நாடாளுமன்றச் சட்டம்
நாடாளுமன்றச் சட்டங்கள் (Acts of parliament), சட்ட அதிகாரத்தின் சட்டவாக்க அவையால் (பெரும்பாலும் ஒரு நாடாளுமன்றம் அல்லது பேரவை) நிறைவேற்றப்படும் சட்ட வரைபுகளைக் குறிக்கும்.[1] சில சமயங்களில் முதன்மைச் சட்டம் (primary legislation) என்றும் குறிப்பிடப்படுகின்றன. நாடாளுமன்ற ஆட்சி முறையைக் கொண்ட பெரும்பாலான நாடுகளில், நாடாளுமன்ற சட்டங்கள் ஒரு சட்ட முன்வரைவாக முன்வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் ஒப்புதலைப் பெறுகின்றன. அரசாங்கத்தின் கட்டமைப்பைப் பொறுத்து, இந்த முன்வரைவுகள் பின்னர் நிர்வாக செயலாட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பபடுகின்றன.
சட்ட முன்வரைவுகள்
[தொகு]நாடாளுமன்றத்தின் சட்ட வரைவு சட்ட முன்வரைவு (மசோதா எனவும் அழைக்கப்படுகிறது) எனலாம். ஒரு சட்ட முன்வரைவு ஒரு முன்மொழியப்பட்ட சட்டமாகும், இது ஒரு சட்டமாக மாறுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை சார்ந்த ஆட்சிப் பகுதிகளில், பெரும்பாலும் ஒரு சட்ட முன்வடிவம் சட்டமாவதற்கு முதலில் ஆளும் மன்றங்களாகிய நாடாளுமன்றம் போன்றவற்றில் அரசினால் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இது பொதுவாக "வெள்ளை அறிக்கை"யாக புதிய சட்டத்தை பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முறையில் சட்டத்தின் தேவையைச் சுட்டிக் காட்டி வெளியிடப்பட வேண்டும். சட்ட முன்வடிவங்கள் அரசின் ஆதரவு இல்லாமலும் மன்றத்தில் அறிமுகம் செய்யலாம், இது தனிப்பட்ட உறுப்பினரின் சட்ட முன்வடிவு எனப்படும்.
பல அவைகளைக் கொண்ட நாடாளுமன்றங்களை உடைய ஆட்சிப் பகுதிகளில், பெரும்பாலான சட்ட முன்வடிவங்கள் முதலில் ஏதேனும் ஓர் அவையில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் சில தரத்தில் உள்ள சட்டமயமாக்கங்கள், அரசியல் அமைப்பு மரபின் படி அல்லது சட்டத்தினால் குறிப்பிட்ட அவையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என இருப்பின் அந்த அவையில் முதலில் அறிமுகம் செய்யப்படும். எடுத்துக்காட்டாக, வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பான சட்ட முன்வடிவுகள் இந்தியாவில் மக்களவையிலும், ஐக்கிய இராச்சியத்தில் பொதுச்சபையிலும் முதலில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். மாறாக, சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்ட சட்ட முன்வரைவுகள் ஐக்கிய இராச்சியத்தில் பிரபுக்கள் அவையில் முதலில் முன்வைக்கப்படுகின்றன.
ஒருமுறை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சட்ட முன்வடிவு சட்டமாவதற்கு முன் பல படிகளைக கடக்க வேண்டியுள்ளது. இது முன்வரைவின் விதிகளை விரிவாக விவாதிக்க அனுமதிக்கிறது, மேலும் மூல முன்வரைவில் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், விவாதிக்கவும், ஒப்புக்கொள்ளவும் அனுமதிக்கிறது.
ஈரவை நாடாளுமன்றங்களில், ஒரு சட்ட முன்வரைவு அது அறிமுகம் செய்யப்பட்ட அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் மறு அவைக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு அவையும் சட்ட முன்வடிவின் அதே தரத்தில் தனித்தனியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறுதியாக சட்ட முன்வரைவு ஒப்புதலைப் பெறுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஒப்புதல் வழங்கும் பொறுப்பு அரசு அல்லது நாட்டுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.
சில நாடுகளில், குறிப்பாக எசுப்பானியா, பெல்ஜியம், லக்சம்பர்க், போர்த்துகல் ஆகிய நாடுகளில், சட்ட முன்வரைவு அரசினால் கொண்டுவரப்பட்டதா அல்லது நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்டதா என்பது சார்ந்து வேறுபடுகிறது. அரசினால் கொண்டுவரப்படுவது செயல்திட்டம் எனவும், மன்றத்தால் கொண்டுவரப்படுவது தனிப்பட்ட உறுப்பினரின் சட்ட முன்வடிவு எனவும் அழைக்கப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gillespie, Alisdair (18 April 2013). The English Legal System. Oxford University Press. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965709-4.
வெளி இணைப்புகள்
[தொகு]- Acts of Parliament and statutory instruments are available free on-line under Crown copyright terms from the National Archives (legislation.gov.uk).
- Parliamentary Stages of a Government Bill (pdf) from the House of Commons Information Office.
- Acts of the Commonwealth Parliament of Australia: ComLaw.gov.au