உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தேசியக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் கொடி
மூவர்ணக் கொடி
பயன்பாட்டு முறை தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Reverse side is congruent with obverse side Flag can be hung vertically by hoisting on a normal pole, then turning the pole 90°
அளவு 3:2
ஏற்கப்பட்டது 22 சூலை 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-07-22)
வடிவம் மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களும், நடுவில் கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரமும் உள்ளது.
வடிவமைப்பாளர் பிங்கலி வெங்கையா[N 1]

இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது இந்திய நாட்டின் தேசியக் கொடியாகும். ஒரு கிடைமட்ட செவ்வக வடிவ மூவர்ணக் கொடியான இதில், முறையே இளஞ்சிவப்பு (செம்மஞ்சள் நிறமான ஆரஞ்ச்), வெள்ளை மற்றும் பச்சை (இந்திய பச்சை) நிற பட்டைகள் உள்ளன. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. 22 சூலை 1947 அன்று நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது இது தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்திய விடுதலை அடைந்த நாளான 15 ஆகத்து 1947 அன்று இந்திய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ கொடியாக மாறியது. இந்தக் கொடி பின்னர் 26 சனவரி 1950 அன்று இந்தியக் குடியரசின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தக் கொடியானது, பிங்கலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து மகாத்மா காந்தியல் முன்மொழியப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கொடியான சுவராஜ் கொடியை அடிப்படையாகக் கொண்டது. கொடியின் நடுவில் இருந்த நூற்புச் சக்கரம், 1947 ஆம் ஆண்டு அசோகச் சக்கரத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் கொடிக் குறியீட்டில் திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, கொடியானது காதி துணியினால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது. காதி என்பது கையால் சுழற்றப்பட்து நூட்கப்பட்ட ஒரு சிறப்பு வகை துணியாகும். கொடிக்கான உற்பத்தி செயல்முறை மற்றும் விவரக்குறிப்புகள் இந்திய தரநிலைகள் பணியகம் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

கொடியின் பயன்பாடு இந்தியக் கொடி மற்றும் தேசிய சின்னம் தொடர்பான சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. முந்தைய சட்டம் இந்தியாவின் விடுதலை நாள் மற்றும் குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களைத் தவிர தனியார் குடிமக்களால் கொடியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தது. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், குடிமக்கள் கொடியை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் குறியீட்டை திருத்துமாறு இந்திய அரசுக்கு உத்தரவிட்டது.

வரலாறு

[தொகு]

சுதந்திரத்திற்கு முந்தைய இயக்கம்

[தொகு]
பிரித்தானிய அரசின் கொடி, 1880-1947

இந்திய சுதந்திர இயக்கத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பல்வேறு ஆட்சியாளர்களால் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட பல கொடிகள் பயன்படுத்தப்பட்டன. நேரடி ஏகாதிபத்திய ஆட்சியை முறைப்படுத்திய 1857 பெரும் கிளர்ச்சிக்குப் பிறகு, முதல் நிலையான கொடி பிரித்தானிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கொடில் சிவப்பு நிற பின்புலத்தில் மேல் இடது புறத்தில் பிரித்தானிய சின்னமும், வலது பாதியின் நடுவில் அரச கிரீடத்தால் சூழப்பட்ட நட்சத்திரம் ஆகியவை அடங்கும்.[1][2][3]

1904 இல் இந்தியாவிற்கான முன்மொழியப்பட்ட கொடி[4]

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், எட்வர்ட் VII முடிசூட்டு விழாவையொட்டி, இந்தியப் பேரரசின் அதிகாரபூர்வ சின்னத்தின் தேவை பற்றிய விவாதம் தொடங்கியது. அதிகாரி வில்லியம் கோல்ட்சுட்ரீம், கொடியிலிருந்து நட்சத்திர சின்னத்தை இந்தியாவுக்கு பொருத்தமானதாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் பிரச்சாரம் செய்தார். இவரது முன்மொழிவு அரசாங்கத்தால் ஏற்கப்படவில்லை.[5] இந்த நேரத்தில், பால கங்காதர திலகர் விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட வேண்டும் என்றும் மற்றும் அரவிந்தர் மற்றும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா காளி உருவம் பதிக்கப்பட்ட வேண்டும் எனவும் கூறினர். சிலர் மற்றொரு பசு சின்னம் பொறிக்கப்பட வேண்டும் எனக்கோரினார். இருப்பினும், இந்த சின்னங்கள் அனைத்தும் இந்து சமயத்தை மையமாகக் கொண்டவை என்பதால், இவை ஏற்கப்படவில்லை.[5]

