சுனிதா வில்லியம்ஸ்: எட்டே நாளில் பூமிக்கு திரும்ப வேண்டியவர் 8 மாதம் தங்கும் நிலை வந்தது ஏன்?

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி ‘புட்ச்’ வில்மோர், விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.
  • எழுதியவர், மைக் வென்ட்லிங்
  • பதவி, பிபிசி நியூஸ்

ஜூன் 5ஆம் தேதி இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சோதனைப் பயணத்திற்காகச் சென்றபோது, சில நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றனர். ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்கள்.

இந்த இருவரும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக்கூட (2025) விண்வெளியில் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்டார்லைனரின் முதல் சோதனைப் பயணம்

ஸ்டார்லைனரின் முதல் சோதனைப் பயணம்

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்ய, 61 வயதான வில்மோர் மற்றும் 58 வயதான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். இது, புதிய விண்கலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்னதாக ஒரு குழுவை அதில் அனுப்பி மேற்கொள்ளப்பட்ட சோதனைப் பயணம்.

இது, ஸ்டார்லைனர் விண்கலங்களை எதிர்காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தும் நோக்கில், அதன் செயல்திறன் குறித்து ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட சோதனை விண்கலம்.

இருப்பினும், அது தனது பயணத்தைத் தொடங்கியபோது சிக்கல்கள் வெளிப்பட்டன. அதன் உந்துவிசை அமைப்பில் கசிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அதன் சில த்ரஸ்டர்கள் செயலிழந்தன.

அவர்கள் விண்வெளி நிலையத்திற்கு பத்திரமாகச் சென்றுவிட்டார்கள் என்றாலும்கூட, ​​​​அதே ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவது பாதுகாப்பானதாகக் கருதப்படாவிட்டால், ஒரு மாற்று விண்கலம் தேவைப்படும்.

புதன்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக புட்ச் மற்றும் சுனிதாவை பூமிக்கு அழைத்து வருவதே எங்கள் பிரதான நோக்கம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார்.

"இருப்பினும், எங்களுக்கு இருக்கும் மாற்று வழிகளை உறுதிப்படுத்திக் கொள்ள, தேவையான திட்டமிடலை நாங்கள் செய்துள்ளோம்" என்றும் கூறினார்.

நாசா கூறியது என்ன?

நாசா கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் பரிசீலிக்கப்படும் ஒரு சாத்தியமான வழி என்னவென்றால், ‘நாசா செப்டம்பர் மாதத்தில் ஒரு விண்வெளித் திட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அப்போது அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, இந்த இரண்டு விண்வெளி வீரர்களையும், அந்தத் திட்டத்தின் பணிகள் முடிந்த பிறகு, அதன் விண்கலத்தில் பிப்ரவரி 2025இல் பூமிக்குத் திருப்பிக் கொண்டு வருவது.'

செப்டம்பர் மாத விண்வெளிப் பயணத்தில், ஸ்பேஸ்-எக்ஸ் (ஈலோன் மஸ்க்கின் நிறுவனம்) க்ரூ டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் நான்கு பேர் இருக்க வேண்டும் என்பது ஆரம்பத் திட்டம். ஆனால் தேவைப்பட்டால் அந்த நான்கில் இருவரைக் குறைத்துவிட்டு, இரு இருக்கைகளை காலியாக வைக்கலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாட்கள் பயணத்திற்காகச் சென்ற சுனிதா மற்றும் புட்ச், இப்போது 8 மாதங்களுக்கு மேல் அங்கிருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். க்ரூ டிராகன் பயன்படுத்தப்பட்டால், ஸ்டார்லைனர் விண்கலம் எந்தக் குழுவினரும் இல்லாமல், கணினி கட்டுப்பாட்டின் கீழ் பூமிக்குத் திரும்பும்.

இறுதி முடிவு எடுக்க ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசாவின் விண்வெளி இயக்க இயக்குநர் கென் போவர்சாக்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த சில வாரங்களாக நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார்.

"அதனால்தான் நாங்கள் அதைக் கையாள முடியும் என்பதை உறுதிப்படுத்த, இந்த வழிவகை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்று கூறினார்.

ஸ்பேஸ் எக்ஸ் vs போயிங்

ஸ்டார்லைனரின் செயல்திறன்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, "ஸ்டார்லைனரின் செயல்திறன் உண்மையில் அபாரமானது" என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீரர்களை, ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தைப் பயன்படுத்தி அழைத்து வருவது, போயிங் நிறுவனத்திற்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். அந்நிறுவனம் பல ஆண்டுகளாக ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் அதன் அனுபவம் வாய்ந்த க்ரூ டிராகன் விண்கலத்துடன் போட்டியிடத் தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், இரண்டு விண்வெளி வீரர்களுக்கான கூடுதல் ஆடைகள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அதிகமான உணவு மற்றும் பொருட்களை வழங்க நாசா ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்டை பயன்படுத்தியது.

கடந்த மாதம், ஒரு செய்தியாளர் சந்திப்பில் காணொளி அழைப்பு மூலம் பேசிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், பூமிக்குத் திரும்புவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஸ்டார்லைனரின் செயல்திறன் உண்மையில் அபாரமானது என்றும் கூறினார்கள்.

ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டான சுனிதா வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். புட்ச் வில்மோர் ஒரு முன்னாள் போர் ஜெட் விமானி ஆவார், அவர் இதற்கு முன்பு இரண்டு முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

"நாங்கள் இங்கிருக்கும் குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். நிறைய பணிகள் உள்ளன" என்று வில்லியம்ஸ் சமீபத்திய காணொளி சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

"வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்ற உணர்வு உள்ளது. அதே நேரத்தில், இங்கு இவ்வாறு சுற்றி மிதப்பது நன்றாக இருக்கிறது. விண்வெளியில் இருப்பது மற்றும் இங்கிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது," என்று அவர் கூறினார்.

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து காணொளி அழைப்பு மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் (ஜூலை 14)

இந்த ஸ்டார்லைனர் சோதனை வெற்றி பெற்றால், நாசாவின் எதிர்கால திட்டங்களில் ஸ்டார்லைனர் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என போயிங் நிறுவனம் நம்பியது. ஸ்பேஸ்-எக்ஸ் க்ரூ டிராகன், 2020 முதல் நாசாவின் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை விண்வெளி வீரர்கள் செலவழிப்பார்கள் என்றாலும்கூட, இதற்கு முன்பும் சில விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அதிக நாட்களைச் செலவிட்டுள்ளனர்.

கடந்த 1990களின் மத்தியில், ரஷ்யாவின் வலேரி பாலியாகோவ் மிர் விண்வெளி நிலையத்தில் 437 நாட்கள் தங்கியிருந்தார். ஃபிராங்க் ரூபியோ என்ற அமெரிக்க விண்வெளி வீரர் 371 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு பூமிக்குத் திரும்பினார்.

இதுவே அதிகபட்சமாக ஒரு அமெரிக்கர் விண்வெளியில் இருந்த காலமாகும்.

நேர்காணல்களிலும் திட்டம் தொடர்பாக விளக்கும்போதும், சுனிதா மற்றும் புட்ச் உற்சாகமாகவே காணப்படுகின்றனர்.

"கூடுதலாக இரண்டு வாரங்களை விண்வெளியில் செலவழிப்பது குறித்து எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை," என்று சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழலில், மேலும் பல வாரங்களை அவர்கள் இருவரும் விண்வெளியில் செலவழிக்க வாய்ப்புள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)