உள்ளடக்கத்துக்குச் செல்

அரியநாயகம் சந்திரநேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியநாயகம் சந்திரநேரு
Ariyanayagam Chandra Nehru
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-10-15)அக்டோபர் 15, 1944
திருக்கோவில், அம்பாறை மாவட்டம், இலங்கை
இறப்புபெப்ரவரி 8, 2005(2005-02-08) (அகவை 60)
பொலன்னறுவை, இலங்கை
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உறவுகள்அறப்போர் அரியநாயகம், தந்தை
பிள்ளைகள்சந்திரநேரு சந்திரகாந்தன்

அரியநாயகம் சந்திரநேரு (15 அக்டோபர் 1944 - பெப்ரவரி 8, 2005) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] தொழிலதிபரும் ஆவார். மனித உரிமைகளுக்கான வடகிழக்கு செயலகத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தவர். 2005 பெப்ரவரி 7 இல் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்து பெப்ரவரி 8 இல் உயிரிழந்தார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர்.[4] இவரது தந்தை "அறப்போர்" கே. ஏ. டபிள்யூ. அரியநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். புரட்டஸ்தாந்துக் கிறித்தவர்.[4]

சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில் இருந்து விலகி மாலைதீவுக் கப்பல் ஒன்றில் இரண்டாம் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.[4] ஆறு ஆண்டுகளில் கப்பல் காப்டனாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகள் மாலைதீவுக் கப்பலில் பணியாற்றினார். இக்காலத்தில் சிங்களப் பெண் ஒருவரைத் திருமணம் புரிந்தார்.[4] எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுமுறையில் நாடு திரும்பிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டார்.[4] சிறை வாழ்க்கை அவரை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்தது. ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.

1990களில் இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற்று திருக்கோவில் திரும்பினார். அங்கு அவர் பல கடைகளைக் கொல்வனவு செய்து தொழிலதிபரானார்.[4]

அரசியலில்

[தொகு]

2001 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரநேரு அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5] 2004 தேர்தலில் போட்டியிட்டு 25,572 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6]

படுகொலை

[தொகு]

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் கௌசல்யன், மற்றும் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய மூன்று விடுதலைப் புலிகள், ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.[2] இத்தாக்குதலை அரசத் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.[3][7][8][9]}} விடுதலைப் புலிகள் அமைப்பு சந்திரநேருவிற்கு "நாட்டுப்பற்றாளர் விருது", மற்றும் "மாமனிதர்" விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.[4]

குடும்பம்

[தொகு]

சந்திரநேருவிற்கு ஏழு பிள்ளைகள். இவர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆவார்.[4] சந்திரநேருவின் சகோதரர் ரூபன் மெதடித்த திருச்சபை மதகுருவாகப் பணியாற்றுகிறார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Past Members: Ariyanayagam Chandra Nehru". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 "Wounded ex-TNA MP dies". தமிழ்நெட். 8 பெப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 Killing raises Sri Lanka war fear
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 Chandranehru: Patriotic son of the Eastern Soil பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - டி. பி. எஸ். ஜெயராஜ்
  5. "General Election 2001 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
  6. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
  7. "Tamil tigers ambushed" (PDF). Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.
  8. Sri Lanka hard-line sinhala military brutal terror
  9. Government condemns killing[தொடர்பிழந்த இணைப்பு]