திருத்தந்தைத் தேர்தல்
திருத்தந்தைத் தேர்தல் (ஆங்கில மொழி: Papal conclave) என்பது கர்தினால்கள் உரோமை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய ஆயரைத் தேர்வு செய்யக் கூடும் கூட்டம் ஆகும். புனித பேதுருவின் வழிவந்தவரெனக் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் உரோமை ஆயர், திருத்தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார்.[1] திருத்தந்தை கத்தோலிக்கத் திருச்சபையின் கண்காணும் தலைவராக ஏற்கப்படுகின்றார். மேலும் திருத்தந்தை வத்திக்கான் நாட்டின் அரசுத் தலைவரும் ஆவார். ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடப்பில் உள்ள மிகப் பழைமையான முறை திருப்பீடத் தேர்தல் முறையாகும்.
காலம் காலமாக நடைபெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் கி.பி. 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான திருத்தந்தை பத்தாம் கிரகோரி 1274 இல் இரண்டாம் இலியோன்ஸ் பொதுச்சங்கத்தின்போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாகப் பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வைக்கவும், அவர்கள் புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாதெனவும் உத்தரவிட்டார்.[2]
இக்காலத்தில் திருப்பீடத் தேர்தல் வத்திக்கான் நகரில் உள்ள திருத்தூதர் மாளிகையில் இருக்கும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடைபெறுவது வழக்கம்.[3] திருத்தூதர்களின் காலம் முதல், உரோமை ஆயரும், மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போலவே, மறைமாவட்ட இறைமக்கள் மற்றும் குருக்களின் கருத்துகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.[4]
1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியதென வரையறுக்கப்பட்டது.[5] 1970 இல், திருத்தந்தை ஆறாம் பவுல் திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத கர்தினால்கள் மட்டுமே வாக்களிக்க முடியுமெனச் சட்டம் இயற்றினார்.
தற்போது வழக்கில் உள்ள விதிமுறைகளும் நெறிமுறைகளும் திருத்தந்தை முத்.இரண்டாம் யோவான் பவுலினால் Universi Dominici Gregis (ஆண்டவருடைய அனைத்து உலக மந்தையின் ஆயர்) என்னும் திருத்தூதரக ஆணையால் (apostolic constitution) நிறுவப்பட்டு[3] திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் சொந்த விருப்பப்படி (motu proprio) 11 ஜூன் 2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது ஆகும். திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்படுபவர் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்குப் பெற்றிருக்க வேண்டும்.[6][7]
வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள்
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தேவை எழுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஏற்கனவே பதவியில் இருந்த திருத்தந்தை தம் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கலாம், அல்லது அவர் தமது திருத்தந்தைப் பணியைத் துறந்திருக்கலாம்.
கிறித்தவத்தின் தொடக்கக் காலத்தில் பொதுவாக, திருத்தந்தையர்கள் மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போலவே மக்களாலும் குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில சமயங்களில் பொதுமக்கள் யார் திருத்தந்தையாகப் பதவி ஏற்க வேண்டும் என்பதைக் குரலெழுப்பி அறிவித்ததும் உண்டு.
நடுக்காலத்தில் திருத்தந்தை ஆன்மிகத் தலைமையோடு அரசியல் தலைமையையும் ஏற்றார். அப்போது சில அரசர்கள் அவருடைய ஆட்சியில் தலையிட்டதுண்டு. கி.பி. 875இல் சார்லஸ் மன்னன் திருத்தந்தைக்கு ஓர் அரியணையைப் பரிசாக அளித்தார். அதுவே "பேதுருவின் திருப்பீடம்" என்று பெயர் பெற்றது. திருத்தந்தை ஆன்மிகத் தலைவராக இருந்து கிறித்தவ சமயத்தை அறிவிக்கவும், ஆட்சியாளராகச் செயல்படவும் உரிமை கொண்டுள்ளார் என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கர்தினால்மார்களுக்கு மட்டுமே வழங்கப்படுதல்
1059ஆம் ஆண்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. திருத்தந்தை இரண்டாம் நிக்கோலாஸ் அந்த ஆண்டில் புகுத்திய மாற்றத்தின்படி, கர்தினால்மார் முதலில் ஒருவரைத் திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்து, குருக்கள் மற்றும் பொதுநிலையினரின் இசைவுபெற்று அவர் பதவி ஏற்பது என்று ஏற்பாடாயிற்று. கர்தினால்மார்கள் மூன்று உட்பிரிவுளுள் அடங்குவர்: கர்தினால்-ஆயர்கள், கர்தினால்-குருக்கள், கர்தினால்-திருத்தொண்டர்கள்.[8] இந்த உட்பிரிவுக்கு ஏற்ப, முதலில் கர்தினால்-ஆயர்கள் ஒன்றுகூடி வந்து, திருத்தந்தைப் பதவிக்கு ஒருவரை முன்குறிப்பர். பின்னர் அவர்கள் கர்தினால்-குருக்களையும் கர்தினால்-திருத்தொண்டர்களையும் அழைத்து, தாம் முன்குறித்த நபர் பதவி ஏற்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வர்.