ஆரம்பகால மூவர்ண கொடிகள்

[தொகு]
கல்கத்தா கொடி, சேர்மனியில் நடந்த மாநாட்டில், 22 ஆகத்து 1907 அன்று பிகாசி காமா காட்டிய "இந்திய சுதந்திரக் கொடியின்" வடிவமைப்பு

1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினையின் போது நாட்டிற்குள் உள்ள ஏராளமான சாதிகள் மற்றும் இனங்களை ஒன்றிணைக்க ஒரு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் மூவர்ணக் கொடி, 7 ஆகத்து 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போசு என்பவரால் கொடியேற்றப் பட்டது. சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தவந்தே மாதரம் கொடியானது மேற்கத்திய பாணியில் குறிப்பிடப்படும் இந்திய மதச் சின்னங்களைக் கொண்டிருந்தது. மூவர்ணக் கொடியில் பச்சை நிறப் பட்டையில் எட்டு மாகாணங்களைக் குறிக்கும் எட்டு வெள்ளைத் தாமரைகளும், கீழே சிவப்புப் பட்டையில் சூரியனும் பிறையும், மத்திய மஞ்சள் பட்டையில் தேவனகிரி எழுத்துருவில் வந்தே மாதரம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. கல்கத்தா கொடி என்றழைக்கப்பட்ட இந்தக் கொடி செய்தித்தாள்களால் சுருக்கமாக மட்டுமே வெளியிடப்பட்டது. அரசாங்க மற்றும் அரசியல் அறிக்கைகளில் இந்தக் கொடி பயன்படுத்தப்படவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர அமர்வில் இது பயன்படுத்தப்பட்டது. 1907 இல் சேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் அம்மையார் பிகாசி காமாவால் இது பயன்படுத்தப்பட்டது.[5]

அதே நேரத்தில், சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். சிவப்பு வண்ணத்தில், சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தைக் கொண்ட பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும் வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியைக் குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கும் வகையிலும் அமைந்தன.[2] இந்த சமயத்தில் பல கொடிகள் உருவாக்கப்பட்ட போதிலும் இவை எதுவும் தேசியவாத இயக்கத்தின் கவனத்தைப் பெறவில்லை.

1917ல் சுயாட்சி போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட கொடி

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதைக் குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும் நட்சத்திர வடிவமும் மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாகக் கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தைக் கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறவில்லை.[5]

1921 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காந்தியின் கொடியின் மறுஉருவாக்கம்

ஒரு வருடம் கழித்து, 1916ல், பிங்கலி வெங்கையா இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். மெட்ராஸ் உயர் நீதிமன்ற உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட நிதியில் இவர் முப்பது புதிய வடிவமைப்புகளைச் சமர்ப்பித்தார். ஏப்ரல் 1921 இல், மகாத்மா காந்தி இந்தியக் கொடியின் அவசியத்தைப் பற்றி எழுதினார். மகாத்மா காந்தி ஒரு மூவர்ண கோடியில் நடுவில் நூற்புச் சக்கரத்தைச் சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார். இதில் சிகப்பு இந்துக்களையும், பச்சை இசுலாமியர்களையும் குறிப்பதாக இருக்கும் என விளக்கினார். [5] அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப்பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களைச் சமமாகக் குறிக்குமாறு அமைந்தன. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.[6]

1931ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தைக் கொண்ட காவிக் கொடி.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தைக் கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தைக் குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931-இல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும் அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாகக் காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.[2]

பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்து, 1931-ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட இந்தியக் கொடி.

