உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய குடியேற்றவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதிய பேரரசுவாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உலகப் பேரரசுகளும் குடிமைப்பட்ட நாடுகளும் 1898ஆம் ஆண்டில்(எசுப்பானிய அமெரிக்கப் போர், சீனக் குத்துச்சண்டை வீரர் கிளர்ச்சி, தென் ஆப்பிரிக்க குடியானவர் போர் ஆகியவை நிகழ்ந்ததற்குச் சற்று முன்காலத்தில்)
உலகப் பேரரசுகளும் குடிமைப்பட்ட நாடுகளும்-1945ஆம் ஆண்டில்
2010ஆம் ஆண்டு மனித வளர்ச்சிச் சுட்டெண். சுட்டெண் 0.5 என்றால் "குன்றிய வளர்ச்சி" என்றும், சுட்டெண் 0.8 அல்லது அதற்கு மேல் என்றால் "உயர் வளர்ச்சி" என்றும் பொருள்.
  0.900ம் அதற்கு மேலும்
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  under 0.300
  தகவல் கிடைக்கப்பெறவில்லை
விரிவான வரிசைப்படுத்தலுக்குக் காண்க: மனித வளர்ச்சிச் சுட்டெண்ணின்படி நாடுகளின் பட்டியல்

புதிய குடியேற்றவாதம் (Neocolonialism) என்பது நேரடியான இராணுவ, அரசியல் ஆதிக்கத்துக்குப் பதிலாக, முதலாளித்துவம், உலகமயமாக்கம், கலாச்சார சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை (குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவால் குடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகளை) தன் ஆதிக்கத்துக்குள் கொணர்கின்ற செயல்பாட்டைக் குறிக்கும்.

இத்தகைய குடியேற்ற ஆதிக்கம் பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் நிகழ்கின்ற திணிப்புகளாக இருக்கலாம். ஒரு நாடு தனது கலாச்சாரத்தை, மொழியை, தொடர்பு ஊடகங்களை மற்றொரு நாட்டில் பரப்பும்போது அங்கே புகுத்தப்பட்ட நிறுவனங்கள் சந்தையை அந்நாட்டில் விரிவாக்க முடியும். இவ்வாறு, முதலில் பெரிய அளவில் தீங்கில்லாதவை போல் தொடங்கிய வணிக நடவடிக்கைகள் இறுதியில் கலாச்சாரத் தீங்குகளை விளைவிக்கும் காரணிகளாக மாறிவிடுவதால் புதிய குடியேற்றவாதம் தலைதூக்குகிறது. [சான்று தேவை]

பெயர்த் தோற்றம்

[தொகு]

புதிய குடியேற்றவாதம் (Neocolonialism) என்னும் சொல் முதன்முதலாக குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah) என்னும் ஆப்பிரிக்கப் பெருந்தலைவரால் உருவாக்கப்பட்டது. நிக்ரூமா இங்கிலாந்தின் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற கானா நாட்டின் முதல் அதிபராக இருந்தவர். பின்னர் "புதிய குடியேற்றவாதம்" என்ற சொல் நோம் சோம்சுக்கி, ழான் பால் சாத்ரே போன்ற இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள், மெய்யியலார் ஆகியோரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

வளர்ந்துவரும் நாடுகளின் விவகாரங்களில் வளர்ச்சியடைந்த நாடுகள் தலையீடு செய்வதை விமர்சிப்பதற்காக "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குடியேற்ற ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்னணியில் இன்றைய உலக நிலையை விமர்சிப்பவர்களாக உள்ளார்கள்.

விமர்சனங்கள்

[தொகு]

இந்த ஆய்வாளர்களின் நூல்களில் காணப்படும் விமர்சனங்கள் கீழ்வருவன: இரண்டாம் உலகப் போருக்குப்பின் பல முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகள் விடுதலை பெற்றன. ஆனால் அந்நாடுகளைத் தம் குடியேற்றப் பகுதிகளாக மாற்றியிருந்த ஆதிக்க நாடுகள் பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகளைத் தமக்கு சாதகமாக உருவாக்கி, குடிமைப்பட்ட நாடுகள் தொடர்ந்து குடியேற்ற ஆதிக்க நாடுகளைச் சார்ந்துநிற்கும் நிலையை நீடிக்கச் செய்கின்றன.

