பொதுக் காலம் 19-ஆம் ஞாயிறு: நிலைவாழ்வுதரும் ஆன்ம உணவைத் தேடுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 1 அர 19:4-8 II. எபே 4:30-5:2 III. யோவா 6:41-51)
பொதுக் காலத்தின் 19-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். கடந்த ஞாயிறைப் போன்றே இன்றைய வாசகங்களும் 'இயேசுவே வாழ்வு தரும் உணவு' என்பதன் அடிப்படையில் பேசுகின்றன. பொதுவாக மனித வாழ்வின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கும் உடல் உணவு, மன உணவு, ஆன்ம உணவு ஆகிய மூவகை உணவுகள் தேவைப்படுகின்றன.
01. உடல் உணவுக்கானத் தேவைகள்
கடவுளின் இறைவாக்குப் பணியில் இறைவாக்கினர் எலியா உண்மையை உரைத்ததனாலேயே அவர் வேறொரு இடத்திற்குச் தப்பிச்செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது என்பதை இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கப் பகுதி (வச. 1-3) எடுத்துரைக்கிறது. பொய்வாக்கினர் அனைவரையும் எலியா வாளினால் கொன்றதை ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான். எனவே, ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, “நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லச் சொன்னாள். ஆக, இந்தப் பின்னணியில்தான் எலியா கடும் மனச்சோர்வையும், உடல்சோர்வையும் பசியையும் சந்திக்கின்றார். இந்த நிகழ்வில் ஆண்டவரின் தூதர் அவரை இரண்டுமுறை தட்டி எழுப்பி சாப்பிட வைக்கின்றார் என்பதை பார்க்கின்றோம். இவ்விதத்தில், இறைவாக்குப் பணியில் துயரம், சோர்வு, களைப்பு, பசி என உடல்சார்ந்த பிரச்சனைகள் குறுக்கிடும்போது அவை கடவுளாலேயே தீர்த்துவைக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது முதல் வாசகம். கடவுளின் தூதர் எலியாவை இரண்டாம் முறை எழுப்பி சாப்பிடச் சொல்லும்போது, “எழுந்து சாப்பிடு; ஏனெனில், நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்று கூறுகின்றார். ஆக, 'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்' என்ற பழமொழிக்கேற்ப, உடல் வலிமையுடன் இருந்தால்தான் இறைவாக்குப் பணியாற்ற முடியும் என்பதையும் கடவுள் இச்செயல் வழியாக எடுத்துரைக்கின்றார். அதேவேளையில், நமது உடல் வளர்ச்சிக்கான உணவுத்தேவையை நாம் மிக மிக முக்கியமானதாகவும் கருதிவிடக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். காரணம், அந்நிலை ஏற்படும்போது, உண்பதற்காகவே வாழ வேண்டும் என்ற தவறான எண்ணமும் நம் உள்ளத்தில் குடிபுகுந்துவிடும். மக்கள் கூட்டம் இயேசுவையும் சீடரையும் தேடிவந்தது இதன் அடிப்படையில்தான் என்பதையும் இக்கணம் உணர்ந்துகொள்வோம். மேலும் எலியாவுக்கு உணவு கொடுத்த கடவுளின் தூதர் அவர் இரசித்து ருசித்து சாப்பிடும் அளவிற்குக் கொடுக்கவில்லை. மாறாக, தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும்தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வாறே, இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் மன்னா என்ற உணவைக் கொடுத்தபோது, தேவைக்கும் மேல் அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கவில்லை, தேவையான அளவிற்குத்தான் கொடுத்தார். அவ்வுணவை சேமித்து வைக்கக் கூறியபோதும் கூட அன்றன்றையத் தேவைக்கு மட்டுமே சேமித்துவைக்கச் சொன்னார்.
