உள்ளடக்கத்துக்குச் செல்

ஐம்பெருங் காப்பியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:18, 26 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (அணிகலப் பெயர்கள்: எண் பட்டியல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.[1]

அணிகலப் பெயர்கள்

[தொகு]

இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.

  1. சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
  2. மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
  3. குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாற்றை கூறும் நூல்.
  4. வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
  5. சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு

சிலப்பதிகாரம்

[தொகு]

சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதான மாதவி, இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

என்கிற பதிக வரிகளில், முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மணிமேகலை

[தொகு]

மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால், மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும், உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி, புத்த சமய மடம் ஒன்றில், அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன், மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு, பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:

அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லை.

குண்டலகேசி

[தொகு]

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல், ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பௌத்த துறவியாகி, அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே, இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.ஆசிரியர் நாத குத்தனார்

வளையாபதி

[தொகு]

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.

சீவக சிந்தாமணி

[தொகு]

திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காப்பியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்பனின், 'சத்திர சூடாமணி'யைப் பின்பற்றியது; அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய 'உத்தரபுராண'த்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர், சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சனரஞ்சகமாகவும், இனக்கவர்ச்சியுடனும், கற்பனையுடனும் தமிழில் எழுத, திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.

நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுட்கள் ஒவ்வொன்றும், நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையன. ஆசிரியர், 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில், சில, அவருடைய குருவாலும், வேறு சில, வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, 'இவை குருவால் எழுதப்பட்டவை' என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுதப்பட, சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி, அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. காப்பியங்கள்
  2. சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 877.