தும்மல்
தும்மல், காற்று தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால், நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான் தும்மல். மூக்குத் துவாரத்தில் சிறிய முடியிழைகள், நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. மேலும் மூக்கில் ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்பட்டு, அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன. இதைத்தான் தும்மல் என்பர். இவ்வாறு தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.[1]
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.[2]
ஆழ்ந்த உறக்கத்தின்போது தும்மல் ஏற்படுவதில்லை. அந்நிலையில் மறிவினைக் (தன்னேர் துலங்கல்) குறிப்பலைகள் மூளைக்கு அனுப்பப்படுவதுமில்லை, இயக்க நரம்பணுக்கள் தூண்டப்படுவதுமில்லை. மிகுதியான தூண்டல் இருந்தால் சில வேளைகளில் தூங்குபவர் விழித்துக்கொண்டு தும்முவதுண்டு. ஆனால் அப்போது அவர் முழு உறக்கநிலையில் இருக்கமாட்டார்.[3]
தும்மலுக்கான காரணங்கள்
[தொகு]ஒவ்வாமைதான் தும்மலின் அடிப்படைக் காரணம். வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். மேலும் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கும். அத்தகைய பொருளொன்று மூக்கிலுள்ள முடிகளினிடையே சென்று உள்மூக்கையடையும்போது தும்மல் ஏற்படுகிறது. இதனால் திசுநீர் (histamine) வெளிப்பட்டு மூக்கிலுள்ள நரம்புகளை உறுத்துகிறது. அவை முப்பெரு நரம்புத்தொகுதியினூடாக (trigeminal nerve network) மூளைக்குக் குறிப்பனுப்புகின்றன. மூளை அக்குறிப்பைப் பெற்று மேல்தொண்டை, மூச்சுக்குழாய் சதைகளை முடுக்குவிடுகிறது. அதன்விளைவாக மூக்குள், தொண்டைக்குழி வாயில்கள் சட்டென விரிந்து மிகுந்த அழுத்தத்துடன் காற்றையும், எச்சில் முதலானவற்றின் துகள்களையும் வெளியேற்றுகிறது. முகம், தொண்டை, மார்பு முதலான உடலுறுப்புக்களின் கூட்டுத் துண்டற்பேறால் இது நிகழ்வதாகக் கருதுகின்றனர்.[4] கண்ணிமைகளுங்கூட தும்மலின் இயக்கத்தில் பங்காற்றுகின்றன. தும்மல் விடும்போது கண்களைத் திறந்து வைத்திருக்க முடியுமென்ற கருத்து பிழையானது.[5]
மூக்கடைப்பினாலோ அழற்சியினாலோ மூக்குக்குப் பின்புறமுள்ள எலும்புக்குழி நரம்புகள் தூண்டப்பெறும்போதும் தும்மல் ஏற்படலாம். திடீரென பளிச்சென்ற வெளிச்சத்தை எதிர்கொள்ளும்போதும் தும்மல் ஏற்படலாம்.[6] இது 18 முதல் 35 விழுக்காட்டு மக்களில் காணப்படும் ஓர் மரபணுக்கூறின் விளைவாகும்,[7] அரிதாகச் சிலருக்கு நிறைய உணவு உட்கொண்டு வயிறு நிறைந்திருப்பதால் தும்மல் ஏற்படும். இது ஒரு மரபணுக் கோளாறாகும்.
நோய்த் தொற்றுமை
[தொகு]உடல்நலக் குறைபாடு எதுவுமில்லாத போது பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிக்காவிட்டாலும், 0.5 to 5 µm அளவிலான நுண்துளிகளின் தூவானப்படலத்தை வெளியிடுவதன்மூலம் தும்மல் நோய்களைப் பரப்பவும் காரணமாகிறது. ஒருமுறை தும்மும்போது 40,000 நுண்துளிகள் வரை சிதறி வெளிப்படக்கூடும்.[8] இவ்வாறு சளி, காய்ச்சல் முதலிய நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்காக தும்மும்போது முன்னங்கையினாலோ, முழங்கையின் உட்பகுதியைக் கொண்டோ வாயையும் மூக்கையும் மறைப்பர். உள்ளங்கையைப் பயன்படுத்தி மூடுவதை இப்போது தவிர்க்கின்றனர். அவ்வாறு செய்தால் கதவின் கைப்பிடி முதலானவற்றைத் தொடுவதாலும் கைக்குலுக்கும்போதும் நோய்க்கிருமிகள் பரவ ஏதுவாகும்.[9]
தடுக்கும் வழிகள்
[தொகு]தும்மல் வருவதுபோலத் தோன்றும்போது நுரையீரலிலுள்ள காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின்போது அழுத்தம் குறையும். மூச்சை அடக்கி பத்துவரை எண்ணுவதுண்டு. மூக்கின் தண்டுப்பகுதியை அமுக்கிவிடுவதும் தும்மல் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடுமென நம்புகிறார்கள். தும்மலை ஏற்படுத்தும் தூசி முதலியவற்றைத் தவிர்த்தல், செல்ல விலங்குகளின் உடலில் இருந்து உதிர்வனவற்றின் மூலம் ஏற்படும் தும்மலைத் தவிர்க்க அவற்றை வீட்டுக்கு வெளியே வைத்திருப்பது, வீட்டில் தூசு முதலியவற்றைச் சேர விடாமல் தூய்மையாக வைத்திருப்பது, புகைக்கூண்டு, குளிரூட்டற் கருவிகள் முதலியவற்றிலுள்ள வடிகட்டிகளை அடிக்கடி கழுவுதல், சில ஆலைகள் வேளாண் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்லாமை போன்ற செயற்பாட்டினால் தும்மல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சிலர் தும்மலை விரும்புகின்றனர். அவர்கள் அவற்றைத் தவிர்ப்பதில்லை.[10]
