உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர்
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

சிக்ஃபிரைட் கோட்டினைக் கடக்கும் அமெரிக்க வீரர்கள்
நாள் ஆகஸ்ட் 25, 1944 – மார்ச் 1945
இடம் சிக்ஃபிரைட் கோடு, (பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி)
நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
மேற்கத்திய நேச நாடுகள்

 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 பிரான்சு

 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
ஐக்கிய அமெரிக்கா ஜேகப் டெவர்ஸ்
நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரன்ஸ்டெட்
நாட்சி ஜெர்மனி வால்டர் மோடல்
பலம்
5,412,000 [1] ~1,500,000
இழப்புகள்
அமெரிக்கா
240,082 இழப்புகள்
(50,410 மாண்டவர், 172,450 காயமடைந்தவர், 24,374 போர்க்கைதிகள்)
(15 September 1944 - 21 March 1945)[2]

பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த சண்டைகளில் ஒரு முக்கிய கட்டம். ஆகஸ்ட் 1945ல் பிரான்சு தலைநகர் பாரிசைக் கைப்பற்றிய நேசநாட்டுப்படைகள் அடுத்த ஏழு மாதங்களில் பிரான்சின் ஏனைய பகுதிகளை நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு முன்னேறின. மார்ச் 1945ல் ஜெர்மனியின் மேற்கு எல்லையில் அரணாக விளங்கிய ரைன் ஆற்றை அடைந்தன. இந்த முன்னேற்றம் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர் (Siegfried Line Campaign) என்றும் அறியப்படுகிறது.

பின்புலம்

[தொகு]

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான நேசநாட்டுப் படையெடுப்பு ஓவர்லார்ட் நடவடிக்கையுடன் ஜூன் 1944ல் தொடங்கியது. அடுத்த மூன்று மாதங்கள் நடந்த சண்டைகளில் வேகமாக முன்னேறிய நேசநாட்டுப் படைகள் ஆகஸ்ட் மத்தியில் பிரான்சின் தலைநகர் பாரிசைக் கைப்பற்றின. இத்துடன் இப்படையெடுப்பின் ஒரு கட்டம் நிறைவுற்றது. அடுத்து பிரான்சின் பிற பகுதிகளை ஜெர்மானியக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கவும், ஜெர்மனி மீது படையெடுக்கவும் நேச நாட்டுத் தளபதிகள் திட்டம் தீட்டினர். இதுவரை நிகழ்ந்திருந்த வேகமான முன்னேற்றத்தால், தளவாட இறக்குமதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அடுத்த கட்ட முன்னேற்றத்துக்குத் தேவையான அளவு தளவாடங்களை இறக்குமதி செய்ய போதுமான துறைமுக வசதிகள் இல்லை. இதனால் அடுத்த கட்டத் தாக்குதல் துவங்குவதற்கு சற்றே தாமதமேற்பட்டது. இதனால் மூன்று மாதங்களாக பின்வாங்கி வந்த ஜெர்மானியப் படைகள் சுதாரிக்கவும் அவகாசம் கிட்டியது.

பிரான்சிலிருந்த நேசநாட்டுப் படைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படிருந்தன. வடக்கில் பிரிட்டானிய ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் தலைமையின் கீழான 21வது ஆர்மி குரூப் செயல்பட்டது. மத்தியில் அமெரிக்க ஜெனரல் ஒமார் பிராட்லியின் தலைமையிலான 12வத் ஆர்மி குரூப்பும், தெற்கில் ஜெனரல் ஜேகம் டெவர்ஸ் தலைமையிலான 6வது ஆர்மி குரூப்பும் செயல்பட்டன. மோண்ட்கோமரியும் பிராடிலியும் அடுத்து ஒரு குறுகிய முனையில் முன்னேற வேண்டுமென்று விரும்பினர். ஆனால் நேசநாட்டுத் தலைமை தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஒரு பரந்த முனையில் அடுத்த கட்ட முன்னேற்றம் நிகழ வேண்டுமென்று உத்தரவிட்டார். ஜெர்மானிய எதிர் தாக்குதல் திறனையும், தளவாடப் பற்றாக்குறையையும் சமாளிக்க நிதானமாக பரந்தமுறையில் முன்னேற வேண்டுமென்று கருதினார். அதன்படி மூன்று படைப்பிரிவுகளும் முன்னேறத் தொடங்கின. ரைன் ஆற்றங்கரையை அடைவதற்கு அவற்றுக்கு இருபெரும் தடைகள் இருந்தன - கிழக்கு பிரான்சின் ஆறுகள் மற்றும் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லை அரணான சிக்ஃபிரைட் கோடு.