1139இல் நிகழ்ந்த இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம், புதிய திருத்தந்தையை ஏற்பதற்கு, கீழ்நிலை குருக்களும் பொதுநிலையினரும் இசைவுதர வேண்டும் என்னும் நிபந்தனையை அகற்றியது. தொடர்ந்து, 1179இல் நிகழ்ந்த மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம் திருத்தந்தையைத் தேர்வுசெய்வதில் எல்லா நிலை கர்தினால்மார்களுக்கும் சம உரிமை வழங்கியது.
மேலும் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் கர்தினால்மார்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கினைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் ஒழுங்கும் புகுத்தப்பட்டது.
திருத்தந்தைத் தேர்தலின்போது கர்தினால்மார்களை அடைத்துவைக்கும் முறை
நடுக்காலத்தின் பெரும்பகுதியிலும் மறுமலர்ச்சிக் காலத்திலும் கர்தினால்மார்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக, திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டரையும், பின்னர் திருத்தந்தை இருபத்தொன்றாம் யோவானையும் தேர்ந்தெடுத்தபோது வெறும் ஏழு கர்தினால்மார் மட்டுமே இருந்தனர்.
நீண்ட பயணம் செய்து உரோமை வருவது கடினமாக இருந்தது. சக்திவாய்ந்த உரோமைக் குடும்பங்கள் திருத்தந்தைத் தேர்தலில் தலையிட்டன. இதனால், சில வேளைகளில் திருத்தந்தைத் தேர்தல் மாதக் கணக்காக, ஏன் ஆண்டுக்கணக்காகக் கூட நீடித்தது.
இவ்வாறு திருப்பீடம் காலியாகக் கிடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. 1268ஆம் ஆண்டு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க 19 கர்தினால்கள் இத்தாலியின் விட்டேர்போ (Viterbo) நகரில் ஆயர் இல்லத்தில் கூடினார்கள். யாரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் நடுவே ஒத்த கருத்து பல மாதங்களாகவே உருவாகவில்லை. புதிய திருத்தந்தை இல்லாத நிலையில் மக்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் கர்தினால்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் முதலில் ஆயர் இல்லத்தை அடைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகும் தேர்தல் நிகழவில்லை. பின்னர் அந்த இல்லத்தின் கூரையைப் பிரித்து எடுத்தார்கள். இவ்வாறு, தேர்தலுக்காக உள்ளே கூடியிருந்த கர்தினால்மார்கள் இல்லம் வெயிலுக்கும் மழைக்கும் திறந்துவிடப்படலாயிற்று. அதன்பிறகும் 33 மாதங்கள் கடந்த பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பத்தாம் கிரகோரி என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.
தமது தேர்தல் அனுபவத்தின் பின்னணியில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி திருத்தந்தைத் தேர்தல் முறையில் ஒரு சீர்திருத்தம் கொண்டுவந்தார். அதன்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிவரும் கர்தினால்மார்கள் ஒரு பெரிய அறையில் அடைக்கப்படுவார்கள். அந்த அறையைச் சாவியால் பூட்டிவிடுவார்கள். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வரை அந்த அறை சாவியால் பூட்டியே இருக்கும். திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தபின்னரே அந்த அறை மீண்டும் சாவியால் திறக்கப்படும். இதிலிருந்துதான், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் முறை conclave என்னும் பெயர்பெற்றது. Cum + clavis என்னும் இரண்டு இலத்தீன் சொற்களாலான இச்சொல்லுக்கு சாவியால் பூட்டுதல் என்பதே பொருள். ஒவ்வொரு கர்தினாலுக்கும் இரண்டு பணியாட்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
இவ்வாறு அடைக்கப்பட்ட கர்தினால்மார்கள் விரைவில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கத் தவறினால், நான்காம் நாளிலும் ஒன்பதாம் நாளிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
கடின ஒழுங்கு கைவிடப்படல்
மேற்கூறிய ஏற்பாடு மிகக் கடுமையாகிப் போய்விட்டது என்று கர்தினால்மார் குறைகூறியதைத் தொடர்ந்து அது 1276இல் கைவிடப்பட்டது. புதிய ஒழுங்குமுறை வழங்கப்படாததால் நீண்ட தேர்தல் நடைபெறும் வழக்கம் தொடர்ந்தது. இத்தகைய நீண்ட தேர்தல் ஒன்றில்தான் 1294இல் திருத்தந்தை ஐந்தாம் செலஸ்தீன் என்று திருத்தந்தைப்பெயர் சூடிக்கொண்ட ஒரு பெனதிக்து சபைத் துறவி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரைகுறை விருப்போடு திருத்தந்தைப் பொறுப்பை ஏற்ற அவர் ஐந்து மாதங்களுக்குள் தம் பணியிலிருந்து விலகினார்.
