உள்ளடக்கத்துக்குச் செல்

உள்ளுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊள்ளூணர்வு:கடலாமைக் குட்டிகள், நிலத்திலிருந்து கடலுக்குள் பயணித்தல்
ஊள்ளூணர்வு:தன்னுடலில் ஒட்டியுள்ள நீரைச் சிலுப்பி வெளியேற்றும் இயல்பு

உள்ளுணர்வு (instinct) என்பது ஓர் உயிரினம் வெளியிலிருந்து கற்றுக்கொள்ளாமலேயே அகத்தே கொண்டிருக்கும் இயல்பான ஓர் உணர்வு ஆகும். எனவே, இயல்பூக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒவ்வோர் உயிரினமும் உயிர்வாழ மிக இன்றியமையாததாகும். ஆனால், இயல்பூக்கம் யாதென்று திட்டமாக இலக்கணங் கூறுவது அவ்வளவு எளிதன்று. இயல் பூக்கங்களின் தன்மை பற்றியும் எண்ணிக்கை பற்றியும் உள நூல் புலவர்களுள் கருத்து வேறுபாடுகளுண்டு. சிலர் இயல்பூக்கம் என்பதே கிடையாது என்று சொல்லுவர். சில அறிஞர், இயல்பூக்கம் என்னும் சொல்லையே விட்டு விட்டனர்.

விலங்கினங்களில் இயல்பூக்கம்

[தொகு]

குட்டிக்குரங்கு மரக்கிளையில் தாவிக்கொண்டிருக்கும் தனது தாயை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது உள்ளுணர்வு. அதே குட்டி நாளடைவில் ஒரு கல்லைப் பயன்படுத்திக் கொட்டையை உடைப்பது என்பது அது வெளியிலிருந்து கற்றுக்கொண்ட ஒன்று ஆகும். மீன் நீந்துதல் சிலந்தி வலை பின்னுதல், தேனீ மதுவைச் சேகரித்தல், குருவி கூடு கட்டுதல், மயில் தோகையை விரித்தாடுதல், பூனை எலியைப் பிடித்தல், குழந்தை மார்புண்ணுதல் இவை போன்றவை இயல் பூக்கச் செயல்களாகும்.

இயல்பூக்கத்தின் தன்மை

[தொகு]

மேற்கூறிய இயல்பூக்கச் செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு முழு உயிரியின் (Organism) செயலாகும் ; கண் இமைத்தல், கைபற்றல் போல் தனிப்பட்ட ஓர் உறுப்பின் செயலாகாது. இயல்பூக்கம் தொடர்பான பல செயல்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவை கூடு கட்டும்பொழுது ஒன்றன் பின்னொன்றாகப் பல செயல்களில் அது ஈடுபடுவதைக் காண்கின்றோம். இந்தச் செயல் தொடர்புகள் தற்காப்பையோ, இனக் காப்பையோ தரக்கூடியவை. இச் செயல்களைச் செய்யுமாறு உந்தும் சக்தி பிறவிச் சக்தியாகும். இச் செயல் புதிதாகத் தேடிக் கற்கும் ஒன்றன்று; பிறரைப் பார்த்துப் பயின்றதன்று. உதாரணமாக, தனிக் குளவி (Solitary wasp) உற்ற பருவம் அடையும்போது கூடுகட்ட ஆரம்பிக்கிறது. தரையின்கீழே குடைந்து வழி யொன்றைத் தோண்டி, இறுதியில் ஓர் அறையில் முட்டைகளையிடுகிறது. வெளிவந்து, தத்துக் கிளி ஒன்றைப் பற்றி அதன் நரம்பு மண்டலத்தில் கொட்டி அசையாதபடி செய்து, குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றிற்கு உயிருள்ள இரை கிட்டும்பொருட்டு, முட்டைகளின் அருகே வைக்கிறது. பிறகு, கூட்டை அடைத்துவிட்டுப் போய் இறந்துவிடுகிறது. இதைப் போலவே இதன் தாயும் குஞ்சு பொரிக்கு முன்னரே இறந்து விட்டபடியால் இந்தக் குளவி கூடு கட்டும் திறமையைத் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டதன்று. அந்தத் திறமை இயல்பாகவே அமைந்ததாகும். இதை நோக்கும்போது இதற்கு முன்னுணர்வும் புத்திசாதுரியமும் உண்டென்றும், இன்ன காரியத்தை இதற்காகச் செய்கிறோம் என்ற நோக்கத்துடனேயே கூடு கட்டுவதில் இது ஈடுபடுகிறது என்றும் நினைக்க வேண்டியதாயிருக்கிறது.

