தாக்குதலும் மறுநாள் காலை 11 மணிவரை வரவில்லை. மெரா உயிருடன் உள்ளாரா இல்லையா என காவல்துறையினரால் அறிய முடியாததால் சீரான இடைவேளையில் காவலர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர்.

மெரா வாழ்ந்த குடியிருப்பின் முகப்பு பகுதி.

மார்ச் 22 காலை 10.30 மணிக்கு காவல்துறையினர் மெராவைக் கைது செயவதென முடிவெடுத்தார்கள். கைக்குண்டு ஒன்றை கட்டிடத்தினுள் காவலர் வீசினர். எனினும் எவ்வித பதிலுமில்லை. 15 பேர் கொண்ட விசேட படை ஒன்றைக் குடியிருப்பின் உள்ளே அனுப்பி சோதனை செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் வாசல் மற்றும் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த விசேட படை நவீன கருவிகள் மற்றும் படப்பிடிப்பு கருவிகளைக் கொண்டு குடியிருப்பு வீட்டை சோதனை செய்தது. குளியலறை வரை எவ்வித அசைவும் அவ்வீட்டினுள் தென்படவில்லை. குளியலறையினுள் கருவிகளைக் கொண்டு செல்லும் முன் அதனுள்ளிருந்து வெளிப்பட்ட மெரா தொடர்ச்சியான துப்பாக்கித் தாக்குதலை படையினரை நோக்கி மேற்கொண்டார். பதில் தாக்குதல் தொடுத்தவிசேட படையினரை சமாளிக்க முடியாமல் மெரா ஜன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே பாய்ந்தார். அப்போது குறிசுடுனர் மேற்கொண்ட தாக்குதலில் மெரா தலையில் குண்டு பாய்ந்து இறந்து தரையில் வீழ்ந்தார்.

இச்சம்பவம் நடந்து ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் மெராவின் இறப்பை துலுசிலிருந்த ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சனாதிபதி நிக்கொலா சர்கோசியும் மெரா இறந்ததை உறுதிபடுத்தினார்.

காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் தான் மேலும் தாக்குதல்கள் பல நடத்தவிருப்பதாகவும் தனக்கு அல்காயிதா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் மெரா கூறியிருந்தார். எனினும் காவலதிகாரிகளுக்கு இக்கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கொலையாளி

[தொகு]
மொஹம்மட் மெரா
பிறப்பு(1988-10-10)10 அக்டோபர் 1988
துலுஸ், பிரான்சு
இறப்பு22 மார்ச்சு 2012(2012-03-22) (அகவை 23)
துலுஸ், பிரான்சு
குடியுரிமைபிரான்சியம்
பணிஇயந்திர வல்லுனர்
அமைப்பு(கள்)அல்காயிதா (உறுதிபடுத்தப்படவில்லை)
பெற்றோர்சுலிகா அசிரி (தாய்) மொஹம்மட் பெனலெல் மெரா (தந்தை)

மொகம்மது மெரா (10 அக்டோபர் 988 - 22 மார்ச் 2012) அல்ஜீரிய பூர்வீகம் கொண்ட பிரான்சிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

மெராவின் ஐந்து வயதில் அவரின் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். இரு சகோதரர் மற்றும் சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தை மெராவின் தாயார் தனியாகப் பொறுப்பேற்றார். அவர்கள் துலுஸ் நகரின் ஏழ்மையான பகுதியில் வசித்து வந்தனர். சிறுவயது முதலே வன்முறை மிகுந்தவராக மெரா வளர்ந்தார்.

மெரா வழிப்பறி போன்ற திருட்டுக் குற்றங்களுக்காக குறிப்பிடத்தகுந்த தடவைகள் சிறைக்குச் சென்றுள்ளர். 2005ம் ஆண்டு முதல் தடவையாகக் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செண்றார். அதன்பின் 2009 இலும் சிறுகுற்றங்களுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார். அவரின் நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி மெரா ஒருபோதும் பள்ளிவாசலுக்குச் செல்வதில்லை. மேலும் இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு அடிக்கடி பயணம் செய்வதால் பிரான்சிய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

டிசம்பர் 25 2008 அன்று மெரா தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதைப் பற்றி உளவியலாளர் ஒருவர் குறிப்பிடும் போது மெராவின் உளநிலை சீராகவே உள்ளது எனினும் சில நிகழ்வுகளால் அவர் மனம் சிறிது சலனத்திற்கு உள்ளாகியதெனத் தெரிவித்தார்.

காணொளிப்பதிவு

[தொகு]

மெரா தான் மேற்கொண்ட அனைத்து கொலைகளையும் படம் பிடித்தார். படம் பிடித்த காணொளிகளை குரான் வசனங்கள் மற்றும் பின்னணி இசையோடு தொகுத்து வைத்திருந்தார். அக்காணொளிகளை அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு மெரா அனுப்பியிருந்தார். எனினும் பிரான்சிய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அல்ஜசீரா நிறுவனம் அக்காணொளிகளை ஒளிபரப்பாமல் விட்டது. ஒரு காணொளியில் மெரா இரண்டு இஸ்லாமிய படைவீரர்களைச் சுடுவதும் அல்லாஹு அக்பர் எனக் கத்துவதும் பதிவாகியிருந்தது.