அரசியல் சூழ்நிலைகளால் 1309-1376 ஆண்டுகளில் திருத்தந்தைப் பணியிடம் உரோமையிலிருந்து பிரான்சு நாட்டு அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றப்பட்டது. அப்போது 1314-1316 காலத்தில் திருத்தந்தைப் பணியிடம் காலியாகவே இருந்தது. அதுபோலவே மேலைத் திருச்சபைப் பிளவுக் காலத்தில், ஒரே சமயத்தில் இரண்டு பேர் திருத்தந்தைப் பணிக்கு உரிமை கொண்டாடியதைத் தொடர்ந்து 1415-1417 ஆண்டுகளில் ஓர் இடைவெளி ஏற்பட்டது.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படல்
1587ஆம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கின்ற கர்தினால்மாரின் எண்ணிக்கை 70ஆக இருக்கும் என்று நிர்ணயித்தார். விவிலியத்தில் மோசே தமக்குத் துணையாளர்களாக 70 பேரைத் தேர்ந்துகொண்டார் (காண்க: எண்ணிக்கை:11-16-17) என்ற அடிப்படையில் இந்த ஒழுங்கு தரப்பட்டது. அவர்களுள் 6 பேர் கர்தினால்-ஆயர்கள், 50 பேர் கர்தினால்-குருக்கள், 14 பேர் கர்தினால்-திருத்தொண்டர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (ஆட்சி:1958-1963) திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, 1970இல் திருத்தந்தை ஆறாம் பவுல் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்களின் எண்ணிக்கையை 120 என்று உயர்த்தி, அதையே எல்லையாக நிர்ணயித்தார். மேலும், திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள கர்தினால்மார்களின் வயது 80ஐத் தாண்டியிருக்கலாகாது என்றும் அவரே சட்டம் இயற்றினார்.
120 கர்தினால்மாரே திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்பர் என்பது பொதுவான எல்லையாக இருந்தாலும், நடைமுறையில் திருத்தந்தை இரண்டாம் யோவான் ஆட்சிக்காலத்தில் சில வேளைகளில் 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்மார் 120க்கும் அதிகமானவர்களாக இருந்ததும் உண்டு. இது, சில கர்தினால்மார் விரைவில் 80 வயதைத் தாண்டிவிடுவார்கள் என்பதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.
அதே திருத்தந்தை மற்றொரு வழிமுறையும் அளித்தார். அதாவது, திருப்பீடம் காலியாகும் நாளில் 80 வயது நிறையாத கர்தினால்மார், தேர்தலுக்காகக் கர்தினால் குழு கூடும் நாளில் அந்த வயது எல்லையைத் தாண்டிவிட்டாலும் தேர்தலில் கலந்துகொண்டு வாக்களிக்கலாம்.
திருத்தந்தைத் தேர்தல் நடைபெறுகின்ற சிஸ்டைன் சிற்றாலயம்
நடுக்காலத்தில் திருத்தந்தை எந்த நகரில் இறந்தாரோ அங்கேயே அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு இத்தாலியின் பெரூஜியா மற்றும் அஞ்ஞானி ஆகிய நகர்களில் நடைபெற்ற திருத்தந்தைத் தேர்தல் கூட்டங்களைக் குறிப்பிடலாம்.
வத்திக்கான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1455இலிருந்து திருத்தந்தைத் தேர்தல்கள் நடந்துள்ளன. பெரும் சமயப்பிளவு ஏற்படுவதுவரை அத்தேர்தல்கள் உரோமையில் மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்னும் தோமினிக் சபைத் துறவு மடத்தில் நடந்தன.
அண்மைக் காலத்தில் வத்திக்கான் நகரில் திருத்தந்தை இல்லத்தோடு சேர்ந்த சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால்மார்கள் கூடித் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இச்சிற்றாலயத்தில் நடந்த முதல் திருத்தந்தைத் தேர்தல் கூட்டம் 1492இல் நிகழ்ந்தது. அதில் ஆறாம் அலெக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடையே, ஒரு சில திருத்தந்தைத் தேர்தல்கள் வேறு இடங்களில் நடந்தாலும் 1878இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து, சிஸ்டைன் சிற்றாலயமே திருத்தந்தைத் தேர்தல் நிகழும் இடமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.
திருத்தந்தைத் தேர்தல் நிகழ்கின்ற இன்றைய முறை
- கர்தினால்மார் தங்கும் இடம்:
திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக உரோமையில் வந்து கூடுகின்ற கர்தினால்மார் முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்து, கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் வத்திக்கானின் உள்ளே அமைந்துள்ள "புனித மார்த்தா இல்லம்" என்னும் விடுதியில் தங்கியிருப்பார்கள். அந்த விடுதி முன்னாட்களில் அகதிகள் மற்றும் நோயுற்றோரைப் பேணும் இல்லமாகவும், திருத்தந்தையைச் சந்திக்க வரும் தலைவர்கள் போன்றோர் தங்கியிருக்கும் விடுதியாகவும் பயன்பட்டதுண்டு. ஆனால் 1996இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அந்த இல்லத்தைப் புதுப்பித்து, திருத்தந்தைத் தேர்தலுக்கு வருகின்ற கர்தினால்மார் தங்கியிருக்க வசதியான இல்லமாக மாற்றியமைத்தார். அங்கு 105 பேர் தங்கியிருக்க முடியும்.
