மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம், அமெரிக்காவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் கொந்தளிப்பில் மூழ்கியுள்ள மத்திய கிழக்கு நாடுகள்.
இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைகள் கொண்டு வரப்போகும் சவால்களைத் தீர்ப்பது எளிதானது அல்ல.
இந்த ஆண்டு, குவாட் மாநாட்டை நடத்தவுள்ளது. குவாட் என்பது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இடையிலான கூட்டமைப்பு. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டையும் நடத்த வாய்ப்புள்ளது.
அதேவேளையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனா செல்லவிருக்கிறார். அதோடு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பல முனைகளில் உள்ள சவால்களோடு இந்தியா போராடுகிறது. ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள சவால்கள் வேறுபட்டவை மற்றும் புதியவை.
அமெரிக்காவுடன் பிரச்னையா?
ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தனது பதவியேற்பு விழாவுக்கு டிரம்ப் அழைத்துள்ளார், ஆனால் இந்தியாவுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்க பயணத்தில் இருந்தார். அங்கு அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரைச் சந்தித்தார்.
பைடன் நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆழமடைந்தன. ஆனால் அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் அமைப்பின் சார்பாக உள்ள தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், பதற்றத்தை அதிகரித்துள்ளது. அந்தப் பதற்றம் இன்னும் தொடர்கிறது.
சீக்கியர்களின் நீதிக்கான அமைப்பின் நிறுவனரும் வழக்கறிஞருமான குர்பத்வந்த் சிங் பன்னு நியூயார்க்கில் வசிக்கிறார். 2020இல் இந்திய அரசால் 'பயங்கரவாதி' என அவர் அறிவிக்கப்பட்டார்.
அக்டோபர் 17 அன்று, "இந்திய குடிமகன் விகாஸ் யாதவ் மீது கூலிப்படை வைத்து கொலைக் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் பணமோசடியில் ஈடுபடுவதாகவும்" அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் வழக்குப் பதிவு செய்வதாக அறிவித்தது.
விகாஸ் யாதவ் இந்தியாவின் உளவுத்துறை நிறுவனம் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவில் (RAW) பணியாற்றியதாக அமெரிக்கா கூறுகிறது.
பன்னுவை கொலை செய்ய சதி செய்ததில் விகாஸ் யாதவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மற்றொரு இந்தியரான நிகில் குப்தா ஏற்கெனவே இந்த வழக்கில் அமெரிக்காவின் காவலில் உள்ளார்.
இந்நிலையில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தனது நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், அந்த விஷயத்தை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளது.
கௌதம் அதானி, பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்று எதிர்க்கட்சிகள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.
இதுதவிர, ஹெச்1-பி விசா தொடர்பாக இந்தியாவும் பல சவால்களை எதிர்கொள்கிறது. ஏனெனில் டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் இருந்து அதை எதிர்த்து வருகிறார், ஆனால் சமீபத்தில் அவரும் அதை ஆதரித்தார்.
இந்த விசா பெறுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 72 சதவீத விசாக்கள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு ஹெச்1-பி விசா தொடர்பாக டிரம்பின் நிலைப்பாடு என்ன என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
கனடா உடனான உறவுகளை மேம்படுத்துதல்
கடந்த 2023ஆம் ஆண்டில் கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மிக மோசமான நிலையில் உள்ளன.
கனடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தக் குற்றத்தில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதற்கு உறுதியான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தார். எனினும், இந்தியா இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்ததுடன், அதற்கான ஆதாரங்களை கனடாவிடம் கேட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவியது. 2024ஆம் ஆண்டில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அதன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.
நிஜ்ஜார் வழக்கில் சஞ்சய் குமார் வர்மா உள்பட ஆறு இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை, 'சந்தேகதிற்குரிய நபர்களாக' கனடா குறிப்பிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'சந்தேகதிற்குரிய நபர்' என்பது ஒரு குற்றத்தைப் பற்றிய முக்கியமான தகவல் கொண்டிருப்பவராக புலனாய்வாளர்கள் நம்பும் ஒருவர்.