சவ அடக்கம்

[தொகு]

மெராவின் மூத்த சகோதரரின் கூற்றுப்படி வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மெராவின் உடலைப் பார்வையிட உள்ளூர் இசுலாமிய அங்கத்தவர்கள் வந்திருந்ததோடு அவரின் செய்கைகளைப் பாராட்டிப் பேசியிருந்தார்கள். அவர்களின் ஒரே வருத்தம் மெரா மேலும் அதிகமான யூதர்களைக் கொல்லாமல் விட்டதே எனவும் அவர் குறிப்பிட்டார். மார்ச் 29 2012 அன்று மெராவின் உடல் துலுஸ் நகரின் அருகிலிருந்த இசுலாமிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவ்விறுதிச் சடங்கில் இசுலாமிய மதபோதகர் உட்பட 50 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வினைகள்

[தொகு]

ஐக்கிய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்தன. அவற்றோடு பிரான்ஸ் இஸ்லாமிய நம்பிக்கைகள் அமைப்பும் இத்தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது.

உசாத்துணைகள்

[தொகு]


  1. பிரான்சில் துப்பாக்கிச் சூடு பீ.பீ.சி. இணையதளம் 22 மார்ச் 2012
  2. https://www.bbc.com/news/world-us-canada-17426313 19 மார்ச் 2012
  3. துலுஸ் துப்பாக்கிச்சூடு ஆங்கிலிக் கிரிசாபி, 19 மார்ச் 2012
  4. துலுஸ் துப்பாக்கிச்சூடு: தெரிந்த தகவலகள் பி.பி.சி செய்திகள் 22 மார்ச் 2012
  5. பிரான்சிய இசுலாமிய இராணுவ வீரர்களைக் கொன்றதன் மூலம் மெரா தன் இரட்டையரைக் கொன்றார். ஒலிவர் ரோய், லு மொன்டே செய்திகள், 26 மார்ச் 2012
  6. https://www.lemonde.fr/societe/article/2012/03/19/fusillade-devant-une-ecole-juive-a-toulouse_1671827_3224.html லு மொன்டே செய்திகள், 19 மார்ச் 2012
  7. பிரான்சின் யூத பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் பலி ஹாரெட்ஸ் இணையதளம், 19 மார்ச் 2012.
  8. பிரான்சில் அதியுச்ச பயங்கரவாத எச்சரிக்கை நடவடிக்கை சி.பி.எஸ் செய்திகள், 19 மார்ச் 2012.
  9. அல் அராபியா இணையதளம் 20 மார்ச் 2012
  10. துலுஸ் துப்பாக்கிச்சூடு: யூதர்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் கடும் கண்டனம் த டெலகிராப், 19 மார்ச் 2012.
  11. மெராவின் உடலை ஏற்க அல்ஜீரியர்கள் மறுப்பு; உடல் துலுசில் புதைக்கப்படும், ஸின்போஸ்974 இணையதளம், 29 மார்ச் 2012.
  12. அல் அராபியா இணையதளம், 21 மார்ச் 2012.
  13. பயங்கரவாதத்தின் புதிய முகம் மொகம்மது மெரா ஆசிரியர் எட்வர்ட் கோடி, த வாஷிங்டன் போஸ்ட் இணையதளம், 22 மார்ச் 2012.
  14. த ஒஸ்ட்ரேலியன் இணையதளம்
  15. தாக்குதல்களைத் தடுக்க முடியாத அதிகாரிகள் ஆசிரியர் கிறிஸ்ட்டோப் சிடோ, ஸ்பீகல் ஒன்லைன் இணையதளம், 21 மார்ச் 2012.
  16. இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் மீதான பிரான்சிய காவல் துறையின் நடவடிக்கை ஆசிரியர் காரென் கிசின், த சிட்னி மோர்னிங் ஹெரால்ட், 31 மார்ச் 2012.
  17. https://www.jpost.com/International/?id=272546 த ஜெருசலேம் போஸ்ட் இணையதளம்
  18. துலுஸ் சம்பவ படிப்பினைகள் ஆசிரியர் ஜோர்ஜ் கிரான்ட், த டெலகிராப், 22 மார்ச் 2012.
  19. ஸ்கை நியூஸ் இணையதளம், 22 மார்ச் 2012
  20. இண்போசோசீத் இணையதளம்
  21. எனது சகோதரனை என் குடும்பம் எவ்வாறு பயங்கரவாதியாக மாற்றியதுl இண்டிபென்டன்ட் இணையதளம், 12 நவம்பர் 2012.
  22. துலுஸ் துப்பாக்கிச்சூடு: பிரான்சிய பயங்கரவாதியின் உருவாக்கம் ஹாரியட் அலெக்சான்டர், த டெலகிராப், 24 மார்ச் 2012