- இரு உரைகள்:
கர்தினால்மார் சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் நுழைந்து, தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் இரண்டு உரைகளைக் கேட்பார்கள். 2005 திருத்தந்தைத் தேர்தல் அவையின் முதல் உரையை வழங்கியவர் அருள்திரு ரனியேரோ காந்தலாமெஸ்ஸா என்பவர். இவர் திருத்தந்தை இல்லப் போதகர் என்னும் பதவியில் இருந்தார். அதுபோலவே 2013 திருத்தந்தைத் தேர்தலிலும் ஒருவர் உரையாற்றுவார். இந்த உரை கர்தினால்மார் சிஸ்டைன் சிற்றாலயத்துக்குள் நுழைவதற்குமுன் நிகழும். அதன்பின், தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு, கர்தினால்மார் சிற்றாலயத்துக்குள் நுழைந்து தேர்தலில் வாக்களிக்கத் தயாரான நிலையில், அச்சிற்றாலயத்தின் உள்ளே கர்தினால்மார்களுக்கு இன்னொரு உரை வழங்கப்படும். இந்த உரைகள் இன்று திருச்சபை எந்நிலையில் உள்ளது என்பதையும் இக்காலத்தில் திருச்சபையை வழிநடத்துவதற்குத் திருத்தந்தை எப்பண்புகள் உடையவராய் இருக்க வேண்டும் என்றும் விளக்கும். மேலும், தேர்தலின்போது கர்தினால்மார் எவ்விதத்தில் வாக்கு அளிப்பது, எந்த ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது போன்ற காரியங்களை விளக்கிக்கூறுவனவாகவும் அவ்வுரைகள் அமையும்.
- தூய ஆவியின் துணை வேண்டுதல்:
தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டதும், அந்தத் தேர்தல் நாளின் காலையில் கர்தினால் வாக்காளர்கள் அனைவரும் புனித பேதுரு பெருங்கோவிலில் கூடி, திருப்பலி நிறைவேற்றுவார்கள். நண்பகலில் அவர்கள் வத்திக்கானின் திருத்தந்தை இல்லத்தில் உள்ள புனித பவுல் சிற்றாலயத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சிஸ்டைன் சிற்றாலயம் நோக்கிப் பவனியாகச் செல்வார்கள். அப்போது, "தூய ஆவியே எழுந்தருளி வாரும்" என்னும் இறைவேண்டலைப் பாடலாகப் பாடிச் செல்வார்கள்.
- உறுதிமொழி அளித்தல்:
பின்னர் கர்தினால் வாக்காளர்கள் உறுதிமொழி அளிக்கும் சடங்கு நிகழும். ஒவ்வொருவரும் நற்செய்தி நூல்தொகுதியைத் தொட்டு, தாம் தேர்தல் விதிகளைத் துல்லியமாகக் கடைபிடிக்கப்போவதாகவும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருச்சபையின் நன்மையைக் காப்பதாகவும், இரகசியம் காப்பதாகவும், வாக்களிக்கும்போது வெளியிலிருந்து வரும் கட்டாயங்களுக்கு உட்படாமலிருப்பதாகவும் அவர்கள் வாக்களிப்பர். கர்தினால் குழுவின் தலைவர் உரத்த குரலில் உறுதிமொழி வாசகத்தைக் கூறுவார்; ஒவ்வொரு கர்தினாலும் நற்செய்தி நூல்தொகுதியைத் தொட்டு, "அவ்வாறே வாக்களிக்கிறேன், உறுதிகூறுகிறேன், ஆணையிடுகிறேன்" என்று கூறுவார்கள்.
- "அனைவரும் வெளியேறுக!" என்னும் சடங்கு:
எல்லா கர்தினால் வாக்காளர்களும் உறுதிமொழி அளித்ததும், திருத்தந்தை வழிபாட்டுத் தலைவர் சிஸ்டைன் சிற்றாலயத்தின் நுழைவாயில் அருகே நின்றுகொண்டு, "அனைவரும் வெளியேறுக!" (இலத்தீன்: Extra omnes!) என்று உரத்த குரலில் கட்டளையிடுவார். உடனே கர்தினால் வாக்காளர்கள் மற்றும் வாக்கெடுப்பில் உதவிசெய்ய நியமிக்கப்பட்ட ஒருசிலர் தவிர மற்றனைவரும் வெளியேறுவர். அதைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலைவர் சிற்றாலயத்தின் கதவை இழுத்து மூடுவார்.[9]
- கர்தினால்மார்களுக்கு ஆற்றப்படும் இரண்டாவது உரை:
சிற்றாலயத்தின் கதவு மூடப்படும்போது வழிபாட்டுத் தலைவர் மற்றும் கர்தினால்மார்களுக்கு உரையாற்றுபவர் ஆகியோர் ஆலயத்தின் உள் இருப்பர். கர்தினால்மாருக்கு ஆற்றப்படும் உரையில் இன்றைய திருச்சபை சந்திக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் எப்பண்புகள் கொண்டவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கிக் கூறப்படும். மேலும் கர்தினால்மார் தேர்தல்குறித்த அனைத்து ஒழுங்குகளையும் கடைப்பிடிக்கக் கேட்டுக்கொள்ளப்படுவர். உரையாற்றியதும் உரையாளர் சிற்றாலயத்தைவிட்டு வெளியேறுவார்.
