தின்குழியமை
தின்குழியமை (Phagocytosis) என்பது உயிரணுக்களின் கலமென்சவ்வினால், உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் திண்மப் பதார்த்தங்கள் வளைத்து எடுத்து விழுங்கப்படும் ஒரு உயிரணுச் செயல்முறையாகும். இது பெருவிழுங்கிகள் போன்ற தின்குழியங்களிலும் (phagocytes), அமீபா போன்ற அதிநுண்ணுயிரிகளிலும் நிகழும் ஒரு பொதுவான செயல்முறையாகும்.
அதிநுண்ணுயிரிகள் இந்த தின்குழியமை மூலம் உணவை உள்ளெடுப்பதனால், தமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்கின்றன. மனிதன், மற்றும் ஏனைய பல்கல விலங்குகளில் இந்த தின்குழியமை செயல்முறையானது, நோய் ஏற்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் முக்கியமான ஒரு செயல்முறையாக உள்ளது. நோய்க்காரணிகளை விழுங்குவதனால், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் இந்தச் செயல்முறை முக்கிய பங்கு வகிக்கும். இதனால் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதுடன், இறந்த உயிரணுக்களை அகற்றவும், வேறு வெளியுடல்களை அகற்றவும் இந்தச் செயல்முறை உதவுகின்றது.
உயிரணுக்களால் திண்மப் பதார்த்தங்கள் விழுங்கப்படும்போது, உயிரணுக்களின் உள்ளே உருவாகும், மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு உடலம் தின்குழியவுடல் (phagosome) எனப்படும். இவை பின்னர் பிரியுடல்களுடன் (Lysosomes) சேர்ந்து, தின்குழியப்பிரியுடல்களாக (Phagolysosomes) மாறி, உள்ளெடுக்கப்பட்ட திண்மப் பதார்த்தங்கள் சமிபாடடையச் செய்யப்பட்டோ, அல்லது சிதைக்கப்பட்டோ பின்னர் அங்கிருந்து அகற்றப்படும்.