1931 ஆம் ஆண்டு கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் நடுவில் இராட்டையுடன் கூடிய கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும் வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும் பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.[7]

இரண்டாம் உலகப் போரின் போது, சுபாசு சந்திரபோசின் இந்தியத் தேசிய இராணுவம் பயன்படுத்திய கொடி.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்குப் பதிலாகத் தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை சுபாசு சந்திரபோசின் இந்தியத் தேசிய இராணுவம் பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்தக் கொடி தேசியக் கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

இறுதி வடிவமைப்பு

[தொகு]
மவுண்ட்பேட்டனின் 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கொடிக்கான முன்மொழிவு[4]

1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ராசேந்திர பிரசாத் அவர்களைத் தலைவராகவும், அபுல் கலாம் ஆசாத், சரோசினி நாயுடு, ராசகோபாலச்சாரி, கே.எம். முன்சி, மற்றும் அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாகக் கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது.[8]

இந்தியக் கொடி, சுதந்திர இந்தியாவின் முதல் முத்திரை[9][10]

23 சூன் அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்குப் பிறகு, 14 சூலை-இல் முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் கொடியைச் சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த நூற்புச் சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள அசோகச் சக்கரம் ஏற்கப் பட்டது.[11] சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் இந்த சக்கரம் என்பது தர்மம் என்பதை குறிப்பதாக இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக் கூறினார். ஜவஹர்லால் நேரு இந்த மாற்றம் மிகவும் நடைமுறைக்குரியது என்று விளக்கினார், ஏனெனில் சுழலும் சக்கரத்துடன் கூடிய கொடியைப் போலல்லாமல், இந்த வடிவமைப்பு சமச்சீராக தோன்றும் என்று கூறினார். காந்தி இந்த மாற்றத்தால் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும் இறுதியில் அதை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாகச் சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947-ஆம் நாள் கொடியேற்றப்பட்டது. [12][13]

அதிகாரப்பூர்வ கொடிகள்

[தொகு]

வடிவமைப்பு

[தொகு]

அளவுகள்

[தொகு]

இந்தியக் கொடி மூன்று பங்கு அகலம் மற்றும் இரண்டு பங்கு உயரம் என்ற விகித அடிப்படையில் இருக்க வேண்டும். கொடியின் மூன்று கிடைமட்ட பட்டைகளும் (காவி, வெள்ளை மற்றும் பச்சை) சம அளவில் உள்ளன. அசோகச் சக்கரம் இருபத்தி நான்கு சம இடைவெளி கொண்ட ஆரங்களைக் கொண்டுள்ளது.[14][15][16]

இந்தியக் கொடிக்கான உற்பத்தித் தரங்கள் பிரிவு 4.3.1 இன் கீழ் கொடி மற்றும் சக்கரத்தின் குறிப்பிட்ட அளவுகளை விவரிக்கும் விளக்கப்படம் உள்ளது.[17]

இந்திய தேசியக் கொடியின் அளவுகள்
கொடி அளவு [18][19] அகலம் மற்றும் உயரம் (மிமீ) அசோக சக்கரத்தின் விட்டம் (மிமீ)[17][20]
1 6300 × 4200 1295
2 3600 × 2400 740
3 2700 × 1800 555
4 1800 × 1200 370
5 1350 × 900 280
6 900 × 600 185
7 450 × 300 90
8 225 × 150 40
9 150 × 100 25
தேசியக் கோடி
அசோகச் சக்கரம்

நிறங்கள்

[தொகு]

கொடி குறியீடு அசோகச் சக்கரத்தை கடற்படை நீல நிறத்தில் கொடியின் இருபுறமும் அச்சிட வேண்டும் எனக் கூறுகிறது.[17][14]1931 ஆம் ஆண்டு CIE வண்ண விவரக்குறிப்புகளில் வரையறுத்தபடி, "IS1: இந்தியக் கொடிக்கான உற்பத்தித் தரங்கள்" என்பதிலிருந்து, கடற்படை நீலத்தைத் தவிர்த்து, தேசியக் கொடியில் பயன்படுத்தப்படும் அனைத்து வண்ணங்களுக்கும் குறிப்பிடப்பட்ட பட்டியல் கீழே உள்ளது. கடற்படை நீல நிறத்திற்கான குறியீட்டை IS:1803-1973 நிலையில் காணலாம்.[17]