இது மட்டுமின்றி, கனடிய குடிமக்களை அச்சுறுத்த அல்லது கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்ததாக கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மாரிசன் கூறினார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
சீனாவுடனான உறவில் நம்பிக்கை இல்லாமை
இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control - LAC), 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகளில் வேறுபாடுகள் உள்ளன. இந்த வரம்பு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கிழக்குப் பகுதி, இது அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் வரை நீண்டுள்ளது. இரண்டாவது மத்தியப் பகுதி, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. மூன்றாவதாக மேற்கு எல்லைப் பகுதி, லடாக்கில் பரவியுள்ளது.
மூன்று பகுதிகளிலும் சீனாவுடன் இந்தியா தொடர்ந்து சர்ச்சையான உறவைக் கொண்டுள்ளது. ஆனால் அக்டோபர் 2024இல் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம், இந்தியாவும் சீனாவும் வரும் நாட்களில் மோதலைக் குறைக்க விருப்பம் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தப்படி, டெப்சாங், டெம்சோக் ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் ரோந்துப் பணி விரைவில் தொடங்கும். ஆனால் 2020க்கு முன்பு இந்திய வீரர்கள் அணுகிய ரோந்துப் பகுதிகளை இப்போது அடைய முடியுமா என்பது இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 20 இந்திய வீரர்களுடன் பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
அக்டோபரில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, கசானில் நடந்த 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தியாவை சீனா பலமுறை வஞ்சித்துவிட்டதாகவும், இதனால்தான் இரு நாடுகளுக்கு இடையே நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை நிபுணரான கமர் ஆக்ஹா கருதுகிறார்.
"சீனாவுடனான இந்தியாவின் உறவு 2025இல் மேம்படும். ஏனெனில் சீனா அமெரிக்காவின் அழுத்தத்தில் உள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம், சீனா இந்தியாவுடன் உரையாடலில் ஈடுபடும். இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடனான உறவு சீர்குலைவதை சீனா விரும்பவில்லை" என்றார் அவர்.
உலகின் நிலை மாறி வருவதாகவும், சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுவதாகவும் கமர் ஆக்ஹா கூறுகிறார். சீனா வெற்றி பெற வேண்டும் என்றால், அது இந்தியாவை தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
ரஷ்யாவுடன் சமநிலை
பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பிறகு முதல் இருதரப்புப் பயணமாக ரஷ்யாவை தேர்வு செய்துள்ளார்.
பிரதமர் மோதி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணி நேட்டோ கூட்டத்துக்குத் தயாராகி வந்தது. கூட்டத்தில், யுக்ரேனுக்கான ஒத்துழைப்பு மற்றும் யுக்ரேனை நேட்டோ உறுப்பினர் ஆக்குவது குறித்துப் பேசப்பட்டது.
பிரதமர் மோதியின் வருகை, ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகளில் விவாதம் தொடர்கிறது. அமெரிக்காவின் சர்வதேச கொள்கை மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிக்கும் முக்கிய செயல்துறைகூட மோதியின் பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தது.
அதன் இரு தலைவர்களும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்தனர், அதன் பிறகு டாலருக்கு மாற்று நாணயம் தேடும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
டாலருக்கு மாற்றாக வேறு நாணயம் தேடும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
பிப்ரவரி 2022இல் தொடங்கிய ரஷ்யா-யுக்ரேன் போருக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் இலக்காக உள்ளார். மேலும் ரஷ்யா கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது.
இருந்தபோதிலும், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. 2024ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 66 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2025ஆம் ஆண்டு இந்தியாவின் முன்பாக உள்ள மிகப்பெரிய சவால், அமெரிக்காவையும் ரஷ்யாவையும் ஒன்றாகக் கொண்டு செல்வதுதான். ரஷ்யா இந்தியாவுக்கு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து வருகிறது.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவில் இந்தியா ஏற்கெனவே போராடி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து விலகி, இந்த கூட்டணிக்குள் இணைவது இந்தியாவுக்கு கடினமான காரியம்.
வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு
வங்கதேச அரசியலில் ஒரு கொந்தளிப்பான ஆண்டாக 2024 அமைந்தது. பல வாரங்களுக்குத் தொடர்ந்த வீதிப் போராட்டங்களுக்குப் பிறகு, ஷேக் ஹசீனா தனது 16 ஆண்டுக்கால ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது, வங்கதேசத்தில் இடைக்கால அரசு உள்ளது, அதன் அதிகாரம் முகமது யூனுஸ் கையில் உள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்தியாவுடனான வங்கதேச உறவின் தன்மை மாறிவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இதைக் குறைப்பது இந்தியா, வங்கதேசம் என இரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 8 வரை இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக 2200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பல இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ், அதிகார மாற்றத்திற்குப் பிறகு, ஜமாத் மற்றும் அவாமி லீக் எதிர்ப்பு சக்திகளும், இந்தியாவின் ஆதரவைப் பிடிக்காத வங்கதேசத்தில் வலுப்பெற்றுள்ளதாக நம்புகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருங்கிச் செல்வது இயல்புதான். ஆனால் இந்தியாவுக்கு இது கவலையளிக்கும் விஷயம் என்கிறார் பரத்வாஜ்.
ஷேக் ஹசீனா காலத்தில் இந்த நிலை இல்லை. ஷேக் ஹசீனாவின் காலத்தில், வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம் அடைவது எளிதல்ல என்பதால் இந்தியாவின் வடகிழக்கு எல்லைகள் பாதுகாப்பாக இருந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த மாதம்தான் பாகிஸ்தானின் சரக்குக் கப்பல் ஒன்று கராச்சியில் இருந்து வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சிட்டகாங் துறைமுகத்தை அடைந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கடல் வழித் தொடர்பு இது. முன்னதாக, சிங்கப்பூர் அல்லது கொழும்பு வழியாக இரு நாடுகளுக்கும் இடையே கடல் வர்த்தகம் நடந்து வந்தது.
இது பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதற்கான உறுதியான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. கமர் ஆக்ஹாவும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.
அவர் கூறுகையில், "வங்கதேசத்தில் அடிப்படைவாத மற்றும் மதவாத சக்திகளின் கையில் அதிகாரம் உள்ளது, அவர்களுக்கு ராணுவம் துணை நிற்கிறது. இப்படிப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. அதனால், இந்த ஆண்டு இந்தியாவுக்கு வங்கதேசம் பெரிய சவாலாக இருக்கும்" என்றார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்
இஸ்ரேல் அதன் வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிக மோசமான தாக்குதலில் இருந்து இன்னும் மீளவில்லை, மறுபுறம் பேரழிவு தரும் குண்டுவீச்சின் பிடியில் காஸா உள்ளது. பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த இஸ்ரேல்-பாலத்தீன மோதல், திடீரென நம் முன் வந்து நிற்கிறது.
அது 2025இல் முடிவடையும் என்ற நம்பிக்கை இல்லை. எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்சிக்கு வந்த பின்னர் போரை நிறுத்துவோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் போரில் 41,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 2 மில்லியன் மக்கள் காஸாவை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மறுபுறம், மோதலின் முதல் நாளில், அதாவது கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதியன்று, 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இஸ்ரேல் தனது 350க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது.
இரான் உள்பட மத்திய கிழக்கின் பல நாடுகள் இந்தப் போரில் இணைந்துள்ளன. இந்தப் போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளும் 2024ஆம் ஆண்டில் வெற்றி பெறவில்லை.
மத்திய கிழக்கில் உறுதியற்ற நிலை அதிகரித்தால், 2025ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சூழல் சற்று கடினமாக இருக்கும் என்று வெளியுறவு நிபுணர் கமர் ஆக்ஹா கூறுகிறார்.
மேலும், "இரான் அணு மின்நிலையங்களைத் தாக்கலாம் என்று இஸ்ரேல் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இது நடந்தால், இந்தியாவின் எண்ணெய் விநியோகம் மோசமாகப் பாதிக்கப்படும், அதன் விளைவு பொதுமக்கள் மீது தெரியும்" என்கிறார் கமர் ஆக்ஹா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)