உள்ளடக்கத்துக்குச் செல்

துயில் நடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்கும். தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க வல்ல தூக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக இருக்கலாம், சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில் நடை புரிவோரும் உண்டு. துயில் நடை புரிவோருக்குத் தாம் தூக்கத்தில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் சுய அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும் வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 செக்கன்களில் இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம்.

விளக்கம்

[தொகு]

தூக்கத்தின் படிநிலைகள்

[தொகு]

தூக்கமானது இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது: ரெம் (REM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்க உறக்கம், என்ரெம் (NREM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்கமற்ற உறக்கம். என்ரெம் தூக்கம் மேலும் மூன்று (முன்னர் நான்கு) நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நிலை 1 (இலகு உறக்க நிலை), நிலை 2 (கூட்டு உறக்க நிலை), நிலை 3 (மந்த அலை உறக்க நிலை). ஒருவரது உறக்கத்தில் இந்த நிலைகள் ஒரு சுழற்சியாக வந்துபோகும். நிலை 1 -> நிலை 2 -> நிலை 3 -> நிலை 2 -> ரெம் தூக்கம். ஓர் உறக்க சுழற்சி வட்டம் 1.5 மணிநேரம் நீடிக்கும். துயில் நடை பொதுவாக முன்னிரவில் (11.00 – 1.00) மந்த அலை உறக்க நிலையின் போது நிகழலாம். மூளை அலைகளில் ஒன்றான டெல்டா அலையின் செயற்பாடு மந்த அலை உறக்க நிலையின் போது அதிகமாகக் காணப்படுகின்றது. தூக்க நடையானது இரவில் ஒரு தடவை மட்டுமே நிகழும்.

காரணம்

[தொகு]

சிறுவர் பருவத்தில் துயில் நடை தோன்றலுக்குக் காரணம் பூப்பெய்தலில் உள்ள தாமதம் என சில திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பதினேழு வரையிலான துயில் நடை புரிவோரில் டெல்டா அலை உயர்ந்த அழுத்தத்தில் (high voltage) காணப்படுகிறது. மைய நரம்புத் தொகுதியின் விருத்தியின்மையும் இதற்குக் காரணமாக அமைகின்றது. துயில் நடை குடும்பக்களுக்குள் பரவலாகக் காணப்படும். பெற்றோரில் ஒருவருக்கு துயில் நடை காணப்பட்டால் சிறுவர் பருவத்தில் தோன்றுவது 45% ஆல் அதிகரித்துக் காணப்படும்; பெற்றோர் இருவருமே துயில் நடையால் பாதிக்கப்பட்டவராயின் இதன் அதிகரிப்பு வீதம் 60% ஆகும். பரம்பரைக் காரணிகளைத் தவிர புறச்சூழல் காரணிகளும் துயில் நடை உண்டாவதைத் தூண்டலாம். எந்தவொரு காரணியும் மந்த அலை உறக்க நிலையைக் கூட்டினால் துயில் நடை நிகழச் சாத்தியக்கூறு உள்ளது. அவற்றுள் பொதுவானவை: குறைவான தூக்கம், காய்ச்சல், மிகையான களைப்பு. சில குறிப்பிட்ட தூக்கமாத்திரைகள் கூட துயில் நடையை ஏற்படுத்தலாம்.

சிகிச்சை

[தொகு]

குறைவான பயன்பாட்டு அளவிலான பென்சோடியசிபைன் (benzodiazepine), மூவட்ட உளச்சோர்வு போக்கிகள் (tricyclic antidepressants). எனினும் துயில் நடை புரிவோரது படுக்கையறையில் அல்லது அவர்கள் இலகுவில் கையாளக்கூடிய இடத்தில் ஆபத்தான பொருட்களை வைத்திருத்தல் கூடாது, கதவை மற்றும் சாளரத்தை படுக்குமுன்னர் பூட்டவேண்டும். போதியளவிலான தூக்கம் மிகத் தேவையான தொன்றாகும். துயில் நடையில் உள்ளவரின் தூக்கத்தைக் கலைப்பது சரியா என்பது பற்றி முரண்பாடுகள் உள்ளன. அவர்களை எழுப்பாமலேயே மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என சில திறனாய்வாளர்கள் கூறுகின்றனர், வேறு சிலர் எழுப்புவதால் அவர்கள் குழப்பம் அடைவார்களேயன்றி அது தீங்கில்லை என்கின்றனர்.

புறப்பரவியல்

[தொகு]

துயில்நடை சிறார்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது, வாலிபப்பருவம் எய்தும் போது வழமையாக இல்லாமற் போய்விடுகின்றது. வயது வந்தோரில் குறைந்தளவே காணப்பட்டாலும் அவர்களில் தோன்றினால் சிறார்களைவிட அதிகமான தடவை வருடமொன்றிற்கு ஏற்படும். வயது முதிர்ந்தோரில் மிகவும் அரிதாகவே காணப்படும், வேறொரு காரணி அல்லது நோயின் விளைவாகவே அவர்களில் தோன்றக்கூடும்.