  23. துலுஸ் துப்பாக்கிச்சூடு: கொலைக்கான ஆயத்தப்படுத்தல்கள் ரிச்சர்ட் கல்பின், பி.பி.சி இணையதளம், 22 மார்ச் 2012.
  24. மொஹம்மட் மெரா: இராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட அமைதியான அயலவர் பீட்டர் பூமன்ட், த கார்டியன், 21 மார்ச் 2012.
  25. 25.0 25.1 மொஹம்மட் மெரா பயங்கரவாதியாக மாறியது எவ்வாறு? போல் குருக்‌ஷாங்க் மற்றும் டிம் லிஸ்டர், சி.என்.என் இணையதளம், 26 மார்ச் 2012.
  26. பிரான்சிய பாடசாலைத் துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபர் சரணடைவார். நஷனல் போஸ்ட், 21 மார்ச் 2012
  27. அல் காயிதா அமைப்புக்கும் துப்பாக்கிதாரிக்குமிடையே எவ்விதத் தொடர்புமில்லையென அதிகாரிகள் தெரிவிப்பு பாக்ஸ் நியூஸ் இணையதளம், 23 மார்ச் 2012.
  28. துலுஸ் கொலையாளியின் குழப்பமான நடவடிக்கைகள் டேன் பில்ப்ஸ்கி, த நியூயோர்க் டைம்ஸ் இணையதளம், 29 மார்ச் 2012.
  29. ஹப் போஸ்ட் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இவ்விணையதளப் பக்கம் செயற்படவில்லை.
  30. பிரான்சின் யூத பாடசாலைத் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி அன்ரியா ரொத்மன் webcitation.org இணையதளம் , மார்ச் 19 2012
  31. த குலோப்[ அன்ட் மெயில் இணையதளத்திலிருந்து பெறப்பட்டது. இப்பக்கம் தற்போது செயற்படவில்லை.
  32. ஏ.பீ.சி இணையதளத்திலிருந்து தகவல் பெறப்பட்டது. எனினும் இவ்விணையப்பக்கம் தொழிற்படவில்லை.
  33. பிரான்சிய ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் பலியான வான்குடைப் பதாதியின் உடல் மொரொக்கோவில் அடக்கம்[தொடர்பிழந்த இணைப்பு] மிடில் ஈஸ்ட் ஒன்லைன் இணையதளம், மார்ச் 26 2012.
  34. காவல்துறையினர் கொலையாளியின் குடியிருப்பைச் சுற்றி முற்றுகை கொலின் ரண்டால் த நஷனல் இணையதளம் மார்ச் 22 2012.
  35. https://www.aljazeera.com/indepth/features/2012/04/201244102955800772.html யாஸ்மின் ரையன், அல்ஜசீரா இணையதளம், ஏப்ரல் 6 2012
  36. மொன்ட்டோபானில் இரு வான்குடைப்பதாதிகள் கொலை (பிரான்சிய மொழி) ஜான் வில்பிரெட் போர்கே, லெஃபிகரோ இணையதளம், மார்ச் 16 2012.
  37. துலுஸ் மொன்ட்டோபான்: ஒரு ஆயுதம், மூன்று கொலைகள் லாதிபெஷ் (பிரான்சிய மொழி), மார்ச் 17 2012.
  38. துலுஸ் துப்பாக்கிச் சூடு: மனதை அதிர வைக்கும் தகவல்கள் பியோனா கோவான், த டெலகிராப் இணையதளம், மார்ச் 20 2012.
  39. தென் பிரான்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி ஸ்கொட் சையர், த நியூயார்க் டைம்ஸ் இணையதளம், மார்ச் 19 2012.
  40. துலுஸ் துப்பாக்கிச்சூடு: பிரான்சிய பாடசாலைகளில் ஒரு நிமிட மௌன அஞ்சலி லு மோன்டே இணையதளம், மார்ச் 19 2012.
  41. த குளோப் அன்ட் மெயில் இணையதளத்திலிருந்து பெற்று ஆங்கில விக்கிப்பீடிய கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் தொழிற்படவில்லை.
  42. துலுஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல் இசுரேலில் அடக்கம். இசபெல் காஷ்னர், த நியூயோர்க் டைம்ஸ், மார்ச் 21 2012.
  43. துலுஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரைக் காப்பாற்ற முயற்சித்த பிரான்சிய இளைஞன் மருத்துவமனையில் ஹிலரி சக்கென், த டைம்ஸ் ஒப் இசுரேல், மார்ச் 22 2012.
  44. துலுஸ் கொலைகள்: காயமடைந்த மாணவனின் உடல்நிலை முன்னேற்றம் (பிரான்சிய மொழி) எல் இணையதளம்