மேலும், "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் இரு உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது. முதலில், இன்றும் கூட சில நாடுகள் தம் நாட்டுக்கு வெளியே பிற பகுதிகளையும் அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களையும் தம் ஆதிக்கத்துக்குள் குடியேற்றப் பாணியில் வைத்திருப்பதை அச்சொல் குறிக்கும். இவ்வாறு பிற நிலப்பகுதிகளையும் மக்களையும் குடியேற்றப் பாணியில் கட்டுப்படுத்துவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களுக்கு எதிராகவும் நடைபெறுகிறது[1]. இரண்டாவது, இன்றைய முதலாளித்துவ வியாபார முறைகள் முன்னாளைய குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கும். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் முன்னாளைய குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைத் தம் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவது ஒருவகை புதிய குடியேற்றவாதம் ஆகும். இது, வரலாற்றில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை பல ஐரோப்பிய நாடுகள் கடல்கடந்து சென்று தமக்கென குடியேற்றப் பகுதிகளை உருவாக்கி, அல்லது பிற நிலப்குதிகளில் தமக்கு சாதகமாக வணிகத்தில் ஈடுபட்ட செயல்பாட்டை ஒத்தது.

நடைமுறையில் "புதிய குடியேற்ற வாதம்" என்பது இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடுகள் வலுக்குறைந்த நாடுகளில் தமக்கு சாதகமாகத் தலையீடு செய்வதைக் குறிக்கும். இது இலத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து நிகழ்கிறது. எனவே, "புதிய குடியேற்றவாதம்" என்பது ஒருவகையில் "பொருளாதாரப் பேரரசுவாதமாக" (economic imperialism) உருவெடுத்துள்ளது. முன்னாட்களில் அரசியல் மற்று இராணுவ ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட குடியேற்றவாதம் இன்று பொருளாதார அடிப்படையில் "புதிய" குடியேற்றவாதமாகத் தழைக்கின்றது.

மேற்கூறிய கருத்துகளை முன்வைத்து, பல ஆய்வாளர்கள் "புதிய குடியேற்றவாதத்தை" விமர்சிக்கிறார்கள்.

முன்னாளைய குடியேற்ற ஆதிக்க நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

[தொகு]

"பேரரசுவாதம் இருக்கும் வரை, அது பிற நாடுகளைத் தன் ஆதிக்கத்துள் கொண்டுவரவே முயலும். இன்று அத்தகைய ஆதிக்கம் புதிய குடியேற்றவாதம் என்று அழைக்கப்படுகிறது."

— சே கெவாரா, மார்க்சிய புரட்சியாளர், 1965 [2]
சோவியத் யூனியன் 1989இல் வெளியிட்ட அஞ்சல் தலையில் குவாமே நிக்ரூமா, கானா நாட்டின் முதல் அதிபர். இவரே "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லை உருவாக்கியவர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் தோன்றி, குடியேற்ற ஆதிக்க நாடுகள் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டங்கள் நிகழ்த்தின. இவ்வாறு குடியேற்ற ஆதிக்க நாடுகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற முன்னாள் குடிமைப்பட்ட நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் புழக்கத்துக்கு வந்தது. தங்களுக்கு விடுதலை கிடைத்த பிறகும் தங்கள் நாடுகளில் முன்னாளைய குடியேற்ற ஆதிக்க நாடுகளும் பிற வளர்ச்சியடைந்த நாடுகளும் புதியதொரு குடியேற்ற ஆதிக்க முறையைத் திணிக்கத் தொடங்கியுள்ளன என்று குறைகூறப்பட்டது. இவ்வாறு குறைகூறியவர்களுள் புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சிலவற்றின் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் போன்றோர் அடங்குவர்.

பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த கானா நாட்டின் முதல் அதிபராக 1957இல் பதவியேற்ற குவாமே நிக்ரூமா என்னும் தலைவர் "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லைப் பயன்படுத்தி, குடியேற்ற ஆதிக்க நாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் எழுதிய "புதிய குடியேற்றவாதம், பேரரசுவாதத்தின் கடைசிக் கட்டம்" (Neo-Colonialism, the Last Stage of Imperialism) (1965) என்னும் நூலில் நிக்ரூமா "புதிய குடியேற்றவாதம்" என்றால் என்னவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.[3] நிக்ரூமா எழுதிய நூலின் தலைப்பு உருசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனின் என்பவரின் "பேரரசுவாதம், முதலாளித்துவத்தின் கடைசிக் கட்டம்" (Imperialism, the Last Stage of Capitalism)(1916) என்னும் நூலின் தலைப்பை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலில் லெனின், முதலாளித்துவம் வளர்ந்து 19ஆம் நூற்றாண்டின்.பேரரசுவாதத்துக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிட்டார்.[4]

நுக்ரூமா கூற்றுப்படி, "முதலாளித்துவ நாடுகளில் நிலவுகின்ற சமூகப் போராட்டங்களை முன்னாட்களில் குடியேற்ற ஆதிக்க நாடுகள் குடிமைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்தன. அதுபோல இன்று புதிய குடியேற்றவாதம் செயல்படுகிறது. முன்னாட்களில் குடியேற்ற ஆதிக்கம் என்பது பேரரசுவாதத்தின் கருவியாக இருந்தது. இன்று புதிய குடியேற்றவாதம் குடியேற்ற ஆதிக்கத்தின் கருவியாக மாறியுள்ளது."

மேலும், நிக்ரூமா கூறினார்:

உலகத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள நாடுகளை முன்னேற்றுவதற்கு அல்ல, அவற்றைச் சுரண்டும் நோக்கத்தோடே வெளிநாட்டு முதலீட்டைப் புதிய குடியேற்றவாதம் பயன்படுத்துகிறது. பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளியைக் குறைப்பதற்கு மாறாக, அதை அதிகரிக்கும் நோக்கத்தோடே புதிய குடியேற்றவாதம் ஏழை நாடுகளில் முதலீடு செய்கிறது.

புதிய குடியேற்றவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலீடு வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குத் தேவையல்ல என்பதன் அடிப்படையில் அல்ல. மாறாக, முதலீட்டைத் தவறாகப் பயன்படுத்தி, வளரும் நாடுகளை மேலதிக வறுமை நிலைக்குத் தள்ளாமல் தடுக்கும் பொருட்டே அத்தகைய எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.[5]

அனைத்து ஆப்பிரிக்க இயக்கம், அணிசேரா நாடுகள் இயக்கம்

[தொகு]

ஆப்பிரிக்காவில் குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகள் விடுதலை அடைந்ததும் அந்நாடுகளின் பல தலைவர்களும் அறிஞர்களும் "அனைத்து ஆப்பிரிக்க இயக்கம்" (Pan Africanism) என்னும் அமைப்புக்கு உயிர்கொடுத்தார்கள். அந்த அமைப்பு "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல்லைப் புழக்கத்துக்குக் கொணர வழிவகுத்தது. 1955இல் இந்தோனேசியாவில் பாண்டுங் நகரில் முன்னாள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க குடிமைப்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினர் (Bandung Conference). அம்மாநாட்டில் அணிசேரா நாடுகள் இயக்கம் (Non-Aligned Movement) என்றொரு அமைப்பை உருவாக்க முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகள் உறுதிபூண்டன. மேற்கத்திய நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் தனித்தனி அணிகளாகப் பிரிந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வேளையில், குடிமைப்பட்ட நிலையிலிருந்து புதிதாக விடுதலையடைந்த நாடுகள் மேற்கூறிய இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிப்பது என்று பாண்டுங் மாநாட்டில் முடிவானது. அம்மாநாட்டில் "புதிய குடியேற்றவாதம்" விமர்சனத்துக்கு உள்ளானது.