பொருட்கள் 3.1.2.2: நிறங்கள்[17]
வண்ணம் X Y Z பிரகாசம், சதவீதம்
காவி 0.538 0.360 0.102 21.5
வெள்ளை 0.313 0.319 0.368 72.6
பச்சை 0.288 0.395 0.317 8.9
வண்ணத் திட்டம் காவி வெள்ளை பச்சை கடற்படை நீலம்
பான்டோன் வண்ணம் 165 C 000 C 2258 C 2735 C
CMYK 0-60-88-0 0-0-0-0 96-0-47-58 96-98-0-45
HEX #FF671F #FFFFFF #046A38 #06038D
RGB 255,103,31 255,255,255 4,106,56 6,3,141

கொடியின் அம்ச பொருள் விளக்கம்

[தொகு]
கொடியின் நெருங்கிய தோற்றம்

காந்தி முதன்முதலில் 1921 இல் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு கொடியை முன்மொழிந்தார். இந்தக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா. இதில் இந்துக்களைக் குறிக்கும் சிவப்பு பட்டை மற்றும் இசுலாமியர்களைக் குறிக்கும் பச்சை பட்டை ஆகிய இரு நிறங்கள் இருந்தன. இந்த கொடியின் மையத்தில் ஒரு பாரம்பரிய நூற்பு சக்கரம் இருந்தது. இந்த நூற்பு சக்கரம் இந்தியர்களை சுயசார்புடையவர்களாக மாற்றும் காந்தியின் குறிக்கோளை அடையாளப்படுத்தியது. பிறகு இதில் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக காவி நிறம் கொண்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது மற்றும் பிற மத சமூகங்களின் மக்களைக் குறிக்கும் விதத்தில் மையத்தில் ஒரு வெள்ளைக் பட்டை சேர்க்கப்பட்டது. இருப்பினும், வண்ணத் திட்டத்துடன் மதத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்காக, மூன்று நிறங்களும் புதிய அர்த்தங்கள் கொடுக்கப்பட்டன: தைரியம் மற்றும் தியாகம், அமைதி மற்றும் உண்மை, மற்றும் நம்பிக்கை மற்றும் வீரம்.[21]

இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவர்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் கொடியாக ஏற்றது. முன்னிருந்த நூற்பு சக்கரத்திற்குப் பதிலாக, அசோகச் சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.[12] வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.

பொதுவாக தேசியக் கொடியின் காவி நிறம் தூய்மையையும் கடவுளையும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும், பச்சை நிறம் புணர்ப்பையும் செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.

நெறிமுறைகள்

[தொகு]

பயன்பாடு

[தொகு]
கொடியின் சரியான கிடைமட்ட மற்றும் செங்குத்து காட்சி

கொடியின் காட்சி மற்றும் பயன்பாடு இந்தியாவின் கொடி குறியீடு, 2002 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.[14] தேசியக் கொடியை அவமதிப்பது, அத்துடன் கொடி சட்டத்தின் விதிகளை மீறும் வகையில் பயன்படுத்துதல் ஆகியவை சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களாகும்.[23]

கொடியானது தரையையோ அல்லது தண்ணீரையோ தொடக்கூடாது அல்லது எந்த வடிவத்திலும் ஒரு துணிமணியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று அதிகாரப்பூர்வ ஒழுங்குமுறை கூறுகிறது.[14] கொடியை வேண்டுமென்றே தலைகீழாக வைக்கவோ, எதிலும் நனைக்கவோ அல்லது அதன் மீது எந்த பொருளையும் வைத்திருக்கவோ கூடாது. கொடியை விரிக்கும் முன் அதில் மலர் இதழ்கள் தவிர எதையும் வைக்கக் கூடாது. கொடியில் எந்த எழுத்தும் பொறிக்கக்கூடாது.[18] திறந்த வெளியில் இருக்கும்போது, காலநிலையைப் பொருட்படுத்தாமல், கொடியை எப்போதும் சூரிய உதயம் மற்றும் சூரிய அசுதமனம் இடையே மட்டுமே பறக்கவிட வேண்டும். 2009க்கு முன், சிறப்புச் சூழ்நிலையில், பொதுக் கட்டிடங்களில் மட்டும் கொடியை இரவில் பறக்கவிடலாம். தற்போது, இந்திய குடிமக்கள் இரவில் கூட கொடியை பறக்கவிடலாம், ஆனால் அவை உயரமான கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட வேண்டும் மற்றும் நன்கு ஒளிரும் வகையில் இருக்க வேண்டும்.[14][24]

கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ள ஒரு தேசியக் கொடி

கொடியை ஒருபோதும் தலைகீழாக சித்தரிக்கவோ, காட்டவோ அல்லது பறக்கவிடவோ கூடாது. கொடியை சிதைந்த அல்லது அழுக்கு நிலையில் காட்டுவது அவமதிப்பாகக் கருதப்படுகிறது, அதே விதி கொடியை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கொடிக்கம்பங்கள் மற்றும் மண்டபங்களுக்கும் பொருந்தும், அவை எப்போதும் சரியான பராமரிப்பு நிலையில் இருக்க வேண்டும்.[18]

கொடியின் பயன்பாடு இந்தியக் கொடி மற்றும் தேசிய சின்னம் தொடர்பான சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. முந்தைய சட்டம் இந்தியாவின் விடுதலை நாள் மற்றும் குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களைத் தவிர தனியார் குடிமக்களால் கொடியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தது. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், குடிமக்கள் கொடியை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் குறியீட்டை திருத்துமாறு இந்திய அரசுக்கு உத்தரவிட்டது.[25][26]

கொடி குறியீடு சீருடைகள், உடைகள் மற்றும் பிற ஆடைகளில் கொடியைப் பயன்படுத்துவதையும் தடை செய்தது. சூலை 2005 இல், இந்திய அரசாங்கம் சில வகையான பயன்பாட்டை அனுமதிக்கும் வகையில் குறியீட்டை திருத்தியது. திருத்தப்பட்ட குறியீடு இடுப்புக்குக் கீழே உள்ள ஆடைகள் மற்றும் உள்ளாடைகளில் பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது, மேலும் தலையணை உறைகள், கைக்குட்டைகள் அல்லது பிற ஆடைப் பொருட்களில் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.[14]

சேதமடைந்த கொடிகளை அப்புறப்படுத்துவதும் கொடி குறியீட்டின் கீழ் உள்ளது. சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த கொடிகளை தூக்கி எறியவோ அல்லது அவமரியாதையாக அழிக்கவோ கூடாது; அவை தனிப்பட்ட முறையில் அழிக்கப்பட வேண்டும். பழைய கொடிகளை எரிப்பதன் மூலமோ அல்லது கொடியின் கண்ணியத்திற்கு இசைவான வேறு எந்த முறையிலோ அப்புறப்படுத்தவேண்டும்.[27]

காட்சியமைப்பு

[தொகு]
மற்றொரு நாட்டின் கொடியுடன் இந்தியக் கொடியை வைப்பதற்கான நெறிமுறை

இந்தியக் கொடியுடன் வேறு நாடு கொடிகளைக் காண்பிப்பதற்கான சரியான முறைகள் பற்றிய விதிகளின்படி, மேடையின் பின் ஒரு சுவரில் இரண்டு கொடிகள் கிடைமட்டமாக கட்டப்படும் போது இரண்டு கொடிகளும் நேர் கோட்டில் ஒன்றையொன்று நோக்கியவாறு இருக்க வேண்டும். குறுகிய கொடிக் கம்பத்தில் இரண்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டால், ஏற்றப்படும் கம்பிகள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக வைக்க பட வேண்டும்.[18]

