உள்ளடக்கத்துக்குச் செல்

கடலாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடலாமை
புதைப்படிவ காலம்:
முந்தைய கிரித்த்சியன்-ஓலோசீன் [1] 110–0 Ma
ஒரு சிற்றாமை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
மறைக்கழுத்துள்ளவை
பெருங்குடும்பம்:
கடலாமை
மாதிரி இனம்
Chelonia mydas
லின்னேயஸ், 1758
குடும்பங்கள்
வேறு பெயர்கள் [2]

Chelonii - Oppel, 1811
Chlonopteria - Rafinesque, 1814
Cheloniae - Schmid, 1819
Edigitata - Haworth, 1825
Oiacopodae - Wagler, 1828
Pterodactyli - Mayer, 1849

A sea turtle at Henry Doorly Zoo, Omaha NE

கடலாமை (ஒலிப்பு) (Turtle) என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.[3] ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.[4] பேராமை (leatherback) என்ற கடல் ஆமை 540 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டது. கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் (Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.ஆமைகள் பற்றிய சில உண்மைகள்[தொடர்பிழந்த இணைப்பு] கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். இவற்றில் சில இனங்கள் அழிவாய்ப்பை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது. பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.[5]

உடலமைப்பு

[தொகு]

இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது. பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும்.[6] கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது உயிர்வளியை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. ஆண் ஆமையின் வயிற்றுப்பகுதி குழியாகவும் பெண்ணின் வயிற்றுப்பகுதி பெருத்தும் குவிந்தும் காணப்படும்.[7]

ஓடுகள்

[தொகு]

கடல் ஆமைகளின் ஓடுகள், பல அடுக்குகளால் ஆன எலும்புத் தட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசத்தையும் உடையது. ஆதலால் ஓடுகள் எதையும் தாங்கும் வலிமையுடையதாய் உள்ளது. ஆயினும் ஓட்டில் நரம்புகள் இருப்பதால் உணர்திறன் பெற்றுள்ளது. ஆமைகளின் முதுகு மற்றும் விலா எலும்புகள் ஓட்டுடன் இணைந்திருப்பதால் இதனை ஓடுகளில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. மேலும் ஓடுகள் ஆமைகளுக்குப் பாதுகாப்பாகவும் திகழ்கிறது.

வாழ்வியல்

[தொகு]

இனப்பெருக்கம்

[தொகு]

முட்டை இடல்

[தொகு]

ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவை. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் தொடங்கு‌ம். ப்வை பெரும் கூட்டமாக அல்லது சிறிய குழுக்களாக வந்து பெரும்பாலும் ஒபிரஹேசத்திலேயே முட்டைகளை இடுகின்றன. அதாவது, ஒருமுறை முட்டை இட்ட கடற்கரையையே அடுத்தமுறையும் முட்டையிடுவதற்காகத் தெரிவுசெய்கின்றன. முட்டையிடவுள்ள கரையை அண்மித்த கடலில் குறித்த கடல் ஆமை இரவாகும் வரை காத்திருக்கும். இரவானதும் கடற்கரைக்குச் சென்று, தெரிவுசெய்த இடத்தில் தனது உடல் நிலத்தில் பதிவதற்கு ஏற்றவாறு முன்னங்கால்களால் குழி ஒன்றைத் தோண்டி, பின்னர் அந்தக் குழிக்குள் தனது பின்னங்கால்களால் கோப்பை வடிவில் குழி ஒன்றையும் தோண்டிக் கொள்ளும். இவ்வாறு முட்டை இடுவதற்கெனத் தோண்டும் குழி முட்டைக் கூடு என அழைக்கப்படுகின்றது. முட்டைக்கூடானது 50 முதல் 70 சென்ரிமீற்றர் அளவு ஆழத்தில் இருக்கும். இத்தகைய அளவுடைய ஒரு கூட்டில் சுமார் 100 முதல் 150 முட்டைகள் வரை இடும். பெரும்பாலான கடல் ஆமைவகைகளின் முட்டையொன்றின் அளவும் தோற்றமும் மேசைப்பந்தொன்றைப்போல் இருக்கும் இந்த முட்டையின் கோது மிகவும் மென்மையானது. முட்டை இட்டு முடிந்த பின்னர் பெண் கடலாமை அதன் முன்னங்கால்களால் மணலை வீசி முட்டைக்கூட்டை மூடிவிடும். முட்டைகளை மணல் போட்டு மூடிய பின்னர் அது மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இந்த முட்டைகள் சூரிய வெப்பத்தால் மணல் சூடாகும் போது இயற்கையாகவெ அடைகாக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் அதாவது 60 நாட்களில் பொரித்து குஞ்சுகளாக வெளிவருகின்றன.