தவிர, சைக்கிள் விடுதல் போன்ற பழக்கச் செயல் போலல்லாமல் வேலையைத் திறம்படச் செய்யப்படுகிறது. ஆனால், பறவைகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் அவ்வளவு திறம்படப் பறப்பதில்லையே என்று கேட்போருக்குத், திறம்படாமைக்குக் காரணம் நரம்புகளும் தசைகளும் முதிராமையே என்றும், குஞ்சுகளைச் சற்றுப் பலம் பெறும்வரை அடைத்துவைத்திருந்தால், கூட்டிலிருந்து வெளியே விட்டவுடனே நன்றாகப் பறக்கும் என்றும் கூறுவோம். அன்றியும் ஒரே இனமான பறவைகள் ஒரே விதமான கூடு கட்டுகின்றன. இதிலிருந்து, இயல்பூக்கங்களின் சிறப்புக் குறிகளை ஒருவாறு உணர்கிறோம்.

சிறப்புக் குறிகள்

[தொகு]

இயல்புச் செயல் அல்லது கற்கப்படாத செயல். முழு உயிரியையும் உட்படுத்தும் சிக்கலான செயற்றொடர், தற்காப்பு, இனக்காப்புப் போன்ற வாழ்க்கைப் பயனுடைமை, முதல் முயற்சியிலேயே தகுதியாகச் செய்யப்படல், ஓரினத்தைச் சேர்ந்த உயிர்கள் எல்லாம் ஒரே தன்மையாயிருத்தல். இயல்பூக்கத்தைப் பற்றிய இவ் விலக்கணம் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றின் நடத்தையை நன்கு விளக்குகிறது. ஆனால் மனித இனத்தின் இயற்கைச் செயல்கள் இவற்றிலிருந்து சற்று மாறானவையாக இருத்தல்.[1] பற்றி இவ் விலக்கணத்தைச் சில உளவியலார் ஒப்புக்கொள்வதில்லை.[2]

இயல்பூக்கத்தின் பரிணாமம்

[தொகு]

உயிர்களின் பரிணாம ஏணியில் மேலே செல்லச்செல்ல, இயல்பூக்கத்தின் முக்கியத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. பூச்சிகள் போன்ற கீழ்ப்பிராணிகள் முற்றிலும் இயல்பூக்கங்களாலேயே வாழ்கின்றன வென்னலாம். அவை அனுபவத்தின் பயனாக மிகுதியாகக் கற்பதில்லை. இயற்கைச் செயனிலைகளைக்கொண்டே வாழ்க்கையில் சமாளித்துக்கொள்கின்றன.[3] அதனால் அரிய நிகழ்ச்சி ஏதேனும் தோன்றினால், அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ள அவற்றுக்குச் சக்தி கிடையாது. பல பூச்சிகள் தமக்கு வழக்கமான உணவுப் பொருள்கள் இல்லையேல் வேறு உணவுப் பொருள்கள் அருகில் இருந்தாலும், பட்டினி கிடக்கின்றனவென்று ஆராய்ச்சியால் தெரிகிறது. ஆனால் உயர்தரப் பிராணிகளிடம் இயல்பூக்கத்தின் ஆதிக்கம் குறைந்துகொண்டே வருகிறது. அனுபவத்தின் பயனாகக் கற்கும் ஆற்றல் அதாவது, வசதிக்கு ஏற்றவாறு தன்னைப் பொருத்தியமைத்துக்கொள்ளுதல் தோன்றுகிறது. மக்களிடத்தில் இயல்பூக்கங்கள் இறுதி இலக்குக்களை மட்டும் விதிக்கின்றன. அவற்றைப் பெறும் வழிகளைத் திட்டமாக வரையறுப்பதில்லை. இறுதி இலக்குக்களைக்கூட ஓரளவு மாற்றியமைக்கலாம். ஆனது பற்றியே இயல்பூக்கத்தின் இலக்கணத்தைப்பற்றி வாத விவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒப்பீடுகள்

[தொகு]

