குழந்தை ஆரோக்கியம்: சேற்றுக் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கிறது?
![குழந்தைகள் அழுக்காவது அவர்கள் உடல்நலத்திற்கும் நன்மை பயக்கலாம்.](https://ichef.bbci.co.uk/ace/ws/640/cpsprodpb/13747/production/_127078697_f12ce6f7-de6b-4673-bde6-4ce6e6f1e9ef.jpg.webp)
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன்
- பதவி, ㅤ
குழந்தைகளுக்கு அழுக்காவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் சேற்றைப் பார்த்தவுடன் தங்களது செருப்பு, உடை உட்பட எதையும் பொருட்படுத்தாமல் இறங்கி விடுகிறார்கள். குழந்தைகள் அழுக்காவது அவர்கள் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கலாம்.
'அழுக்காகாதே...' என்ற கண்டிப்பு ஒரு காலத்தில் எல்லா குடும்பங்களிலும் இருந்தது. அதற்கு காரணம், தங்கள் குழந்தைகள் சிறந்த ஆடைகளைக் கெடுத்துக் கொள்வதை பெற்றோர்கள் விரக்தியுடன் பார்த்தனர். விவசாய வயல்களில் ஓடினாலும், மரங்களில் ஏறினாலும் அந்த நாள் முடிவதற்குள் குழந்தைகளின் வெள்ளை ஆடைகள் பழுப்பு நிறத்திற்கு மாறுவது தவிர்க்க முடியாதது.
நகர்ப்புறத்தின் எழுச்சி, வீடியோ கேம்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கவர்ச்சி காரணமாக இயற்கையுடனான தொடர்பு மிகவும் அரிதாகிவரும் நிலையில், இன்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அது மாதிரியான சேட்டைகள் செய்யமாட்டார்களா என்று ரகசியமாக விரும்பலாம். ஆனால், பலருக்கு சேறும் சகதியுமாக இருக்க வாய்ப்பே இல்லை.
சலவைக் கட்டணத்தில் மிச்சப்படுத்தியது, குழந்தையின் ஆரோக்கியத்திற்கான செலவில் இழக்கப்படலாம். சமீபத்திய ஆராய்ச்சியின் படி, வெளியில் உள்ள அழுக்கு மனிதர்களுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுடன் இணைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவித்து, ஒவ்வாமை, ஆஸ்துமா, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை உருவாக்குகிறது.
மண், சேறு போன்ற சில இயற்கைப் பொருட்களில் வியக்கத்தக்க சக்திவாய்ந்த நுண்ணுயிரிகள் உள்ளன. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அவை ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை நாம் தற்போதுதான் முழுமையாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம்.
![குழந்தையின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வெளிப்புற விளையாட்டின் மற்றொரு நன்மை உடற்பயிற்சி.](https://ichef.bbci.co.uk/ace/ws/640/cpsprodpb/18567/production/_127078699_4978dfd3-4b0b-43a7-b73d-73c5c004664f.jpg.webp)
பட மூலாதாரம், Getty Images
மறுசீரமைக்கப்படும் மனம்
வெளிப்புற விளையாட்டால் கிடைக்கும் பல உளவியல் நன்மைகள் ஏற்கெனவே நன்கு அறிந்ததே. நம் மூளை இயற்கையான நிலப்பரப்புகளில் பரிணமித்தது. நமது புலனுணர்வு அமைப்புகள் காடுகள் கொண்ட வெளிப்புற இடங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
இயற்கையான காட்சிகள் சரியான அளவில் தூண்டுதல் கொடுக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும். இது சோர்வாக இருக்கும்போது மற்றும் எளிதில் கவனம் சிதறும்போது மூளையை புத்துணர்வுகொள்ளச் செய்ய உதவும் என்று கருதப்படுகிறது. இந்தக் கோட்பாட்டை ஆதரித்து, 2009ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வில், கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி குறைபாடு (ADHD) கொண்ட குழந்தைகளால், நகர்ப்புற தெருக்களை விட பூங்காவில் 20 நிமிட நடை பயணத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும் என்பது தெரியவந்தது. புல் மற்றும் மரங்களுக்கு அருகாமையில் இருப்பது அவர்களின் மனதில் நன்மை பயப்பதாகத் தெரிகிறது. கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு கொண்ட குழந்தைகளுக்கான சிகிச்சையில் மற்ற சிகிச்சைகளுடன் இதையும் வழங்கலாம் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது தவிர, வெளிப்புற விளையாட்டு சிறந்த கற்றல் அனுபவங்களையும் வழங்கும். எடுத்துக்காட்டாக, மண் அல்லது மணல் போன்ற பொருட்களை பிசைந்து, அதில் உருவங்கள் செய்வது குழந்தைகளின் சென்சரி மோட்டர் எனப்படும் உணர்வுகள் மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் என்கிறார் குழந்தை நரம்பியல் மனநல மருத்துவரும் இத்தாலியின் பலேர்மோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான பிரான்செஸ்கோ விட்ரானோ. இவர், இந்தச் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதில் நீண்ட அனுபவம் உள்ளவர். இதன் மூலம் குழந்தைகள் தங்களது உடல் சமிக்ஞைகளைப் படிப்படியாக புரிந்து கொள்ள முடிகிறது.