இந்தியக் கொடியை உட்புறங்களில் வைப்பதற்கான நெறிமுறை

பொதுக் கூட்டங்கள் அல்லது கூட்டங்களில் உள்ள அரங்குகளுக்குள் கொடி காட்டப்படும் போதெல்லாம், அது அதிகாரத்தின் நிலை என்பதால், அது எப்போதும் அரங்கின் வலதுபுறம் (பார்வையாளர்களின் இடதுபுறம்) இருக்க வேண்டும். எனவே, மண்டபத்திலோ அல்லது மற்ற சந்திப்பு இடத்திலோ ஒரு பேச்சாளருக்கு அருகில் கொடி காட்டப்படும் போது, அது பேச்சாளர் அல்லது சபாநாயகரின் வலது புறத்தில் வைக்கப்பட வேண்டும். அது மண்டபத்தில் வேறு இடத்தில் காட்டப்படும்போது, பார்வையாளர்களின் வலதுபுறம் இருக்க வேண்டும். கொடி எப்பொழுதும் காவி நிறம் மேல இருக்குமாறு காட்டப்பட வேண்டும். மேடைக்குப் பின்னால் உள்ள சுவரில் செங்குத்தாகத் தொங்கவிடப்பட்டால், காவி பட்டையானது பார்வையாளர்களின் இடதுபுறத்தில் பார்வையாளர்களை நோக்கியவாறு இருக்க வேண்டும்.[18]

ஒரு கொடி ஊர்வலம்

ஊர்வலம் அல்லது அணிவகுப்பில் கொண்டு செல்லப்படும் போது, ​​அணிவகுப்பின் வலதுபுறத்தில் அல்லது முன்பக்கத்தில் தனியாக கொடி காண்பிக்கப்பட்ட வேண்டும். ஒரு சிலை அல்லது நினைவுச்சின்னத்தில் தேசியக் கொடி ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கலாம், ஆனால் ஒரு பொழுதும் அந்தப் பொருளின் மறைப்பாக பயன்படுத்தப்படக்கூடாது. கொடியை ஏற்றும் அல்லது இறக்கும் விழாவின் போது, ​​அல்லது அணிவகுப்பு அல்லது மதிப்பாய்வில் கொடியை கடந்து செல்லும் போது, ​​அனைத்து நபர்களும் கொடிக்கு தகுந்த வணக்கம் செலுத்த வேண்டும். கொடி வணக்கத்தைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.[18]

வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கான சிறப்புரிமை குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை அதிகரிகளுக்கே மட்டுமே உரித்தாகும். ஒரு வாகனத்தின் முன்பக்கத்தில் உறுதியாகப் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கம்பிலிருந்து கொடி பறக்கவிடப்பட வேண்டும். அரசு வழங்கும் வாகனங்களில் வெளிநாட்டு பிரமுகர்கள் பயணம் செய்யும்போது, ​​காரின் வலதுபுறம் இந்தியக் கொடியும், இடதுபுறம் வெளிநாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும்.[18]

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது வானூர்தியில் கொடி காண்பிக்கப்பட வேண்டும். தேசியக் கொடியுடன், அவர்கள் செல்லும் நாட்டின் கொடியும் பறக்கவிடப்படும். இந்தியாவிற்குள் செல்லும் போது வானூர்தியிலிருந்து ஏறும் அல்லது இறங்கும் பக்கத்தில் கொடி பறக்கவிடப்படுகின்றது.[18]

அரைக்கம்பத்தில் பறத்தல்

[தொகு]
செங்கோட்டையில் இந்தியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

துக்கத்தின் அடையாளமாக தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படலாம். இவ்வாறு செய்வதற்கான ஆணை குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்படுகின்றது. கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்றால், அதை முதலில் கம்பத்தின் உச்சிக்கு உயர்த்தி, பின்னர் மெதுவாக அரைக்கம்பத்துக்கு இறக்க வேண்டும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் மறைந்தால் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். விடுதலை நாள் போன்ற குறிப்பிடப்பட்ட நாட்களில் இறந்தவரின் உடலைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள் தவிர மற்ற இடங்களில் இந்தியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடக் கூடாது. அரசு மற்றும் ராணுவப் படையினரின் இறுதிச் சடங்குகளின் போது, ​​கொடியானது சவப்பெட்டியின் மீது காவி நிறம் தலைப்பகுதியை பார்த்தவாறு போர்த்தப்பட்ட வேண்டும். கொடியை கல்லறைக்குள் இறக்கவோ, சுடுகாட்டில் எரிக்கவோ கூடாது.[18]