இன்றைய உலகில் ஒருசாரார் உணவின்றி வாடுவதும், மறுசாரார் உண்டு மகிழ்வதும் நாம் காணும் காட்சிகள். இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. இவரது இரண்டாவது மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். திருமணத்தை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கான வைபவங்கள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றது. இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு. தினமும் மதியம் 225 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இரவு விருந்திற்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்திற்கு 85 வகையான உணவுகளும் சமைத்து பரிமாறப்பட்டது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விருந்தில் பங்குபெற்றுவர்கள் எல்லாமே பிரபலமானவர்கள்தாம். இன்றைய உலகம் மன மற்றும் ஆன்ம உணவைக் காட்டிலும் உடல் உணவிற்குத்தான் அதிமுக்கியத்துவம் கொடுத்துவருகின்றது என்பது கண்கூடு. தேவைக்கு அதிகமாக உடலுக்குள் உணவு உட்செலுத்தப்படும்போது அதுவே, பேராபத்தை விளைவிக்கும் நஞ்சாக மாறிவிடும் என்பது திண்ணம். சாப்பிடுவதற்காகவே (களியாட்டங்கள்) வாழும் வாழ்க்கையில் சுயநலமும், பேராசையும், அடுத்தவர்களுக்கு உரியவற்றை அபகரித்துக்கொள்ளும் எண்ணமும் அதன்விளையாக, போர்களும், மோதல்களும், வன்முறைகளும் ஏற்பட்டு கடவுள் எந்த நோக்கத்திற்காக நம்மை இவ்வுலகிற்கு அனுப்பினாரோ, அது சிதைக்கப்படும் அளவிற்கு நாம் மாறிப்போவோம். இதனால், ஏழ்மை, வறுமை, பஞ்சம், பசி பட்டினி, ஆகிய எல்லாமே இயற்கையாக அல்ல, மாறாக செயற்கையாகத் தோற்றுவிக்கப்படும்.
02. மன உணவுக்கானத் தேவைகள்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் மன உணவுக்கான தேவைகளை முன்வைக்கின்றார் புனித பவுலடியார். “மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்” என்று அறிவுறுத்துகின்றார். அண்மையில், உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத பதினைந்து வகையான அற்புதமான மருந்துகள் குறித்த செய்தியொன்றை இணையத்தில் வாசித்தேன். இந்தப் பதினைந்து வகையான அற்புதமான மருந்துகளும் மன உணவுக்கானவை என்பதை அறிந்துகொள்வோம். உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம். விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம். இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம். சிரிப்பு என்பதும் ஒரு மருந்துவம். நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்துவம். பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்துவம். சூரிய ஒளியும் ஒரு மருந்துவம். ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம். நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம். தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம். தியானம் என்பதும் ஒரு மருத்துவம். இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம். மனதிற்குப் பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு மருத்துவம். சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம். நல்ல நண்பர்களுடன் இருப்பதும் ஒரு மருத்துவம். இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும். இந்தப் பதினைந்து வகையான மன உணவுகளையும் நாம் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இவைகள் நம்மிடையே உள்ளன.
03. ஆன்ம உணவுக்கானத் தேவைகள்
இன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கும் படிப்பினைகள் அனைத்தும் ஆன்ம உணவுக்கானத் தேவைகள்தாம். இன்றைய நற்செய்தி கடந்த வார நற்செய்தியின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. "கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது. வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று இயேசு கூறியதை அம்மக்கள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்கள். அதாவது, உடலுக்கு நிறைவு அளிக்கும் உணவைக் காட்டிலும் ஆன்மாவுக்கு நிறைவளிக்கும் இயேசுவின் வார்த்தைகளும் அவர் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வும்தான் மிகவும் முக்கியம் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். அதனால்தான், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று அவரிடம் கேட்டுக்கொண்டதைப் பார்க்கின்றோம்.