- ஐயங்கள் தெளிவுபடுத்தல்:
பின்னர் இறைவேண்டல் நடைபெறும். அதைத் தொடர்ந்து கர்தினால் குழுத் தலைவர் தேர்தல்குறித்து எழுகின்ற ஐயங்களைத் தெளிவுபடுத்துவார்.
- தாமதமாக வரும் கர்தினால்மார்:
ஏதாவது காரணத்தை முன்னிட்டு தேர்தல் அவைக்குத் தாமதமாக வரும் கர்தினால் உள்ளே அனுமதிக்கப்படுவார். நோய் காரணமாக வெளியேறவேண்டிய நிலையில் இருக்கும் கர்தினால் மீண்டும் உள்ளே வரலாம். ஆனால் உடல் நலக்குறைவு தவிர வேறு காரணங்களை முன்னிட்டு வெளியே செல்லும் கர்தினால் மீண்டும் உள்ளே வர இயலாது.
- கர்தினால்மார் தவிர்த்த பிறர் பற்றிய ஒழுங்குகள்:
மருத்துவ உதவி தேவைப்படும் கர்தினாலுக்கு மருத்துவ உதவியாளர் அனுமதிக்கப்படுவார். கர்தினால் குழுவின் செயலர், திருத்தந்தை வழிபாட்டுக் குழுத் தலைவர், வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர் இருவர், திருத்தந்தை வழிபாட்டு உடையகக் காப்பாளர் இருவர், கர்தினால் குழுத் தலைவருக்குத் துணைபுரியும் குரு ஆகியோர் கர்தினால் வாக்காளர்களோடு சிஸ்டைன் சிற்றாலயத்தில் வாக்கெடுப்பின்போது இருக்கலாம்.
மேலும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்குவதற்காகக் குருக்களின் உதவி கர்தினால்மார்களுக்குக் கிடைக்கும். வீட்டுப் பராமரிப்புக்காகவும் உணவு தயாரித்து பரிமாறுவதற்காகவும் சிலர் அனுமதிக்கப்படுவர்.
- இரகசியம் காத்தல்:
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவைக் கூட்டத்தின்போது நடப்பவற்றை இரகசியமாகக் காக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை ஆகும். தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார், அவர்களுக்குத் துணையாகப் போகின்ற பிற அலுவலர்கள் அனைவருமே இரகசியம் காப்பதாக உறுதிமொழி கொடுப்பார்கள். கர்தினால்மார்கள் தேர்தல் அவையின் அறைக்குள் நுழைந்த பிறகு வெளி உலகத்தோடு அஞ்சல், தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற விதங்களில் தொடர்புவைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இரகசியம் காப்பதற்கான முக்கிய காரணம், திருத்தந்தைத் தேர்தலில் வெளியுலக அரசியல் மற்றும் செய்தி ஊடகங்களின் தலையீடு நிகழ்ந்து, குறிப்பிட்ட நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்கலாகாது என்னும் நிர்ப்பந்தம் கர்தினால் வாக்காளர்களுக்கு ஏற்படலாகாது என்பதாகும்.
திருத்தந்தைத் தேர்தல்குறித்த இரகசியத்தைக் காப்பாற்றத் தவறி, அதை வெளிப்படுத்துவோருக்கு சபைநீக்கம் என்னும் கடின தண்டனை அளிக்கப்படுகிறது.
திருத்தந்தைத் தேர்தலின்போது நடைபெறுவதை ஒற்றுக் கேட்கவோ பார்க்கவோ இயலும்வண்ணம் நவீன கருவிகளைத் தேர்தல் அறையில் ஒளித்துவைப்போரும் சபைநீக்கம் என்னும் தண்டனைக்கு ஆளாவர்.
- வாக்குச் சீட்டு:
முன்னாட்களில் கர்தினால்மார் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்திய வாக்குச்சீட்டு சிறிது அணிசெய்யப்பட்டிருந்தது. இப்போது அது சாதாராண சிறிய அட்டை மட்டுமே. அதில் இலத்தீன் மொழியில் "....என்பவரை நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கிறேன்" என்று மட்டும் இருக்கும். அதில் ஒவ்வொரு கர்தினாலும் தாம் தேர்ந்தெடுக்கும் நபரின் பெயரை எழுதுவார்.
