மு. கு. ஜகந்நாதராஜா
மு. கு. ஜகந்நாதராஜா | |
---|---|
பன்மொழிப் புலவர் | |
பிறப்பு | ஜூலை 26, 1933 ராஜபாளையம், தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 2, 2008 | (அகவை 75)
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | குருசாமிராஜா, அம்மணியம்மாள் |
மு. கு. ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933 - டிசம்பர் 2, 2008) ஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய மொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். 1989 ஆம் ஆண்டு இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஜகந்நாதராஜா தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தில், குறிப்பாக ராஜபாளையத்தில் குடியேறினார்கள். குருசாமிராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் என்பவர்கள் இவரது வம்சாவழியினர். அவர்களைப் போலவே இவரது தந்தையாரும் வணிகம் செய்து வந்தார். அங்கிருந்த தெலுங்குப் பள்ளியில் ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றார். பின்னர் சமஸ்கிருதம் கற்றார்.
தமிழில் மொழிபெயர்ப்புப் பணி
[தொகு]தெலுங்கு மகாகவியான குரஜாபி அப்பாராவ் எழுதிய 'கன்யா சுல்கம்' நூலைத் தமிழில் 1963 இல் மொழி பெயர்த்தார். அதன் பிறகு 'கேரி' - உன்னவ லட்சுமி நாராயணா, 'ஆமுக்த மால்யதா' - கிருஷ்ணதேவராயர், 'வேமனா கவிதைகள்', கனா பூரணோதயம் - பிங்கிளி சூரன்ன, தெலுங்கு நீதி நூலான 'சுமதி சதகம்', தேவுபல்லி கிருஷ்ண சாஸ்திரியின் கவிதைகளான 'தேய்பிறை', கந்துகூரி லிங்கம் கட்டுரைகள், காதா சப்தசதி எனும் ஆந்திர நாட்டு அகநானூறு என பல நூல்களை மொழிபெயர்த்தார்.
'மிளந்த பண்ஹா' என்ற பெளத்த தத்துவ நூலை பாலி மூலத்தில் இருந்து மொழிபெயர்த்தார். இது மாக்ஸ்முல்லர் வெளியிட்ட கீழ் திசைப் புனித நூல் வரிசையில் இடம் பெற்ற சிறப்பான புத்தகம். பௌத்தத் தத்துவத்தை விளக்கும் 'உதானம்' என்ற அரிய நூலையும் மொழியாக்கம் செய்தார்.
தமிழில் இருந்து மொழிபெயர்ப்பு
[தொகு]கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டைத் தெலுங்கில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். சங்க இலக்கியம் பற்றி தெலுங்கில் அறிமுகமான முதல் நூல் இது.
இது போல முத்தொள்ளாயிரத்தினை தெலுங்காக்கம் செய்துள்ளார். தொ. மு. சி. ரகுநாதன் எழுதிய 'பாரதி-காலமும் கருத்தும்' நூலை சாகித்ய அகாதமிக்காகத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். திருக்குறளைத் தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தைக் கன்னடம், மலையாளத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார்.
தெலுங்கு இலக்கிய வரலாறு எழுதிய நிடதவோலு வெங்கட்டராவ் 'நாஞ்சாரு பரிணயமு' என்ற ஆண்டாள் சரிதம் கூறும் யட்ச கான நூலை ராஜபாளையத்தில் ஏட்டுப்பிரதியாகக் கண்டுபிடித்து, அதைப் பிரதியெடுத்துப் பதிப்பித்துள்ளார். வெளி வராத ஏழு இலக்கியங்களைத் தெலுங்கு இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார்.
இவரின் நூல்கள்
[தொகு]- கற்பனைப் பொய்கை - கவிதைத்தொகுப்பு (1972)
- தரிசனம் - வசன கவிதை (1972)
- காவிய மஞ்சரி - குறுங் காவியங்கள் (1986)
- சிலம்பில் சிறுபிழை - இலக்கியத்திறனாய்வு (1968)
- வான் கலந்த வாசகங்கள் - வானொலி உரை (1980)
- தமிழும் பிராகிருதமும் (1992)
- மணிமேகலை
- இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994)
- வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு
- தமிழக - ஆந்திர வைணவத் தொடர்புகள்
- ஆபுத்திர காவியம்
- தெரு - புதுக் காவியம்
- பிஞ்சுக் கரங்கள்
- ராஜுக்கள் சரித்திரம்
- திராவிட மொழிகளில் யாப்பியல்
- கவித்தொகை
- அறிவுக் கதம்பம் - வானொலி உரை (1993)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- கன்யா சுல்கம் (1963)
- சேரி (1984)
- ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்)
- வேமனா (1992)
- களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்)
- சுமதி சதகம்
- தேய்பிறை
- கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
- காதா சப்த சதி (பிராகிருத மொழிக் கவிதைகள்) 1981
- வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்) 2005
- கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)
- சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)
- தீகநிகாயம் (பௌத்த தத்துவம்)
- உதானம் (பௌத்த தத்துவம்)
- மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)
- விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)
- ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல் 1989
- நாகானந்தம் - வடமொழி நாடகம் (1992)
- குந்தமாலா - வடமொழி நாடகம்
- சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986
- சாருசர்யா வடமொழி நீதிநூல்
- சாதன ரகசியம் - வேதாந்த நூல்
- சிவசரணர் வசனங்கள்
- பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)
- பிரேம கீதம் - மலையாளக் கவிதை
- மகாயான மஞ்சரி (2007)
தமிழிலிருந்து தெலுங்குக்கு
[தொகு]- சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு)
- முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்)
- பாரதி - சமகாலீன பாவமுலு
- புண்யக்ஷேத்ராலு 1989
- திருக்குறள் தேடகீதுலு
- தமிழ காவியாம்ருதம்
- வெலி நாணூறு (புற நானூறு)
- முத்தொள்ளாயிரம் (மலையாளம்)
- முக்த ஹார (கன்னடம்)
பட்டம்
[தொகு]ஜூன் 18, 1964 இல் இராஜபாளையம் காந்திகலைமன்றத்தில் தவத்திரு. குன்றக்குடி அடிகள் இவருக்கு பன்மொழிப்புலவர் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- மு.கு.ஜகந்நாதராஜாவுடன் ஒரு சந்திப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா மறைவு மதுமிதாவின் பதிவு
- பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பரணிடப்பட்டது 2012-09-10 at the வந்தவழி இயந்திரம், கொ.மா.கோதண்டம்