குஞ்சுகளின் பிறப்பு

[தொகு]

60 நாட்களின் பின்னர் முட்டைகளில் இருந்து வெளிவரும் கடலாமக் குஞ்சுகள் இரண்டு நாட்களுக்கு முட்டைக்கூட்டினுள்ளேயே உயிர்வாழும். அப்போது. அவை அங்கும் இங்கும் செலவதால், அந்த அசைவின் காரணமாக, கூட்டின் மேற்பகுதியில் இருபக்கங்களிலும் உள்ள மணல் அதன் அடிப்பகுதியில், விழுந்து நிறையும். இதனால் கூட்டுக்குள் உள்ள ஆமைக் குஞ்சுகள் இயல்பாகவே, மேலே வந்து வெளியேறும். எவ்வாறாயினும், இந்த கடல் ஆமைக் குஞ்சுகள் இரவு வேளைகளிலேயே கூட்டில் இருந்து வெளிவரும். பின்னர், கடல் நீரின் மீது விழுகின்ற நிலவொளியின் ஆதரவுடன், மிக வேகமாக கடலை ன்நோக்கி ஓடும். இவ்வாறு கடலை நோக்கிச் செல்லும் குஞ்சுகள், நண்டுகள் மற்றும் கடல் பறவைகள் போன்ற உயிரினங்களின் தொல்லைகளுக்கு இலக்காகும் வாய்ப்புக்கள் அதிகமாய் உள்ளன. அவ்வாறே, கடலுக்குள் சென்ற பின்னர் அங்கு வாழும் பெரிய மீன்களாலும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களாலும் கூடைந்த சின்னஞ்சிறு குஞ்சுகளுக்குன் ஆபத்துக்கள் ஏற்படும். எவ்வாறாயினும், இந்த ஆபத்துக்களையும் தாண்டி அவை தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்கு நீந்திச் செல்லும். கடல் ஆமைக்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து பருவமைடைய 30 ஆண்டுகள் வரை செல்லும். 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடையும். பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு. வளர்ச்சி அடந்த ஆண் கடல் ஆமைக்கு முன்னங்கால்களில் நீளமான நகங்களும் பெண்கடல் ஆமையைவிட ஓரளவு நீளமான வால் ஒன்றும் காணப்படுகின்றது.

உணவு

[தொகு]

சில ஆமைகள் கடற்பாசிகளையும் கடற்பஞ்சுகளையும் உண்கின்றன. பெருந்தலை ஆமைகள் நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும் வேறுசில வகை ஆமைகள் கடலின் ஆழத்தில் சென்று ஜெல்லி மீன்களையும் சாப்பிடுகின்றன. இதன் இறைச்சியும், முட்டைகளும் உணவாகவும் பயன்படுகின்றன.

சில புகழ்பெற்ற வகைகள்

[தொகு]

மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளது. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. பேராமை அல்லது ஏழுவரி ஆமை, சிற்றாமை, அழுங்காமை, தோணியாமை, பெருந்தலைக் கடலாமை என்பவை அவற்றின் பெயராகும். பெருந்தலை ஆமையைத் தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும்.

அழிவாய்ப்பு

[தொகு]

மீனவர்கள் விசைப்படகுகளின் மூலம் மீன் பிடிக்கும்போது மீன்பிடி வலைகளில் டெட் எனப்படும் ஆமை தவிர்ப்புக் கருவியைப் பொருத்திக் கொண்டால் வலைகளில் ஆமைகள் மாட்டி இறப்பதைத் தவிர்க்க முடியும். இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் அழிந்து கொண்டே வருவதால் இவற்றைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயன்

[தொகு]

கடல் ஆமைகளின் முட்டைகளில் இருந்து மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், சோப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் ரத்தம் மூலநோய்க்கு சிறந்த மருந்தாகிறது. ஆமைகளின் ஓடுகளில் இருந்து அலங்காரப் பொருட்களும் காலணிகளும் கூட தயாரிக்கப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

[தொகு]

இயற்கைச் சூழலால் ஏற்படும் அச்சுறுத்தலகள்

[தொகு]

முட்டை இட்டு குஞ்சு வெளியாகி அவை கடலில் சுயமாக வாழப்பழகும் வரை யில் ஏனைய உயிரினங்களால் கடல் ஆமைகள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றன. குஞ்சுகளாக இருக்கும் போதே, பிற கடல் வாழ் உயிரினங்களுக்கு இரையாகும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், ஆரம்ப கட்டத்திலேயெ அவை அழிந்து விடும் நிலை காணப்படுகின்றது. அதே போன்று, நன்கு வளர்ந்த பருவத்திலும் சுறா மற்றும் திமிங்கைலங்களுக்கு இவை இரையாகின்றன. குங்சுகளாக கடலை அடையும் வரையில் கடற் பருந்து, காகம், உடும்பு, நரி போன்றவற்றிற்கு இரையாகின்றன. இவ்வாறாக இயற்கைச்சூழலில் ஏற்படும் அச்சுறுத்தலிலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள கடல் ஆமைகள் பெரும் போராட்டம் நடத்துகின்றன.

மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்

[தொகு]

இறைச்சிக்காகப் பிடித்தல்

[தொகு]

முட்டை இடுவதற்காக கடல் ஆமைகள் கரையை நோக்கி வரும் சந்தர்பங்களிலேயே, இவை இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இதனால், பெண் கடல் ஆமைகளே இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. இவ்வாறு பெண் கடல் ஆமைகள் கொல்லப்படுவதால் கடல் ஆமைகள் விரைவாக அழியும் நிலை ஏற்படுகின்றது.

முட்டைகளை அப்புறப்படுத்தல்

[தொகு]

கடற்கரையில் முட்டை இட்ட பின்னர் தாய்க்கடல் ஆமைகள் வெளியேறி விடுகின்றன. இந்நிலையில், அந்த முட்டைகளைச் சேர்த்து மனிதர்கள் உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால், இவற்றின் இனம் பெருக முடியாதபடி அழிவுறுகின்றது.

ஓட்டுக்காகக் கொல்லப்படல்

[தொகு]

சில கடை ஆமைகளின் மேல் ஓடு அலங்கார வடிவில் இருப்பதால், அந்த ஓட்டினை பெறுவதற்காகவும் கடல் ஆமைகள் கொல்லப்படுகின்றன.

மீனவர்களால் பிடிக்கப்படல்

[தொகு]

மீன்பிடிக்க வலை விரிக்கும் போது, ஆமைகள் மீன் வலைகளில் சிக்குகின்றன. அவற்றை மீனவர்கள் பிடித்து உணவுக்காகவும் அதன் ஓட்டினை எடுப்பதற்காகவும் கொன்றுவிடுகின்றனர்.

வாழ்விடம் அற்றுப்போதல்

[தொகு]

தவறான மனித செயற்பாடுகளால் கடல் மற்றும் கடற்கரைச் சூழல் பல்வேறு வழிகளில் மாசடைவதால் கடல் ஆமைகள் தமது வாழ்விடங்களை இழக்கின்றன. அத்துடன், கடல் அரிப்பைத் தடுப்பதற்காக, கடற்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதாலும் பாறைகள் அகற்றப்படுவதாலும் முட்டை இடும் இடங்கள் அழிக்கப்படுகின்றன.

உணவுத் தட்டுப்பாடு

[தொகு]

கடலுக்கடியில் இருக்கும்முருகைக்கல் மற்றும் தாவரங்களுக்குள் மறைந்து வாழும் கிரிஸ்டேஸியா, நட்தை, பாசி போன்றவை கடல் ஆமைகளின் உணவாக இருக்கின்றன. கடல் மாசுபடுத்தப் படுவதனால் முருகைக்கற்கள் அழிவடைகின்றன. இதனால், கடல் ஆமைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடுகின்றது.

வகைகள்

[தொகு]

கெம்ப்ஸ் சேற்றுக் கடல் ஆமை

[தொகு]
கெம்ப்ஸ் சேற்றுக் கடல் ஆமையின் தோற்றம்

கெம்ப்ஸ் சேற்றுக் கடல் ஆமை (Kemp's ridley sea turtle) [8] உலகம் முழுவதும் சுமார் 2,000 அளவிலான கெம்ப்ஸ் சேற்றுக் கடல் ஆமைகள் வாழ்வதாகக் கணிப்பீடுகள் கூறுகின்றனர். இதன் விஞ்ஞானப் பெயர் Lepidochelys kempii என்பதாகும்.

தட்டைக் கடல் ஆமை

[தொகு]
தட்டைக் கடல் ஆமையின் தோற்றம்

தட்டைக் கடல் ஆமை (Flatback sea turtle) என்பதன் விஞ்ஞானப் பெயர் Natator depressus என்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hirayama R; Tong H (2003). "Osteopygis (Testudines: Cheloniidae) from the Lower Tertiary of the Ouled Abdoun phosphate basin, Morocco". Palaeontology 46 (5): 845–56. doi:10.1111/1475-4983.00322. 
  2. Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Inverson, John B.; Shaffer, H. Bradley; Roger, Bour (2011-12-31). "Turtles of the world, 2011 update: Annotated checklist of taxonomy, synonymy, distribution and conservation status". Chelonian Research Monographs 5 இம் மூலத்தில் இருந்து 2012-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/64t6NrOyR?url=http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Accounts/crm_5_000_checklist_v4_2011.pdf. 
  3. [1]
  4. http://www.kalvisolai.com/2010/04/blog-post_3152.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  6. http://hiox.org/14412-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88.php
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-18. பார்க்கப்பட்ட நாள் 2012-12-18.
  8. Turtles of the World: Annotated Checklist of Taxonomy and Synonymy, December 2010, page 000.94

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலாமை&oldid=3791910" இலிருந்து மீள்விக்கப்பட்டது