நார்மாண்டி போர்த்தொடரில் ஜெர்மானியத் தரைப்படைகளுக்கு பேரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. அவற்றின் ஆள்பற்றாக்குறையினைக் குறைக்க ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபேவிலிருந்து 20,000 வீரர்கள் தரைப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும் காயமடைந்து படையிலிருந்து விலகியிருந்த முன்னாள் வீரர்கள், போர் பயிற்சியற்ற ஊர்க்காவல் படையினர் போன்றோரும் மேற்குப் போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேச நாட்டுத் தரப்பிலும் பல ஆண்டுகள் தொடர்ந்த போரினால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் ஜெர்மனியின் நிலையுடன் ஒப்பிடுகையில் அவை தங்கள் இழப்புகளை எளிதில் ஈடுகட்டி விட்டன.

வடக்கு படைப்பிரிவுகள்

[தொகு]

கால்வாய்க் கடற்கரை

[தொகு]
லே ஆவர் மீதான தாக்குதல்

கனடிய 1வது ஆர்மிக்கு ஆங்கிலக் கால்வாயோரமாக இருந்த துறைமுகங்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்துறைமுகங்கள் பிரான்சில் தரையிறங்கியிருந்த நேசநாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யத் தேவைப்பட்டன. இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய பீரங்கிக் குழுமங்கள் கால்வாயில் செல்லும் நேசநாட்டுக் கப்பல்களையும், இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தையும் தாக்கி வந்தன. மேலும் இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய வி-1 எறிகணைத் தளங்கள் இங்கிலாந்து நகரங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தன. இக்காரணங்களால் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியமானது.

ஆகஸ்ட் 23ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது. துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் எதிர்க்காமல் பின்வாங்கின. கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என ஹிட்லர் அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் லே ஆவர், போலோன், கலே, டன்கிர்க் போன்ற துறைமுகங்களில் இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்தன. இவற்றுள் டன்கிர்க் தவிர பிற துறைமுகங்களை கனடியப் படைகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் கைப்பற்றிவிட்டன.

மார்க்கெட் கார்டன்

[தொகு]
மார்க்கெட் கார்டன்: நெதர்லாந்தில் தரையிறங்கும் வான்குடை வீரர்கள்

பலம் வாய்ந்த சிக்பிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவதற்குப் பதில் சுற்றி வளைத்து நெதர்லாந்து வழியாக ஜெர்மனியின் உட்பகுதிக்குள் ஊடுருவ எடுக்கப்பட்ட முயற்சியே மார்க்கெட் கார்டன் நடவடிக்கை. ஐசனோவரின் பரந்த களத் தாக்குதல் மேல்நிலை உத்தியை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த மோண்ட்கோமரியின் வற்புறுத்தலால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் வெற்றிபெற இதற்கு ரைன் மற்றும் மியூஸ் ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற நேசநாட்டுப் படைகள் முயன்றன. மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் இரு பெரும் உட்பிரிவுகள் இருந்தன. ”மார்க்கெட் நடவடிக்கை”யின் நோக்கம் வான்குடை வீரர்களைக் கொண்டு ஜெர்மனி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாலங்களைக் கைப்பற்றுவது. “கார்டன் நடவடிக்கை”யின் நோக்கம் கவசப் படைகளைக் கொண்டு ஜெர்மனி பாதுகாப்பு கோட்டை உடைத்து வான்குடை வீரர்கள் கைப்பற்றியிள்ள பாலங்களைச் சென்றடைவது. இத்தாக்குதல் செப்டம்பர் 17-25 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்டது.

தாக்குதல் பகுதியில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய எஸ். எஸ் படைப்பிரிவுகள், பாலங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தாமதம், ஜெர்மானிய எதிர்தாக்குதல் போன்ற காரணங்களால் மார்க்கெட் கார்டன் வெற்றி பெறவில்லை. கைப்பற்ற வேண்டிய நான்கு முக்கிய பாலங்களில் மூன்றினை நேச நாட்டு வான்குடை வீரர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் நானகாவது ஆர்னெம் பாலத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முயன்ற பிரிட்டானிய 1வது வான்குடை டிவிசன் ஜெர்மானிய எதிர்த்தாக்குதலால் அழிக்கப்பட்டு விட்டது. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் சிக்ஃபிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவது தவிர்க்க முடியாமல் போனது.

