நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என்று 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எவ்வாறு கணக்கிட்டனர்?
- எழுதியவர், ராபர்ட் காக்கிராஃப்ட் & சாரா சைமன்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
ஆதி மனிதன் உலகின் முதல் எழுத்தை எழுதுவதற்கு முன்பாகவே காலத்தை அளக்கத் தொடங்கிவிட்டான். அதனால்தான் காலம் குறித்த அளவீடுகளை மனிதன் எப்போது தொடங்கினான் என்பதோ, எங்கே தொடங்கினான் என்பதோ இன்று வரை கண்டறியக் கடினமான ஒன்றாக உள்ளது.
காலம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பதை வானியலை அடிப்படையாகக் கொண்டு எளிதாக விளக்கலாம். உலகம் முழுவதும் பல்வேறு சமூகங்கள் தன்னிச்சையாக காலம் பற்றிய அளவீடுகளைப் பயன்படுத்தின.
பூமியில் இருந்து பார்க்கும்போது, வானில் சூரியன் எங்கே நகர்கிறது என்பதன் அடிப்படையில், ஒரு நாளையோ, ஆண்டையோ பழங்கால மக்கள் கணக்கிட்டனர். மாதங்களைக் கணக்கிடுவதற்கு சந்திரனின் நகர்வுகள் பயன்படுத்தப்பட்டன.
இருப்பினும், வானியலை அடிப்படையாகக் கொள்ளாமலேயே நேரத்தை அளக்கும் பழக்கவழக்கமும் நடைமுறையில் இருந்தது. எடுத்துக்காட்டாகச் சொன்னால், ஒரு வாரம் அல்லது ஒரு மணிநேரத்தைக் கணக்கிடுவதை எடுத்துக்கொள்ளலாம்.
எழுதப்பட்ட பழமையான மரபுகளில் ஒன்றான எகிப்திய ஹைரோகிளிஃபிக் நூல்கள், ஒரு மணிநேரம் என்பதன் தோற்றம் பற்றிய புதிய தகவல்களை நமக்கு அளிக்கின்றன. இது வட ஆப்பிரிக்கா மற்றும் அருகிலுள்ள கிழக்குப் பகுதியில் தோன்றியதாகத் தெரிய வருகிறது. மேலும் நவீன காலத்தில் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பே ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.
பழங்கால எகிப்தில் 'நேரம்'
கி.மு. 2400-ஆம் ஆண்டு எகிப்து பிரமிடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் தான் அந்நாட்டில் முதன் முதலாகத் தோன்றிய எழுத்துகளாக அறியப்படுகின்றன.
அவற்றில் 'வன்வ்ட்' என்ற சொல்லும் இடம்பெற்றிருந்தது. இந்தச் சொல்லை வெனுட் என உச்சரிக்க முடியும். ஹைரோகிளிஃபிக் நூலில் இந்தச் சொல் ஒரு நட்சத்திரத்தைக் குறிக்கிறது. எனவே அது இரவு நேரத்துடன் தொடர்புடைய ஒரு மணிநேரத்தைக் குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது.
'வன்வ்ட்' என்றால் ஒரு மணி நேரம் என புரிந்துகொள்ள நாம் அஸிவுட் என்ற நகருக்குச் செல்லவேண்டும். அங்கிருக்கும் பழங்கால செவ்வக வடிவ மர மூடிகளின் உட்புறம் கி.மு. 2000த்தில் அலங்கரிக்கப்பட்ட வானியல் அட்டவணையைப் பார்க்கவேண்டும்.
அந்த அட்டவணையில் பத்து நாட்களைக் கொண்ட வாரங்கள் இருந்தன. எகிப்திய நாட்காட்டியில் 12 மாதங்களும் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு மாதமும் பத்து நாட்களைக் கொண்ட வாரங்களும், இறுதியில் ஐந்து நாட்கள் விழாக்காலமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அட்டவணையின் ஒவ்வொரு கலத்திலும் 12 நட்சத்திரங்களின் பெயர்களும் 12 வரிசைகளில் பட்டியலிடப்பட்டிருந்தன.
அந்த 12 நட்சத்திரங்களும் இரவு நேரத்தை பனிரெண்டு பகுதிகளாகவும் (12 மணிநேரம்), ஒவ்வொரு பகுதியையும் ஒரு நட்சத்திரம் ஆட்சி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், வன்வ்ட் என்ற சொல்லுக்கும், இவற்றிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
1210 ஆம் ஆண்டு வரை எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் தான் இருந்தது. எகிப்தின் புதிய இராஜ்ஜியத்தில் - கிமு 16 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட பண்டைய எகிப்தின் காலம்- தான் இந்த வன்வ்ட் என்ற சொல்லுக்கும், அந்த வரிசைகளுக்கும் இடையே உள்ள இணைப்பைத் தெளிவாக்குகிறது .
