உள்ளடக்கத்துக்குச் செல்

மருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருந்துகள்

மருந்து (Pharmaceutical drug) என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத் துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, மருந்தாக்கியல் அறிவியலின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், சரியான மேலாண்மையையும் மருந்தியல் துறை நம்பியுள்ளது [1][2][3].

மருந்துகள் பல்வேறு வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. மருந்துகளின் அளவைக் கட்டுப்படுத்துதல் என்ற செயல்முறை ஒரு முக்கியமான வகைப்பாடாகும். மருத்துவர், மருத்துவ உதவியாளர் அல்லது தகுதியுள்ள செவிலியர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மருந்தாளுநர் மருந்துகளை வழங்குதல் முதல் நுகர்வோரின் விருப்பத்திற்கு இணங்க அவர்களே தங்களுக்கான மருந்துகளை கேட்டுப் பெற்றுக் கொள்வது வரை மருந்துகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றொரு முக்கிய வேறுபாடு பாரம்பரிய சிறிய மூலக்கூற்று மருந்துகளாகும். பொதுவாக இவை வேதித் தொகுப்பு முறைகளிலும், இயற்கைமருந்துப் பொருட்களாவும் கிடைக்கின்றன. மறுசேர்க்கைப் புரதங்கள், தடுப்பூசிகள், நோயாற்றும் இரத்தப் பொருட்கள், மரபணு சிகிச்சை, செல்சிகிச்சை மற்றும் ஒற்றைப்படி உயிரி எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். மருந்துகள் செயல்படும் முறை , நிர்வாக வழி முறை, பாதிக்கப்படும் உயிரியல் மண்டலம் அல்லது சிகிச்சையின் விளைவுகள் போன்றவையும் மருந்துகளை வகைப்படுத்துவதற்கான மற்ற வழிகளாகும். உலக சுகாதார நிறுவனம் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை வைத்திருக்கிறது.

மருந்துகளைக் கண்டுபிடிப்பதும் பின்னர் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்துவதும் மருந்து நிறுவனங்கள், கல்வி விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் சிக்கலான மற்றும் விலையுயர்ந்த முயற்சிகள் ஆகும். பொதுவாக எத்தகைய மருந்துகளை விற்பனை செய்வது, எப்படி விற்பனை செய்வது என்பதை அரசாங்கங்கள் முறைப்படுத்துகின்றன. சில அரசுகள் மருந்துகளுக்கான விலை நிர்ணயத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்து விலை நிர்ணயம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகளை அகற்றுதல் ஆகிய நடைமுறைகள் தொடர்பாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.

வரையறை

[தொகு]

ஐரோப்பாவில் மருந்து என்ற சொல் மருத்துவப் பொருள் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. மனிதர்களிடத்தில் எந்தப் பொருள் அல்லது பொருட்களின் கலவை நோய்க்கான சிகிச்சையில் அல்லது நோய்த் தடுப்பில் பயன்படுத்தப்படும் பண்புகளைக் கொண்டுள்ளதோ அந்தப் பொருள் மருந்து எனப்படும் என ஐரோப்பிய சட்டம் வரையறை செய்கிறது.

நோய் தடுப்பு அல்லது வளர்சிதை மாற்ற நடவடிக்கை அல்லது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் உடலியல் செயல்பாடுகளை மீட்டெடுத்தல், திருத்துதல் அல்லது மாற்றுதல் போன்ற விளைவுகளுக்காகக மனிதர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு பொருள் அல்லது பொருட்களின் கலவை மருந்தாகும் என்றும் ஐரோப்பிய சட்டம் வரையறை செய்கிறது"[4]:36.

அமெரிக்காவில் மருந்து என்பது :

  • அதிகாரப்பூர்வமாக மருந்தகம் அல்லது வாய்ப்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொருள்.
  • நோய் கண்டறிதல், குணப்படுத்துதல், தணித்தல், சிகிச்சை அல்லது நோய்த் தடுப்பு ஆகிய செயல்பாடுகளில் பயன்படுத்தும் நோக்கம் கொண்ட பொருள்.
  • உடல் அல்லது உடல் செயல்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கும் நோக்கம் கொண்ட உணவைத் தவிர்த்த ஒரு பொருள்.
  • ஒரு மருந்தின் உட்கூறாகப் பயன்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு பொருள், ஆனால், அதுவே மருந்தாக அல்லாமல் மருந்தின் ஒரு துனைப்பகுதியாக உள்ள ஒரு பொருள்.
  • இந்த வரையறைகளுக்குள் உயிரியல் பொருட்களும் அதே சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் உற்பத்தி செயல்முறைகள் (வேதியியல் செயல்முறை மற்றும் உயிரியல் செயல்முறை.) பற்றிய வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்படுகின்றன [5].