பண்பாடு
[தொகு]பல பண்பாடுகளிலும் தும்மலுக்கு உடற்கூறுக்குத்தொடர்பில்லாத ஏதாவது காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறான நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஏதும் இல்லை. இந்தியாவில் பல பகுதிகளிலும் இரானிலும் பலர் ஏதாவது செயற்பாட்டின் தொடக்கத்தில் தும்மல் வந்தால் அதைக் கெட்ட சகுனமாகக் கருதுவர். அதுபோன்ற வேளைகளில் செய்யவந்த செயலை நிறுத்திவிட்டு நீரருந்திவிட்டுப் பிறகு செயலில் ஈடுபடுவர். போலந்து நாட்டில் ஒருவருக்குத் தும்மல் வந்தால் மாமியர் மருமகனைப் பற்றியோ மருமகளைப் பற்றியோ அவதூறாகப் பேசுகிறார் என்பார்கள். இசுலாமியர்களும் கிறித்தவர்களும் ஒருவருக்குத் தும்மல் வருவதைப்பார்த்தால் முறையே "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்றும் "ஆசி உண்டாகட்டும்" என்றும் வாழ்த்தும் வழக்கமுள்ளது. தமிழர்கள் பொதுவாக அம்மா, அப்பா, ஐயா போன்ற சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. தமிழிலக்கியத்தில் தம்மை விரும்புபவர் எவராவது நினைக்கும்போது ஒருவருக்குத் தும்மல் ஏற்படுமென்ற கருத்து உள்ளது. அதைக்கொண்டு தலைவனுக்குத் தும்மல் ஏற்படுவதைப் பார்த்து வேறொரு காதலியின் நினைப்பினால்தான் அது நிகழ்வதாகக் கூறி தலைவி ஊடுவது அகத்திணையில் வரும் நிகழ்வாகும்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது?
- ↑ தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)
- ↑ "A Moment of Science: Sleep On, Sneeze Not". Archived from the original on 2009-07-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-14.
- ↑ "Sneeze-evoking region within the brainstem". Brain Res. 511 (2): 265–70. March 1990. doi:10.1016/0006-8993(90)90171-7. பப்மெட்:2139800. https://archive.org/details/sim_brain-research_1990-03-19_511_2/page/n88.
- ↑ "Myth: Can sneezing with your eyes open make your eyeballs pop out?".
- ↑ Goldman, Jason G. (June 24, 2015). "Why looking at the sun makes us sneeze". BBC Future. BBC. பார்க்கப்பட்ட நாள் October 14, 2016.
- ↑ "The photic sneeze reflex as a risk factor to combat pilots". Mil Med 158 (12): 806–9. December 1993. பப்மெட்:8108024. https://archive.org/details/sim_military-medicine_1993-12_158_12/page/806.
- ↑ "Characterization of infectious aerosols in health care facilities: an aid to effective engineering controls and preventive strategies". Am J Infect Control 26 (4): 453–64. August 1998. doi:10.1016/S0196-6553(98)70046-X. பப்மெட்:9721404. https://archive.org/details/sim_american-journal-of-infection-control_1998-08_26_4/page/453.
- ↑ Central Maine Medical Center. "Why Don't We Do It In Our Sleeves". CoughSafe. CMMC, St. Mary's Hospital, Maine Medical Association. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
- ↑ Adkinson NF Jr. (2003). "Phytomedicine". Middleton's Allergy: Principles and Practice (6th ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-01425-0.[page needed]
- ↑ மணிகண்டன், வ (2017). "பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கதைப்பின்னல்". சான்லாக்சு பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் 2 (1): 173-216. பன்னாட்டுத் தர தொடர் எண்:2454-3993. http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N1/TAM_V2_N1_031.pdf.
வெளி இணைப்புகள்
[தொகு]- தும்மல் வராமல் தடுக்க...! பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்