வீடு அல்லது வகுப்பறைச் சூழல்களில் இருந்து விலகி இருக்கும் இத்தகைய நடவடிக்கைகள், பிற சூழல்களில் எதிர்கொள்ள கடினமாக இருக்கும் உணர்ச்சிகளைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிய குழந்தைகளுக்கு உதவலாம். தங்களின் உணர்ச்சி நிலையை வாய்மொழியாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு 'மணல் தட்டு சிகிச்சை'அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த மணல் மற்றும் சிறு உருவங்கள் பயன்படுத்தப்படுகிறது.
![இயற்கையில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.](https://ichef.bbci.co.uk/ace/ws/640/cpsprodpb/2A23/production/_127078701_300889f5-a84d-4f3c-8588-ac926672ac55.jpg.webp)
பட மூலாதாரம், Getty Images
குழந்தையின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வெளிப்புற விளையாட்டின் மற்றொரு நன்மை உடற்பயிற்சி. ஒரு குழந்தையின் வலிமை மற்றும் தாங்கும் திறனை அதிகப்படுத்தி, உடல் பருமன் அபாயத்தை உடற்பயிற்சிகள் குறைப்பதாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மனித வளர்ச்சி மற்றும் குடும்ப அறிவியல் பேராசிரியரான எலிசபெத் கெர்ஷாஃப் தலைமையிலான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இயற்கையான சூழலில் விளையாடுவதில் பல நன்மைகள் இருக்கலாம் என்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அந்த நன்மைகள் சேற்றிலும் இருக்கலாம்.
பழைய நண்பர்கள்
முதன்முதலில் 1980களின் பிற்பகுதியில் முன்வைக்கப்பட்ட 'சுகாதார கருதுகோள்'பற்றிய நிலைப்பாடு குறித்து சமீபத்திய ஆராய்ச்சிகள் மாறுபட்ட பார்வையை வழங்குகின்றன. அதன்படி, 20ஆம் நூற்றாண்டில் குழந்தை பருவ நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருந்தாலும், மக்களின் நோயெதிர்ப்பு அமைப்புகளில் அது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. இதன் விளைவாக ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை போன்ற நோய்கள் அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
பல விஞ்ஞானிகள் இப்போது hygiene எனப்படும் சுகாதார கருதுகோளை விரும்பவில்லை. அதேநேரத்தில் நோய்த்தொற்றுகள் மட்டும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை அவர்கள் மறுக்கிறார்கள்.
"பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது மிகவும் சிக்கலாக இருந்தது" என்கிறார் ஒருங்கிணைந்த உடலியல் பேராசிரியரும், கொலராடோ பல்கலைக்கழகத்தின் நடத்தை நியூரோஎண்டோகிரைனாலஜி ஆய்வகத்தின் இயக்குநருமான கிறிஸ்டோபர் லோரி.
தொற்று அல்லாத உயிரினங்களே தற்போது முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்தப் 'பழைய நண்பர்கள்' நமது பரிணாம வரலாற்றின் பெரும்பகுதியில் உள்ளனர். அவை பெரும்பாலும் பாதிப்பில்லாதவை. மேலும், எந்தவொரு நோய்க்கிருமிக்கும் அதிகமாக எதிர்வினையாற்றுவதை விட, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மிதப்படுத்த இவை பயிற்சியளிக்கின்றன.
நாம் இயற்கையோடு நேரத்தைச் செலவிடும் போதெல்லாம் நமது உடல் இந்தப் பழைய நண்பர்களைச் சந்திக்கிறது. அதிகரித்த நகரமயமாக்கல் மற்றும் குறைந்த வெளிப்புற விளையாட்டுகளால், பல குழந்தைகளுக்கு தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை. அதாவது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்தத் தாக்குதலுக்கும் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
பல்வேறு ஆய்வுகள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. பொதுவாக பண்ணைகளில் வளரும் மக்களுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் குரோன் நோய் எனப்படும் குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.