மருந்துகளின் பயன்பாடு

[தொகு]

இயற்கையில் கிடைக்கும் இலை, மரப்பட்டை, வேர், புல், பூண்டு, காய், பழம் என்று தாவரத்தின் எப்பகுதியாகவும் அல்லது செயற்கையாய் உருவாக்கிய வேதியியல் பொருளாகவும் மருந்துகள் காணப்படுகின்றன. மாந்தர்களுள் உளவியல் நோய்களுக்கும் மூளையின் செயல் மாற்றத்தின் பொருட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. சில மருந்துகளை வாய் வழியாகவும், சில நருந்துகள் நேரடியாகக் குருதியிலும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. சில மருந்துகள் உடலின் புறத்தே மட்டும் பூசப்படுகின்றன அல்லது தேய்க்கப்படுகின்றன. இப்படி மருந்துகளில் பல வகைகள் உண்டு. பல மருந்துகள் பதிவுரிமை பெற்ற மருத்துவர்களால் பரிந்துரைக்கப் பட்டால்தான் மருந்துக் கடைகளில் பெறவியலும். சில வகையான தலைவலி, வயிற்றுவலி போன்ற எளிய நோய்களுக்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமலே மருந்துக்கடைகளில் நேரடியாக மருந்துகள் பெறலாம். மருந்தானது எவ்வாறு உடலுள் இயங்கி நோய்களையும், பிற குறைபாடுகளையும் தீர்க்கின்றது அல்லது கட்டுப்படுத்துகின்றது என்று ஆய்ந்தறியும் துறை மருந்தியல் ஆகும்.

வயதான அமெரிக்கர்களிடையே மருந்துகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது; 2005 ஆம் ஆண்டிற்கும் 2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் 71 வயது சராசரியைக் கொண்ட 2377 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 84% பேர் குறைந்தபட்சம் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை எடுத்துக்கொண்டிருந்தனர். 44% பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தை அவர்களாகவே கடைகளில் வாங்கி பயன்படுத்தினர். மற்றும் 52% குறைந்தபட்சம் ஏதாவது ஒரு மருந்தை உணவுக் கூட்டுப்பொருளாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். இதே போன்று மேற்கோள்ளப்பட்ட 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்புகளில் 2245 வயதான அமெரிக்கர்களில் இந்த சதவீதங்கள் முறையே 88%, 38% மற்றும் 64% என்றும் கணக்கிடப்பட்டது [6].

தோன்றுமிடத்தின் அடிப்படையில் மருந்து வகைப்படுத்தப்படுகிறது.

1.இயற்கையாகத் தோன்றும் மருந்து: மூலிகை அல்லது தாவரம் அல்லது கனிமங்களில் தோன்றுபவை இவ்வகையில் பிரிக்கப்படுகின்றன. சில மருந்து பொருட்கள் கடலில் தோற்றம் பெறுகின்றன.

2.இயற்கை மற்றும் வேதியியல் தோற்றம்: சிறுபகுதி மூலிகையிலிருந்தும், சிறுபகுதி வேதித் தொகுப்பு முறையிலும் தயாரிக்கப்படும் மருந்துகள் இவ்வகையினவாகும். உதாரணம்: சிடீராய்டு மருந்துகள்.

3.வேதியியல் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் மருந்துகள்

4.விலங்குகளிடமிருந்து பெறப்படும் மருந்துகள்: உதாரணம்: நொதிகள் மற்றும் இயக்குநீர்கள்

5.நுண்ணுயிர்களிடமிருந்து கிடைக்கும் மருந்துகள்: உதாரணம்: நுண்ணுயிர் எதிர்ப்பிகள்

6.உயிரித் தொழில்நுட்பமான மரபுப் பொறியியல் முறையில் பெறப்படும் மருந்துகள்: உதாரணம்: கலப்பின உயிரணு தொழில்நுட்பம்

7.கதிரியக்கப் பொருட்களிலிருந்து கிடைக்கும் மருந்துகள்.