- வாக்குச் சீட்டைக் கிண்ணத்தில் இடுதல்:
சீட்டில் தாம் தேர்ந்தெடுக்க முடிவுசெய்த நபரின் பெயரை எழுதியபின் ஒவ்வொரு கர்தினால் வேட்பாளரும் தம் இருக்கையிலிருந்து எழுந்து மையப் பீடத்தை நோக்கிச் செல்வார். அப்பீடத்தின் பின்னணியில் மைக்கலாஞ்சலோவின் புகழ்மிக்க இறுதித் தீர்ப்பு (மைக்கலாஞ்சலோ) என்னும் சுவரோவியம் உள்ளது. அந்த ஓவியம் இயேசு கிறித்து உலகத்தின் முடிவில் எல்லா மக்களுக்கும் தீர்ப்பு வழங்கும் ஆண்டவராக வருவார் என்னும் கிறித்தவ நம்பிக்கையைக் கலையுணர்வோடு சித்தரிக்கின்றது. தாமும் கடவுளின் நீதித்தீர்ப்பின் முன்னிலையில் தமது மனசாட்சிக்கு ஏற்ப, திருச்சபையின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திருச்சபையை வழிநடத்த தகுதிவாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக ஒவ்வொரு கர்தினாலும் அந்த ஓவியத்தால் நினைவூட்டப்படுகிறார்.
பீடத்தின்மேல் ஒரு பெரிய கிண்ணம் வைக்கப்பட்டிருக்கும். அதன்மேல் ஒரு தங்கத் தட்டு இருக்கும். பீடத்தைச் சென்றடைந்ததும் ஒவ்வொரு கர்தினாலும் முழந்தாளிட்டு அமைதியாகச் சிறிது இறைவேண்டல் செய்வார். பின் தம் வாக்குச்சீட்டை நான்காக மடித்து, அதைக் கிண்ணத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள தட்டில் வைத்து, அத்தட்டைச் சற்றே சரித்து, வாக்குச்சீட்டு கிண்ணத்தின் உள்ளே விழுமாறு செய்துவிட்டு, தம் இடத்திற்குத் திரும்புவார். இவ்வாறு ஒவ்வொரு கர்தினாலும் செய்வார்கள்.
- வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுதல்:
எல்லா கர்தினால்மாரும் தம் வாக்குச் சீட்டைக் கிண்ணத்தில் இட்டதும், ஏற்கனவே முற்குறிக்கப்பட்ட கர்தினால்மார் மூவர் ஒருவர் ஒருவராக ஒவ்வொரு சீட்டையும் பார்த்து, அதை வேறு மூன்று கர்தினால்களிடம் கொடுப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அச்சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரைப் பார்ப்பர். அவர்களுள் மூன்றாமவர் உரத்த குரலில் வாக்குச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் பெயரை வாசிப்பார். இவ்வாறு வாக்குகள் எண்ணப்படும். அப்போது ஒவ்வொரு கர்தினாலும் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புத் தாளில் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கின்றன என்பதைக் குறித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வாக்குச் சீட்டு வாசிக்கப்பட்டதும் நூல் கோக்கப்பட்ட ஓர் ஊசியால் அந்தச் சீட்டில் ஒரு துளை இட்டு, நூலில் ஒவ்வொன்றாகக் கோப்பார்கள். பின் எல்லாச் சீட்டுகளையும் அந்த நூலால் சுற்றி ஒரு கட்டாகக் கட்டுவார்கள்.
- அறுதிப் பெரும்பான்மை வாக்குகள் தேவை:
ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் கர்தினால்மார்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் மூன்றில் இருபங்கு வாக்குகள் தேவைப்படுகின்றன. 2013 திருத்தந்தைத் தேர்தலில் கலந்து வாக்களிக்கும் கர்தினால்மார் 115 பேர் என்பதால், யாருக்கு 77 வாக்குகள் கிடைக்கின்றனவோ அவரே திருத்தந்தையாகப் பதவி ஏற்பார்.
- வாக்கெடுப்பின் எண்ணிக்கை:
சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால்மார் வாக்களிக்க நிகழ்கின்ற ஒவ்வொரு அமர்விலும் இருமுறை வாக்கெடுப்பு நிகழும். வழக்கமாக, காலையில் ஓர் அமர்வும் பிற்பகலில் ஓர் அமர்வும் நிகழும்.
