குட்டநாடு
குட்டநாடு கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுவதால், இதை கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டுள்ளது. இது இந்தியாவிலேயே கடல்மட்டத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட பகுதி. சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்புப்பளவு நிலம் கடல்மட்டத்திற்குக் கீழே உள்ளது. இதன் உயரம் 0.6 மீட்டரில் இருந்து 2.2 மீட்டர் வரை கடல் மட்டத்திற்குக் கீழ் உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கடல்மட்டத்திற்குக் கீழ் இருந்தும் உழவு செய்யப்படும் உலகின் மிகச்சில பகுதிகளிலும் குட்டநாடும் ஒன்று.
குட்டநாட்டுப் பகுதி ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கியது. கீழ்க்குட்டநாட்டுப் பகுதியான ஆழப்புழையில் மட்டும் 18 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. நெல், வாழை ஆகியன இங்கு முதன்மையாக பயிரிடப்படுகின்றன. திரைப்பட இயக்குனரான வினயன் இங்கு பிறந்தவர். இந்த குட்டநாடு பகுதியைதான் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை தன் கதைகளுக்கான களமாக கொண்டு எழுதினார். இவருக்கு ஞானபீட விருது கிடைத்தபோது, தனது ஏற்புரையில் தனது பாதத்தில் பதிந்துள்ள குட்டநாட்டின் வயல் வெளி சகதிதான் இந்த எழுத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.[1]