உற்பத்தி செயல்முறை

[தொகு]

தேசியக் கொடிக்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறை இந்திய தரநிலைகள் ஆணையகத்தால் பிறப்பிக்கப்பட்ட மூன்று ஆவணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. கொடிகள் அனைத்தும் காதி அல்லது பருத்தி துணியால் செய்யப்பட வேண்டும். கொடிக்கான தரநிலைகள் 1968 இல் உருவாக்கப்பட்டு பின்னர் 2008 இல் புதுப்பிக்கப்பட்டன.[28]

1951 ஆம் ஆண்டில், இந்தியா குடியரசாக மாறிய பிறகு, கொடிக்கான முதல் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்பு வெளியிடப்பட்டது. இவை 1964 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் மேலும் திருத்தப்பட்டன.[14] அளவுகள், சாயங்கள், வண்ண மதிப்புகள், பிரகாச அளவுகள், நூல் எண்ணிக்கை உள்ளிட்ட இந்தியக் கொடியின் உற்பத்திக்கான அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் இந்த விவரக்குறிப்புகள் உள்ளடக்கியது. சட்டங்களின் கீழ் உற்பத்தி செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை உள்ளடக்கிய தண்டனைகளுக்கு வழிவகுக்கும்.[29][30]

2021 வரை, காதி அல்லது கையால் சுழற்றப்பட்ட துணி மட்டுமே கொடிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. மேலும் வேறு ஏதேனும் பொருட்களால் செய்யப்பட்ட கொடியை பறக்கவிடுவது சட்டப்படி குற்றமாக இருந்தது.[14][29][30][31] திசம்பர் 2021 இல் இந்திய அரசாங்கம் கொடிக் குறியீட்டில் திருத்தம் கொண்டு வந்தது. கொடிகளை இயந்திரத்தில் தயாரிக்க ஏதுவாக காதி அல்லாத பருத்தி அல்லது பட்டு உள்ளிட்ட மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதித்தது.[32]