ஷெல்ட்

[தொகு]
ஷெல்ட் ஆற்றைக் கடைக்கும் கனடிய நீர்நில வண்டிகள்

ஆங்கிலக் கால்வாய் கடற்கரைத் துறைமுகங்களைக் கைப்பற்றிய பின்னரும், நேசநாட்டுத் தளவாடப் பற்றாக்குறை சரியாகவில்லை. இதனால் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைச் சரக்குப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது அவசியமானது. ஆண்ட்வெர்ப் துறைமுகம் கைப்பற்றப்பட்டிருந்தாலும் அதனை சுற்றியிருந்த ஷெல்ட் முகத்துவாரப் பகுதி ஜெர்மானிய 15வது ஆர்மியின் வசமிருந்தது. இதனால் அக்டோபர் 2, 1944ல் கனடியப் படைகள் ஷெல்ட் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கின. அடுத்த ஐந்து வாரங்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. நீர்நிலத் தாக்குதல்கள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு, சீரற்ற நிலப்பரப்பில் முன்னேற்றம் என பல கடினமான தடைகளை முறியடித்து நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. ஷெல்ட் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு மூன்று வாரங்களுள் ஆண்ட்வெர்ப் துறைமுகம் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதனால் நேசநாட்டு தளவாடப் பற்றாக்குறை பெருமளவு குறைந்தது.

வெரிடபிள் மற்றும் கிரெனேட்

[தொகு]

ஷெல்ட் சண்டை முடிவடைந்த பின்னர் 21வது ஆர்மி குரூப் எந்த பெரும் தாக்குதலிலும் உடனே ஈடுபடவில்லை. டிசம்பர் 1944 - ஜனவரி 1945ல் நிகழ்ந்த ஜெர்மானிய பல்ஜ் தாக்குதலை முறியடிப்பதில் பங்கேற்றது. பின்னர் ஜெர்மனி எல்லையைக் கடந்து ரைன் ஆற்றங்கரை வரையான பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது. பெப்ரவரி 8, 1945ல் ரைன் ஆற்றுக்கும் மியூசே ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளை நேச நாட்டுப்படைகள் கைப்பற்றும் வெரிடபிள் நடவடிக்கை தொடங்கியது. ஒரு மாதம் மெதுவான முன்னேற்றத்துக் பின்னர் நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றங்கரையை அடைந்தன. வடக்கில் 21வது ஆர்மி குரூப் முன்னேறிக் கொண்டிருக்கும் போதே தெற்கில் அமெரிக்க 9வது ஆர்மி முன்னேறியது. இந்த நடவடிக்கை கிரெனேட் நடவடிக்கை என்றழைக்கப்பட்டது. மார்ச் 11, 1945ல் இரு நடவடிக்கைகளும் முடிவடைந்தன. ரைன் ஆற்றங்கரை வரையான பகுதிகள் நேசநாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன.

மத்திய படைப்பிரிவுகள்

[தொகு]

ஆஃகன்

[தொகு]
ஆஃகன் நகரத்தில் அமெரிக்க எந்திரத் துப்பாக்கி வீரர்கள்

சிக்ஃபிரைட் கோட்டினை அணுகுவதற்கு முன்னர் ஆஃகன் நகரை நேச நாட்டுப் படைகள் கைப்பற்ற வேண்டியிருந்தது. அக்டோபர் 2, 1944ல் அமெரிக்க 1வது ஆர்மி ஆஃகன் நகர் மீதான தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்கத் தளபதிகள் 1வது மற்றும் 30வது காலாட்படை டிவிசன்களைக் கொண்டு இரு திசைகளிலிருந்து ஆஹன் நகரை சுற்றி வளைத்து பின் கைப்பற்றத் திட்டமிட்டனர். ஜெர்மனியின் 81வது கோர்,ஒரு கவச டிவிசன், ஒரு கவசஎறிகுண்டாளர் டிவிசன், முதலாவது எஸ். எஸ் அடால்ஃப் ஹிட்லர் டிவிசன் (ஹிட்லரின் மெய்க்காப்பாளர்கள்) போன்ற படைப்பிரிவுகள் ஆஃகன் நகரைப் பாதுகாத்தன. அமெரிக்கப் படைகளை விட ஜெர்மானியப் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நகரமெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள் (pillbox) அவர்களுக்கு சாதமாக அமைந்தன.