- போதிய வாக்கு கிடைக்காவிட்டல் கரும்புகை:
2013 திருத்தந்தைத் தேர்தலில் முதல் வாக்களிப்பு அமர்வு 2013, மார்ச்சு 12ஆம் நாள் பிற்பகலில் நிகழும். அப்போது இருமுறை வாக்கெடுப்பு நடக்கும் அந்த அமர்வில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்கு கிடைக்காவிட்டால், நூலில் கோக்கப்பட்டு கட்டப்பட்ட வாக்குசீட்டுகளின் கட்டு சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள இரு அடுப்புகளில் இட்டு எரிக்கப்படும். அப்போது, கர்தினால்மார் குறிப்புகள் எடுத்த தாள்களும் கூடவே இட்டு எரிக்கப்படும். கரும்புகை உண்டாக்குவதற்காக நனைந்த வைக்கோல் மற்றும் வேதிப்பொருள்களைச் சேர்ப்பதும் உண்டு. கரும்புகையானது சிற்றாலயத்தின் வெளிக்கூரையில் அமைக்கப்பட்டுள்ள புகைக் கூண்டு வழியாக வெளியேற்றப்படும். அப்போது வெளியே, புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தில் கூடிநிற்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்னும் செய்தியைக் கரும்புகை அறிவிக்கும்.
- திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டால் வெண்புகை:
தேர்ந்தெடுக்கப்படும் நபருக்குப் போதிய வாக்குகள் கிடைக்காதவரை, வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு கரும்புகை வெளியேற்றப்படும். ஒரு குறிப்பிட்ட அமர்வில் ஒருவர் மூன்றில் இரு பங்கு எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றுத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த அமர்வின்போது சேகரிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டுகளை அடுப்பில் இட்டு எரிக்கும்போது வெண்புகை உண்டாக்குவதற்குத் தேவையான வேதிப்பொருள்களையும் சேர்த்து எரிப்பார்கள். இவ்வாறு வெண்புகை வெளியாகிவிட்டால் மக்களுக்குத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி தெரியவரும்.
- திருத்தந்தையின் இசைவு கேட்டல்:
மூன்றில் இருபங்கு வாக்குகள் கிடைத்து ஒரு கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கர்தினால் குழுவின் தலைவர் அல்லது மற்றொரு மூத்த கர்தினால், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அணுகி, "திருத்தந்தைப் பணியை ஏற்க உமக்கு விருப்பமா?" என்று கேட்பார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் "விருப்பம்தான்" என்று பதில் அளித்தால் அந்த நேரத்திலிருந்து அவர் திருத்தந்தைப் பணியை ஏற்றதாகக் கருதப்படும். பின்னர் அவர் என்ன பெயரைத் தேர்ந்துகொள்ள விரும்புகிறார் என்னும் கேள்வி கேட்கப்படும். அதற்கு, புதிய திருத்தந்தை பதில் அளித்ததும் ஒவ்வொரு கர்தினாலும் அவர் முன்னிலையில் சென்று, முழந்தாட்படியிட்டு, அவருடைய பணிமோதிரத்தை முத்தமிட்டு, தாம் அவருக்குப் பணிந்து பணியாற்ற விரும்புவதைத் தெரிவிப்பார்கள்.
- அழுகை அறைக்குச் செல்தல்:
அழுகை அறை என்பது சிஸ்டைன் சிற்றாலயத்தோடு ஒட்டியிருக்கின்ற ஒரு சிற்றறை ஆகும். அங்கு புதிய திருத்தந்தை அணிந்துகொள்வதற்கான வெண்ணிறப் பணி அங்கி அவருக்காகக் காத்திருக்கும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை உணர்ச்சிவசப்பட்டிருப்பார்; தாம் ஏற்கவிருக்கின்ற பொறுப்பின் கனத்தை உணர்ந்து மனதார கண்ணீர் வார்க்க அவருக்குத் தேவையான தனியிடம் வேண்டும் என்னும் வகையில் அந்த அறை இப்பெயர் பெற்றது. யார் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது முன்கூட்டியே தெரியாது என்பதால் மூன்று அளவுகளில் அங்கிகள் இருக்கும். சிறிய அளவு, நடுத்தர அளவு, பெரிய அளவு என்றிருக்கின்ற அந்த அங்கிகளில் பொருத்தமானதை புதிய திருத்தந்தை அணிந்துகொள்வார். வெள்ளை அங்கியின் மேல் சிவப்பு நிறத்தால் ஆன தோள் உடையை அணிவார்.
- புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் செய்தியை மக்களுக்கு அறிவித்தல்:
புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் மேல்தள சாளரம் திறக்கப்படும். அனைவரிலும் மூத்த கர்தினால் அந்தச் சாளரத்தில் தோன்றி, வெளியே கூடிநிற்கின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும் உலக மக்களுக்கும் பின்வருமாறு இலத்தீனில் அறிவிப்பார்: உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன். நமக்குத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்! (இலத்தீனில்: Annuntio vobis gaudium magnum. Habemus Papam!).
மக்களின் ஆரவார ஒலி அடங்கியதும் மூத்த கர்தினால், புதிய திருத்தந்தை யார் என்றும் அவர் தேர்ந்துகொண்ட பணிப்பெயர் யாது என்றும் கீழ்வருமாறு இலத்தீனில் அறிவிப்பார்: "புனித உரோமைத் திருச்சபையின் வணக்கத்துக்குரிய [திருமுழுக்குப் பெயர்] மாண்புமிகு கர்தினால் [குடும்பப் பெயர்]. இவர்......என்னும் திருத்தந்தைப் பணிப்பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார்".