![நாம் பாதிக்கப்படக்கூடிய சூழலை உணரும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு உடல் அழற்சியை அதிகரிக்கத் தொடங்குகிறது.](https://ichef.bbci.co.uk/ace/ws/640/cpsprodpb/E3B9/production/_127079285_ea569bcd-67ef-4fda-bf1a-09e898eda8e9.jpg.webp)
பட மூலாதாரம், Getty Images
குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் பல வழிகளில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தற்போது நன்கு அறியப்பட்ட ஒன்று. ஆனால் அவை நம் தோல் மூலமாகவும் செயல்படக்கூடும் என்கிறார் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் மைக்கேல் அன்டோனெல்லி. இவர் மண் சிகிச்சை மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்துள்ளார்.
நமது உடலின் வெளிப்புற அடுக்கு பல வகையான நுண்ணுயிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது. அடோபிக் டெர்மடிடிஸ் எனப்படும் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற குறைபாடுகள் உள்ளவர்களது உடலின் வெளிப்புற அடுக்கில் குறைந்த அளவில் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மைக்கு கீல்வாதம் போன்ற நோய்த்தன்மையுடனும் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. "இந்த நுண்ணுயிரிகளால் பல நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஆரோக்கியமான உடலும் மனமும்
இயற்கையில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
நாம் பாதிக்கப்படக்கூடிய சூழலை உணரும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு உடல் அழற்சியை அதிகரிக்கத் தொடங்குகிறது. அழற்சியானது நோய்த்தொற்றுக்கு எதிரான முதல் பாதுகாப்புகளில் ஒன்றாக இருப்பதால், நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலில் இருந்து சாத்தியமான பாதிப்பிற்கு எதிராக உடலைத் தயார்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த எதிர்வினை நடைபெறுகிறது.
ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களுக்கு இது குறைந்த பயனுள்ளதாகவே உள்ளது.
தங்கள் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கிராமப்புற சூழலில் கழித்தவர்களுக்கு நகரங்களில் வளர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது, இன்டர்லூகின் 6 போன்ற அழற்சி மூலக்கூறுகளின் வெளிப்பாடு குறைவதோடு, மேடைப்பேச்சு போன்ற அழுத்தமான நிகழ்வுகளை அவர்கள் சாதாரணமாகக் கையாளுகின்றனர். விஞ்ஞானிகள் சமூக-பொருளாதார நிலை உட்பட பல காரணிகளை மையமாக வைத்து ஆய்வுசெய்த போதிலும் இது உண்மையாகவே இருந்தது.
நீண்ட கால ஆரோக்கியத்தில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் நாள்பட்ட உடல் அழற்சியானது மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு நிலைகளுக்குப் பங்களிக்கும்.
நகரங்களில் வளர்ந்தவர்களை உடல் அழற்சியின் அடிப்படையில் 'நடமாடும் வெடிகுண்டுகள்'என்கிறார் அந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியராக இருந்த லோரி.
வியக்கத்தகு விளைவுகள்
'பழைய நண்பர்கள்' கருதுகோளை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து சான்றுகள் கிடைப்பதால், சில ஆராய்ச்சியாளர்கள் இந்த நன்மைகளுக்கு காரணமான குறிப்பிட்ட உயிரினங்களையும், அவை அந்த மாற்றங்களைக் கொண்டு வரும் வழிகளையும் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, லோரி மண்ணில் காணப்படும் மைக்கோபாக்டீரியம் வாக்கே நுண்ணுயிரியை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளார். எலிகள் மைக்கோபாக்டீரியம் வாக்கேயுடன் தொடர்புகொள்ளும்போது, அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவும் ஒழுங்குமுறை T செல்களின் மேம்பட்ட செயல்திறனைக் காட்டுகின்றன. இது மற்றொரு ஆக்ரோஷமான எலியுடன் மோதுதல் போன்ற அழுத்தமான நிகழ்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவுவதாகத் தெரிகிறது. கடைசி ஊசி செலுத்தபட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும், அழுத்தமான சூழலை எதிர்கொள்ளும் தன்மையில் மிகவும் வியத்தகு விளைவுகளை தாங்கள் கண்டதாக லோரி கூறுகிறார்.
சில விஞ்ஞானிகள் ஹெல்மின்த்ஸ் எனப்படும் மண்ணில் வாழும் ஒட்டுண்ணியின் பங்கு பற்றி நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஹெல்மின்த்ஸோடு தொடர்புகொண்டவர்களுக்கு குரோன் நோய் போன்ற அழற்சி குடல் நோய்களின் ஆபத்து குறைவாக இருப்பதாகத் தெரிகிறது.
மண் குளியல் மற்றும் வெப்ப நீர் குளியல் உட்பட பல ஸ்பா சிகிச்சைகள், தோலின் நுண்ணுயிர் சமூகங்களுக்கு நன்மை பயக்கும் உயிரினங்களை அறிமுகப்படுத்தி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்கிறார் அன்டோனெல்லி. அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கும் ஸ்டேஃபிளோகோகஸ் எபிடெர்மிடிஸ் உட்பட பல இனங்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கின்றன.