அமெரிக்க 30வது டிவிசன் அக்டோபர் 2ம் தேதி வடதிசையிலிருந்து ஆஹன் நகரைத் தாக்கியது. ஜெர்மானியர்களின் கடும் எதிர்த்தாக்குதல் அதன் முன்னேற்றத்தைத் தடை செய்தது. அமெரிக்கர்களின் பீரங்கித் தாக்குதலும், வான்வழி குண்டுவீச்சும் ஜெர்மானிய பாதுகாவலர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. வடக்கில் சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே அக்டோபர் 9ம் தேதி தெற்கிலிருந்து அமெரிக்க 1வது டிவிசன் தன் தாக்குதலைத் தொடங்கியது. ஐந்து நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னரே இரு படைப்பிரிவுகளும் கை கோர்த்தன. இச்சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்க பீரங்கிகள் ஆஹன் நகரின் மீது தொடர்ந்து குண்டு வீசின. அக்டோபர் 16ம் தேதி இரு அமெரிக்க டிவிசன்களும் சேர்ந்து நகருக்குள் முன்னேறத் தொடங்கின. அக்டோபர் 16-21ல் ஆஹன நகரத் தெருக்களில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. நகரெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள், வீடுகளின் நிலவறைகள், பதுங்குகுழிகள், பாதாளச் சாக்கடைகள் போன்றவற்றிலிருந்து தாக்கும் ஜெர்மானியப் படைகளை சமாளித்து அமெரிக்கப் படைகள் மெல்ல நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறின. கடும் சண்டைக்குப்பின் 21ம் தேதி ஜெர்மானியத் தளபதி மில்க் ஆஹன் நகர் சரணடைவதாக அறிவித்தார். இச்சண்டையில் இரு தரப்பிலும் தலா 5,000 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 5,000 ஜெர்மானியப் படைவீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஹன் நகர் அமெரிக்கர் வசமானாலும், நேசநாட்டுப் படைகளின் இழப்புகளால் ஜெர்மனியின் உட்பகுதியுள் நேசநாட்டு முன்னேற்றம் தடைபட்டது.

லொரைன்

[தொகு]

செப்டம்பர் 1, 1944ல் ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் தலைமையிலான அமெரிக்க 3வது ஆர்மி பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லைப் பிரதேசமான லொரைன் பகுதியைக் கைப்பற்ற முன்னேறியது. எரிபொருள் பற்றாக்குறையினால் இந்த முன்னேற்றம் மெதுவாகவே நடைபெற்றது. மியூசே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலங்களைக் கைப்பற்றிய பின்னர் எரிபொருள் பற்றாக்குறையால் அதன் முன்னேற்றம் நின்றுபோனது. ஆண்ட்வெர்ப் துறைமுகம் திறக்கப்படும் வரை மேற்குப் போர்முனையில் ஒரே நேரத்தில் ஒரு பெரும் தாக்குதலுக்குத் மட்டுமே போதுமான எரிபொருள் கையிருப்பு இருந்ததால் ஐசனாவர் வடக்கு படைப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். இதனால் செப்டம்பர் மாதம் முழுவதும் 3வது ஆர்மியின் முன்னேற்றம் முடங்கியது.

இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு லொரைன் பகுதியிலிருந்த ஜெர்மானிய அரண்நிலைகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்கப் படைகளின் முன்னேற்றம் அக்டோபரில் மீண்டும் தொடங்கிய போது, அவை கடும் ஜெர்மானிய எதிர்ப்பினைச் சந்தித்தன. கடும் சண்டைக்குப்பின் மெட்சு நகரமும் சுற்றுப்புறப் பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. மெட்சு நகர் வீழ்ந்த பின்னர், சிக்ந்பிரைட் கோடு மீதான தாக்குதலுக்கு 3வது ஆர்மி தயாரானது. ஆனால் இதற்குள் ஜெர்மானியர்கள் ஆர்டென் பகுதியில் பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியதால் 3வது ஆர்மி அதனை எதிர்கொள்ள தனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு, வடக்கு நோக்கி முன்னேறத் தொடங்கியது.