சிறுவர்கள்

[தொகு]

சிறுவர்களிலேயே துயில்நடை வழமையாகக் காணப்படும், 4 – 8 வயதுகளிலேயே அதிகூடியதாகக் காணப்படுகின்றது. 25 – 33% துயில்நடை புரிவோர் படுக்கையில் சிறுநீர் கழித்தல் உடையோராக இருக்கின்றனர். துயில் நடை உடைய சில சிறார்கள் இரவில் கொடுங்கனவு காண்பவர்களாகவும் உள்ளனர், எனினும் இரவுக் கொடுங்கனவு வயதுவந்த துயில்நடையாளிகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.

வயது வந்தோர்

[தொகு]

வயது வந்தோரில் சிறார்களை விடக்குறைவாகவே காணப்படுகின்றது. வயது வந்தோரில் ஏற்படும் துயில்நடை எப்பொழுதும் அவருக்கு உளநோய் இருப்பதைக் காட்டும் என்னும் தவறான எண்ணம் உள்ளது, ஆனால் துயில்நடை உளநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.

உளநோயும் மருந்துப் பயன்பாடும்

[தொகு]

வயது வந்தோரில் சில வேளைகளில் உளநோயினால் அல்லது சிலவகை மருந்துகளின் பயன்பாடால் துயில்நடை வரக்கூடும். துயில் நடையை உண்டாக்கவல்ல மருந்துகள் சில: குளோர்ப்ரோமசின் (Chlorpromazine), பெர்பெனசின்(perphenazine), லிதியம், பென்சோடியசிபைன் வகையைச் சார்ந்த திரியாசொலம்(Triazolam), அமிற்றிரிப்ட்டிளின்(amitriptyline), பீட்டா தடுப்பிகள் (beta blockers).

வரலாறு

[தொகு]

சென்ற நூற்றாண்டு வரைக்கும் துயில்நடை சரியாக ஆராயப்படவில்லை. கனவு காணும் ஒருவர் கனவில் நடக்கின்றார் அல்லது ஏதோ செய்கின்றார் அதனால் இது ஏற்படுகின்றது என ஆரம்பத்தில் நம்பினர். சமீபத்தைய ஆய்வுகளில் இது கனவில் ஏற்படுவது அல்ல என்பது நிருபணம் ஆயிற்று. கனவு ரெம் தூக்கத்தின் போதே உருவாகக்கூடியது, ஆனால் துயில்நடை ஏற்படுவதோ என்ரெம் தூக்கத்தில் ஆகும். பைரன் பிரபுவின் நண்பரான மருத்துவர் சோன் வில்லியம் பொலிடோரி 1815இல் துயில் நடை பற்றிய ஆய்வேடு எழுதி மருத்துவ முனைவர் பட்டம் பெற்றார்.

கலையுலகில் துயில் நடை

[தொகு]

துயில்நடையை மையமாக வைத்து பல நாடகங்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சேக்ஸ்பியரின் மக்பெத்தில் லேடி மக்பெத் துயில் நடை புரிவாள். ஹரிபோர்டர் (Harry potter and the Half Blood Prince) திரைப்படத்திலும் லூனா லவ்கூட் துயில் நடை புரிவதாக கூறுவாள், அதே படத்தின் வேறொரு பகுதியில் ஹரிபோர்டரே துயில்நடை செய்துள்ளதை அவதானிக்கலாம். துயில்நடைக் கொலைகளை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘எனது உறக்கத்தில்’ (In My Sleep). ஹௌஸ் எம்.டி (House MD) எனும் தொலைக்காட்சி மருத்துவத் தொடரிலும் (அத்தியாயம் ரோல்மொடேல் –Role model) பெண்ணொருவர் துயில்பாலுறவு (துயில் நடையில் முன்னாள் கணவனுடன் பாலுறவு) மேற்கொண்டதால் கர்ப்பமானதை காட்சிப்படுத்தி உள்ளார்கள். சைலண்ட் ஹில் (silent hill) எனும் திரைப்படத்திலும் சிறுமி ஒருத்தி தூக்கத்தில் நடப்பதைக் காணலாம்.

குற்றவியல்

[தொகு]

துயில் நடையில் வன்முறைக் குணம் உண்டாவதால் குற்றவியல் நீதிமன்றங்கள் இது சம்பந்தமான வழக்குகளைக் கையாளுகின்றன. கொலை செய்தல், மற்றவரைத் துன்புறுத்துதல், கற்பழிப்பு போன்றவை இவற்றுள் அடங்கும். இத்தகைய குற்றம் புரிவோர் முற்றிலும் சுய சிந்தனை அற்றவர்களாக இருப்பதால் தண்டனையின் அளவு ஒரு விவாதத்துக்குரியதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துயில்_நடை&oldid=3389046" இலிருந்து மீள்விக்கப்பட்டது