1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் கூடிய "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாடு" (All-African Peoples' Conference = AAPC) புதிய குடியேற்றவாதம் பற்றி விவாதித்தது. டூனிசு நகரில் 1960இலும், கெய்ரோ நகரில் 1961இலும் கூடிய இம்மாநாடு புதிய குடியேற்றவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. குறிப்பாக, முன்னாளைய குடியேற்ற ஆதிக்க நாடாகிய பிரான்சு, தன் ஆதிக்கு உட்பட்டிருந்த முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து, ஓர் ஒன்றியத்தை உருவாக்கி, "புதிய" குடியேற்றவாதத்தைத் தொடர்ந்ததை "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாடு" எதிர்த்தது. குவாமே நிக்ரூமா உருவாக்கிய "புதிய குடியேற்றவாதம்" என்னும் சொல் "அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில்" பரவலாக ஏற்கப்பட்ட சொல்லாகவும் கருத்தாகவும் மாறியது.[6]

புதிய குடியேற்றவாதம், புதிதாக விடுதலை அடைந்த நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டிய எதிரியாக மாறிற்று. குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் கிழக்கத்திய நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், அணிசேரா நாடுகள் இயக்கம் தோன்றி வலுவடைந்த காலத்தில், "ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் கூட்டுறவு அமைப்பு" (Organization of Solidarity with the People of Asia, Africa and Latin America) வளர்ந்த பின்னணியில், குடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் புதிய குடியேற்றவாதத்தைத் தாங்கள் எதிர்த்துப் போராடவேண்டிய முக்கிய எதிரியாகப் பார்த்தன.

குடியேற்றவாதத்தை ஆயுதம் தாங்கி எதிர்த்த சில விடுதலை இயக்கங்கள் "புதிய குடியேற்றவாதத்தையும்" எதிர்த்தன. 1970களில் போர்த்துகீசிய குடியேற்ற ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொசாம்பிக், அங்கோலா போன்ற நாடுகளில் மார்க்சிய இயக்கங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஃப்ரெலிமோ (FRELIMO) மற்றும் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் (எம்.பி.எல்.ஏ [MPLA]) போன்ற இயக்கங்களை இவண் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்த இயக்கங்கள், தம் நாடுகள் குடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலை அடைந்ததும் அங்கு ஆட்சி அமைத்தன. புதிய குடியேற்றவாதத்தைத் தொடர்ந்து எதிர்த்தன.

கரிசனையுள்ள புதிய குடியேற்றவாதம்?

[தொகு]

புதிய குடியேற்றவாதத்தைக் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடு, தான் பிற நாட்டில் பொருளாதார, இராணுவ, கலாச்சார ஆதிக்கத்தைப் புகுத்துவது அப்பிற நாட்டின் நன்மைக்காகவே என்று வாதாடி நியாயப்படுத்துவது "கரிசனையுள்ள புதிய குடியேற்றவாதம்" (paternalistic neocolonialism) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வாதமும் நியாயப்படுத்தலும் பிற நாட்டைச் சுரண்டுவதற்கும், இன வேறுபாட்டு ஒதுக்கலைக் கடைப்பிடிப்பதற்கும் சாக்குப்போக்காவே உள்ளது என்று புதிய குடியேற்றவாதத்தை எதிர்ப்போர் கூறுகின்றனர். முன்னாட்களில் குடிமைப்பட்ட நாடுகளைத் தம் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்குத் தொடர்ந்து உட்படுத்துவதே "கரிசனையுள்ள குடியேற்றவாதம்" என்ற பெயரில் நடைபெறுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் குடியேற்ற ஆதிக்க நாடுகள் குடிமைப்பட்ட நாடுகளுக்குத் தாங்கள் நாகரிகத்தைக் கொணர்வதாகக் கூறி, அந்த நாடுகளைச் சுரண்டியது போன்றதே "கரிசனையுள்ள புதிய குடியேற்றவாதம்" என்பது அந்த விமர்சகர்களின் கருத்து.

பிரான்சுஆப்பிரிக்கா (Françafrique)

[தொகு]
ஐக்கிய அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சிய முன்னாள் படையினர் சியேரா லியோனே நாட்டில் கிளர்ச்சியாளரை அடக்க அந்நாட்டுப் படைகளுக்குப் பயிற்சியளிக்க வெளிநாட்டுக் கூலிப்படையினராகச் சென்றனர் (படம்). இத்தகைய கூலிப்படையினர் புதிய குடியேற்றவாத ஆதிக்க நாடுகளின் கருவிகளாகச் செயல்பட்டனர் என்பது குற்றச்சாட்டு. பிரான்சு அரசின் அமைச்சர் ஜாக் ஃபோக்கார் என்பவர் பாப் டெனார் போன்ற கூலிப்படையாட்களை அமர்த்தி, பிரான்சின் முன்னாளைய குடிமைப்பட்ட நாடுகளில் தாம் விரும்பிய அரசுகளைத் தாங்கவும் விரும்பாத அரசுகளைக் கவிழ்க்கவும் செய்தார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