நன்மை பயக்கும் பாக்டீரியாக்களோடு இளமைக் காலங்களிலேயே தொடர்புகொள்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பல விஞ்ஞானிகள் குழந்தை பருவத்தில் இயற்கையுடன் அதிக தொடர்பை ஊக்குவிப்பதில் உள்ள நன்மைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
காடுகளின் வழியாக மென்மையான தியான நடைகள் செய்வதை 'வனக் குளியல்' எனக் குறிப்பிடும் அன்டோனெல்லி, அது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அடோபிக் டெர்மடிடிஸ் எனும் அழற்சியிலிருந்து பாதுகாப்பதாகக் கூறுகிறார்.
காடுகளில் இலைகள் மற்றும் மண்ணைத் தொடுவதன் மூலம், தோலின் நுண்ணுயிரிகளை வளப்படுத்தும் நன்மை பயக்கும் உயிரினங்களோடு தொடர்புகொள்ளலாம் என்கிறார் அவர்.
இதற்கிடையில், பின்லாந்தில் குழந்தைகளிடம் இயற்கையை கொண்டு வர ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. நான்கு பகல்நேர பராமரிப்பு மையங்களில், ஆராய்ச்சியாளர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை மாற்று மண் மற்றும் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்களால் மாற்றினர். அவர்களுக்கு தோட்டம் அமைக்க நடவு பெட்டிகளும் வழங்கப்பட்டன. இது குழந்தைகளின் தொடர்பை மேலும் ஊக்குவித்ததாகக் கூறுகிறார் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் அகி சின்கோனென்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, குழந்தைகளின் தோல் மற்றும் குடலில் நுண்ணுயிர் பன்முகத்தன்மை அதிகரித்திருந்ததையும், மேம்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் காண முடிந்தது. எடுத்துக்காட்டாக, ஒழுங்குமுறை T செல்களின் எண்ணிக்கையும், ரத்த பிளாஸ்மாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகளின் விகிதமும் அதிகரித்திருந்தது.
இந்த மாற்றங்களின் நீண்டகால விளைவுகளைச் சோதிக்க விரும்பும் சின்கோனென், அவை மனித நோய்களின் குறைவான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என தான் நினைப்பதாகவும் கூறுகிறார்.
மண் சமையலறைகள்
வெளிப்புற பாடங்கள், வழக்கமான இயற்கை நடைகள் மற்றும் குழந்தைகளை அழுக்குகளில் விளையாட ஊக்குவிக்கும் மண் சமையலறைகளை உருவாக்குதல் என பல பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் பள்ளிகள் ஏற்கனவே இயற்கையுடன் அதிக தொடர்பை ஊக்குவிக்கின்றன
"பல நர்சரிகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகள் விளையாடுவதற்கு குறைவான திறந்தவெளிகள் உள்ளன என்ற விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது" என்கிறார் பள்ளிகளின் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற கட்டிடக் கலைஞர் மரிலிசா மொடெனா.
"சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குழந்தைகளுக்கு பொதுவான அனுபவமாக இருந்த அந்த செயல்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் தேடுகிறோம். வெளிப்புற விளையாட்டு மீதான அதிக ஆர்வம் வடக்கு ஐரோப்பாவில் தொடங்கியது. ஆனால் அது இப்போது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது" என்றும் அவர் கூறுகிறார்.
எதிர்கால ஆராய்ச்சியின் மூலம், வீட்டுத் தோட்டங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் உள்ள மண்ணை மிகவும் பயனுள்ள உயிரினங்களைக் கொண்டு வளப்படுத்த முடியும். ஆனால், தற்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களிடம் உள்ளதை வைத்து உழைக்க வேண்டியிருக்கும். குறிப்பாக மண் சமையலறைகள் செலவு குறைந்தவை மற்றும் சிறிய இடத்தையே எடுத்துக் கொள்ளக்கூடியது. உங்களுக்கு தேவையானது ஒரு பழைய மேசை மற்றும் சில பானைகளே. பானைகளில் மண் மற்றும் நீரை கலந்துவைத்தால் போதுமானது. கூடுதலாக, கற்கள், பாறைகள், மணல் மற்றும் தாவரங்களால் நிரப்பப்பட்ட அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுடன் கூடிய அதிநவீன கட்டமைப்புகள் பொருத்தலாம்.
உங்கள் குழந்தைகள் சிறிய மண் சமையல்காரராக மாறி புதிய கற்பனைப் படைப்புகளால் தங்களை அழுக்காக்கிக் கொண்டு, தங்கள் மனதையும் நோய் எதிர்ப்பு அமைப்புகளையும் மேம்படுத்தி, மாதங்கள் அல்லது வருடங்கள் கூட அதன் சாத்தியமான பலன்களைப் பெறலாம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்