இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்
தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் தேதி 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் தொடங்கப்பட்டது.
- இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்
- இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்?
- இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?
- இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி
இதன்படி, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், விசேட வாகன தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் போலீஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி, பதில் போலீஸ் மாஅதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் போக்குவரத்து தேடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையானது, மறு அறிவித்தல் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது?
இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு சத்தங்களுடனான ஒலி பெருக்கி, தோரணை போன்ற மின்விளக்குகள், அதிக சத்தத்துடனான சைலன்ஸர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பெரும்பாலான பஸ்களின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தமது இஷ்ட தெய்வங்களின் சிலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பஸ்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில், வாகனங்களை அழகுப்படுத்துவதற்கான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு கடந்த காலங்களில் உரிய தரப்பினர் அறிவுறுத்தல் பிறப்பித்திருந்த போதிலும், அவ்வாறான பாகங்களுடன் தற்போதும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது.
குறிப்பாக பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளின் முன்பக்கத்தில் பிளாஸ்டிக் பூக்கள், கடவுள்களின் சிலைகள், அழகுப்படுத்தும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் கூறுவது என்ன?
இந்த நிலையில், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இவ்வாறான மேலதிக பாகங்களினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வாகனத்திற்குள் பயணிப்போருக்கு அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் விடுக்கும் தவறுகளை கண்டறியும் வகையில் போலீஸார் சிவில் உடைகளில் பயணித்து, வீடியோ பதிவு செய்து வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.
இவ்வாறான போலீஸாரின் நடவடிக்கை காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளை போலீஸார் நிறுத்தாத பட்சத்தில், தாம் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் பதில் போலீஸ் மாஅதிபருடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளங்களின் ஊடாகவும், நேரடியாகவும் தற்போது கடும் எதிர்ப்புக்களை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்ப்பு
முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்துவதற்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள சுமார் 50 மேலதிக பாகங்கள் உள்ள போதிலும், அதனையும் போலீஸார் அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
''கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, வாகனங்களில் பொருத்தியுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்த பயன்படுத்துகின்றனர். முச்சக்கரவண்டியில் பொருத்தக்கூடிய பாகங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியின் முன்பக்கத்திலுள்ள சூரிய ஒளி படாத வகையிலுள்ள பாகத்தையும் அப்புறப்படுத்துமாறு கூறுகின்றனர்.
அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுமார் 50 பாகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. அதை முதலில் பார்த்தவிட்டு சட்டத்தை அமல்படுத்த வருமாறு போலீஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடவுள் சிலைகளை அகற்ற உத்தரவு?
வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள கடவுள் சிலையை கூட அகற்றுவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
''மழை நீர் உட்பிரவேசிக்காத வகையிலான பாதுகாப்பு கவசத்தை பொருத்த சட்டத்தில் அனுமதியுள்ளது. போலீஸார் அதையும் அப்புறப்படுத்துகின்றனர். மழை காலத்தில் பாதுகாப்பிற்காகவே இந்த பாகம் வைக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் அப்புறப்படுத்துகின்றனர். தமது இஷ்ட தெய்வமாக அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் வைத்துள்ள புத்தர் சிலை, இயேசு சிலை, சிவன் சிலை, குரானிலுள்ள அடையாளங்கள் என்பவற்றை அகற்றுமாறு கூறுகின்றனர்" என்கிறார் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் எல்.ரோஹண பெரேரா.
''இப்போது நாங்கள் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை. சாரதிகளுக்கு தெளிவுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்'' என போலீஸ் ஊடக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
அனைத்து செயற்பாடுகளையும் சரி செய்வதே கிளீன் ஸ்ரீலங்காவின் நோக்கம் என அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவிக்கின்றார்.
''கிளீன் ஸ்ரீலங்கா என்பது தொடர்பில் தெளிவூட்டல் வேண்டும். சிலந்தி வலைகளை சுத்தம் செய்தல், வடிகாண்களை சுத்தம் செய்தல் போன்றதல்ல. அனைத்தையும் சரி செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வேலைகளை ஆரம்பித்தல். அரசு அலுவலகத்தில் வேலைகளை சரியான நேரத்தில் நிறைவு செய்தல் போன்றதும் இதில் உள்ளடங்குகின்றது." என அமைச்சர் கே.டீ.லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)