புதிய குடியேற்றவாதம் என்றால் என்னவென்று விளக்குவதற்கு வழக்கமாகச் சுட்டிக்காட்டப்படுகின்ற எடுத்துக்காட்டு "பிரான்சுஆப்பிரிக்கா" (Françafrique) என்பதாகும். இக்கூட்டுச்சொல்லின் பகுதிகள் "பிரான்சு", "ஆப்பிரிக்கா" என்னும் இரு சொற்கள் ஆகும். பிரான்சு நாடு தான் முன்னாட்களில் குடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய சில நாடுகளின் தலைவர்களோடு மிக நெருங்கிய உறவுகொண்டிருந்ததை "பிரான்சுஆப்பிரிக்கா" என்னும் சொல் குறிக்கிறது.

இச்சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் ஐவரி கோஸ்ட் நாட்டு அதிபர் ஃபேலிக்சு ஊஃபூவே-புவாஞி (Félix Houphouët-Boigny) என்பவர் என்று தெரிகிறது. பிரான்சு நாடு ஆப்பிரிக்க நாடுகளோடு நல்லுறவு கொண்டிருக்கும் நிலையை விளக்க நல்ல பொருளில்தான் அவர் அச்சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால், பிரான்சு தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வாறு நெருங்கிய உறவை ஏற்படுத்தியது என்றும், அந்த உறவு ஒருதலைச் சார்பாக அமைந்தது என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தன.