மாதிரி மருத்துவ மருந்துகளின் வகைபாடுகள்:

1. காய்ச்சலடக்கி: உடல் வெப்பநிலை குறையும்.

2. வலிநீக்கி: வலி உணர்வைக் குறைக்கும்.

3. மலேரியா எதிர்ப்பிகள்: மலேரியா நோயைக் குணப்படுத்தும்.

4. நுண்ணுயிர் எதிர்ப்பி: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

5. தொற்றுநோய் எதிர்ப்பிகள்: காயங்கள், புண்கள், வெட்டுகளில் தொற்றுநோய் காரணிகள் புகுவதை தடுக்கும்.

6. மனநிலை நிலைப்படுத்திகள்: உதாரணம்: இலித்தியம் மற்றும் வால்புரோமைடு

7. இயக்குநீர் மாற்றிகள்: பிரிமாரின்

8. குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகள்:

9: கிளர்வூட்டிகள்:.

10. அமைதியூக்கிகள்:

11. கொழுப்புக் குறைப்பிகள்:

இவை தவிர சில சிறப்பு வகைப்பாட்டு மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. உடல் நிர்வாகத்திற்கு அத்தியாவசியமாகவும் அவசரமாகவும் பயன்படுத்தக் கூடியவையாக இம்மருந்துகள் இருக்கும். மற்ற மருந்துகலை காட்டிலும் விலை அதிகம் கொண்டவையாகவும் இவை இருக்கும் [7].

மருந்துகளின் வகைகள்

[தொகு]

சீரண மண்டல மருந்துகள், இதய குழலிய மருந்துகள், மத்திய நரம்பு மண்டல மருந்துகள், வலிநீக்க மருந்துகள், கண்களுக்கான மருந்துகள், காது மூக்கு தொண்டை மருந்துகள், உணர்வு நீக்கி மருந்துகள், சுவாச மண்டல மருந்துகள், உட்சுரப்பி மருந்துகள், இனப்பெருக்க மண்டல மருந்துகள், பெண்களுக்கான சிறப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள், சிறுநீரக மருந்துகள், நோய்த் தடுப்பு மருந்துகள் போல உடலின் முதன்மை மண்டலம் மற்றும் அவற்றுக்கான துணைப்பிரிவுகள் முதலானவற்றுக்காகவும் மருந்துகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மருந்து நிர்வாகம்

[தொகு]

மருந்து நிர்வாகமென்பது நோயாளிக்கு ஒரு மருந்து எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்னுன் செயல் முறையாகும். மருந்து நிர்வாகத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; வாய் வழியாக மருந்து கொடுத்தல், இரத்த ஓட்டத்தில் நேரடியாகச் செலுத்துதல், உட்கிரகிப்பு, மேற்பூச்சு, உள்ளிழுத்தல் மற்றும் மலக்குடல் மூலம் மருந்துகளை செலுத்துதல் ஆகியன இம்மூன்று பிரிவுகளாகும்[8].குளிகைகள், மாத்திரைகள், உறை மாத்திரைகள் என்ற வெவ்வேறு வகையான அளவுகளில் தேவைக்கேற்ப மருந்துகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

வாய்வழியாக அளிக்கப்படும் மருந்துகளும், இரத்தத்தின் வழியாக செலுத்தப்படும் மருந்துகளும் நோயாளிகளுக்கு பொதுவாக நேர இடைவெளிகளில் கொடுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றன.

மருந்துகளின் கண்டுபிடிப்பு

[தொகு]

மருத்துவம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருந்தியல் துறைகளில் மருந்து கண்டுபிடிப்பு என்பது புதிய வேட்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஒரு செயலாலகக் கருதப்படுகிறது.

வரலாற்று ரீதியாக நோய்த்தீர்க்கும் பழக்கவழக்கங்கள் அடிப்படையிலும் அல்லது சோதனை முறையாகவும் செயல்படும் மூலப்பொருள் அடையாளம் காணப்பட்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிறகு, செயற்கைச் சிறிய சிறு மூலக்கூறுகள், இயற்கைப் பொருட்கள் போன்றவை செல்கள் அல்லது முழு உயிரினங்களுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சைக்குத் தேவையான மூலப்பொருள் கண்டறியப்பட்டது. இத்தகைய முறைக்கு பாரம்பரிய மருந்தியல் என்று பெயராகும்.