- புதிய திருத்தந்தை மக்களுக்கு ஆசிர் வழங்கல்:
அதன்பின் புதிய திருத்தந்தை புனித பேதுரு பெருங்கோவிலின் மேல் சாளரத்தில் தோன்றி மக்களுக்கு ஆசி வழங்குவார். இந்த ஆசி "நகருக்கும் உலகுக்கும்" (இலத்தீன்: Urbi et Orbi) என்று அழைக்கப்படுகின்றது. அதாவது, புதிய திருத்தந்தை தம் மறைமாவட்டமான உரோமை நகருக்கும் அனைத்துலகத் திருச்சபைக்கும் ஆசி அளிப்பார்.
குறிப்புகள்
- ↑ Fanning, William H. W. (1913). "Vicar of Christ". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Goyau, Georges (1913). "Second Council of Lyons (1274)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ 3.0 3.1 John Paul II (22 பிப்ரவரி 1996). Universi Dominici Gregis. Apostolic constitution. Vatican City: Vatican Publishing House.
- ↑ Baumgartner 2003, p. 4.
- ↑ Weber, N. A. (1913). "Pope Nicholas II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Benedict XVI (11 ஜூன் 2007). De aliquibus mutationibus in normis de electione Romani Pontificis (in Latin). Motu proprio. Vatican City: Vatican Publishing House.
- ↑ "Pope alters voting for successor". BBC News. 26 ஜூன் 2007.
- ↑ கர்தினால்மார் பிரிவுகள்
- ↑ Cardinals Gather to Mourn Pope, Choose Successor, 04.04.05, Newshour,
ஆதாரங்கள்
- Pius X (25 December 1904). "Vacante Sede Apostolica". Apostolic constitution. Pii X Pontificis Maximi Acta. 3. (1908) pp. 239–288.
- Piux XI (1 March 1922). "Cum Proxime". Motu proprio. AAS. 14. (1922) pp. 145–146.
- Pius XI (25 March 1935). "Quae Divinitus". Apostolic constitution. AAS. 27 (1935) pp. 97–113.
- Paul VI (15 August 1967). Regimini Ecclesiae Universae (in Latin). Apostolic constitution. AAS. 59. (1967) pp. 885–928. Vatican City.
- John Paul II (28 June 1988). Pastor Bonus. Apostolic constitution. Vatican City: Vatican Publishing House.
- Beal, John P.; Coriden, James A.; Green, Thomas J., eds. (2000). New Commentary on the Code of Canon Law. Mahwah, New Jersey: Paulist Press International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8091-0502-1.
- Burkle-Young, Francis A. (1999). Passing the Keys: Modern Cardinals, Conclaves, and the Election of the Next Pope. New York: The Derrydale Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56833-130-0.
- Kurtz, Johann Heinrich (1889). Church History 1. New York: Funk & Wagnalls. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-217-33928-5.* Levillain, Philippe; O'Malley, John W., eds. (2002). "The Papacy: An Encyclopedia". Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-92228-9.
- Baumgartner, Frederic J. (2003). Behind Locked Doors: A History of the Papal Elections. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-29463-2.
- Colomer, Josep M.; McLean, Iain (1998). "Electing Popes. Approval Balloting with Qualified-Majority Rule" பரணிடப்பட்டது 2012-12-20 at the வந்தவழி இயந்திரம். Journal of Interdisciplinary History (MIT Press) 29 (1): 1–22.
- Duffy, Eamon (2006). Saints and Sinners: A History of the Popes (3rd ed.). Connecticut: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-11597-0.
- Guruge, Anura (2010). The Next Pope After Pope Benedict XVI. WOWNH LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-615-35372-2.
- Pastor, Ludwig von. "History of the Papacy, Conclaves in the 16th century; Reforms of Pope Gregory XV, papal bulls: Aeterni Patris (1621) and Decet Romanum Pontificem (1622)".
- Reese, T. J. (1996). "Revolution in Papal Elections". America 174 (12): 4.
- Wintle, W. J. (June 1903). "How the Pope is Elected". The London Magazine.
- "Papal Conclave" பரணிடப்பட்டது 2013-02-21 at the வந்தவழி இயந்திரம் Catholic Almanac (2012). Huntington, Indiana: Our Sunday Visitor.
- "Inside the Vatican: National Geographic Goes Behind the Public Facade". National Geographic Channel. 8 April 2004.
- "How the Pope is Elected". ReligionFacts.com.
வெளி இணைப்புகள்
- Conclave infographic பரணிடப்பட்டது 2013-05-02 at the வந்தவழி இயந்திரம்
- Papal elections and conclaves by century
- Notes on Papal Elections and Conclaves from 1073
- Conclave Bibliography
- Short video "How Do They Choose the Pope?"
- A detailed examination of the voting procedure by Bruce Schneier
- The political science of papal elections
- யூட்யூப் ஒளிகாட்சிகள் - இத்தாலிய மொழியில் ஆங்கில மொழியாக்கத்தில் -