பொருளாதார பிரச்னைகளை சரி செய்யும் சீனாவின் திட்டங்களை டிரம்பின் நடவடிக்கை சீர்குலைக்குமா?

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த 2019-ல் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட டிரம்ப் மற்றும் ஜின்பிங்
  • எழுதியவர், ஜாவோ டா சில்வா
  • பதவி, வணிக செய்தியாளர்

வலுவிழந்துவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை முடுக்கிவிட சீனா புதிய நடவடிக்கைகளை அறிவித்துவரும் அதேவேளையில், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்கும் தயாராகிவருகிறது.

உள்ளூர் அரசாங்கக் கடன் வளர்ச்சியைத் தடுக்காமல் இருக்க, அந்நாடு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் கடனைத் தீர்க்க விரும்புகிறது.

சீன தயாரிப்பு பொருட்களுக்கு 60% வரையிலான வரி உட்பட இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்த டிரம்ப் இந்த தேர்தலில் வென்றார்.

தொழில்நுட்பத்தின் அதிகார மையமாக நாட்டை மாற்றுவதற்கான ஷி ஜின்பிங்கின் திட்டங்களை டிரம்பின் வெற்றி தடுக்கலாம். உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே உறவில் மேலும் நெருக்கடி ஏற்படலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சரிவுக்கு என்ன காரணம்?

சொத்து மதிப்பு குறைவது, அரசாங்க கடன் உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவான நுகர்வு விகிதம் ஆகியவை, கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து சீனாவின் வளர்ச்சியை மெதுவாக்கியுள்ளது.

இதன் விளைவாக, சீனாவின் சட்டமன்ற நிர்வாக அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) நிலைக்குழுவின் சமீபத்திய அறிவிப்பு முன்பை விட அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

டிரம்ப் தனது முந்தைய ஆட்சியில் சீன பொருட்கள் மீது 25% வரை வரிகளை விதித்தார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் தன்னுடைய புதிய வரி திட்டங்கள் குறித்து கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என, சீன ஆய்வாளர் பில் பிஷப் கூறுகிறார்.

“வரிகள் குறித்து டிரம்ப் பேசும்போது அதை அவர் உணர்ந்துதான் பேசுகிறார் என நாம் நம்ப வேண்டும். முந்தைய ஆட்சிக்காலத்தில் அவருடைய வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறியதாகவும் 2020 தேர்தல் தோல்விக்கு சீனாவும் கொரோனாவும்தான் காரணம் என டிரம்ப் கருதுகிறார்".

டிரம்பின் முந்தைய ஆட்சிக்காலம் 2021-ல் முடிவுற்ற பின்னர், சீனா மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறையவில்லை. பைடன் நிர்வாகம் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்தது, சில சமயங்களில் மேலும் அவற்றை விரிவுபடுத்தியது.

பொருளாதாரத்தை சரிசெய்ய சீனா எடுக்கும் முயற்சிகளை டிரம்பின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் வருடாந்திர வளர்ச்சி இலக்கை குறைத்தது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் டிரம்பின் வரிகள் சீனாவுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்நாடு இன்னும் மிக மோசமான நிலையில் உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தினாலும், கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டுவதற்கு அந்நாட்டு பொருளாதாரம் போராடிவருகிறது.

பலராலும் எதிர்பார்க்கப்படும் வகையில், பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுப்பதற்கு பதிலாக, ஏமாற்றம் தரும் வகையிலான செய்திகளையே சீனா தந்துகொண்டிருக்கிறது.

டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு முன்பே, கடந்த செப்டம்பரில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா தொடங்கியிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) அந்நாட்டின் வருடாந்திர வளர்ச்சி இலக்கை குறைத்தது.

ஐ.எம்.எஃப் கணிப்பு

சீன பொருளாதாரம் 2024-க்குள் 4.8% உயரும் என ஐ.எம்.எஃப் தற்போது எதிர்பார்க்கிறது. இது சீனாவின் “சுமார் 5%” எனும் இலக்கை விட குறைவாகும். அடுத்தாண்டு சீனாவின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 4.5% ஆக குறையும் என ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.

திருப்பிச் செலுத்த முடியாத கடனை கொண்டுள்ள உள்ளூர் அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, இப்போதிலிருந்து 2026 வரை கூடுதலாக 6 டிரில்லியன் யுவானை (840 பில்லியன் டாலர்கள்) பயன்படுத்துவதும் சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளுள் அடங்கும்.

பல பத்தாண்டுகளாக, உள்ளூர் அரசாங்கங்கள் பெரும் தொகையை கடன் வாங்குவதன் மூலம் நாடு முழுவதும் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. இதில் பெரும் தொகை உள்கட்டமைப்பு திட்டங்களில் செலவிடப்பட்டது. ஆனால், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, சில நகரங்களால் அதன் செலவினங்களை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளியது.

பல தசாப்தங்களாக மிக விரைவான வளர்ச்சியானது நாட்டின் தலைவர்களை முழுமையாக ஆச்சரியப்படுத்தவில்லை.

கடந்த 2017-ஆம் ஆண்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், தனது நாடு, “விரைவான வளர்ச்சியில் இருந்து உயர்தர வளர்ச்சியின் நிலைக்கு மாற திட்டமிட்டுள்ளது” என்றார்.

