உள்ளடக்கத்துக்குச் செல்

அலீசியா எம். சோடர்பர்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருந்தேதார்ன் உச்சியில் அலீசியா எம். சோடர்பர்கு, 2001.

அலீசியா மார்கரிதா சோடர்பர்கு (Alicia Margarita Soderberg) (பிறப்பு: 1977) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராகவும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகவும் உள்ளார். இவரது ஆய்வு விண்மீன் பெருவெடிப்புகளில் அமைந்துள்ளது.

இவர் போசுடனில் பிறந்தார். கேப் கோடில் அமைந்த மசாசூசட் பால்மவுத்தில் வளர்ந்தார். இங்கு இவர் மச்சாசூசட் பால்மவுத் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் கோடை மாதங்களில் அருகில் அமைந்த வுட்சுகோல் கடலியல் நிறுவனத்தில் கடற்கரை குளங்களில் நீர்மாசு விளைவைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். இவர் பேட்சு கல்லூரியில் சேர்ந்து 2000 இல் கணிதவியலிலும் இயற்பியலிலும் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் வானியற்பியலுக்கான ஆர்வாடு-சுமித்சோனிய மையம், அரிசோனா கிட் பீக் தேசிய வான்காணகம், சிலியில் உள்ள செரோ தொலோலோ அமெரிக்க நாட்டிடை வாண்காணகம், பியூயெர்ட்டோ இரீகோவில் உள்ள அரெசிபோ வான்காணகம், நியூமெக்சிகோவில் உள்ள இலாசு அலமாசுதேசிய ஆய்வகம் ஆகிய இடங்களில் கோடை நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இவர் பயன்முறை கணிதவியலில் கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தில் மூதறிவியல் பட்ட்த்தைப் பெற்றார். இவருக்கு வானியற்பியல் முனைவர் பட்ட்த்தை கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் வழங்கியது. இவரது ஆய்வு வழிகாட்டி சிறீனிவாசு குல்கர்ணி ஆவார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பலோமார் வான்காணகத்திலும் மீப்பெரிய குறுக்கீட்டளவி அணியிலும் திரட்டிய நோக்கீடுகளைக் கொண்டு காம்மக் கதிர் வெடிப்புகளையும் வகை Ib, Ic விண்மீன் பெருவெடிப்புகளை நன்கு ப்ரிதலுக்கானதாக அமைந்தது. இந்த விண்மீன் பெருவெடிப்புகள் புறப்பகுதி அல்லது புறணியிழந்த அகடுகுலையும் விண்மீன் விண்மீன் பெருவெடிப்புகளின் வகைகள் ஆகும்.[1]

ஏரிசு விண்மீன் குழுவில் 440 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் (135 மெகா பார்செக்குகளுக்கு அப்பால்) அமைந்த GRB 060218 எனும் காம்மாக்கதிர் வெடிப்பை 2006 பிப்ரவரி 18 இல் கண்டுபிடித்த ஆய்வாளர் குழுவில் சோடர்பர்கு ஓர் உறுப்பினராவார். பிறகு இதோடு தொடர்புடைய SN2006aj எனும் விண்மீன் பெருவெடிப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு காம்மாக்கதிர் வெடிப்புகளை விண்மீன் பெருவெடிப்புகளின் காலத்தோடு இணைப்பதற்கு நல்ல சான்றாக விளங்கியது.[2]

சோடர்பர்கும் அவரது குழுவினரும் 2008 ஜனவரி 9 இல் நாசாவின் விரைவுக் காம்மாக்கதிர் வெடிப்புத் திட்டத்தின் எக்சு கதிர் விண்வெளித் தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி SN 2008D எனும் விண்மீன் பெருவெடிப்பை அது நிகழும்போதே கண்டுபிடித்தனர். இது 88 மில்லியன் ஒளியாண்டுகளூக்கு (27 மெகா பார்செக்குகளுக்கு) அப்பால் உள்ள NGC 2770 எனும் சுருள்பால்வெளியில் அமைந்த ஒரு முன்னோடி விண்மீனை வைத்து கண்டறியப்பட்டது. மேலும், இவர்கள் புவித்தரையிலுள்ள வான்காணகங்களையும் விண்வெளியில் சுற்றிவரும் வான்காணகங்களையும் இந்நிகழ்ச்சியைப் பதியுமாறு எச்சரித்தனர்.[3][4] இவர்கள் ஏற்கெனவே SN 2007uy எனும் விண்மீன் பெருவெடிப்பை நோக்க, NGC 2770 விண்மீன் பெருவெடிப்பின் நோக்கிடுகளில் ஈடுபட்டிருந்ததால், இக்குழு இந்த புது விண்மீன் பெருவெடிப்பை அது நிகழும்போதே கண்டறிய முடிந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]