உந்தல்கள், மறிவினைகள், இயல்பூக்கங்கள் ஆகியன ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்புடையன ஆகும். உயிரிகளுக்கும் உயிரிலிகளுக்குமுள்ள வேறுபாடு யாதெனில், உயிரிலிகளுக்கு உந்தல்கள் (Drives) இல்லை. உயிரிகளுக்கு உந்தல்கள், ஊக்குநிலைகள் உண்டு. இந்த உந்தல்கள் பிராணிகளை வேலைசெய்யத் தூண்டுகின்றன. ஓர் உயிரியின் உயிர்ச்சக்தி உந்தல்களாகத் தோன்றி ஊக்கந் தருகிறது. உணவு, பகை நீக்கம், உறக்கம், ஆராய்வு, கல்வி, மகவு காப்பு, கூட்டம், முதன்மை , பணிதல், கட்டல், ஈட்டுதல் போன்றவை உந்தல்களாகும். இந்த உந்தல்களைத் திருப்தி செய்யும் சில துலங்கல்கள் (Responses) எளியவை; எடுத்துக்காட்டாக, சுவாசித்தல், விழுங்குதல், பற்றுதல், கைதெறித்தல், இமைத்தல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவற்றை மறிவினைகள் (Refleexs) என்கிறோம்.

சுவரில் பந்தையடித்தால் அது உடனே திரும்புவதுபோல், தற்செயலாக மின்சாரக் கம்பியைத் தொட்டவுடன் கை உடனே பின்வாங்குவது பற்றி அதை மறிவினையென்கிறோம். அது ஓர் உறுப்பைப்பற்றிய வேலையாகும். மேலும், காரணமாகிய வெளிப் பொருளின் தாக்கம் மறைந்தால் மறிவினைச் செயலும் மறைகின்றது. சில உந்தல்களோ சிக்கலானவை; இயல்பூக்கங்களாலேயே திருப்தியடைகின்றன. இவ்வியல்பூக்கங்களையும் மறிவினைகளையும் வேறுபடுத்தவேண்டும். ஆனாலும் முற்றிலும் பிரித்துவிடுவது எளிதன்று. உந்தல்கள், மறிவினைகள், இயல்பூக்கங்கள் மூன்றும் கற்கப்படாதவையே. அவை இயற்கையானவையே.

உளவியல் நோக்கு

[தொகு]

ஓர் உளவியலறிஞர் இயல்பூக்கமாகக் கொள்வதை இன்னொருவர் மறிவினையாகக் கொள்வர். சிலர் இயல்புப் போக்குகளே உள, இயல்பூக்கங்களே இல்லையென்பர். வேறு சிலர் கட்டுதல், திரட்டுதல், ஓடுதல் போன்ற இயற்கை ஊக்குநிலைகளாகிய உந்தல்களையே இயல்பூக்க அட்டவணையில் சேர்க்கின்றனர். இவர்கள் இறுதிப் பயனான துலங்கல்களின் தன்மையையும் அவற்றின் பொருள்களையும் பாராட்டாது இவற்றை இயல்பூக்கங்கள் என்பர். பொதுவாகக் கூறுமிடத்து, இயல்பூக்கம் சிக்கலானது, மாறுந்தன்மையுடையது, நோக்கமுடையது, ஒரு முழு உயிரியின் வேலையாகும். ஆகவே தனி உறுப்பின் வேலையும் எந்திர இயக்கம் போன்றதுமான கருவிழி சுருங்குவதை இயல்பூக்கமாகக் கொள்வது சரியன்று என்று கூறலாம். குளவி வெட்டுக்கிளியை எடுத்துச்செல்லும் வழி சரிவான இடமாயிருந்தால் அல்லது சுற்றிப்போகவேண்டிய இடையூறு இருந்தால் அதற்குத் தக்க பிறிதொரு வகையிலும் அந்தக் குளவி தொழில் புரிகிறது.

ஆதாரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lorenz, Konrad (1977). Behind the Mirror: A Search for a Natural History of Human Knowledge. New York: Harcourt Brace Jovanovich. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-111699-7.
  2. Hjelle, Larry; Ziegler, Daniel (1981). Personality Theories: Basic Assumptions, Research, and Applications. McGraw-Hill. p. 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070290631.
  3. Blumberg, Mark S. (2017). "Development evolving:The origins and meanings of instinct". Wiley Interdisciplinary Reviews: Cognitive Science 8 (1–2): e1371. doi:10.1002/wcs.1371. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-5078. பப்மெட்:27906515. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்வு&oldid=3580727" இலிருந்து மீள்விக்கப்பட்டது