மேலும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. தற்போதைய கொடியானது வெங்கய்யாவின் அசல் வடிவமைப்பின் தழுவலாகும், எனவே இவர் பொதுவாக கொடியின் வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Virmani, Arundhati (August 1999). "National Symbols under Colonial Domination: The Nationalization of the Indian Flag, March–August 1923". Past & Present 164 (164): 169–197. doi:10.1093/past/164.1.169. https://archive.org/details/sim_past-present_1999-08_164/page/169. 
  2. 2.0 2.1 2.2 Roy, Srirupa (August 2006). "A Symbol of Freedom: The Indian Flag and the Transformations of Nationalism, 1906–". Journal of Asian Studies 65 (3). பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. இணையக் கணினி நூலக மையம்:37893507. 
  3. Volker Preuß. "British Raj Marineflagge" (in ஜெர்மன்). Archived from the original on 17 September 2005. பார்க்கப்பட்ட நாள் 4 September 2005.
  4. 4.0 4.1 Dipesh Navsaria (27 July 1996). "Indian Flag Proposals". Flags of the World. Archived from the original on 7 September 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Virmani, Arundhati (2008). A National Flag for India: Rituals, Nationalism and the Politics of Sentiment. Delhi, Permanent Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-232-3.
  6. Kapoor, P. (2018). Gandhi: An Illustrated Biography (in மால்டிஸ்). Roli Books. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-936009-1-7. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  7. "பிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  8. Royle, Trevor (1997). The Last Days of the Raj. John Murray. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7195-5686-9.
  9. India Postage Stamps 1947–1988.(1989) Philately branch, Department of Posts, India.
  10. Souvenir sheet of the Independence series of stamps, Indian Posts, 1948
  11. Goucher, C.; Walton, L. (2013). World History: Journeys from Past to Present. Taylor & Francis. p. 667. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-08828-6.
  12. 12.0 12.1 Heimer, Željko (2 July 2006). "India". Flags of the World. Archived from the original on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 11 October 2006.
  13. Jha, Sadan (25 October 2008). "The Indian National Flag as a site of daily plebiscite". Economic and Political Weekly: 102–111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. இணையக் கணினி நூலக மையம்:1567377. 
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 14.7 "Flag code of India, 2002". Fact Sheet. Press Information Bureau, Government of India. 4 April 2002. Archived from the original on 22 May 2006. பார்க்கப்பட்ட நாள் 11 October 2006.
  15. "National Symbols". www.india.gov.in. Archived from the original on 1 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
  16. "National Identity Elements - National Flag". knowindia.india.gov.in. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
  17. 17.0 17.1 17.2 17.3 17.4 Bureau of Indian Standards (1968). IS 1 : 1968 Specification for the national flag of India (cotton khadi). Government of India. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 18.6 18.7 18.8 "Flag Code of India". Ministry of Home Affairs, Government of India. 25 January 2006. Archived from the original on 10 January 2006. பார்க்கப்பட்ட நாள் 11 October 2006.
  19. "IS 1 (1968): Specification for The National Flag of India (Cotton Khadi, PDF version)" (PDF). Government of India. Archived from the original (PDF) on 22 October 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
  20. Bureau of Indian Standards (1979). IS 1 : 1968 Specification for the national flag of India (cotton khadi), Amendment 2. Government of India.
  21. "Flag of India". Encyclopædia Britannica. (2009). 
  22. "Flag Code of India, 2002". Press Information Bureau. Government of India. 3 April 2002. Archived from the original on 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  23. "The Prevention of Insults To National Honour Act, 1971" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 23 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015.
  24. Press Trust of India (24 December 2009). "Now, Indians can fly Tricolour at night". The Times of India இம் மூலத்தில் இருந்து 11 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811045406/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-24/india/28074561_1_national-flag-flag-code-naveen-jindal. 
  25. "My Flag, My Country". Rediff.com. 13 June 2001 இம் மூலத்தில் இருந்து 21 November 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071121183544/http://www.rediff.com/news/2001/jun/13spec.htm. 
  26. "Union of India v. Navin Jindal". Supreme Court of India. Archived from the original on 24 December 2004. பார்க்கப்பட்ட நாள் 1 July 2005.
  27. Chadha, Monica (6 July 2005). "Indians can wear flag with pride". BBC இம் மூலத்தில் இருந்து 6 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106215759/http://news.bbc.co.uk/2/hi/south_asia/4656963.stm. 
  28. "Indian Standards" (PDF). Bureau of Indian Standards. Archived from the original (PDF) on 11 September 2008. பார்க்கப்பட்ட நாள் 29 November 2008.
  29. 29.0 29.1 Vattam, Shyam Sundar (15 June 2004). "Why all national flags will be 'Made in Hubli'". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 22 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060522230211/http://www.deccanherald.com/deccanherald/jun152004/spt2.asp. 
  30. 30.0 30.1 Aruna Chandaraju (15 August 2004). "The Flag Town". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 23 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090923163100/http://www.hindu.com/mag/2004/08/15/stories/2004081500450200.htm. 
  31. Chandaraju, Aruna (15 August 2004). "The flag town". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 23 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090923163100/http://www.hindu.com/mag/2004/08/15/stories/2004081500450200.htm. 
  32. "Har Ghar Tiranga: National flag can now be machine-made, in polyester". The Business Standard. 2022-06-01 இம் மூலத்தில் இருந்து 11 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220611081021/https://www.business-standard.com/article/current-affairs/har-ghar-tiranga-national-flag-can-now-be-machine-made-in-polyester-122060100386_1.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "National Flag". National Portal of India. Government of India. Archived from the original on 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 8 February 2010.
  • "History of Indian Tricolour". National Portal of India. Government of India. Archived from the original on 9 August 2010. பார்க்கப்பட்ட நாள் 15 August 2010.
  • "Flag Code of India" (PDF). Ministry of Home Affairs (India). Archived from the original (PDF) on 19 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.