கிமு 1-ஆம் நூற்றாண்டு
கி.மு. 1-ஆம் நூற்றாண்டு (1st century BC) அல்லது கி.மு. கடைசி நூற்றாண்டு, என்பது கி.மு. 100-ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கி.மு. 1-ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும். அனோ டொமினி முறையில் சுழிய ஆண்டு நடைமுறையில் இருக்கவில்லை. இதற்கடுத்ததாக வரும் நூற்றாண்டு கி.பி. 1-ஆம் நூற்றாண்டு ஆகும். வானியல் ஆண்டு இலக்க முறையில் கழித்தற் குறி பயன்படுத்தப்படுகிறது, இதன் படி "கி.மு. 2" என்பது "ஆண்டு -1" ஐக் குறிக்கும். கி.மு. 1-ஆம் நூற்றாண்டு ஒலோசீன் நாட்காட்டியில் இது 9,901 முதல் 10,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைக் குறிக்கும், அதாவது 99-ஆவது நூற்றாண்டு எனப்படும்.
இந்நூற்றாண்டுக் காலப்பகுதியில் நடுநிலக் கடல் பகுதியைச் சுற்றவுள்ள நிலப்பகுதிகள் உரோமர் ஆட்சியின் கீழ் வந்தன. இவை நேரடியாக பேரரசின் ஆளுநர் ஆட்சியின் கீழோ அல்லது உரோமர்களால் நியமிக்கப்பட்ட அரசரர்களாலோ ஆளப்பட்டன. உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை நீர்த்துப் போனது. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. இந்நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாகப் பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் யூலியசு சீசர், மார்க் அந்தோனி, அகஸ்ட்டஸ் போன்ற உறுதி மிக்கவர்களின் கையில் பேரரசு சிக்கியது. அகஸ்ட்டஸ் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது. இது வரலாற்றில் உரோமைப் புரட்சி எனக் கூறப்படுகிறது. கிறித்தவத்தின் முக்கிய நபரான இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இந்நூற்றாண்டின் இறுதியிலேயே இடம்பெற்றது.
கீழைத்தேய நாடுகளில், ஆன் அரசமரபின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்நூற்றண்டின் இறுதி அரைப்பகுதியில் சீனாவின் அரசியலில் குழப்ப நிலையே காணப்பட்டது.
நிகழ்வுகள்
[தொகு]- கிமு 81: சூலா உரோம நாட்டின் அரசனாக நியமிக்கப்பட்டான். பல சீர்திருத்தங்களை இவன் அறிவித்தான்.
- கிமு 73: மற்போர் வீரன் ஸ்பாட்டகஸ் தலைமையிலான கிளர்ச்சி இடம்பெற்றது.
- கிமு 63: உரோமைக் குடியரசின் ஆட்சியாளன் பொம்பெய் எரூசலேமைக் கைப்பற்றினான்.
- கிமு 44: யூலியசு சீசர் கொல்லப்பட்டார்.
- கிமு 31: அகஸ்ட்டஸ் தலைமையிலான படைகள் மார்க் அந்தோனி, ஏழாம் கிளியோபாட்ராவின் படைகளைத் தோற்கடித்தன.
- கிமு 27: அகஸ்ட்டஸ் உரோமைப் பேரரசின் முதலாவது பேரரசனாக நியமிக்கப்பட்டான்.
- கிமு 6 – கிமு 4 (அண்): இயேசு கிறிஸ்து பிறப்பு.
முக்கிய நபர்கள்
[தொகு]- அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசன்
- ஏழாம் கிளியோபாட்ரா, எகிப்திய அரசி
- முதலாம் ஹெரொட், யுடேயா அரசன்
- ஓராசு, உரோமைக் கவிஞர்
- இயேசு கிறிஸ்து
- யூலியசு சீசர், உரோம இராணுவத் தலைவன், அரசியல்வாதி
- மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ, உரோம எழுத்தாளர், கட்டடக் கலைஞர்
- ஆவிட், உரோமக் கவி
- வேர்ஜில், உரோமக் கவி
- ஸ்பாட்டகஸ், மற்போர் வீரன்
- சிமா சியான், சீன வரலாற்றாளர்
கண்டுபிடிப்புகள்
[தொகு]- சூரியமரு சீனர்களால் முதற்தடவையாக அவதானிக்கப்பட்டது.
- முதலாவது குவிமாடம் உரோமர்களால் அமைக்கப்பட்டது.
- கண்ணாடியூதுதல் உரோமை சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.