வானியல் வழிமுறைகள்
அபிடோஸின் ஒசைரியன் என்ற கோவிலில், சூரியக் கடிகாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான வழிமுறைகள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களை விவரிக்கும் உரை உள்ளிட்ட ஏராளமான வானியல் தகவல்கள் இருந்தன. ஒரு நட்சத்திர அட்டவணையும் அங்கே இடம்பெற்றுள்ளது. அதில் அனைத்து 12 வரிசைகளும் வன்வ்ட் என்ற வார்த்தையுடன் தனித்துவமாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
புதிய இராஜ்ஜியத்தில் 12 இரவு நேர வன்வ்ட் மற்றும் 12 பகல் நேர வன்வ்ட்கள் இருந்தன. இவை இரண்டும் நேரத்தின் தெளிவான அளவீடுகள். அவற்றில் இரண்டு விஷயங்களுக்காக இல்லாவிட்டால், நேரம் பற்றிய யோசனை கிட்டத்தட்ட அதன் அண்மைய வடிவத்தில் உள்ளது.
முதலாவதாக, பகலில் 12 மணிநேரமும் இரவு 12 மணிநேரமும் இருந்தாலும், அவை எப்போதும் தனித்தனியாக வெளிப்படுத்தப்படுகின்றன, 24 மணிநேர நாளாக ஒருபோதும் ஒன்றாக இல்லை.
பகல்நேரம் சூரியன் நகர்வதால் ஏற்படும் நிழல் மாற்றங்களைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. இரவு நேரம் முதன்மையான நட்சத்திரங்களால் அளவிடப்படுகின்றன . சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் முறையே தெரியும் போது மட்டுமே இதைச் செய்ய முடியும். மேலும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவைச் சுற்றி இரண்டு காலங்கள் இருந்தன. அதில் எந்த நேரமும் இல்லை.
இரண்டாவதாக, புதிய ராஜ்ஜியமும் நமது நவீன காலமும் அளவில் வேறுபடுகின்றன. சூரிய கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்களில் ஆண்டு முழுவதும் வன்வ்ட்டின் அளவு மாறுபடும் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. குளிர்காலத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுவதால் ஏற்படும் நீண்ட இரவுகள், மற்றும் கோடைகாலத்தில் சூரியக் கதிர்கள் திசைமாறுவதால் ஏற்படும் நீண்ட பகல் நேரங்களை அவை குறிக்கின்றன.
எண் 12 எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள, 10 நாட்களுக்கு 12 நட்சத்திரங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைக் கண்டறிய வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த தேர்வு மணிநேரத்தின் உண்மையான தோற்றம் என வைத்துக்கொண்டால், 12 என்ற எண் வசதியான எண்ணாக இருந்ததா? ஒருவேளை, ஆனால் அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த நட்சத்திர அட்டவணைகளின் தோற்றம் மற்றொரு சாத்தியத்தை பரிந்துரைக்கிறது.
பண்டைய எகிப்தியர்கள் சிரியஸ் நட்சத்திரத்தை ஒரு மாதிரி நட்சத்திரமாகப் பயன்படுத்தி, அதன் இயல்புகளுடன் ஒத்த மற்ற நட்சத்திரங்களையும் தேர்வு செய்தனர்.
முக்கிய விஷயம் என்னவென்றால், மற்ற நட்சத்திரங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லாவிட்டாலும், சிரியஸைப் போலவே, அவர்கள் பயன்படுத்திய மற்ற நட்சத்திரங்கள் ஒவ்வொரு வருடத்திலும் 70 நாட்கள் வரை வானில் தோன்றவே இல்லை.
ஓஸைரியான் நட்சத்திர உரையின் படி, ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒரு முறையும் சிரியஸைப் போன்ற ஒரு நட்சத்திரம் மறைந்து, அதற்குப் பதிலாக வேறு ஒரு நட்சத்திரம் தோன்றியது.
ஆண்டின் ஒவ்வொரு பகுதியையும் சார்ந்து, இவற்றில் 10 முதல் 14 நட்சத்திரங்கள் ஒவ்வொரு நாளும் கண்களுக்குத் தெரிகின்றன. அவற்றை பத்து நாள் இடைவெளியில் எடுத்துக்கொண்டால் அஸிவுட் நகரில் உள்ள பெட்டியில் இடம்பெற்றிருந்த தகவல்களுடன் ஒத்துப்போகின்றன.
எனவே, இரவு நேரங்களின் 12 மணி நேரம் என்றும், இறுதியாக ஒரு நண்பகலில் இருந்து அடுத்த நண்பகல் 24 மணிநேரம் என்று கணக்கிடுவது, இது ஒரு வாரத்திற்கு பத்து நாட்கள் என்பதுடன் ஒத்துப்போகிறது.
எனவே, நமது நவீன காலம் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவுகளுடன் தொடர்புடையது என்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்