இது, மேம்பட்ட உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தொழிற்சாலைகளை சார்ந்த பொருளாதாரத்திற்கு மாறுவதை விவரிக்க, சீன அதிகாரிகள் ஷி ஜின்பிங்கின் இந்த பேச்சை பயன்படுத்தினர்.

பொருளாதார சரிவிலிருந்து மீள்வது எப்படி?

இருப்பினும், சில ஆய்வாளர்கள் சீனாவால் பிரச்னைகளில் இருந்து எளிதில் வெளியேற முடியாது என்று வாதிடுகின்றனர்.

1990களில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கு பின்னர், பல தசாப்தங்களாக ஜப்பான் எதிர்கொண்ட தேக்க நிலையை போல சீனாவும் வீழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, மோர்கன் ஸ்டான்லி எனும் பன்னாட்டு முதலீட்டு வங்கிக்கான ஆசியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீஃபன் ரோச் கூறுகிறார்.

இதை தவிர்க்க, “ஏற்றுமதி மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியிலிருந்து” விலகி, “பூர்த்தி செய்யப்படாத நுகர்வோர் தேவைகளிலிருந்து பலன் அடைவதற்கான” திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர்.

இது நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, “வணிக பதற்றங்களை குறைத்து, வெளிப்புற அதிர்ச்சிகளால் சீனா பாதிக்கப்படுவதை குறைக்கும்,” என்கிறார் அவர்.

இந்த வலுவான பொருளாதார மாதிரியானது டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சீனா தடுக்க உதவும்.

பொருளாதாரத்தை சரிசெய்ய சீனா எடுக்கும் முயற்சிகளை டிரம்பின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொழில்நுட்பத்தின் அதிகார மையமாக நாட்டை மாற்றுவதற்கான ஷி ஜின்பிங்கின் திட்டங்களை டிரம்பின் வெற்றி தடுக்கலாம்

புதிய பொருளாதாரம், பழைய பிரச்னைகள்

ஆனால், நீண்ட காலமாக குறைந்த விலை பொருட்களுக்கான உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனா, அந்த வெற்றியை உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி மூலம் பிரதிபலிக்க முயற்சிக்கிறது.

சீனா ஏற்கனவே சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் ஆகியவற்றில் உலகில் முன்னணியில் உள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) கூற்றுப்படி, சோலார் பேனல் உற்பத்தியில் குறைந்தது 80 சதவிகிதத்தை சீனா உற்பத்தி செய்வதாக கூறுகிறது. சீனா மின்சார வாகனங்களையும் அதற்கான ஆற்றலை வழங்கும் பேட்டரிகளையும் அதிகமாக தயாரிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் சீனாவின் முதலீடு உலகளவில் மூன்றில் ஒரு பங்கு என்றும், "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை" சீனா அடைந்துள்ளது என்றும் IEA கடந்த ஆண்டு கூறியது.

“சீனாவில் உயர் தொழில்நுட்ப உற்பத்தியை ஆதரிப்பதற்கான ஒட்டுமொத்த முயற்சி நிச்சயமாக உள்ளது" என்று, லண்டன் சார்ந்த சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸின் (Chatham House) மூத்த ஆராய்ச்சியாளரான டேவிட் லூபின் கூறுகிறார்.

“இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது,” என்கிறார் அவர்.

பொருளாதாரத்தை சரிசெய்ய சீனா எடுக்கும் முயற்சிகளை டிரம்பின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மாதம், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கான வரியை 45% வரை உயர்த்தியது

மின்சார வாகனங்கள், லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி 2023 இல் 30% உயர்ந்தது. முதல் முறையாக ஒரு டிரில்லியன் யுவானை (139 பில்லியன் டாலர்கள்) தாண்டியது. சீனா அந்தத் தொழில்கள் ஒவ்வொன்றிலும் அதன் உலகளாவிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தியது.

ஏற்றுமதி வளர்ச்சியானது சீன பொருளாதாரத்தில் நிலவும் ரியல் எஸ்டேட் துறை நெருக்கடியின் பாதிப்பை தணிக்க உதவியது.

“சீனா, தேவையை விட அதிக உற்பத்தி செய்வதை அதிகரிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வளர்ச்சி அடைவதற்கு அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை'' என்று முதலீட்டு வங்கியான நடிக்ஸிஸ் ( Natixis) இன் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமை பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா-ஹெர்ரெரோ கூறினார்.

ஆனால், ஏற்றுமதி அதிகரிப்புடன், அமெரிக்கா மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம்தான், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கான வரியை 45% வரை உயர்த்தியது.

"இப்போது உள்ள பிரச்னை என்னவென்றால், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட, அந்த பொருட்களை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் அவற்றை இறக்குமதி செய்ய தயங்குகிறார்கள்" என்று சர்வதேச தர முகமையான மூடிஸ் ஆராய்ச்சி இயக்குனர் கத்ரீனா எல் கூறினார்.

இன்று, டிரம்ப் மீண்டும் ஓவல் அலுவலகத்திற்குச் செல்லவுள்ள நிலையில், சீன இறக்குமதி குறைக்கப்படும் என உறுதி உறுதியளித்துள்ளார்.

சீனா தனது மந்தமான பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அதன் சமீபத்திய நடவடிக்கைகள் போதுமானதாக இருக்குமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)