ஆக, உடலுணவைக் காட்டிலும் கடவுளின் வார்த்தையே மனிதரை வாழவைக்கிறது, அதனால்தான் பாலை நிலத்தில், சோதிக்கிறவன் இயேசுவை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” (காண்க மத் 4:3-4) என்று கூறுகின்றார். கடவுளாகிய ஆண்டவர் வழங்கிய கட்டளைகள் குறித்து இஸ்ரயேல் கூட்டமைப்பிடம் மோசே எடுத்துரைக்கும்போது, "அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்" (காண்க இச 8:3) என்று விளக்கமளிக்கின்றார். நமது ஆண்டவராம் இயேசுவும் இதே வார்த்தைகளை அலகையிடம் எடுத்துக்காட்டி அவன் தரும் சோதனையை முறியடிக்கின்றார். மேலும் "ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல, மாறாக, உமது சொல்லே உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்து கொள்வார்கள்" (காண்க சாஞா 16:26) என்று சாலமோனின் ஞான நூலும் எடுத்தியம்புகிறது. யூதப் பேரறிஞர் பிலோ என்பவர், மன்னா என்பது ஞானத்தைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றார். ஆக, மன்னா குறித்து ஒட்டுமொத்தமாக நாம் சிந்திக்கும்போது, அது உடல் உணவை அன்று மாறாக, ஆன்ம உணவாகிய இறைவார்த்தையை அதாவது, ஞானத்தைக் குறிப்பிடுகின்றது என்பதை அறிந்துகொள்வோம். அப்படியென்றால், இறைவார்த்தையாகிய இயேசு என்னும் ஞானத்தைக் கண்டுகொள்பவர்கள் நிலைவாழ்வைக் கண்டுகொள்கின்றனர் என்பது பொருளாகின்றது.
இறைத்தந்தையால் ஈர்க்கப்பெறுவோம்
ஆனால், "வாழ்வு தரும் உணவு நானே" என்று இயேசு கூறியதை சாதாரண மக்கள் ஏற்றுக்கொண்டாலும் யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே’ என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள் என்று இன்றைய நற்செய்தி கூறுகின்றது. நாம் பார்த்த மரியா-யோசேப்பின் மகன் எப்படி விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாக இருக்கமுடியும் என்று மீண்டும் உலகப் பார்வைக்குள் நுழைகின்றனர் யூதர்கள். ஆனால் இதனை உள்ளதால் அறியும் இயேசு, "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்" என்று மீண்டும் ஒருமுறை, தான் தந்தையால் அனுப்பட்ட உண்மையான மெசியா என்பதை உறுதிப்படுத்துகின்றார். இங்கே "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது" என்ற வார்த்தை நம் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது, கடவுள் மக்களை ஈர்க்கும் விதம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இறைவாக்குப் பணிக்கு அழைப்புப் பெற்றுள்ள நாம் அனைவருமே இறைவனால் ஈர்க்கப்பட்டவர்கள்தாம். ஆகவேதான், அழைத்தலுக்குள் ஒரு சிறப்பு அழைதலை (இல்லற வாழ்விலிருந்து துறவற வாழ்விற்கு) பெற்றுள்ளோம் நாம். அதேவேளையில், கடவுள் யாரையும் வலுக்காட்டாயமாக ஈர்ப்பதில்லை. மாறாக, இறைத்தந்தையின் பேரருளாலும், இயேசுவின் போதனையாலும், அவரது முன்மாதிரியான வாழ்வாலும் நாம் ஈர்க்கப்படுகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனடிப்படையில்தான், "கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்" என்று கூறும் இயேசு, "கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்" என்று கூறி அவர்களைத் தெளிவுபடுத்துகிறார் இயேசு. அதாவது, இறைத்தந்தையால் ஈர்க்கப்படுபவர்கள் மட்டுமே அவரைக் காணமுடியும் என்றும், ஈர்க்கப்படுபவர்கள் கூட தந்தையை நேரிடையாகக் காணமுடியாது, மாறாக, தன்னில்தான் காணமுடியும் என்றும் கூறும் இயேசு, தானே தந்தையின் முழுவெளிப்பாடு என்றும் உரைக்கின்றார். இதன் தொடர்ச்சியாகத்தான், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்" என்றும் உரைக்கின்றார். ஆகவே, உடல் உணவைக் காட்டிலும், மன உணவையும், நிலைவாழ்வளிக்கும் ஆன்ம உணவையும் தேடுவோம். இதற்கான அருளை நமதாண்டவர் இயேசு வழங்கிட இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்