ஊர்ட்கென் காடு

[தொகு]
ஊர்ட்கென் காட்டில் ஜெர்மானிய பீரங்கி

ஆஃகன் சண்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளை பக்கவாட்டிலிருந்து ஜெர்மானியப் படைகள் தாக்காமல் காக்க, அமெரிக்கத் தளபதிகள் ஊர்ட்கென் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஊர்ட்கென் காட்டுப்பகுதி ஜெர்மானியர்களின் எதிர்கால உத்திக்கு மிக அவசியமானதாக இருந்தது. அவர்கள் அடுத்து நிகழ்த்த திட்டமிட்டிருந்த பல்ஜ் சண்டைக்கு இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் ருர் ஏரியின் முகப்புப் பகுதியிலுள்ள ஷ்வாம்மானுவேல் அணைக்கட்டுக்குச் செல்லும் சாலைகள் ஊர்ட்கென் வழியாகச் சென்றன. அந்த அணைக்கட்டைத் திறந்து விட்டால் ருர் ஆற்றில் வெள்ளம் பாயச்செய்து ஆற்றைக் கடப்பதைத் தடுக்க முடியும். இவ்விரு காரணங்களால் ஊர்ட்கென் பகுதி ஜெர்மானியருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது.

செப்டம்பர் 1944ல் அமெரிக்கப் படைகள் ஊர்ட்கன் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் சண்டையில் யாருக்கும் வெற்றியில்லாமல் இழுபறி நிலை ஏற்ப்ட்டது. சிக்ஃபிரைட் கோட்டின் அரண்நிலைகளைப் பயன்படுத்தி ஜெர்மானியர்கள் அமெரிக்கப்படைகளுக்குப் பெரும் இழப்புகளை விளைவித்தனர். இச்சண்டையில் 33,000 அமெரிக்கர்களும் 28,000 ஜெர்மானியரும் மாண்டனர். ஆஃகன் சண்டையில் வெற்றி கிட்டினாலும், ரூர் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்தது. டிசம்பர் 17ம் தேதி பல்ஜ் சண்டை தொடங்கியதால் இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. அச்சண்டை முடிவு பெறும்வரை (பெப்ரவரி 1945) வரை ஊர்ட்கென் காடு அமெரிக்கர் வசமாகவில்லை

பல்ஜ் சண்டை

[தொகு]
பல்ஜ் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க போர்க்கைதிகள்

1944 ஆகஸ்டிலிருந்து மேற்குப் போர்முனையெங்கும் ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி வந்தன. கிழக்குப் போர்முனையிலும் சோவியத் யூனியனின் படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஹிட்லர் மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்குப் போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.

ஆர்டென் பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு ஆர்மிகளை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இலக்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய மேல்நிலை உத்தியாளர்களின் கணிப்பு. டிசம்பர் 16ல் தொடங்கிய இத்தாக்குதல் மேற்கத்தியப் படைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்ததால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் பலத்தை ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை.

ஆர்டென் காட்டுப் பகுதியில் பனிநிறைந்த நிலப்பகுதியில் அமெரிக்க வீரர்கள்

ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான பாஸ்டோன் நகரை அவைகளால் கைப்பற்ற முடியவில்லை. அவசரமாக போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின. மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின.

ரைன் ஆற்றங்கரை

[தொகு]

மார்ச் 1945ல் ஜெர்மனியின் மேற்கு எல்லையில் இயற்கை அரணாக அமைந்திருந்த ரைன் ஆற்றங்கரையை நேச நாட்டுப் படைகள் அடைந்தன. வடக்கில் மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப் வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகளின் மூலம் ரைன் ஆற்றை அடைந்திருந்தன. மத்தியில் ஜெனரல் ஒமார் பிராட்லியின் 12வது ஆர்மி குரூப்பும், தெற்கில் ஜாகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பும் ரைன் ஆற்றை அடைந்தன. இத்துடன் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர் முடிவுக்கு வந்தது. ஏழு மாதங்கள் நடந்த இந்தப் போர்த்தொடரில் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க ஆகிய நாடுகள் முழுவதும் ஜெர்மானியப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டன. நெதர்லாந்தின் பெரும் பகுதியும் நேசநாட்டு வசமானது. மேற்குப் போர்முனையில் ஜெர்மானியப் படைகள் நிலை குலைந்து போயிருந்தன. அடுத்து நிகழ்ந்த நேசநாட்டுத் தாக்குதல்களை அவற்றால் சமாளிக்க முடியவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. MacDonald, C (2005), The Last Offensive: The European Theater of Operations. University Press of the Pacific
  2. http://cgsc.cdmhost.com/cdm4/document.php?CISOROOT=/p4013coll8&CISOPTR=130&REC=2 Army Battle Casualties and Nonbattle deaths in World War II p.93