தற்காலத்தில் மனித மரபணுக்களை வரிசைப்படுத்தி தனித்தனியான உயிரியல் இலக்குகளுக்குத் தேவையான அதிக செயல்திறன் கொண்ட மருந்துகளை தயாரிக்கும் முறைகள் பொதுவான நடைமுறையாக மாறியுள்ளது,

உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி இன்றியமையா மருந்துகள் என்பவை ஒரு நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் உடல்நலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எல்லா வேளைகளிலும் போதுமான அளவு கையிருப்பில் மக்கள் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் மருந்துகள் ஆகும்[9]. இந்த இன்றியமையா மருந்துகளின் பட்டியல் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்படும். ஒவ்வொரு நாடும் தங்கள் தேவைகளுக்கேற்ப அந்தப் பட்டியலை மாற்றிக் கொள்ளும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த இன்றியமையாத மருந்துகளின் பட்டியல் மாறுபடும். ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் நோய்களின் பரவல் வேறுபடுகிறது.

இன்றியமையா மருந்து எனும் கோட்பாடு அல்மா ஆட்டா பிரகடனத்தின் பத்து பாகங்களுள் ஒன்றாக வெளியிடப்பட்டிருந்தது.

தனிநபரின் உடல்நலம் அல்லது அழகு பராமரிப்பு கால்நடை வளர்ப்பு, வேளாண் வணிகம் போன்ற காரணங்களுக்காக மருந்துகள் தர்காலத்தில் ஏராளாமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இம் மருந்துகள் மற்றும் தனிநபர் அழகு சாதனப் பொருட்கள் விளைவிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் சர்ச்சைக்குரியனவாக உள்ளன.

அனைத்து மாற்று சிகிச்சையளிக்கும் சிகிச்சை முறைகளும் தீர்ந்துவிட்ட பிறகு புதிய மருந்துகளை நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகளை உலகம் முழுவதும் உள்ள அரசுகள் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் அணுகுமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. இதற்கான அணுகல் அளவுகோல்கள், தரவு சேகரிப்பு, மருந்து விநியோகம் முதலிய செயல்கள் விதிகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன [10].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Definition and classification of Drug or Pharmaceutical Regulatory aspects of drug approval பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம் Accessed 30 December 2013.
  2. US Federal Food, Drug, and Cosmetic Act, SEC. 210., (g)(1)(B). பரணிடப்பட்டது 2009-05-12 at the வந்தவழி இயந்திரம் Accessed 17 August 2008.
  3. Directive 2004/27/EC of the European Parliament and of the Council of 31 March 2004 amending Directive 2001/83/EC on the Community code relating to [[Medicine|medicinal products for human use. Article 1.] Published 31 March 2004. Accessed 17 August 2008.
  4. Directive 2004/27/EC Official Journal of the European Union. 30 April 2004 L136
  5. FDA Glossary
  6. Qato DM; Wilder J; Schumm L; Gillet V; Alexander G (2016-04-01). "Changes in prescription and over-the-counter medication and dietary supplement use among older adults in the united states, 2005 vs 2011". JAMA Internal Medicine 176 (4): 473–482. doi:10.1001/jamainternmed.2015.8581. பப்மெட்:26998708. http://dx.doi.org/10.1001/jamainternmed.2015.8581. 
  7. "Specialty Pharmaceuticals". Health Affairs (Bethesda, Maryland): What's The Background?. 25 November 2013. http://www.healthaffairs.org/healthpolicybriefs/brief.php?brief_id=103. பார்த்த நாள்: 28 August 2015. 
  8. Finkel, Richard; Cubeddu, Luigi; Clark, Michelle (2009). Lippencott's Illustrated Reviews: Pharmacology 4th Edition. Lippencott Williams & Wilkins. pp. 1–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-7155-9.
  9. "The Selection and Use of Essential Medicines - WHO Technical Report Series, No. 914: 4. Other outstanding technical issues: 4.2 Description of essential medicines". Apps.who.int. 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2016-06-25.
  10. Helene S (2010). "EU Compassionate Use Programmes (CUPs): Regulatory Framework and Points to Consider before CUP Implementation". Pharm Med 24 (4): 223–229. doi:10.1007/bf03256820. http://adisonline.com/pharmaceuticalmedicine/Fulltext/2010/24040/EU_Compassionate_Use_Programmes__CUPs___Regulatory.4.aspx. பார்த்த நாள்: 2017-06-08. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pharmaceutical drugs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்து&oldid=3792501" இலிருந்து மீள்விக்கப்பட்டது