மேலும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. United Nations General Assembly Resolutions 1514 and 1541
  2. "At the Afro-Asian Conference in Algeria" speech by Che Guevara to the Second Economic Seminar of Afro-Asian Solidarity in Algiers, Algeria on February 24, 1965
  3. Ali Mazrui; Willy Mutunga, ed. Debating the African Condition: Governance and leadership. Africa World Press, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 159221147X pp.19-20, 69.
  4. Vladimir Ilyich Lenin. Imperialism, the Highest Stage of Capitalism. transcribed from Lenin’s Selected Works, Progress Publishers, 1963, Moscow, Volume 1, pp. 667–766.
  5. From the Introduction. Kwame Nkrumah. Neo-Colonialism, The Last Stage of Imperialism. First Published: Thomas Nelson & Sons, Ltd., London (1965). Published in the USA by International Publishers Co., Inc., (1966);
  6. Wallerstein, p 52: 'It attempted the one serious, collectively agreed upon definition of neocolonialism, the key concept in the armory of the revolutionary core of the movement for African unity.' Also William D. Graf, review of Yolamu R. Barongo, Neocolonialism and African Politics: a Survey of the Impact of Neocolonialism on African Political Behaviour (1980); Canadian Journal of African Studies, p 601: 'The term itself originated in Africa, probably with Nkrumah, and received collective recognition at the 1961 All-African People's Conference.'
  • Opoku Agyeman. Nkrumah's Ghana and East Africa: Pan-Africanism and African interstate relations (Fairleigh Dickinson University Press, 1992).
  • Ankerl, Guy (2000). Global communication without universal civilization. INU societal research. Vol. Vol.1: Coexisting contemporary civilizations : Arabo-Muslim, Bharati, Chinese, and Western. Geneva: INU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88155-004-5. {{cite book}}: |volume= has extra text (help)
  • Bill Ashcroft (ed., et al.) The post-colonial studies reader (Routledge, London, 1995).
  • Yolamu R Barongo. Neocolonialism and African politics: A survey of the impact of neocolonialism on African political behavior (Vantage Press, NY, 1980).
  • Mongo Beti, Main basse sur le Cameroun. Autopsie d'une décolonisation (1972), new edition La Découverte, Paris 2003 [A classical critique of neocolonialism. Raymond Marcellin, the French Minister of the Interior at the time, tried to prohibit the book. It could only be published after fierce legal battles.]
  • Frédéric Turpin. De Gaulle, Pompidou et l'Afrique (1958-1974): décoloniser et coopérer (Les Indes savantes, Paris, 2010. [Grounded on Foccart's previously inaccessibles archives]
  • Kum-Kum Bhavnani. (ed., et al.) Feminist futures: Re-imagining women, culture and development (Zed Books, NY, 2003). See: Ming-yan Lai's "Of Rural Mothers, Urban Whores and Working Daughters: Women and the Critique of Neocolonial Development in Taiwan's Nativist Literature," pp. 209–225.
  • David Birmingham. The decolonization of Africa (Ohio University Press, 1995).
  • Charles Cantalupo(ed.). The world of Ngugi wa Thiong'o (Africa World Press, 1995).
  • Laura Chrisman and Benita Parry (ed.) Postcolonial theory and criticism (English Association, Cambridge, 2000).
  • Renato Constantino. Neocolonial identity and counter-consciousness: Essays on cultural decolonization (Merlin Press, London, 1978).
  • George A. W. Conway. A responsible complicity: Neo/colonial power-knowledge and the work of Foucault, Said, Spivak (University of Western Ontario Press, 1996).
  • Julia V. Emberley. Thresholds of difference: feminist critique, native women's writings, postcolonial theory (University of Toronto Press, 1993).
  • Nikolai Aleksandrovich Ermolov. Trojan horse of neocolonialism: U.S. policy of training specialists for developing countries (Progress Publishers, Moscow, 1966).
  • Thomas Gladwin. Slaves of the white myth: The psychology of neocolonialism (Humanities Press, Atlantic Highlands, NJ, 1980).
  • Lewis Gordon. Her Majesty’s Other Children: Sketches of Racism from a Neocolonial Age (Rowman & Littlefield, 1997).
  • Ankie M. M. Hoogvelt. Globalization and the postcolonial world: The new political economy of development (Johns Hopkins University Press, 2001).
  • J. M. Hobson, The Eastern Origins of Western Civilisation (Cambridge University Press, 2004).
  • M. B. Hooker. Legal pluralism; an introduction to colonial and neo-colonial laws (Clarendon Press, Oxford, 1975).
  • E.M. Kramer (ed.) The emerging monoculture: assimilation and the "model minority" (Praeger, Westport, Conn., 2003). See: Archana J. Bhatt's "Asian Indians and the Model Minority Narrative: A Neocolonial System," pp. 203–221.
  • Geir Lundestad (ed.) The fall of great powers: Peace, stability, and legitimacy (Scandinavian University Press, Oslo, 1994).
  • Jean-Paul Sartre. 'Colonialism and Neocolonialism. Translated by Steve Brewer, Azzedine Haddour, Terry McWilliams Republished in the 2001 edition by Routledge France. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415191459.
  • Stuart J. Seborer. U.S. neocolonialism in Africa (International Publishers, NY, 1974).
  • D. Simon. Cities, capital and development: African cities in the world economy (Halstead, NY, 1992).
  • Phillip Singer(ed.) Traditional healing, new science or new colonialism": (essays in critique of medical anthropology) (Conch Magazine, Owerri, 1977).
  • Jean Suret-Canale. Essays on African history: From the slave trade to neocolonialism (Hurst, London 1988).
  • Ngũgĩ wa Thiong'o. Barrel of a pen: Resistance to repression in neo-colonial Kenya (Africa Research & Publications Project, 1983).
  • Carlos Alzugaray Treto. El ocaso de un régimen neocolonial: Estados Unidos y la dictadura de Batista durante 1958,(The twilight of a neocolonial regime: The United States and Batista during 1958), in Temas: Cultura, Ideología y Sociedad, No.16-17, October 1998/March 1999, pp. 29–41 (La Habana: Ministry of Culture).
  • United Nations (2007). Reports of International Arbitral Awards. Vol. XXVII. United Nations Publication. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-033098-5.
  • Richard Werbner(ed.) Postcolonial identities in Africa (Zed Books, NJ, 1996).

வெளி இணைப்புகள்

[தொகு]

கல்லூரிப் படிப்பு வளங்கள்

[தொகு]

வார்ப்புரு:South-South